வெள்ளி, பிப்ரவரி 03, 2023

இங்கிலாந்தில் காந்தி

 இங்கிலாந்தில்  காந்தி

(மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்)

மு.சிவகுருநாதன் 


 

           பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி,  மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக இருந்த கூச்ச உணர்வு, ஆங்கிலத்தைத் தவறாகப் பேசிவிடுவோம் என்ற எண்ணத்தில் யாருடனும் கலக்காமல் தனியே அறையில் கிடப்பதை விரும்பினார். கப்பலில் உணவுப் பணியாளர்களிடம் கூட பேசக் கூச்சம் தடுத்தது. உணவில் எது சைவம், எது அவைசம் என்பதையும் வேறுபடுத்தவும், கேட்டு அறியவும் கூச்சம் பெருந்தடையாக இருந்தது. கத்தி, கவைமுள்ளைக் கொண்டும் சாப்பிடவும் தெரியவில்லை. எனவே வேறுவழியின்றி அறைக்குள்ளே முடங்கினார். தான் கொண்டுவந்திருந்த மிட்டாய்களையும் பழங்களையும் சாப்பிட்டுப் பசியைப் போக்கினார்.

       ஜூனகாத் வழக்குரைஞர் ஶ்ரீமஜூம்தார் என்பவர் கப்பலில் இவரது அறைத்தோழர். அவர் நல்ல அனுபவமும் வயதும் நிரம்பியவர். காந்தியோ பதினெட்டு வயது சிறுவன்! காந்தியைக் கப்பலேற்றும் போது இவரிடமே காந்தியை ஒப்படைத்தனர். காந்தியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் கவனித்துக் கொள்கிறேன் என்கிற ஒப்புதலை அவரும் அளித்திருந்தார்.

       கப்பலில் மேல்தளத்தில் பயணிகள் உலவுவது வழக்கம். மஜூம்தார் எப்போதும் எவரிடமும் கதைப்பதையும் அடிக்கடி மேல்தளத்தில் சுற்றுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனிமை விரும்பியாய் அறைக்குள் முடங்கிருந்த காந்தி மேல்தளம் ஓரளவு காலியாக இருக்கும்போதுதான்  அறையை விட்டு வெளியே வருவார்.

        மஜூம்தார், வழக்குரைஞர் தொழிலுக்கு பேச்சு அவசியம் என்றும் வேறு மொழியில்  பேசும்போது தவறு ஏற்படுவது இயல்புதான். அதைக் கணக்கில் கொள்ளாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் கூச்சமின்றி உரையாட காந்திக்கு அறிவுரை வழங்கினார். காந்திக்கு இருந்த பெருங்கூச்சம் குறுக்கே நின்றதால் இந்நிலை தொடர்ந்தது.

     கப்பலில் பயணித்த சகபயணி ஒருவர் கூச்சப்படாமல் எல்லாருடனும் சேர்ந்து உணவருந்துமாறு வலியுறுத்தினார். மாமிச உணவைச் சாப்பிடுவதில்லை என்று காந்தி கூறியதும் இங்கிலாந்தில் குளிர் அதிகம் என்பதால் மாமிசம் சாப்பிடாமல் யாரும் உயிர்வாழ முடியாது என்றார். செங்கடல் வரையில் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது சரி. பிஸ்கே விரிகுடா வந்ததும் அது சாத்தியமில்லை. அங்கு குளிர் அதிகம் என்பதால் மாமிசம் சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

       காந்தி கொஞ்சம்கூட சளைக்காமல் அங்கும் மாமிசம் சாப்பிடாத மனிதர்கள் இருப்பதைக் கேள்விப்பட்டுள்ளேன் என்கிறார். அது முடியாத கதை. உங்களை  மது அருந்தக் கட்டாயப்படுத்தவில்லை. மாமிசம் சாப்பிட மட்டுமே வலியுறுத்துகிறேன். அங்கு வேறு வழியில்லை என்பதால் மாமிசம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று மஜூம்தார் சொல்லிப் பார்க்கிறார்.

         உங்கள் அறிவுரைக்கு நன்றி. நான் மாமிசம் உண்பதில்லை என அம்மாவிற்கு சத்தியம் செய்து கொடுத்து வந்துள்ளேன். வேறு வழியில்லாவிட்டால் ஊருக்குத் திரும்புவேனே தவிர மாமிசம் உண்ணமாட்டேன் என்று உறுதியான பதிலளிக்கிறார் காந்தி. இதிலிருந்து அவரது மன உறுதி வெளிப்படுகிறது.  இத்தகைய மனவுறுதியை அவர் இறுதிவரை கடைப்பிடித்தார்.

       செங்கடல் கிழக்கில் சவூதி அரேபியாவிற்கும் மேற்கில் ஆப்பிரிக்காக் கண்டத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியாகும். பிஸ்கே விரிகுடா ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஒட்டிய நமது வங்காள விரிகுடாவைப் போன்ற கடற்பரப்பாகும். இதனையடுத்து ஆங்கிலக் கால்வாய் வழியே இங்கிலாந்து சென்றுவிடலாம். இதன் அமைவிடம் நம்மைவிட குளிர் அதிகமுள்ள பகுதியாகும். இப்பகுதியை அடைந்ததும் மாமிசம் உண்பதும் மது அருந்துவதும் அவசியம் என்கிற எண்ணம் எனக்கு அறவே வரவில்லை என்று காந்தி  மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார்.

         காந்தி கப்பலில் கருப்பு உடைகளை அணிந்திருந்தாலும் சௌத்தாம்டன் துறைமுகத்தில் இறங்கும்போது அழகாக இருக்கும் என்றெண்ணி நண்பர்கள் தயாரித்து அளித்த வெள்ளைக் கம்பளி உடையை அணிந்து இறங்குகிறார். இறங்கிய பிறகுதான்  தெரிகிறது வெள்ளுடை அணிந்த ஒரே நபர் தான் மட்டும் என்பதை அறிந்து கூச்சமும் அவமானமும் அதிகமாகிறது. பயணப்பெட்டி மறுநாள்தான் கிடைக்கும் என்பது அவரது துக்கத்தை மேலும் அதிகமாக்குகிறது.

       காந்தி மஜூம்தாருடன் லண்டன் விக்டோரியா  ஓட்டலில் தங்குகிறார். டாக்டர் பி.ஜே. மேத்தாவிற்கு  சௌத்தாம்டனிலிருந்து தந்தி கொடுத்திருந்தார். அவர் காந்தியை அறையில் சந்தித்தார். காந்தியின் ஆர்வ மிகுதியான நடத்தையால் பிறரது பொருள்களைத் தொடக்கூடாது, அதிக சப்தமிட்டுப் பேசக்கூடாது, ‘சார்என்று விளிக்கக்கூடாது  என பல அறிவுரைகளைப் பெற நேரிடுகிறது. ஓட்டலில் தங்கினால் அதிக செலவாகும் என்பதால் தனிப்பட்ட குடும்பத்தினருடன் தங்குவது நல்லது என சொல்லப்படுகிறது. ஓட்டலில் தங்குவது காந்தி, மஜூம்தார் இருவருக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மஜூம்தாரின் சிந்தி நண்பர் மூலமாக வேறு ஒரு அறைக்குச் செல்கின்றனர்.

      புதிய இடத்திலும் அம்மா, குடும்பத்தினர் நினைவுகள் காந்தியை வாட்டி வதைத்தன. இரவெல்லாம் தூங்காமல் அழுது கன்னங்கள் வீங்கியதும் உண்டு. இதை எவரிடமும் சொல்லி ஆறுதலடையும் நிலையும் இல்லை. மேலும் இங்கிலாந்து மக்களின் பழக்கவழக்கங்கள், வீடுகள் எல்லாம் விசித்திரமாகத் தோன்றின. அவர்களது நடத்தைகளும் மரியாதை முறைகளும் மாறுபட்டு இருந்தன.

           சைவ உணவு பெரும் இடையூறாக அமைந்தது. உப்புச் சப்பில்லாத அவ்வுணவை சுத்தமாகச் சாப்பிட இயலவில்லை. மீண்டும் இந்தியாவிற்கே திரும்பிவிடலாமா என்று கூட நினைக்கத் தோன்றியது. ஆனால் அவ்வாறு செய்வது நல்லதல்ல. வந்ததுதான் வந்துவிட்டோம், இன்னும் மூன்று ஆண்டுகள் எப்படியும் சிரமப்பட்டாவது படிப்பை முடித்துத் திரும்புவோம் என்று அவரது உள்மனம் சொல்லிற்று. அதுவே வென்றது. காந்தி தன் வாழ்நாளில் பல்வேறு முடிவுகள்  அவரது உள்மனத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தவை.

       விக்டோரியா ஓட்டலுக்கு என்னைப் பார்க்க வந்த டாக்டர் மேத்தா நாங்கள் அறையைக் காலி செய்த்தை அறிந்து புதிய அறை முகவரி கேட்டு அங்கு வந்துவிட்டார். கப்பல் பயணத்தில் குளிப்பதற்கு கடல்நீரைத்தான் பயன்படுத்தினார்கள். உப்பானக் கடல் நீரில் சோப்பு பயன்படுத்தக் கூடியதல்ல. சோப்பைப் பயன்படுத்திக் குளித்ததால் அழுக்கு நீங்காமல் பிசுபிசுப்புடன் உடலில் ஒட்டிக்கொண்டதால் சிரங்கு வந்துவிட்டது. டாக்டர் மேத்தா சொன்னபடி காடித் திராவகத்தை போட்டதால் கடும் எரிச்சலில்  கதறி அழ வேண்டிய சூழல் உண்டானது.

        டாக்டர் மேத்தா அந்த அறையையும் அறையில் பொருள்கள் இருந்த நிலையையும் பார்த்துவிட்டு, நாம் இங்கு வருவது படிப்பதற்கு மட்டுமல்ல; ஆங்கிலேயர்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். நீ ஆங்கிலேயக் குடும்பம் ஒன்றுடன் வசிக்கவேண்டும், அதற்கு முன்னதாக நண்பர் அறையில் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும், நான் அழைத்துப் போகிறேன் என்றார். அதன்படி காந்தி ரிச்மாண்ட்டில் உள்ள அந்த நண்பரின் அறைக்குக் குடிபெயர்ந்தார். அவர் காந்தியை சகோதரர் போல் அன்புடன் கவனித்துக் கொண்டார். கூடவே ஆங்கில மொழியையும் ஆங்கிலேயர்களின் நடை, உடை, பாவனைகளையும் கற்றுத் தந்தார்.   

        அங்கும் சாப்பாடுதான் காந்திக்கு பிரச்சினையாக இருந்தது. உப்பு, மசாலா இல்லாமல் வெறுமனே வேகவைத்த காய்கறிகள் காந்திக்கு ஒத்துவரவில்லை. இவருக்கு என்ன சமைத்துக் கொடுப்பது எனத் தெரியாமல் உணவளித்த அம்மா திகைப்படைந்தார். காலையில் வெறும் ஓட்ஸ் கஞ்சி மட்டும் காந்தியின் வயிற்றை நிரப்பியது. மதிய, இரவு உணவில் கீரையும் ரொட்டியும் இருக்கும். ரொட்டி நிறைய சாப்பிடக் கூடிய நிலை இருந்தாலும் மூன்று ரொட்டிகளுக்கு அதிகம் கேட்பது காந்திக்கு வெட்கமாக இருந்தது. மதிய, இரவு உணவில் பால் இருக்காது. எனவே காந்தியின் உடல் மெலிந்தது.

       அந்த நண்பர் மிகவும் வெறுத்துப்போய், நீ எனது சொந்த சகோதரனாக இருந்தால் உடனே ஊருக்கு அனுப்பியிருப்பேன். இங்குள்ள சூழ்நிலையை அறியாமல் எழுத்து வாசனை இல்லாத தாயாரிடம் அளித்த சத்தியத்தை கடைப்பிடிப்பது மூடநம்பிக்கை தவிர வேறு ஒன்றுமில்லை. முன்பு மாமிசம் சாப்பிட்டு அதன் சுவையையும் அறிந்துவிட்டு தேவையான இடத்தில்  உண்ண மறுப்பதும் சரியல்ல என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இருப்பினும் காந்தியின் பிடிவாதம் தொடர்ந்தது. செவிலித்தாய் ரம்பா விதைத்த சமய நம்பிக்கை காந்தியினுள் நன்றாக துளிர் விட்டிருந்தது.

           மேலும் அந்த நண்பர் பெந்தாம் (Jeremy Bentham 1748-1832) எழுதிய பயன்பாட்டுக் கோட்பாடு   (Theory of Utility) என்ற நூலை வாசிக்கத் தருகிறார். அதன் மொழிநடை, கூறப்பட்ட செய்திகள் எதும் காந்திக்கு விளங்கவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். இந்த நுட்பமான செய்திகள் எனக்கு விளங்கப்போவதில்லை. இது குறித்து என்னால் விவாதிக்க இயலாது. என்னை முட்டாள், பிடிவாதக்காரன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். எனது விரதத்தை மாற்றிக்கொள்ள முடியாது, என காந்தி மறுத்துவிட்டார்.

       அந்த நண்பர் புகைப்பார்; மாமிசம் சாப்பிடுவார்; மதுவருந்துவார். அவற்றை காந்தியிடம் வலியுறுத்தியதில்லை. காந்தியின் உடல்நலம் கருதி மாமிசம் உண்ண மட்டும் கட்டாயப்படுத்தினார்.  நீங்கள் சொல்வதை நன்றாக உணர்கிறேன். பிடிவாதக்காரனான நான் விரதத்திற்கு எதிராக நடக்க இயலாது என்று காந்தி தெளிவுபடுத்தியதும் அவரது வற்புறுத்தல் நின்றது. பிற்காலத்திலும் அவரது உடல்நலம் குறித்து கவலையின்றி தனது உடலை ஓர் ஆயுதமாக, அகிம்சையின் சோதனைக்கூடமாக மாற்றிக் காட்டினார்.    

        நண்பரின் அறையில் ஒருமாதப் பயிற்சிக்குப் பிறகு லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு ஆங்கிலோ இந்தியரின் வீட்டில் தங்க வைக்க டாக்டர் மேத்தாவும் ஶ்ரீதளபத்ராம் சுக்லாவும் முடிவு செய்தனர். அந்த வீட்டு அம்மாவிடம் காந்தி தனது விரதம் பற்றித் தெரிவிக்கிறார். அவரை சரியாகக் கவனித்துக் கொள்வதாக வாக்களிக்கிறார். இருந்தாலும் அங்கும் பட்டினி கிடக்கவே நேரிடுகிறது. வீட்டிலிருந்து அனுப்பச் சொல்லியிருந்த மிட்டாய் மற்றும் பலகாரங்கள் இன்னும் வந்துசேரவில்லை. கூச்சம் காரணமாக அவர்களிடம் கூடுதல் ரொட்டிகளைக் கேட்டுப்பெற தயக்கம். அக்குடும்பத்துப் பெண்கள் கட்டாயப்படுத்தி அளிக்கும் ரொட்டித் துண்டுகளும் காந்தியின் வயிற்றை நிறைப்பதாக இல்லை. எனவே அரை வயிற்று உணவுடன் பெரும்பாலான நாள்கள் கழிகின்றன.

     காந்தி இந்தியாவில் செய்தித்தாள்களை வாசித்துப் பழக்கமில்லை. சுக்லா அறிவுறுத்தியதன்பேரில் அன்று இங்கிலாந்தில் வெளியான டெய்லி நியூஸ் (Daily News), தி டெய்லி டெலிகிராப் (The Daily Telegraph), பால் மால் கெஜட் (Pall Mall Gazette) போன்ற நாளிதழ்களை மேலோட்டமாக வாசிக்கத் தொடங்கினார். அதற்கு ஒருமணி நேரம் போதுமானதாக இருந்தது. ஓய்வாக இருந்த எஞ்சிய நேரத்தில் ஊர் சுற்றத் தொடங்கினார். நாள்தோறும் 15 அல்லது 20 கி.மீ. அலைந்து சைவ உணவு விடுதிகளைத் தேடுவது அவரது முதன்மை நோக்கமாக இருந்தது. அவற்றில் விலை மலிவான சைவ உணவு விடுதிகளில் வயிறார உண்டு தனது பசியைப் போக்கிக்கொண்டார்.

      அவ்வாறான ஒரு தேடலில்  பாரிங்டன் தெருவிலுள்ள ஒரு சைவ உணவு கூடத்தில் காந்தியின் மனதிற்குப் பிடித்த சைவ உணவுடன் கூடவே எச்.எஸ்.சால்ட் (Hendry Stephens Salt 1851-1939) எழுதியசைவ உணவின் முக்கியத்துவம்’ (A Plea for Vegetarianism) என்ற நூலும் கிடைக்கிறது. ஒரு ஷில்லிங் கொடுத்து அந்நூலை வாங்கிவந்து முழுமையாகப் படிக்கிறார். அந்நூல் அவரைப் பெரிதும் கவர்கிறது. இப்புத்தகத்தின் பாதிப்பு சைவ உணவு தொடர்பான நூல்களையும் ஆய்வுகளையும் செய்யக் காந்தியைத் தூண்டுகிறது. இதுவரை சத்தியத்தின் பேரிலான விரதமாக இருந்த சைவ உணவுப்பழக்கம் விருப்பமாக மாறுகிறது. இதைப் பரப்புவதே தனது வாழ்வில் இலட்சியமாகத் தோன்றுகிறது.

      ஹோவார்டு வில்லியம்ஸ் (Howard Williams) எழுதியஉணவுமுறையின் அறம் (The Ethics Diet), டாக்டர் அன்னா கிங்க்ஸ் போர்டு   (Anna Bonus Kingsford) எழுதிய    உணவுமுறையின் சரியான வழி’ (The Perfect Way in Diet) போன்ற பல நூல்களைப் படித்தும்  காந்தி உணவு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். இந்த ஆராய்ச்சியே அவரை எழுத்தாளர் ஆக்கியது.

        இதைக் கண்ட காந்தியின் நண்பர் ஆழ்ந்த  கவலை கொண்டார். மாமிசம் சாப்பிடாமலிருப்பது காந்தியின் உடல்நலத்தை மட்டுமல்லாது அவரை ஆங்கிலேய சமூகத்தில் இயல்பாகப் பழகவிடாமல் தடுத்துவிடும். இப்புத்தகங்கள் அவரது புத்தியைக் குழப்பிப் படிப்பைக் கெடுத்து வேறு வழியில் அழைத்துச் சென்றுவிடும் என்று அச்சப்பட்டார்.

      ஒருநாள் நாடகம் பார்க்கப் போகும் முன்பு அரண்மனை போன்ற ஹால்பர்ன் உணவு விடுதியில் சாப்பிடச் சென்றனர். முதலில்சூப்வந்தது. அதுவும் சைவமா, அசைவா என்ற கவலை காந்தியைத் தொற்றிக்கொண்டது. நண்பரிடம் கேட்கத் துணிவின்றி பணியாளரை அழைத்தார்.  இதனால் கடுங்கோபமடைந்த நண்பர், நாகரீக சமூகத்தில் பழகுவதற்கு உமக்குத் தகுதியில்லை. இங்கே உம்மால் சரியாக நடந்துகொள்ள முடியாது. வெளியே வேறு உணவகத்தில் சாப்பிட்டுக் காத்திரு, எனக்கூறி காந்தியை வெளியே அனுப்பிவிட்டார். வெளியேறிய காந்தி, அந்த ஒரு சைவ உணவகமும் மூடப்பட்டுவிட்டதால் அன்றிரவு பட்டினி கிடக்க நேரிட்டது.

      தன்மீதான அன்பால்தான் நண்பர் அவ்வாறு நடந்துகொண்டார் என்பதால் காந்திக்கு அவர் மீது சினமில்லை. சைவ உணவுப்பழக்க விரதத்தைக் கைவிட   முடியாவிட்டாலும் வெளித்தோற்றம் மற்றும் நடை, உடை, பாவனைகளில் முழுமையான ஆங்கிலேயனாக மாறி நண்பரின் கவலையைத் தீர்ப்பது என்று காந்தி முடிவெடுத்தார். அதற்காக அவர் பல்வேறு காரியங்களைச் செய்யத் துணிந்தார்.

(தொடரும்…)   

 நன்றி: பொம்மி - சிறுவர் மாத இதழ் (பிப்ரவரி 2023

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக