சனி, பிப்ரவரி 04, 2023

சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

                           சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

மு.சிவகுருநாதன்


 

          பபாசிஎன்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை கொள்ளும் செய்தியாக இது இருக்கிறது.

        இவ்வாண்டின் 46வது சென்னைப் புத்தகத் திருவிழா ஜனவரி 6 இல் தொடங்கி 22 முடிய எனத் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிலிருந்து சர்வதேச சென்னைப் புத்தகக் காட்சியை (CIBF) தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிறது. இந்த முன்முயற்சி மூலம் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை பிற உலகமொழிகளுக்குக் கொண்டு செல்ல ரூபாய் 3 கோடி மொழிபெயர்ப்பு மானியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

        சென்ற ஆண்டிலிருந்து மாவட்டந்தோறும் அரசின் சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், நெய்வேலி, திருச்சி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் சென்னைப் புத்தகக் காட்சி தமிழ்நாட்டின் அறிவுலக அடையாளமாகத் திகழ்கிறது. இக்கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் நிதியுதவி அளிக்கிறது. ‘பபாசிஎன்ற தனியார் அமைப்பு நடத்தினாலும் இதன் பின்னணியில் தமிழ்நாடு அரசின் உதவியும் பங்களிப்பும் இருக்கிறது. அரசின் நிதியுதவியுடன் செயல்படுவதால் இவ்வமைப்பு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நடைமுறையில் அவ்வாறாக இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவை கண்காட்சி நடைபெறும்போது மட்டும் பேசும்பொருளாகி பிறகு மறந்து போகின்றன.

         தொடரும் துயரங்களில் முதன்மையானது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்ய மறுப்பதாகும். இவ்வாண்டின் சிறப்பாக  உள்ளே நுழைய முடியாத அளவில் குறைந்த எண்ணிக்கையிலான கழிப்பறைகளும் திறந்த வெளியில் ஓடும் கழிவுகளும் வாசகர்களை முகம் சுழிக்கவும், சிவக்கவும் வைத்தன. இப்பிரச்சினை ஆண்டாண்டாகத் தொடர்வது. சில ஆண்டுகளில் கொஞ்சமாவது மேம்படுத்தியிருந்தனர். சர்வதேச புத்தகக் காட்சி நடக்கும் இம்முறை மிக மோசமான நிலையில் எவ்வித சுகாதார வசதியுமின்றி இருக்கும் அவலம் பெருந்துயரமாகும். நல்லவேளையாக CIBF வேறு அரங்கில் நடக்கிறது. அங்கு நூல் விற்பனைகள் இல்லை; பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் போடப்படும்.  


 

      ஆண்டுதோறும் வாசகர்களின் வரவு, நூல்களின் விற்பனை அனைத்தும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்ற ஆண்டின் 45வது புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் 15 கோடிக்கு விற்பனை என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. வெறும் பணம் பண்ணும் வணிகமாக மட்டும் பபாசிஇதனைக் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது; அரசும் நிதியுதவி அளிக்கிறது. எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குவதுதான் சரியாக இருக்க முடியும். பன்னெடுங்காலமாக இதனைச் செய்ய மறுக்கும் அறிவுலக வன்முறை நிகழ்கிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, ஜனநாயகத் தன்மை என எதுவும் இல்லாத நிலையே நீடிக்கிறது.

         மகாத்மா காந்தியின் கல்விக் கொள்கைகளைப் பின்பற்றிச் செயல்பட்ட காரணத்தால் வ.வே.சு. அய்யரின் குருகுலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நிதியுதவி வழங்கப்பட்டது. அங்கு சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டபோது தந்தை பெரியார் அதனைக் கேள்விக்குட்படுத்தினார். அரசின் நிதியைப் பெறும் இந்த அமைப்பு பொறுப்புணர்வுடனும் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்வதில்லை என்பதை அறிவுலக வீழ்ச்சியாக அவதானிக்க வேண்டியுள்ளது.

       கடந்த பத்தாண்டாக, இடவசதிக்காக சென்னை மாநகரின் தீவுபோன்ற ஒரு இடத்தில் (YMCA வளாகம்) இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அருகில் உணவகங்கள் ஏதும் இல்லாத நிலையில் கண்காட்சிக்கென அமைக்கப்படும் உணவகங்களின் தரமும் விலையும் கேள்விக்குரியவை. மேம்பட்ட அதிக என்ணிக்கையிலும் இவை அமைக்கப்படுவதில்லை. குடிநீர் வசதிகள் போதுமானதாக இருப்பதில்லை. எதிரே மேடையமைத்து முழுநேரமும்  வாய்வீச்சாளர்களை பேசவைப்பது புத்தகக் காட்சிக்கு தேவையற்றது.  இங்கும் வணிகமே கோலோச்சுகிறது. விழாக்களுக்குப் பெருந்தொகை வசூலிக்கவும் இம்மேடை பயன்படுகிறது. ஆனால் உணவக, ஓய்விட வசதிகளை மேம்படுத்த யாரும் நினைப்பதில்லை. 

        கடைகளுக்கு நடுவில் வாசகர்கள் வந்துசெல்ல அதிக இடைவெளி இருக்க வேண்டும் என்பதும் தொடரும் கோரிக்கை. கோரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் இதை இன்னும் மேம்படுத்துவது அவசியம். ஆனால் நிலைமை மோசமாகிறது. ஒருமுறை அகலமான பாதைகளை அமைத்திருந்தனர். இம்முறை அதற்கும்  தட்டுப்பாடு. நுழைவுவாயிலிருந்து ஒவ்வொரு வரிசைக்கும் செல்லும் வழிகளை முற்றாக அடைத்து வைத்துள்ளனர். மிகக்குறுகலான குறுக்கு வழிகளையே நாட வேண்டியிருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.  F வரிசை எனப்படும் நான்கு சேர்ந்தப் பெருங்கடைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக அரங்க அமைப்பு உள்ளது. இந்தப் பெருங்கடைகளுக்கு இருபுறகும் செல்ல வழியுண்டு. சிறிய ஒரு மற்றும் இரு கடைகள் ஒருவழிப்பாதையில் மட்டும் இயங்குபவை. இவைகளை ஓரங்கட்டும் வடிவமைப்பில் கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. எல்லாம் பெரும் பதிப்பகங்களுக்குச் செய்யும் சேவை!

        பபாசிஉறுப்பினர்கள்  சுமார் 500 என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த வாடகையும் உறுப்பினரல்லாதோருக்கு அதிக வாடகையும் விதிக்கப்படுகிறது. பதிப்பகம் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை கணக்கில் கொள்ளாமல் உறுப்பினர் என்பதற்காக கடை ஒதுக்குவது சரியல்ல. இவ்வாறு ஒதுக்கப்படும் கடைகளை பலர் வேறு ஒருவருக்கு விற்றுவிடுகின்றனர். இதற்கான விதிகளை மாற்றியும் இயக்கத்தில் இல்லாத பதிப்பகங்களை நீக்கியும் அமைப்பைச் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும். பல புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.  இந்த நான்குப் பெருங்கடைகளை (F வரிசை) தனி வரிசையாக அமைக்கலாம். இவற்றிற்கு மட்டும் முக்கியத்துவமளித்து அரங்கின் மையத்தில் அமைப்பதும் இதனால் சிறிய பதிப்பாளர்களை ஓரத்திலும் கூட்ட மிகுதியான முட்டுச்சந்திலும் நிறுத்துவதும் மோசமானதாகும்.

           2020இல் 43வது புத்தகக் காட்சியில் அப்போதைய தமிழ்நாடு அரசுக்கு எதிரான நூல்களை வெளியிட்டார், அரங்கில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்று அன்பழகன் என்பவர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகும். அப்போது அமைப்பின் துணைத்தலைவராக இருந்த பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் தனது  எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த அமைப்பு ஜனநாயகத் தன்மையற்றுச் செயல்புரிவதற்கு இது ஓரு சான்றாகும். நூல்களை தணிக்கை செய்தெல்லாம் கண்காட்சி நடத்தவியலாது. அரசின் உதவி பெறுவதற்காக அரசின் ஊதுகுழலாகச் செயல்படுவதும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றைத் தட்டிக்கழிப்பதும் மிக மோசமான முன்னுதாரணங்களாகும்.

          இவ்வாண்டும் புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க பெண்கள்,  மாற்று பாலினத்தவர்கள், தலித்கள் போன்றோருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் சொல்லப்பட்டது. இதன்பிறகு சிலருக்கு அனுமதி கிடைத்தது. மாற்றுப் பாலினத்தவர்கள் தொடங்கிய 'குயர் பதிப்பகம்' புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றது.  இருப்பினும் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. நடைபாதையில் கடை பரப்பி சால்ட் பதிப்பகம்தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கம் இந்த அமைப்பில் இருப்பதாகச் சொல்லப்படுவதும் தமிழ் அறிவுலகத்தின் களங்கமாக  அமையும்  என்பதில் அய்யமில்லை.

          2007இல் 30வது சென்னைப் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்தபோது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தம் சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்பிடம் அளித்து, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 எழுத்தாளர்களுக்கு விருதளிக்க ஏற்பாடு செய்தார். ‘பபாசியின் செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது இவ்வமைப்பு இதற்குத் தகுதியானதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

          இவ்வளவிற்கு இலவச அனுமதி கிடையாது. நுழைவுக்கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் சிறுபகுதியைக் கொண்டே சிறப்பான அடிப்படை வசதிகளைச் செய்ய முடியும். ஆனால் பபாசி  முற்றிலும் வணிக நோக்கில் மட்டும் இயங்குகிறது. பல்லாண்டாக முன்வைக்கப்படும் புகார்களை அடுத்தடுத்த நிகழ்வுகளில் சரிசெய்யவும் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு உதவுவதை விட தாமே முன்நின்று கண்காட்சியை நடத்துவதே சரியாக இருக்க முடியும். மேலும் புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் அரசின் சார்பில் நூல்களுக்கு 5% கழிவு வழங்கப்படுவதைப்போல, முற்றிலும் லாபநோக்கில் செயல்படும் இத்தகைய அமைப்புகளை நிதியளித்து வளர்ப்பதைக் காட்டிலும் வாசகர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களை அரசு செய்யலாம்.        

 

நன்றி: பேசும் புதியசக்தி – பிப்ரவரி 2023 இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக