கானல் நீராகும் கல்வி
மு.சிவகுருநாதன்
கல்வி குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உள்ளது. குருகுலக் கல்வியைப் புகழ்வோர், வீட்டுப் பள்ளியைப் பரிந்துரைப்போர், மெக்காலே கல்வி ஆதரவு, எதிர்ப்பு, மாற்றுக்கல்வி என பல்வேறு அம்சங்கள் இங்கு விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொதுக்கல்வி என்பது மதச்சார்பற்றக் கல்வியாக இருக்க வேண்டும் என்பதை இந்தியாவின் வடிவமைத்த சிற்பிகளின் கொள்கையாக வெளிப்பட்டது.
மாற்றுக்களைப் பற்றி யோசித்த காலம் இன்றில்லை. அதற்குக் காரணமாக இரண்டு கூறுகளைக் குறிப்பிடலாம். ஒன்று 1991இல் அமலான உலகமய புதிய பொருளாதாரக் கொள்கை; மற்றொன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சியதிகாரத்தில் வலதுசாரி இந்துத்துவம்.
புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வலதுசாரிகளுக்கும் உள்ள நெருக்கமான உறவை விளக்கத் தேவையில்லை. எனவே அடல் பிகாரி வாஜ்பாய் காலத்திலிருந்து தொடங்கப்பட்ட கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிகள் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் தீவிரமடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
வலதுசாரி இந்துத்துவ பாசிசம் ஒவ்வொன்றையும் இலக்கு வைத்து தனது பிடிக்குள் கொண்டு வருகிறது. கல்வியைக் கைப்பற்றுவது இவர்களது முதன்மை இலக்குகளில் ஒன்றாக உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜனநாயக அமைப்புகளை சீரழித்தும் அவற்றை தங்களது கைப்பாவையாக மாற்றிப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதில் சீரழிக்கப்பட்ட துறைகளும் அமைப்புகளும் எண்ணற்றவை.
திட்டக்குழு, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், தேசியப் புலனாய்வு அமைப்புகள், பல்கலைக் கழகங்கள் போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை ஒழித்தோ, கேள்விக்குள்ளாக்கியோ, தடம் மாற்றியோ இந்த ‘புல்டோசர் அரசியல்’ மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய அரசியல் சாசனமும் கூட்டாட்சி முறையும் இவர்களது தாக்குதலுக்குத் தப்பப் போவதில்லை.
மாநிலப் பட்டியலிருந்து கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட சூழலை விடவும் இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதில் உலகமயம், தேசிய கல்விக்கொள்கை 2020 ஆகியவற்றின் பாதிப்புகள் மிக அதிகம். நமக்கான கல்வி நம்மை விட்டு விலகிச் செல்வதை வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளர்களாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இன்றிருக்கும் கல்வியமைப்புகள், கட்டுமானங்கள் வரும் பத்தாண்டில் இருக்குமா என்கிற அச்சம் மேலோங்கியுள்ளது.
கல்வி சார்ந்த பார்வைக் கோணங்களும் அணுகுமுறைகளும் எவ்வளவோ மாற்றமடைந்தாலும் இந்தியக் கல்வி சனாதன, குருகுலக் கல்வியுடன் தேங்கிப் போய்விட்டது. இங்கு மாற்றுகள் குறித்த பேச்செல்லாம் கருத்தியல் அளவிலேயே சுருங்கிப் போய்விட்டன. ஒன்றிய, மாநில அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் இன்று கல்வியைத் தீர்மானிக்கின்றன. இவையிரண்டின் கொள்கைகளுக்கும் வேறுபாடுகள் தகர்ந்துவருவதை வியப்புடன் பார்க்க முடிகிறது.
கல்வியில் நடக்கும் நிகழ்வுகளை அப்புலத்திலிருந்து அணுகும் போது அவை நம்மை பேரதிர்ச்ச்சி கொள்ள வைக்கின்றன. கல்விக்கான திட்டங்களும் பெரும்பாலான செயல்பாடுகளும் கல்விக்கும் மக்களுக்கும் எதிராக அமைவது அதிர்ச்சியளிக்கின்றன. எனவே இவை குறித்து விமர்சிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகிறது. கல்வியின்பால் கரிசனமும் அறம் சார்ந்த விழுமியங்களை வலியுறுத்தும் எவரும் இப்பணியிலிருந்து பின்வாங்க இயலாது.
அரசின் கொள்கைகள் மட்டுமல்லாது கல்வியின் அன்றாட நடைமுறைகளில் உள்ள சிக்கல்களையும் விவாதிக்க வேண்டியுள்ளது. பொதுத்தேர்வுகள், வினாத்தாள் வடிவமைப்பு, பாடவேளைப் பங்கீடு, பாடநூல்கள் என அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அப்பணியை இந்நூல் முழுமையாகச் செய்யாவிடினும் அதற்கான தடத்தை அமைக்கிறது.
தமிழ்நாட்டின் கல்விபுலத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஊடுருவல், இக்கொள்கையை நகலெடுக்கும் பல்வேறு திட்டங்கள், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் குளறுபடிகள், நாளுக்கு நாள் அறிவிக்கப்பட்ட ஒன்றியக் கொள்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் என தொடரும் குழப்பங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. ஏற்கனவே பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘கல்வி அறம்’ (2018), ‘நன்னூல் பதிப்பக’ வெளியீடாக வந்த ‘கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா?’ (2023) என்ற நூல்களின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம்.
இந்நூலின் பிற்சேர்க்கையாக இரு நேர்காணல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டும் ‘பேசும் புதியசக்தி’ மாத இதழில் வெளியானவை. ஒன்று நான் எடுத்த கல்வியாளர் பேரா.பிரபா கல்விமணி அவர்களின் நேர்காணல்; மற்றொன்று எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் எடுத்த எனது நேர்காணல். இவையிரண்டும் முழுக்க கல்வி பற்றியே பேசுவதால் அவசியம் கருதி இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இந்து தமிழ் திசை - நாளிதழ், பேசும் புதியசக்தி - மாத இதழ், புதிய விடியல் - மாதமிருமுறை இதழ், சமரசம் - மாதமிருமுறை இதழ், குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி - மாதமிருமுறை இதழ் போன்றவற்றிலும் எனது இணையப் பக்கங்களிலும் வெளியானவை. இவற்றை வெளியிட்ட இதழுக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். என்னை எழுதத் தூண்டி கட்டுரைகளை வாங்கி வெளியிட்ட தோழர்கள் ஜெ.ஜெயகாந்தன், ரியாஸ் அகமது, நாகூர் ரிஸ்வான், நன்னூல் பதிப்பகத் தோழர் மணலி அப்துல்காதர், ‘பன்மை’ வெளியீடாக வரும் இந்நூலையும் அட்டையையும் கவினுற வடிவமைத்த தோழர் சு.கதிரவன் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகிறேன்.
கணினியில் தட்டச்சு செய்யும்போது அருகிலிருந்து எழுத்துப் பிழைகளைச் சுட்டும் மூத்தமகள் சி.கவிநிலா, ஏதேனும் காரணம் சொல்லி என்னைப் பாதியில் நிறுத்தி விளையாட்டிற்கு இழுக்கும் இளைய மகள் சி.கயல்நிலா, இணையர் த.ரம்யா ஆகியோருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன்.
(‘கலையும் கல்விக் கனவுகள்’ நூலில் இடம்பெற்ற முன்னுரை.)
நூல் விவரங்கள்:
கலையும் கல்விக் கனவுகள் (கட்டுரைகள்)
மு.சிவகுருநாதன்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2024
பக்கங்கள்: 216
விலை: ₹ 200
வெளியீடு: 07
பன்மை,
நிலா வீடு,
2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர்,
தியானபுரம் – விளமல்,
மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,
திருவாரூர் – 610004, தமிழ்நாடு.
அலைபேசி: 9842402010 (G Pay) 9842802010 (Whatsapp)
மின்னஞ்சல்: panmai2010@gmail.com
இணையம்: www.panmai.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக