செவ்வாய், செப்டம்பர் 24, 2024

மைய நீரோட்டத்தில் பரப்பப்படும் வெறுப்பரசியல்

 

மைய நீரோட்டத்தில் பரப்பப்படும் வெறுப்பரசியல் 

 

மு.சிவகுருநாதன்

 

 


            தோழர் நாகூர் ரிஸ்வான் இதழியல் பட்டப் படிப்பை முடித்து இன்றுள்ள ஊடக அறமற்றச் சூழலில் மாற்று இதழியல் பார்வைகளை முன்வைத்து இயங்கிவரும் இளைஞர். அவர் www.meipporul.in இணையத்தில் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த 20 கட்டுரைகள் ஜனவரி 2022இல் வெளியானமைய நீரோட்டத்தில் இஸ்லாமோஃபோபியாஎன்ற இத்தொகுப்பில் உள்ளன.

         இது அவரது முதல் தொகுப்பாகும். இதற்குப் பிறகு இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும் (டேனியல் ஹகீகத்ஜூ), ஹிஜாப்: ஒரு பன்முகப் பார்வை (யாசீர் காழி), ஷர்ஜில் இமாம் பேசியது என்ன? - இந்திய அரசியலில் பேசப்படாத பக்கங்கள் போன்ற இவரது மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. நேரடி மொழிபெயர்ப்பாக அல்லாமல் விளக்கக் குறிப்புகளுடன் இதழியல் பாணியில் இவரது எழுத்துகள் அமைகின்றன.  

          சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒரு துருவ உலகில் உருவாகியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு குறித்த கருத்தாழமிக்க ஆக்கங்களுடன் வெளிவரும் இத்தொகுப்பு, கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஓர் முக்கியமான ஆவணம்”, என்று அணிந்துரையில் பேரா. .மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பொதுப்புத்தியில் இஸ்லாமிய வெறுப்பை உண்டாக்கும் பலநிகழ்வுகள் நடைபெறுவது குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் கருத்தியல் குறித்தும் இந்நூலின் கட்டுரைகள் விவரிக்கின்றன.

        இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள்என்ற 17 பக்க விரிவான கட்டுரை தவிர்த்து பிற கட்டுரைகள் அளவில் சிறியவை. ஜெர்மனி மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் சமயம் மற்றும் இனப் பன்மைத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் பேரா. இர்ஃபான் அஹ்மது ஒரு இணையவழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரையை இக்கட்டுரை தொகுத்தளிக்கிறது.

          இந்து ஓரியண்டலிசம்பன்னெடுங்காலமாக இந்திய அரசியலுக்கான அடித்தளமாக இருந்து வருகிறது. இது ஒரு நவீனக் கதையாடல். ‘இந்து ஓரியண்டலிசம்ஆர்.எஸ்.எஸ்., பாஜக வுடன் மட்டும் தொடர்புடையதாக அல்லாமல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம் அனைத்திலும் கட்சி அரசியலைத் தாண்டி இயங்குகிறது. இவற்றை கருத்தியல் தளத்தில் மட்டுமின்றி மொழி, உணவு, சினிமா, அரசியல், விளையாட்டு என எல்லாத்தளங்களிலும் அவதானிக்க இயலும், என்று இதன் அடிப்படைகள் விளக்கப்படுகின்றன.

       இலக்கிய விமர்சகர் எட்வர்ட் சையத் 1978இல் தனது புகழ்பெற்ற Orientalism என்ற நூலை எழுதினார். அறிவுக்கும் அதிகாரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது சையதின் முதன்மை வாதமாகும். அவர் கோட்பாட்டு ரீதியாக ஃபூக்கோவையும் கிராம்சியையும் சார்ந்திருந்தார். எட்வர்ட் சையத் இலக்கிய விமர்சகர் என்பதால் பிரதிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். மேற்கத்திய சக்திகள் கிழக்கத்தியர்களை, அதிலும் குறிப்பாக மத்தியக் கிழக்கு மக்களை, தவறாகச் சித்தரிப்பதைக் கேள்விக்குள்ளாக்கினார். இவரது நூலின் போதாமைகளை விவாதித்து 2018இல் பேரா. வாயில் ஹல்லாக் எழுதிய Restating Orientalism எனும் நூலில்இஸ்ரேலிய ஓரியண்டலிசம்இன்றைக்கு இயங்கிவருவதைக் குறிப்பிடுகிறார். அதேபாணியில்இந்து ஓரியண்டலிசம்என்ற சொல் கையாளப்படுவதும் நூலில் விளக்கப்படுகிறது.

       இந்து ஓரியண்டலிசம்என்பது ஒரு கருத்தியல் செயல்திட்டம். அது மதத்தையும் இந்தியாவையும் ஒன்றாக்குவதோடு, அதையே இந்தச் சமூகத்தையும் பண்பாட்டையும் அதிகாரத்தையும் ஒன்றிணைக்கும் அஸ்திவாரமாகவும் நிலைநிறுத்துகிறது. இது தேசியவாதத்தால்  பலமான தாக்கம் பெற்றதோடு நில்லாமல் அகண்ட பாரதம் என்கிற ரீதியில் தென் ஆசியப் பிராந்திய அளவிலான கோணத்தையும் சர்வதேசக் கோணத்தையும் கொண்டுள்ளதும் எடுத்துக்காட்டப்படுகிறது.

     முஸ்லீம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கூறுவதன் மூலம் இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரிவினை உண்டாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் ராஜாராம் மோகன்ராய் முஸ்லீம்களை அந்நியர்கள் என்றே சொல்வதும், இந்திய மானுடவியல் அறிஞர்கள் பலரிடமும் இதே சித்திரம் வெளிப்படுவதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

      குடியுரிமைச் சட்டம், கும்பல் படுகொலைகள், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், லவ் ஜிஹாது சட்டம் போன்ற பல தளங்களில் ஓரியண்டலிசத்தின் கோரமுகம் வெளிப்படுவதும் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு போன்ற நீதித்துறை செயல்பாடுகளும் சினிமா, ஊடகங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக அணுகும் பார்வை போன்றவையும் இந்நூலில் விளக்கப்படுகின்றன.

      இந்து தலிபான்கள்என்ற எழுதுபவர்களின் மனச்சாய்வு, கொரோனா ஊரடங்குப் பிரச்சினையில் மோடி அரசை விமர்சித்த காங்கிரஸ்துக்ளகி ஃபரமான்என்றது, ராகுல் காந்தியை விமர்சிக்கும் மோடி யுவராஜ் என்பதற்குப் பதிலாகஷேஹ்ஸாதா’ (இளவரசன்) என்ற சொல்லை வேண்டுமென்றே பயன்படுத்தியது, ஃபிரெஞ்சு அரசியல் அறிவியலாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலா மோடி ஆட்சியைசுல்தானிச ஆட்சிஎன்றது போன்றவை ஓரியண்டலிசமும் இஸ்லாமோஃபோபியாவும் இணையும் புள்ளிகளாகப் பார்க்கப்படுகின்றன.

      சைவம்அசைவம் போன்ற உணவுப் பண்பாடு, 50% காவல்துறை அதிகாரிகள் இஸ்லாமியர்கள் குற்ற நாட்டம் கொண்டவர்களாக அணுகும் நிலை, தி கார்டியன் இதழ் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தை முஸ்லீம் பெரும்பான்மைப் பல்கலைக் கழகம் என்று எழுதியது போன்றவை  இந்து ஓரியண்டலிசம் அன்றாட வாழ்வின் யதார்த்தமாக மாறிவிட்ட சூழலை விவரிக்கிறது. இந்து ஓரியண்டலிசம் சமூக அடித்தளாகவும் இயங்குவிசையாகவும் நீண்டகாலம் செயல்பட்டு எல்லா மட்டங்களிலும் நீக்கமற ஊடுபாவியுள்ள தன்மை, லிபரல், முற்போக்குத் தளங்களிலும் அதன்  இருப்பையும் வெளிப்பாட்டையும்  காணலாம். அதைச் சரியாக இனங்காணும்போது மட்டுமே தற்போது நிலவும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும், என்பதையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

       தீவிரவாதம் சார்ந்த சமகால விவாதங்கள் திட்டமிட்டே சிறுபான்மை சமூகத்தோடும் அதன் மதத்தோடும் தொடர்புப் படுத்தப்படுகின்றன. நஜ்மா ஹெப்துல்லா அளித்த சிறுபான்மையினர் குறித்த புதிய வரையறை விமர்சிக்கப்படுகிறது. பசு, மாட்டிறைச்சி தொடர்பான கும்பல் படுகொலைகளைப் பயங்கரவாதம் என்று சொல்வதன் காரணத்தை பேரா. இர்பான் அஹ்மது தனது நேர்காணலில் விவரிக்கிறார். “பயங்கரவாதத்திற்குப் பல வடிவங்கள் உள்ளன. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற ஒன்று மட்டுமில்லை; அதற்கு இந்து வடிவம்,  யூத வடிவம், கிறிஸ்தவ வடிவம் அல்லது மதச்சார்ப்பற்ற வடிவமும் உண்டு. நீங்கள் கருவிகளைக் கவனிக்கக் கூடாது, விளைவுகளைத்தான் பார்க்க வேண்டும். வெடிகுண்டுகள், ஏவுகணைகள், கார்பெட் குண்டு, கும்பல் படுகொலைகள் எனப் பல வழிகளிலும் அச்சத்தை உண்டாக்க முடியும்”, என்று அவர் குறிப்பிடுகிறார்.

     ஹலால் (அனுமதிக்கப்பட்டது) உணவு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. இதற்கு விரிந்த பொருளுண்டு. இதற்கு எதிராக ஹறாம் (தடுக்கப்பட்டது) என்ற சொல் பயன்படுகிறது. பன்மைச் சமூகத்தில் ஒருவரின் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பதே சுமூகமான, இணக்கமான வாழ்வுக்கு வழிகோலும் என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. ஆகஸ்ட் 11, 2020 கிழக்கு பெங்களூருவில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தை ஓர் இளைஞர் முகநூலில் வரைந்த கார்ட்டூன் என்று சுருக்கிப்பார்ப்பது இதன் அரசியலை மறுக்கும் போக்காகும். இதன் பின்னணியிலுள்ள இந்துத்துவப் பரப்புரைகளும் வெறுப்பரசியலும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை  என்பது தெளிவாகிறது.

        பெரும்பான்மைவாதத்திலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் பொறுப்பு பெரும்பான்மையினர் மீதுதான் இருக்கிறதே தவிர சிறுபான்மையினர் மீதல்ல”, என்று ஐரினா அக்பர் நான் ஏன் ஒரு முஸ்லீமாகப் போராடுகிறேன்? என்ற கட்டுரையில் தெரிவிக்கிறார். தப்லீக் ஜமாத்தின் மூலம்தான் கொரோனா பரவியது என்கிற வெறுப்பரசியல் வன்முறைகளை எடுத்துக்காட்டும் கட்டுரையும் இந்நூலில் உண்டு.

       உத்திரப் பிரதேச மாநிலத்தில் பரவும் வெறுப்பரசியல் வன்முறைகள் எண்ணிலடங்காதவை. மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இஸ்லாமியர்கள் வேட்டையாடப்படுகின்றனர். காஸியாபாத்தைச் சேர்ந்த 72 வயதான அப்துல் சமது சைஃபிஜெய் ஶ்ரீராம்என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தி அடித்து தாடியை அறுத்த வன்முறைகளில் அரசும் காவல்துறையும் சட்டத்தை மதிக்கவில்லை. இச்சம்பவத்தை மறைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

        இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை அமபலப்படுத்தும் குறுநூலை பேரா. .மார்க்ஸ் 1990களில் எழுதி வெளியிட்டார். முஸ்லீம்களின் மக்கள்தொகை பற்றிய அவதூறுகளையும் ஐந்து கட்டுக் கதைகளையும் மறுத்து எழுதியுள்ள டாக்டர் அபய்குமார், சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக ஊடுருவியுள்ள இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டு முறியடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.   

     செப்டம்பர் 19, 2008இல் தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவால் நடத்தப்பட்ட  பாட்லா ஹவுஸ் மோதல் படுகொலை  நினைவாக ஜாமிய மில்லியா மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்ட துண்டறிக்கையில், “பாரபட்சமற்ற நீதி விசாரணைக் கோரிக்கையை அப்போதிருந்த தில்லி அரசும் ஒன்றிய அரசும் அலட்சியப் போக்கில் கையாண்டது”, எடுத்துக்காட்டப்படுகிறது.  மேலும் அதிகாரத்தில் இருப்போர்கள் மதச்சார்புடையவர்கள், மதச்சார்பற்றவர்கள் என எவரும் எவ்வித வேறுபாடும் எதிர்ப்புமின்றி   இஸ்லாமோஃபோபியாவை பரப்பிவருவது”, பதிவு செய்யப்பட்டுள்ளது.

      9/11 தாக்குதல், மும்பைக் குண்டுவெடிப்பு என எதிலும் சிமி அமைப்பு குற்றவாளியாகப் பார்க்கப்பட்டது, தவறானது மட்டுமல்ல, இஸ்லாமிய வெறுப்பரசியலின் வெளிப்பாடு என்று இர்பான் அஹ்மது தனது கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார். நியூசிலாந்து பள்ளிவாசல் மீது நடைபெற்ற தாக்குதல் படுகொலைகள், பிரான்சில் கொண்டு வரப்படும் பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா, ஹிஜாப் அணியத் தடை போன்றவை மேற்குலக நாடுகளின் மதச்சார்பின்மையை  மதச்சார்பற்றதாக மாற்ற வேண்டியிருப்பதை  இர்பான் அஹ்மதுவின் மற்றொரு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

       காலச்சுவடின் இந்துத்துவ அரசியலும் அவர்கள் போடும் நடுநிலை வேடமும் நாமறிந்ததுதான். ஹாதியா வழக்கு குறித்து அவர்கள் எழுதியிருக்கும் தலையங்கம் அவர்களின் பார்ப்பனிய நோக்கங்களை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. மேம்போக்காக நோக்குபவர்களுக்கு இது புரிபடாமால் போகலாம். எனவே தமிழ்ச் சூழலில் இவற்றைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. லவ் ஜிகாதுகர்வாபஸி இரண்டையும் ஒன்றாக்கும் இவர்களது பார்ப்பன குயுக்தித் தந்திரங்கள் இவர்களது பூணூலை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

       ஸிப்டிக் அண்டர் மை புர்கா (இந்தி) என்று படமெடுக்கும் போலித் தாரளவாதிகள் என் குர்தாவுக்குள் பூணூல் என்ற ஏன் படமெடுப்பதில்லை? என்று கேள்வி மிக முக்கியமான ஒன்று. ஆண்களுக்காகப் பூசிக்கொள்ளும் உதட்டுச்சாயம் பெண் விடுதலையின் குறியீடாக எப்படி இருக்க முடியும்? காப் பஞ்சாயத்துக் கீழும் பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி ஏன் இவர்கள் பேசத் துணிவதில்லை? என்ற கேள்விகளையும் ஒருசேர முன்வைக்கிறது இக்கட்டுரை.

     குக்கூ, ஜோக்கர் படங்களின் மூலம் புகழ்பெற்ற ராஜூ முருகன்ஜிப்ஸிஎன்ற நாடோடி வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இடதுசாரிகள் கொண்டாடும் ஒன்றாக மாறியுள்ளது. முஸ்லீம் சமூகம் குறித்த புரிதலின்றியும் பொறுப்புணர்வற்றும் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைக் கொண்டாடும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீட்பர்கள் என்று தங்களைக் கற்பனை செய்துகொள்வோர் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டிய தேவையை ஒரு கட்டுரை வலியுறுத்துகிறது. 

         தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளராக வலம் வரும் சோமாலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் டச்சு அரசியல்வாதி அயான் ஹிர்சி அலிக்கு பெண்கள் அளித்த எதிர்வினையும் இங்கு பதிவாகிறது. “எங்களிடமுள்ள பன்மைத் தன்மையை உங்களின் வசதிக்கேற்ப ஒருமுகப்படுத்தி, ஒருபடித்தானவர்களாக ஆக்கிவிடுகிறீர்கள். உண்மையில் இது அறிவுஜீவித்துவம் இல்லை; சோம்பேறித்தனம்”, என்ற எதிர்வினை முதன்மையானது. “உங்கள் மொழி வெள்ளை ஆணாதிக்க, பெண் வெறுப்பை உமிழும், போர்கள், படையெடுப்புகள், இனப்படுகொலைகள் போன்றவற்றை நியாயப்படுத்தும் மொழி. முஸ்லீம்கள் பற்றிய பொதுமைப்படுத்தல்கள், பொய்யுரைகள், வெறுப்புப் பரப்புரைகள் போன்றவற்றை மூலதனமாகக் கொண்டு வெறுப்பரசியல் பிழைப்பு நடத்தி லாபமீட்டுவதும் இங்கு தெளிவாகச் சுட்டப்படுகிறது.

        லண்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராக இருக்கும் சாரா ஃபாரிஸ்ஃபெமோ நேஷனலிசத்தின் (femonationalism) எழுச்சிஎனும் நூலை எழுதியுள்ளார். இதில் வலதுசாரித் தேசியவாதிகள், நவதாராளவாதிகள், சில பெண்ணியவாதிகள், பாலினச் சமத்துவம் கோரும் சிலரும் முஸ்லீம் ஆண்களை பூதாகரப்படுத்தும் நோக்கிலும் தங்கள் சொந்த அரசியல் குறிக்கோளை அடைவதற்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை இவர் ஆய்வுக்குட்படுத்துகிறார். சாரா ஃபாரிஸின் நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இறுதிக்கட்டுரையாக அமைந்துள்ளது. பாலினவாத எதிர்ப்பு (anti sexism) இனவாத எதிர்ப்புக்கு விரோதமானதாக மாறியிருக்கிறது. பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டங்களும் இனவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் இணையாகத் தொடரவேண்டியவை என்பதையும் அவர் உரையாடலில் வலியுறுத்துகிறார்.

      சில பத்தாண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பரசியல் இங்கு திட்டமிட்டுப் பரப்புரை செய்யப்பட்டு, உச்சத்தை அடைந்துள்ளது. அதன் தாக்கம் ஒவ்வொரு களங்களிலும் எதிரொலிக்கவே செய்கிறது.  குறிப்பாக கருத்தியல் சார்பற்ற நடுநிலைவாதிகளிடமும் இதன் தாக்கம் ஆதிக்கம் செலுத்துவதைக் காணமுடிகிறது. இதை ஒருவகையில் வெறுப்பரசியலின் வெற்றியாக பார்க்க வேண்டியுள்ளது. இடதுசாரிகளும்  சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோர் சார்பாக பேசக்கூடியவர்களும்  சில நேரங்களில் இத்தகைய நுண்ணரசியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதை வருத்தத்துடன்  கவனிக்க வேண்டியுள்ளது. அறிவுஜீவிகள், பத்தரிக்கையாளர்கள் என்கிற போர்வையில் இந்துத்துவ மனநிலையில் இயங்கக்கூடிய   பலரை காணமுடிகிறது. இதை அறிவுலக வீழ்ச்சியாகவும் வெறுப்பரசியலை வளர்க்கும் நிலைப்பாடாக அவதானிக்க முடிகிறது. அனைத்து நிலைகளில் உள்ளோருக்கும் உரிய விழிப்பை உண்டாக்க இம்மாதிரியான நூல்கள் பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை.   

 நூல் விவரங்கள்:

மைய நீரோட்டத்தில் இஸ்லாமோஃபோபியா  (கட்டுரைகள்)

நாகூர் ரிஸ்வான்

விலை: ₹ 150  பக்கங்கள்: 125

முதல் பதிப்பு: ஜனவரி 2022

வெளியீடு:

சீர்மை,

பூரம் பிரகாசம் சாலை,

பாலாஜி நகர்,

ராயப்பேட்டை,

சென்னை -  600014.

பேசி: 8072123326

மின்னஞ்சல்: seermainoolveli@gmail.com

இணையம்: www.seermai.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக