வரலாறும் தொன்மமும் - தொடர்
09. களப்பிரர் கதைகள்
மு.சிவகுருநாதன்
வரலாற்றில் பொற்காலங்களுக்கும் இருண்ட காலங்களுக்கும் என்றும் இடமில்லை. ஆனால் இத்தகைய கட்டமைப்புகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு தமிழின் பெருமிதங்களாகப் போற்றப்படுகின்றன. இதன் பின்னாலுள்ள அரசியல் சொல்லாடல்கள் பலரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இடைக்காலம் பற்றி உற்பத்தியான இந்தப் பொற்காலச் சொல்லாடல்கள் சங்ககாலத்தில் இல்லை. பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பக்தியிலக்கிய காலகட்டம் தமிழர் – தமிழ் – தமிழ்நாடு அடையாளமாக வலிந்து திணிக்கப்படுகிறது.
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் போன்ற எந்த வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர் போல் இவ்வளவு வெறுப்பு உமிழப்பட்ட அரச வம்சம் இருக்க வாய்ப்பில்லை. இவர்களது மிதமிஞ்சிய சைவப்பற்று மற்றும் சோழப்பெருமை ஆய்வுக் கண்ணோட்டத்தையே சாகடித்தது வரலாற்றெழுதியலின் மாபெரும் அவலம். இவர்களும் இவர்களைப் பின்பற்றி வரலாறு எழுதிய பலரும் களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் தெளிவற்ற இருண்ட குலம் (obscure), இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தனர்.
சைவப் பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்த மயிலையார் பிறரைப் போல சைவ – சோழப் பெருமை மட்டும் பேசவில்லை. மாறாக ஜனநாயகத் தன்மையோடு களப்பிரர்கள் அரச பாரம்பரியமற்றவர்கள்; எனவே இவர்களால் மொழிக்கும் பண்பாட்டிற்கும் எவ்வித பங்களிப்பையும் செய்ய இயலாது என்ற பொய்மையை தோலுரித்தார். இவரது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டியது தமிழ் ஆய்வுலகத்தின் கடமை. விடியல் பதிப்பகம் வெளியிட்ட களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலில் அ.மார்க்ஸ் விரிவான ஆய்வுரை எழுதியுள்ளார். இதில் மயிலையார் வந்தடைந்த முடிவுகளைத் தாண்டி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆய்வுகளையும் இணைத்து களப்பிரர் ஆய்வில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறார். மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்கள் செம்பதிப்பாக வந்தால் மட்டும் போதாது; ஆய்வுப்பதிப்பாக வெளிவருதல் வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இனியும் தமிழ் ஆய்வுலகம் மயிலையாரை புறக்கணிக்கக்கூடாது.
எனது மதம், பிறர் மதம் என்று கொள்ளாமல் காய்தல், உவத்தல் இல்லாமல் நடுநிலை நின்று செம்பொருள் காணவேண்டும் என இதற்கென கொள்கை வகுத்து அதன்படி செயலாற்றியவர். இத்தகைய மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டுமென வலியுறுத்தியவர் மயிலையார். அந்த வகையில் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை.
இங்குள்ள சைவ, வைணவ ஆதரவு மற்றும் சமண, பவுத்த எதிர்ப்பு மனநிலைகளைக் கொண்ட வரலாற்றாசிரியர்கள் அனைவரும் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்றொரு கற்பிதத்தைக் கட்டமைத்தனர். பின்னாளில் சங்கம் என்ற பவுத்தக் கோட்பாட்டை தமிழில் ஏற்றி சங்கம் மருவிய காலம் என்றனர். இதன் பின்னுள்ள அரசியல் வெளிப்படையானது.
அப்படிப் பொற்கால வரையறையை உருவாக்குவது என்றாலும்கூட, ஆட்சி முறை, நிர்வாக அமைப்பு, நீதி முறை, சமூகப் பொருளாதார நிலை, பொதுமக்களின் வாழ்க்கைத் தரம், வாணிகம், தொழில்கள், சமயநிலை, சமயப்பொறை, போர், கல்வி, கலை, இலக்கியம், நுண்கலைகள் போன்ற பலதரப்பட்டக் காரணிகளைக் கொண்டே ஓரு முடியரசுக் காலத்தை பொற்காலமா, இருண்டகாலமா என்பதைத் தீர்மானிக்க முடியும். ஆனால் இங்கு வேறு அளவுகோல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அளவில் குப்தப் பேரரசின் காலம் பொற்காலமாகவும் தமிழகத்தில் பிற்காலச் சோழப்பேரரசின் ஆட்சிக்காலம் பொற்காலமாகவும் பெருமிதமாகவும் பார்க்கப்படுகிறது.
இருண்ட காலம் என்று திரிக்கப்பட்டு பின்னர் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் காலம் கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள சுமார் 300 ஆண்டு காலம் என்பது ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் முடிவு. தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக இருந்த களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து, அவரே சொல்கிறபடி விடியற்காலமாக ஆக்கியவர். பிந்தைய சங்க காலப்பகுதியில் கி.பி 250 – கி.பி 575 காலகட்டத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் களப்பிரர்கள். இது குறுகிய காலம் அன்று. கி.பி. 850இல் விஜயாலயச் சோழன் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான். கி.பி 650 – கி.பி 850 காலத்தில் சிற்றரசர்களாக செந்தலை, தஞ்சைப் பகுதியை ஆண்ட முத்தரையர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள் என்று கருத வரலாற்றில் இடமுண்டு. அதற்குரிய ஆய்வுகள் இங்கு நடைபெறவே இல்லை. “களப்பிரரின் ‘இருண்டகாலம்’ இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும்.” என்று மயிலையார் முகவுரையில் குறிப்பிடுகிறார். தனது ஆய்வுரையில் இறுதியாக அ.மார்க்ஸ் குறிப்பிடும் பின்வரும் கருத்துக்கள் களப்பிரர் தொடர்பான ஆய்வை மேலும் கூர்மையாக்கும்.
“களப்பிரர் காலம் குறித்து மேலும் விளக்கங்கள் பெறவேண்டுமானால், அக்காலத்தில் எழுதப்பெற்ற பாலி மற்றும் பிராகிருத மொழியிலான நூற்களை விரிவாக ஆராயவேண்டும். சங்க இலக்கியங்களை முற்றிலும் புதிய மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டும். அன்றைய சாகுபடி முறைகள், சீறூர் மன்னர்கள், இதர இனக்குழு மக்களின் வாழ்க்கைகள் முதலியன மறுபார்வைக்குள்ளாக்கப் படவேண்டும். சைவத்தையும் வைணவத்தையும் இயற்கையானதாகவும், உள்நாட்டினதாகவும் இவையல்லாத ஏனைய மரபுகளை, குறிப்பாக அவைதீக மரபுகளை அயல்நாட்டினதாகவும், எதிரியாகவும் கட்டமைக்கிற வரலாற்றுப் பார்வையிலிருந்து நாம் விடுபடவேண்டும். தமிழகம் போன்ற வேறுபட்ட புவியியற் பகுதிகளை உள்ளட்டக்கிய ஒரு நாட்டினது பண்பாட்டின் பன்மைத் தன்மைகளைப் புறக்கணிக்கும் வன்முறைக்கு வரலாறெழுதியலில் இடமளிக்கலாகாது. அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிற தலையாய பாடம்”, அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
‘தி இந்து’ (08.03.2017) நாளிதழில் “களப்பிரர் ஆட்சி குறுகிய காலமே நடந்தது” என்ற செய்தி வெளியானது. தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி (தினமலர்) தெரிவித்ததாக இச்செய்தி சொல்கிறது. இதற்கு ‘தி இந்து’ நாளிதழ் அளிக்கும் முக்கியத்துவம் வியப்பளிக்கக் கூடியது. 1986இல் கரூரில் கிடைத்த நான்கு பிராமி எழுத்துகள் கொண்ட நாணயத்தின் வழி ஒட்டுமொத்த களப்பிரர் வரலாற்றை விண்டுரைக்கும் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பாங்கு உலக மகா அதிசயம்! நாணயவியல் துறையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது என்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு நாணயத்தைக் கொண்டு களப்பிரர் வரலாற்றை வடிவமைக்கும் போதுதான் நமக்குச் சந்தேகம் வருகிறது. இந்த நடுநிலையற்ற வெறுப்பாய்வு நமக்கு இதன் பின்னாலுள்ள அரசியலை வெளிப்படுத்துகிறது.
களப்பிரர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகப் பகுதிகளை ஆளவில்லை என்றால் அப்பகுதிகள் யாரால் ஆளப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும். களப்பிரர்களுக்குப் பிறகு அவர்கள் வழிவந்த முத்தரையர்கள் பல்லாண்டுகள் தஞ்சாவூர் அருகேயுள்ள செந்தலையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வரலாற்று உண்மைகளை என்ன செய்வது? செந்தலைத் தூண் கல்வெட்டுகள் நமக்கு இதைத்தானே உணர்த்துகின்றன. களப்பிரர்கள் மீதான காழ்ப்புணர்வு எப்போது முடிவுக்கு வரும்? அறிவியற்பூர்வமான, நடுநிலையான, புறவயமான வரலாற்றாய்வுகளை நோக்கி தமிழுலகம் என்று பயணிக்குமோ என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.
சிந்துவெளி காளை உருவத்தை குதிரையாக கணினி வரைகலை செய்து புனைவு வரலாற்றெழுதிகளை செய்ததுபோல் களப்பிரர் காலம் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்று புதிய புனைவுகளை உற்பத்தி செய்யவேண்டியதுதான் பாக்கி. களப்பிரர் குறித்த ஆய்வுகளில் அந்நிலை இன்றும் தொடர்கிறது. பாண்டியர் காலத்து வேள்விக்குடி செப்பேடு, தளவாய்புறச் செப்பேடு, பல்லவர் காலத்து செப்பேடுகள், சாளுக்கியர் காலத்து செப்பேடுகள், 1979ஆம் ஆண்டில் கண்டிபிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் போன்றவை களப்பிரர் பற்றிய சித்திரத்தை நமக்குத் தருவதாக உள்ளன.
இந்தியாவில் நிலவும் கொடுமைகளுக்கு நேருவே காரணம் என்று பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடிக் கூறுவதைப்போல, கணியன் பாலன் என்பவர் எழுதிய பெருநூல் தமிழகத்தின் அனைத்து அழிவுகளுக்கும் களப்பிரரை மட்டும் காரணம் சொல்கிறது. இவர் கி.மு.50-கி.பி.250 காலகட்டத்தை சங்கம் மருவிய காலம் என்கிறார். இக்காலத்திலேயே அதாவது கி.பி.150க்குப்பின் வைதீகச் சிந்தனைகளும், பிராமணீயமும் ஊடுருவிய, புரையோடிப்போன தமிழ்ச் சமூகமாக மாறிவிட்டதைப் பதிவு செய்கிறார். அடுத்த களப்பிரர் (கி.பி.250-கி.பி.550) காலத்தில் மொழி, இசை, இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், பொருளாதார அடித்தளம், உற்பத்தி உறவுகள், சங்ககால மதிப்பீடுகள் எல்லாம் அழிந்தன என்கிறார். களப்பிரர் காலத்திற்கு முன்பே சீரழிவு; ஆனால் அதற்கும் அவர்களே காரணம் என்பது ‘களப்பிரப் போஃபியா’விற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வைதீகத்தைவிட களப்பிரர் படையெடுப்பால் அழிந்தது என்பதே இவர்கள் பாணியாக உள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் வைதீகத்தை மேலும் வலுவூட்டவே பயன்படுகின்றன.
“தமிழகத்தின் இருண்ட காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் தமிழும், தமிழரும் அதிகம் கொல்லப் பட்டனர். அவர்களிடமிருந்து தென்னகத்தைப் பல்லவர்கள் மீட்டு, தாம் வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபித்தனர்”, என்று இவர் இருண்ட காலம், தமிழுக்கு எதிரானவர்கள் என்ற வழமையான ஆதாரமற்ற குற்றச்சாட்டும் அவதூறுகளும் தொடர்ந்து சிலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், தமிழர்களைக் கொன்றார்கள் என்ற புதுக்கதையும் புனைகிறார். அவைதீக சமயத்தாரை கழுவேற்றியதைப்போல தமிழர்களும் அழிக்கப்பட்டனர் என்பது மிகமோசமான வெறுப்பின் வெளிப்பாடாகும். தமிழ் யாருடைய காலத்தில் இருக்குமிடம் தெரியாமல் போனது என்பது வெளிப்படை. சமணர்கள் கழுவேற்றம், பவுத்தர்களை கொலை செய்தல் போல் இது எப்போது எங்கு நடந்தது என்று விளக்கியிருக்கலாம். பல்லவர்கள் தமிழரல்லர் என்பதே வரலாற்றில் ஏற்கப்பட்ட உண்மை. இதில் நம்மவர் X அந்நியர் என்று வரலாறு எழுதுவதும் வெறுப்பரசியலை விதைப்பதும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
சோழர்களது ஆட்சிக்காலத்தில் தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த கொடைகளை அறிந்துகொள்வதற்கு முன்பாக ஓர் ஒப்பீட்டுக்காக இருண்டகாலமாக வரையறுக்கப்படும் களப்பிரர் காலத்தில் இலக்கிய நிலை பற்றி அறிவது நல்லது. களப்பிரர் கால (கி.பி. 250 முதல் கி.பி. 575 வரை) தமிழிலக்கியங்கள் குறித்த நீண்ட பட்டியலை மயிலை சீனி.வேங்கடசாமி தனது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ நூலில் தருகிறார். இவற்றில் பவுத்த சமய இலக்கிய நூல்கள் இல்லை. இவை அழிக்கப்பட்டன அல்லது அழிந்துபோயின. அவிநயம், காக்கைப் பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்காயம் போன்ற யாப்பிலக்கண நூல்களும் நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், விளக்கத்தார் கூத்து, சீவக சிந்தாமணி (கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு), பெருங்கதை (உதயணன் கதை / மாக்கதை / கதை) போன்ற சமண இலக்கிய நூல்களும் களப்பிரர் காலக் கொடையாகும். சீவகசிந்தாமணி, பெருங்கதை இரண்டும் சமணக் காப்பியங்கள். சமண, பவுத்த அறிஞர்கள் தமிழில் இலக்கியம் படைத்தனர். இறையனார் அகப்பொருள் (களவியல்) உள்ளிட்ட சைவ சமய இலக்கிய நூல்களும் இக்காலத்தில்தான் படைக்கப்பட்டன.
களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பிறநூல்கள் பிற்காலத்தில் கீழ்க்கணக்கு நூல்கள் என பதினெட்டாக தொகுக்கப்பட்டன. இவற்றில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி ஆகியன கடைச்சங்க காலத்திலும் (கி.பி. 250 க்கு முன்) நாலடியார் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னும் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இயற்றப்பட்டவை. எஞ்சிய 14 கீழ்க்கணக்கு நூல்களும் களப்பிரர் காலத்தில் உருவானவை.
களப்பிரர் காலத்தில் மொழி வளர்ச்சி நிலைகளில் பல மாற்றங்கள் உருவாயின. தமிழ் பிராமி, தமிழி போன்ற வரி வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. பிராமி எழுத்து மாற்றம் பெற்று வட்டெழுத்து முறை உருவானது. பனையோலையும் எழுத்தாணியும் அன்றைய எழுதுகருவிகள். பிராமி எழுத்துகள் கோடாக இருப்பதால் கல்வெட்டில் பொறிப்பது எளிது. ஆனால் ஓலைச் சுவடிகளில் எழுதுவது சிரமம். எனவேதான் வட்டெழுத்துகள் உருவாயின. தமிழ் எழுத்துகளை அச்சுக் கோர்ப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்ததால் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார் என்பதும் இங்கு சிந்திக்கத்தக்கது. பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிச் சொற்களை எழுத கிரந்த எழுத்துமுறை உருவாக்கப்பட்டது.
ஆசிரியப்பா – ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்; வெண்பா – வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்; கலிப்பா – கலித் தாழிசை, கலித் துறை, கலி விருத்தம்; வஞ்சிப்பா – வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் ஆகியன புதிய பாவினங்களாகும். இவற்றால் தமிழின் தனித்தன்மையும் இயல்பும் எவ்விடத்தும் மறைந்துவிடவில்லை.
தமிழர்கள் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளை பயிலும் வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வடமொழிச் சொற்களால் அவற்றின் தனித்தன்மைக்கு ஊறு நேர்ந்ததுபோல தமிழில் நடைபெறவில்லை. மேலும் இந்நிலை சமண, பவுத்தம், ஆசீவகம் போன்ற அவைதீகத் தத்துவங்களில் ஈடுபாடு கொள்ளவும் வழி வகுத்தது. இவை கடவுளுக்குப் பதிலாக மனிதம் பற்றிப் பேசின; அறம், ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தின. பிற மொழிகளுடன் இணைந்து தமிழும் வளர்ந்தது. கடவுள் (இறை) மறுப்பு, வருண (சாதி) மறுப்பு, வேத (மறை) மறுப்பு, வேள்வி (சடங்கு) மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட அவைதீக சமயங்கள் பெருந்திரள் மக்களின் வரவேற்பிற்கும் பின்பற்றலுக்கும் ஆளாயின.
போர் / வீரம் பற்றிப் பாடுவது புறப்பொருள் என்றும் காதலைப் பாடுவது அகப்பொருள் என்றும் இங்கு வரையறை செய்யப்பட்டிருந்தது. சமண, பவுத்த சமயங்களில் வரவால் இவற்றில் புதிய சிந்தனை மாற்றம் உண்டானது. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை அடக்கி காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகையை வெல்வது போர்க்களத்தில் பகைவரை வெல்வதைவிட மேலானது என்ற புதுக்கருத்து தோன்றியது. அகப்பகையை வென்ற அருகர் (சமண தீர்த்தங்கரர்), புத்தர் ஆகியோர் வலியுறுத்திய வெற்றியே மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியது என்றும் வலியுறுத்தப்பட்டது. போர்க்கள வெற்றியைவிட ஐம்புல வெற்றியைப் பாடுதல் என்ற நிலை உருவானது ஓரு குறிப்பிடத்தக்க தலைகீழ் மாற்றமாகும்.
புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்பது புகழ்மிக்க பவுத்தச் சொல்லாடல். பவுத்த பிக்கு/பிக்குணிகளின் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர். இது தமிழ்ச்சொல் அல்ல; மாறாக பாலி (வட) மொழிச்சொல். சமணத்துறவிகளின் கூட்டத்திற்கும் சங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இதன் வேறுபெயர் கணம். களப்பிரர் ஆட்சிக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் தமிழுக்காக ஏற்படுத்தியது தமிழ்க் கழகமாகும். பிற்காலத்தில் இதுவும் புத்த, சமணத் தாக்கத்தால் சங்கம் என மாறியது. களப்பிரர் காலத்தை ‘சங்கம் மருவிய காலம்’ என்றும் சொல்கிறார்கள். உண்மையில் களப்பிரர் காலமே ‘சங்கம் நிலவிய காலம்’; பிற்காலச் சோழர் காலத்தில் சங்கம் மருவியிருக்கலாம்.
அக்காலத்தில் சமணத்துறவிகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். அச்சங்கம் நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என நான்காகப் பிரித்திருந்தனர். இவற்றில் கச்சை, அன்வயம் என்ற உட்பிரிவுகளும் இருந்தன. நான்கில் நந்திக்கணம் புகழ்மிக்கது. இந்தப் பிரிவைச் சேர்ந்த வஜ்ரநந்தி கி.பி.470 இல் நந்திக்கணத்தை இரண்டாகப் பிரித்து திரமிள சங்கத்தை உண்டாக்கினார். இதுவே திராவிட கணம், தமிழ்ச்சங்கம் என்றல்லாம் சொல்லப்படுவது. இவற்றில் சமணத்துறவிகள் மட்டுமே இருந்தனர். மதப்பரப்புதலே இதன் வேலை. பாண்டிய தமிழ்ச்சங்கம் போன்ற சங்கம் இதுவல்ல என மயிலையார் தெளிவுப்படுத்துகிறார்.
பண்டைத் தமிழகத்தின் சங்ககாலம் (கி.மு.300 - கி.பி.300) தொட்டு சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்ற வைதீகத்துடன் போராடிய அவைதீக மதங்கள் இந்தியாவில் பிற பகுதிகளைக் காட்டிலும் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளன. இவற்றிற்கு தமிழின் அறிவுச்சூழல், வைதீகச் சிந்தனைகளுக்கு எதிரான தன்மை, களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற மன்னர்களின் ஆதரவு, பெருந்திரள் அடித்தட்டு மக்களின் ஆதரவு என பல காரணங்களைப் பட்டியலிட முடியும். இவற்றின் ஆதரவு மற்றும் செல்வாக்குப் போக்கில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை மூன்றும் வைதீகத்துடன் மட்டுமல்லாமால் தங்களுக்குள்ளாகவும் சண்டையிட்டுக் கொண்டன. இருப்பினும் இந்த சமயங்களின் அறிஞர்கள் ஓரிடத்தில் இணைந்து வாழ்ந்திருக்கவும் கூடும் என்பதை மறுக்க இயலாது.
இவற்றை வெறும் சங்க இலக்கியப் பனுவல்களை மட்டும் கொண்டு முடிவு செய்ய இயலாது. அத்துடன் கல்வெட்டு, அகழ்வாய்வுகள் மேலும் அதிகரிக்க வேண்டும். இதுவரை காணப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகம் முழுமைக்குமான இந்த அவைதீக மதங்களின் பரவல், செழுமை, கருத்தியல்கள் ஆகியனவும் குறுகிய நோக்கின்றி மிக விரிவாகவும், ஆழமாகவும் பரந்த தளத்தில் ஆராயப்படவேண்டும் என்கிற தேவையை இங்கு எழும் விவாதங்கள் நம்மை வலியுறுத்தி நிற்கின்றன.
தமிழக வரலாற்றில் களப்பிரர்களை தமிழ் மற்றும் தமிழர்களுக்கு எதிரிகளாக (வில்லன்) கட்டமைக்கும் போக்கு இன்றும் நின்றபாடில்லை. தமிழுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் யார் நண்பர் யார் பகைவர் என்கிற புரிதல் இல்லாத சூழல் இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம். செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி களப்பிரர்கள் தமிழை அழித்தனர் என்றார். இதுவே பலரது வழிமொழிதல். அதற்குண்டான ஆதாரங்கள் எதையும் யாரும் சுட்டுவதில்லை.
இக்காலத்தில் சைவ இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. அவைதீக சமயங்களை வீழ்த்த பக்தி இயக்க உத்தி உருவானது. கடவுளை நாயகனாகவும் அடியார்களை நாயகிகளாகவும் பாவிக்கும் வழிபாட்டு முறையை சைவமும் வைணவமும் ஏற்றன. இதற்கு ஆதாரமாக இறையனார் அகப்பொருள் உண்டாக்கப்பட்டது. இதை இறைவனே இயற்றியதாகவும் கதைகள் கட்டமைக்கப்பட்டது. மனிதக் காதலின் இடத்தில் பக்திக் காதல் (இறை) வைக்கப்பட்டது. பவுத்த, சமணக் கொள்கைகள் இதற்கு எதிரானவை. எனவே அவை இவற்றை ஏற்கவில்லை.
சங்க காலத்திற்கும் இடைக்காலத்திற்கும் உள்ள இடைவெளியை உரிய ஆய்வுகள் மூலம் நிரப்புவேண்டும். களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்லது சங்கம் மருவிய காலம் என்று வெறுமனே கடந்துவிடுவது (skip) சரியாக இருக்காது. இத்தடத்தில் விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை. சங்க இலக்கியம், பாலி, பிராகிருத மொழி மற்றும் சமய இலக்கிய நூல்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். புதிய சிந்தனையில் வரலாற்றை புறவயமாக அணுக வேண்டும். அதுவரையில் பெருமிதங்களைப் போல இருண்ட காலங்களும் புனைவாகவே இருக்கும்.
- வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.
நன்றி: ‘பொம்மி’ சிறுவர் மாத இதழ், செப்டம்பர் 2025





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக