வியாழன், மே 23, 2024

சமகால அரசியலைப் பேசும் கவிதைகள்

 


சமகால அரசிய
லைப் பேசும் கவிதைகள்

மு.சிவகுருநாதன்

 

                   அனல் குடித்த மலர்’, ‘தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி’, ‘மஞ்சள் தட்டான்கள் அழிந்துவிட்டன’, ‘சிறகு முளைத்த மனிதன் கவிஞனாகிறான்’, ‘கீழ்வானத்துக்குத் தீமூட்டும் எரிநட்சத்திரம்’, ‘நாம் இன்னும் சந்திக்கவே இல்லை’, ‘ஏதோவொரு ஞாபகத்தின் தடயம் போன்ற பல தொகுப்புகளின் வழி அறியப்பட்ட கவிஞர் கோ.கலியமூர்த்தி கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் மூலம் எனக்கு அறிமுகம். .ஜி.கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) தொகுப்பிற்காக அவரிடம் கட்டுரையொன்றைக் கேட்டிருந்தேன்.

         கவிஞர், சொற்பொழிவாளர், வாசகர் என்று இயங்கக்கூடிய தோழர் எழுத்தைவிட உரையை நிரம்ப நேசிக்கின்றவர். அவரது இருப்பை வாசிப்பு, கவிதை, உரைவீச்சு என்று மட்டுமே தகவமைத்துக் கொண்டுள்ளார். எனவே அவரால் ஏஜிகே குறித்தோ அவரது நூல் குறித்து பேசியவற்றை  மீண்டும் எழுதித்தர இயலவில்லை. இருப்பினும் பாவெல் சூரியனின்காலங்களின் உரையாடல்நேர்காணல் தொகுப்பு நூல் குறித்துஉங்கள் நூலகம்மாத இதழில் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரையிலிருந்து ஏஜிகே நேர்காணல் குறித்த பகுதியை மட்டும் முக்கியத்துவம் கருதி நூலில் இணைத்தோம். அதிகம் வாசிக்கிறவர்; ஆனால் அதிகம் எழுதுவதில்லை. கவிதை, உரைகளில் மட்டும் கவனம் செலுத்துபவராக இருக்கிறார்.  

           சென்ற ஆண்டு கவிஞர் இரா.எட்வின் பணி ஓய்வுவிழாவில் கவிஞரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அப்போது சொற்கள் கூடு திரும்பும் அந்தி என்ற அவரது புதிய கவிதை நூலை எனக்களித்தார். மீண்டும் சென்ற மாதம் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பயிலரங்கில் மீண்டும் சந்தித்தேன். அவர் அளித்த நூல் குறித்து எதுவும் எழுதாத எமது சோம்பல் குற்றவுணர்ச்சியைத் தந்தது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்றே இந்தப்பதிவு.

         கோ.கலியமூர்த்தியின் கவிதைகள் வெறும் கவிதைகள் அல்ல; அரசியல் கவிதைகள். காதலைப் பேசினாலும் அதிலும் அரசியல் இழையோடுகிறது. அரசியல் என்றால் யாருக்கான அரசியல் என்ற கேள்வி முதன்மையானது. மக்களுக்கான அரசியலைப் பேசும் இவரது கவிதைகள் சூழலியல், தலித்தியம், பெண்ணியம் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைப் பதிவு செய்கிறது. பணிநிமித்தம் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். ஆனால் கவிதையின் அரசியல் இவரைச் செல்லமாகத்துப்பாக்கிக் கவிஞர்என்று அழைக்க வைத்திருக்கிறது.

       திணை திரிந்த பின்காலனிய நிலக்காட்சிகள், பிரபஞ்ச நாடகத்தில் பின்னணியாகும் பருவங்களின் திரைகள், காதலின் சிறகேறிக் கடந்தகாலம் மீட்டும் நினைவின் அலைகள், சங்ககாலம் தொட்டு சமகாலக் கவிதைவரை மாறிவரும் அழகியல் வகைமைகளைச் சுவீகரித்தல் என முற்றிலும் புதிய மொழிப்பரப்பு என்று மட்டும் பின்னட்டைக் குறிப்பு சொல்கிறது. கவிதைக்கு எந்தவொரு முன்னுரையோ அணிந்துரையோ அறிமுக உரையோ இல்லை. ஆகவே, கவிதைகளின் வழி அவர் வாசகர்களுடன் நேரடியாக உரையாட களத்தில் இறங்கிவிடுகிறார்.

செம்மஞ்சள் தட்டான்கள்

அழைத்துவரும்  கார்காலம்

கார்த்திகை தீபங்கள் அசைந்து அசைந்து

 கையைசைத்து விடைகொடுக்க

கார்காலம் செல்கிறது.”, (மழைகொண்டு வரும் மஞ்சள் தட்டான் பக்.83)

          மழை, பரிதி, வெயில், ஆறு, மணல், கார்காலம், கோடை, செம்மஞ்சள் தட்டான்கள், காக்கை, தவளை, நத்தை, மரவட்டை, பல்லி, சிட்டுக்குருவி எல்லாம் இவரது கவிதையின் பேசும்பொருளாக இருக்கிறது. எனவே இயற்கைக் கவிஞர் என யாரும் முடிவு செய்துவிட வேண்டாம். இவற்றின் ஊடாகவும் இந்தப் படிமங்களின் வழியேயும் இயற்கை அழிக்கப்பட்ட  ஏகாதிபத்திய அரசியலின் சிடுக்குகளை இக்கவிதைகள்  பேசுகின்றன. இதன்வழியே இவரது கவிதை அழகியலை உணரவும் முடியும். சுவர்ப்பல்லிகளின் மொழி அறிந்தவர்களின் (பக்.07) கதை இவ்வாறு சொல்கிறது.

மேஜிக்கல் ரியலிஸக் கதை மட்டும் இல்லை

ஏகாதிபத்தியத்தின் கதையும் கூட”.  (பக்.07)         

 

 குவாரியாகிவிட்ட குறிஞ்சியிலிருந்து 

மருதம் நோக்கி வந்த மயில்கள்”, - சாத்தான்கள் பிடியில் ஏதேன் தோட்டம் (பக்.115

 

மழைகொண்டு வந்த மஞ்சள் தட்டான்கள் 

அழிந்த நிலமெங்கும் 

அரளிப்பூக்களை மலர்த்தும் 

பலவழிச்சாலைகள் 

மரணம் நோக்கி விரைபவை”, – பால்யத்தின் படிமங்கள் தட்டான்கள் (பக்.124)

 

          தொடுதலில் வண்ணங்களை இழக்கும் வண்ணத்துப்பூச்சியின் வனப்பைவிட  தட்டான்களின் தளுக்கு’ கவிஞரை ஈர்க்கிறது. எனவே, ‘மஞ்சள் தட்டான்’ படிமம் நிறைய இடங்களில் வருகிறது. தட்டான்களின் அரசியலைப் புரிந்துகொள்ளவும் இடமிருக்கிறது.

நானொரு மஞ்சள் தட்டானைத்

தேடிக்கொண்டிருக்கிறேன்.

வராத மழையை

மிக எளிதான அழைத்து வந்தன

செம்மஞ்சள் தட்டான்கள்

சிறகுகளில்

வண்ணத்துப் பூச்சிகள் வடிவானவைதான் எனினும்

தட்டான்களின் தளுக்கு அவற்றுக்கில்லை

ஈசல்கள் கார்காலத்தின் இன்னொரு அடையாளம்

ஆனால்

கருகி வீழும் அவற்றின் கதி

கண்ணீர் சிந்திக் கார்காலத்தை அவமதிப்பது

அது

கைக்கிளை அல்லது பெருந்திணைக் காமம்

தட்டான்கள்

இளம்பருவத்துப் பரவசம்”, (மழைக்கு ஆயிரம் சிறகுகள் பக்.136)

       கருப்பு, திருட்டு, பித்ரு, சத்ரு, கரவா கரைந்துண்ணும் புகழ்மாலைகளுக்கிடையே   காக்கை,

“செத்த மாட்டின் குடலானாலும்

விரதப் புனித உணவானாலும்

ஆகாரம் அவ்வளவுதான் எங்களுக்கு

கூவிக்கூவி அழைக்க வேண்டாம்

கூண்டுக்கிளிகள் அல்ல நாங்கள்”,

என்று சமத்துவம் பாடும் திராவிடப் பறவை (காக்கை) கவித உரக்கச் சொல்கிறது.

“காக்கைகளின் பாடல்கேட்டு

கவியெழுதக் கற்றவன் கோடையைச் சபிப்பதில்லை

கொண்டாடவே செய்கிறான்”, - காக்கைகள் பாடும் கவிதைகள் (பக்.45)

        பின்நவீனத்துவம் மற்றமைகள் (Others) மீதான கரிசனத்தை வலியுறுத்துகிறது. இங்கு மற்றமைகளைப் பேச நேர்ந்த காலம் கனிந்ததை விளக்கும் கவிதை இது.

மற்றமைகளைப் பேச ஒரு  

மீச்சிறுவெளி  

அடரிருட்டு நடுவே ஓர்  

மின்மினிச் சிறகொளி

எத்தனை காலமாயிற்று

இங்கு வர”,  - மற்றமைகளைப் பேசுதல் (பக்.61)

           பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கத்திற்கு  ஆளான நிலையில்,

பட்டைச் சாராயத்துக்குப்

பழகிய குலசாமி”யின் ‘பசிமயக்கமும்’ (பக்.129)

“கிராமத்தில் இப்போது

நதியென்றால் சுடுகாடு

வயலென்றால்  ரியல் எஸ்டேட்

கண்நிறைந்த நீரோடு

கையாலாகாத

அம்மனின் பெயரில்தான்

அமைந்திருக்கிறது நகர்”, - அம்மனின் பெயர் கொண்டவள் (பக்.140) கவிதையில் பெயரளவில் இருக்கும் அம்மனின் இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.

       லோடு ஏற்றி ஓட்டிவரும் வாகனத்துக்குக் குட்டியானை என்று பேர் வைத்தவன் (பக்.13), நகரமெங்கும் அலைகின்ற குட்டியானைகள் (பக்.161),  களிறுகள் வெளியேறிய காடுகளில் கஞ்சாமணம் வீசுகிறது (பக்.15), நதிபெருகக் காத்திருக்கும் நாணல்கள் (பக்.11), குளத்துகோர் இரங்கற்பா (பக்.189), ஸ்மைலிகளின் மொழி (பக்.40), தவளைகளின் தாகத்தை முகில்கள் அறியும் (பக்.29), கடவுள்களின் கல்லரைத் தோட்டம் (பக்.132) போன்ற கவிதைகளின் பேசுபொருளை  தலைப்பே நமக்கு முன்னுரைக்கின்றன.

 நெஞ்சோடு கிளத்தல் 

இளமையின் சலனம் 

மனத்தொடு புலம்பல் 

முதுமையின் தொடக்கம்”, (பக்.117)

      மனத்தொடு புலம்பல் (பக்.117) இளமை X முதுமை முரண்பாட்டை மட்டுமல்ல, காதல் X கலகக்குரல் வெளிப்பாட்டையும் நிகழ்த்துகிறது.

“ஆறு குளம் நீர்நிலைகள்

அழிந்தகதை புலம்புவது

கடந்ததைத் தேடுகிற புலம்பல் இல்லை

அது

கார்ப்பரேட் காலத்தின் நுகர்வுவெறி

கைப்பற்றுவதற்கு எதிரான

கலகக்குரல்

அது காலத்தின் ஒப்பாரி”, (பக்.118)

 

“ஊரிழக்கும் வலி ஒரு ஊமைவலி

யாரிடத்தும்

பகிர்ந்துகொள்ள முடியாத

பால்கட்டிய மார்பின் வலி”, -  ரிழக்கும் வலி (பக்.113)  என்ற கவிதையில் ஒருவகையான nostalgia தன்மை காணப்படினும் மறுபுறம் சீழ்பிடித்த கிராமங்களைப் (பக்.54) பதிவு செய்கிறது.

“முடைநாற்றமடிக்கும் அந்த பால்யத்தின் நினைவுகள்

அக்கிப்புண்ணுக்குக் காவிமண் பூசியவை

வடுவுக்குள் உயிர்த்திருக்கும் ஆறாத காயங்கள்

சாதிவெறி பிடித்த நம் கிராமங்களின்

போலிக்கருணை அருவருப்பானது” (பக்.54) என்று சொல்லி,

“ஆயிரம் துயரங்கள் உண்டெனினும் நண்பா

அரவணைத்த நகரம் பெருங்கருணை மிக்கது

நனதிந்தச் சிறகுகளும் வானமும் அது தந்தது

கறைபடிந்த பால்யத்தைக் களைந்தபின்பே

நாமடைந்தோம்

பொதுவாகப் புழங்க ஒரு சிறுபரப்பை

சிறுபரப்பில் காலூன்றிச் சிறகுவிரித்துத்தான்

விரிவானம் அடைந்தன நம் குஞ்சுகள்”, (பக்.55) என்ற யதார்த்தச் சூழலும் பதிவாகிறது. வெகுதூரம் விலகி… (பக்.34) கவிதை ஏக்கம், யதார்த்தம் இரண்டையும் இணைத்தே பதிவு செய்கிறது.

        அகமும் புறமும் தமிழர் வாழ்வியல் நாணயத்தின் இருபக்கங்கள் ஆதலால், கூடலும் கூடல் நிமித்தமாக… (பக்.96), மீகாமம் (பக்.138), நீருக்கு காதல் புரியும் (பக்.159) போன்ற பல கவிதைகள்,

“கரையில்  காத்திருக்கும் கள்கலயம் போல்

பொங்கி நுரைக்கும் காமத்தை”, (பக்.97) அள்ளித் தருகின்றன. இத்துடன்,

“காவிரி கொள்ளிடம் இரண்டிலுமே நீரில்லை

சாரைசாரையாய் லாரிகள் ஊரும் கரைகளில்

அஞ்சலியாய்ப் பூத்தூவும் வேம்பின் கிளைகளில்

காகங்கள் பாடுகின்றன கோடையின் பாடலை

அத்தனைக் கசப்பு வழிகிறது பாடலில்”,  (பக்.160) என்று கவித்துவம் நிரம்பி வழியும் இக்கவிதையில் இன்றைய வாழ்வின் கசப்பு பதிவாகிறது.

மடலேறுதலில் தொடங்கிய காதல் 

உடன்கட்டை ஏற்றுவதில் 

போய் முடிந்தபோது 

அடிமை விலங்குகளே ஆபரணம் ஆயின”, _ மௌனக் கவிதைகள் இறந்துவிட்டன (பக்.130) என்று காதல் சிதைந்த கதையுடன், கவிதையின் கதையும் பேசுபொருளாகிறது.  

         “மௌனம் என்பது என்பது தியானம் அல்ல; மரணம்”, (பக்.131) என்று சொல்லி

“கூச்சல்தான் கவிதை நமக்கு

மௌனக்கவிதைகள்

இறந்துவிட்டன”, (பக்.131) என்று அறைகூவி நவீனகவிதையின் இறப்பை அறிவிக்கிறது.

          பசி என்றால் பதற்றமடைந்து காதல், அன்பு, கருணை பாடும்  கவிதைகளின் நிலை யை கீழ்க்கண்ட கவிதை விவரிக்கிறது.  

“பக்தர்களுக்கு ஆசிவழங்கும்

பரிதாபமான கடவுளைப்போல

நீலம்பாரித்த விழிகளோடு

அணு உலைப் புற்று படர்ந்து

அலைகள் கதறும் கரைகளில்

செத்துக் கரையொதுங்குகின்றன”,  - கரையொதுங்கும் கவிதைகள் (பக்.19)  

         நவீன கவிதைகளில் அரசியல் தொனி, பிரச்சார நெடி இருக்கக்கூடாது என இலக்கணம் வகுத்த கூட்டம் தங்களது அரசியலின் ஓர் அங்கமாகவே இதைச் செய்தனர். மாற்று அரசியலை முடக்கும் எதிர் அரசியல் செயல்பாடாகவே  இதனைப் பார்க்க முடியும். அரசியலைப் பேசுவதுதான் தமிழ்க் கவிதையியல் கோட்பாடாக இருந்து வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தோழர் கோ.கலியமூர்த்தியின் சமகால அரசியல் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.  

நூல் விவரங்கள்:

சொற்கள் கூடு திரும்பும் அந்தி  கவிதைகள்

கோ.கலியமூர்த்தி

முதல் பதிப்பு: மே 2023

பக்கங்கள்: 194

விலை: ரூ. 220

வெளியீடு:

வேரல் புக்ஸ்,

6, இரண்டாவது தளம்,

காவேரி தெரு,

சாலிகிராமம்,

சென்னை – 600093.

அலைபேசி: 9578764322

மின்னஞ்சல்: veralbooks2021@gmail.com

வெள்ளி, மே 17, 2024

பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால,  பின்காலனிய முன்னோடி

 

பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால,  பின்காலனிய முன்னோடி

(‘புதுமலர்பாவேந்தர் பாரதிதாசன் ஆவணச்சிறப்பிதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்


 

          புதுமலர்இதழ் வள்ளலார், கவிஞர் தமிழ் ஒளி ஆகியோருக்கு முன்பு ஆவணச் சிறப்பிதழ் வெளியிட்டது. பாரதிதாசனின் பிறந்த (1891, ஏப்ரல் 29) மற்றும் நினைவு நாள் (1964, ஏப்ரல் 21) வரும் ஏப்ரல் மாதத்தினை ஒட்டி வெளியான இச்சிறப்பிதழில் ஜமாலன், ஈரோடு தமிழன்பன், கண.குறிஞ்சி, வே.மு.பொதியவெற்பன், எஸ்.சண்முகம், .தனஞ்செயன், இரா.முரளி, செந்தலை ந.கவுதமன், எல்.இராமமூர்த்தி, மணிகோ பன்னீர்செல்வம்  ஆகியோரின் பாரதிதாசன் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

          பாரதிதாசனின் படைப்புகளை ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து அரசே மலிவுப்பதிப்பாக வெளியிட வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்காகக் குரல்கொடுத்துப் போராடி, இந்து சனாதனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் நரேந்திர  தபோல்கரின் கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததுபோல், பாவேந்தர் பாரதிதாசன் நினைவாக, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவரவேண்டுமென, இதழின் தலையங்கம் வலியுறுத்துகிறது.

        தமிழ் நவீனத்துவ மரபில் பாரதியும் பாரதிதாசனும்”, என்ற கட்டுரையில் தமிழில் மறுமலர்ச்சிக் காலத்தில் இயங்கிய பாரதியும் பாரதிதாசனும் என்றாலும் பாரதி மறுமலர்ச்சியுடன் நின்றுவிட, பாரதிதாசனோ தமிழ் அறிவொளி இயக்கத்தின் முன்னத்தி ஏராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை அவரது இலக்கிய இயக்கம் வெளிப்படுத்துவதாக உள்ளது,  என்று   ஜாமலன் புதிய பார்வைக் கோணத்தை முன்வைக்கிறார்.

    பாரதி சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர். பாரதிதாசன் தமிழ் அறக் கோட்பாட்டை ஏற்றவர். இதனால் திருக்குறளில் உள்ள துறவறம், வீடுபேறு உள்ளிட்ட சமணம் சார்ந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளி,  சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டின் அடிப்படைகளான நால் வர்ணம், நால்வேதம், நான்கு ஆசிரமம், நான்கு நிலைகள் ஆகியவற்றை மறுத்து, முத்தமிழ், முக்கனி, முச்சங்கம், மூவேந்தர்கள், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலைகள்   என்கிற தமிழ் அறக் கோட்ப்பாட்டை தனது காப்பியங்களில் எடுத்துரைப்பதை ஜமாலன் விரிவாக விளக்குகிறார்.

        தமிழர் நிலவளங்களைப் பாதுகாப்பதும் தமிழ் மொழி மீதான பண்பாட்டுத் திணிப்பை எதிர்ப்பதும் பாரதிதாசனின் முதன்மை நோக்கமாக இருப்பதால் அவரை தமிழ்ப் பின்காலனியத்தின் முன்னோடி என்று பேரா.இரா.முரளியின் கட்டுரை மதிப்பிடுகிறது.

        பாரதிதாசனுடான நினைவுகளைப் பகிரும் ஈரோடு தமிழன்பனின்பாவேந்தர்சில நினைவுகள்கட்டுரையில் பெரியாரியத் தாக்கம் இருந்த காரணத்தினால் பொதுவுடையாளர்கள் பாரதிதாசனை உரிய இடத்தில் வைத்துப் பார்க்கவோ, பாராட்டவோ முன்வரவில்லை என்கிறார். பாரதிதாசன் வீட்டை அடமானம் வைத்துபாண்டியன் பரிசுகாவியத்தைத் திரைப்படமாக்க முயன்று ஏமாற்றங்களால் உடல்நலம் குலைந்துபோனதையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரையில் பாவேந்தர் இறந்த நாள் தவறாக உள்ளது. (21.04.75  அல்ல 21.04.64) புதுவை முதல்வர் சுப்பையா என்றும் உள்ளது. அதுவும் தவறு. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான வ.சுப்பையா (1911-1993) என்று இருக்க வேண்டும்.

         சீர்திருத்தக் கவி, தமிழ்த் தேசிய கவி, பொதுவுடைடைமைக் கவி, பிரபஞ்சக் கவி போன்ற பாரதிதாசனின்  சிந்தனைப் பரிமாணங்களையும் அவரது கவிதைகளில் உள்ள சில முரண்பாடுகளையும் விளக்குகிறது தோழர் கண.குறிஞ்சியின் கட்டுரை.

       மணிக்கொடிஇதழில் எழுதிய பாரதிதாசனை நவீன இலக்கிய உலகம் பொருட்படுத்தவில்லை, என்கிற சுகுணா திவாகரின் கருத்தை பகுதி உண்மை என்று சொல்லும் தோழர் வே.மு.பொதியவெற்பனின் கட்டுரை (பாரதிதாசனும் புதுமைப்பித்தன்), இதன் பொருட்டு பேரா. .மணிகண்டன், தி..சி., இளங்கோ கிருஷ்ணன், தமிழவன் போன்ற தரப்புகளை இடையீடு செய்து, பாரதி பரம்பரை, பெரியார் பரம்பரை இரண்டிலும் ஒருசேர இயங்கிய பாரதிதாசனுக்கும் மணிக்கொடியாளர்களுக்கும்  இடையிலான உடன்பாடு மற்றும் முரண்பாடுகளின் வெவ்வேறு தரப்புகளை தமது வழக்கமான பாணியில் மேற்கோளிடுகிறார். 

         பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ மூலம் ‘தமிழ்’ என்ற சொல் அவரது கவிதைகளின் இயற்கூறாகவும் விளங்குவதையும் ‘தமிழ்’ என்ற குறியீட்டை கவிதையாடலின் பரப்பில் நீட்சி கொள்ளச் செய்வதையும் நவீன இலக்கிய விமர்சகர் எஸ்.சண்முகம் எடுத்துக்காட்டுகிறார். இயற்கையின் எண்ணிலியான அசைவுகளை பல்வேறு காட்சிகளாக பிரதியாக்கம் செய்திருக்கும் ‘அழகின் சிரிப்பு’ தமிழின் மொழிபிம்பத்தை அகவயப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.

        “வட்ட மேசையில் சுயமரியாதை இதழியலின் இருக்கை” என்ற் பேரா.மணிகோ பன்னீர்செல்வத்தின் கட்டுரையில் சுயமரியாதை இதழியலின் படைக்கலன்களின் ஒன்றான ‘புதுவை முரசையும்’  பாரதிதாசனின் எழுத்தாக்கங்களையும் எடுத்துரைக்கிறது. ஸ்வராஜ்யம் பற்றிய சுயமரியாதை நோக்கு, நாட்டைச் சுற்றிய ராட்டை, ஆணவச் சுதந்திரம் அடைந்துவிட்டோர், வகுப்புவாரி உரிமையிலிருந்து இரட்டை வாக்குரிமை, வட்ட மேசையில் படர்ந்த  சதுர்வருணம் போன்ற தலைப்புகளில் பாரதிதாசனது பெரியாரியப் பார்வை வெளிப்படுத்தப்படுகிறது.     

       பாரதியார் வழியாக பெரியாரை வந்தடைந்த பாரதிதாசன, பரந்த அறிவுப்பார்வை கொண்டு உலகை அணுகி கவிதைகளில் புதிய போக்குகளைக் கையாண்டதையும் ‘பெரியார் ஒளியில் பாரதிதாசன்’ என்கிற செந்தலை ந.கவுதமன் கட்டுரை அவரது படைப்பு வழிநின்று நிறுவுகிறது.

        கவிதை என்பது வெறுமனே அகவுணர்வு வெளிப்பாட்டிற்கான வடிகால் சாதனமாக அமைவது என்னும் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் வகையில், சமுதாயத்தைப் பாதுகாக்கப் போராடுவோரின் ஆயுதமாகக் கவிதையின் பரிமாணத்தை வலிமைமிக்கதாக மாற்றியதை பாரதிதாசனின் சாதனையாக முனைவர் ஆ.தனஞ்செயன் கட்டுரை குறிப்பிடுகிறது.

       பேரா.எல்.இராம்மூர்த்தியின்  ‘பாவேந்தர் தமிழ்’ கட்டுரை எனும் கட்டுரை, மொழியியலின் ஊடாக பாரதிதாசனின் கருத்தியல்  கோட்பாடு அணுகுமுறைகளை ஆராய்கிறது. நாம் X பிறர், தெற்கு X வடக்கு, தமிழ்  X பிறமொழிகள், நகரம் X கிராமம், மாற்றம் X பழமை, அறிவியல் விவசாயம் X பண்டைய விவசாயம், சந்தைப் பொருளாதாரம் X தேவை சார்ந்த பொருளாதாரம், வளர்ச்சி X நிலைத்தன்மை போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைக்கும் மொழியியல் கூறுகளை கட்டுரை எடுத்துரைக்கிறது.

          இன்றைய அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நவீன இலக்கிய உலகில் பாரதியைப் போன்று யாரும் அதிகம் உச்சரிக்காத பாரதிதாசனின் பல்வேறு நவீன முகங்களை வெளிப்படுத்தும் வகையில் ‘புதுமலர்’ ஆவணச் சிற்ப்பிதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.