தகுதித் தேர்வுகளின் அரசியல்
மு.சிவகுருநாதன்
2009இல் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் (RTE) 6-14 வயதெல்லைக் குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியை உறுதிசெய்ய ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளை வரையறுக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வியியல் பட்டயமும் (D.T.Ed.) பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வியியல் இளங்கலைப் பட்டமும் (B.Ed.) அடிப்படைத் தகுதிகளாக உள்ள நிலையில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு (TET – Teacher Eligibility Test) நடத்தவும் பரிந்துரை செய்தது (பிரிவு:23இல்1) இத்தேர்வுகளை நடத்துவது மாநில அரசுகளின் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) 2010 ஆகஸ்ட் 23இல் வெளியிட்ட அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள விதிகளில் ஏற்கனவே பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சொல்லவில்லை. தேசிய ஆசிரியர் கல்வியியல் குழுமம் (NCTE) பிப்ரவரி 11, 2011 அன்று வெளியிட்ட ‘டெட்’ தேர்வு தொடர்பான நெறிமுறைகளிலும் (விதி 9) 60%க்கு மேல் (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150இல் 90க்கு மேல்) பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள், மாநில அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம், என்றும் கூறியது.
தமிழ்நாடு அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு நடத்தும் அதிகாரத்தை ‘ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு’ (TRB) அளித்தும்,. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் வாரியம் இத் தேர்வை நடத்தவும், தேவைப்படின் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் (15.11.2011) உத்தரவிட்டது. இதன்படி ‘டெட்’ தேர்வு அறிவிப்பை (மார்ச் 7, 2012) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இடஒதுக்கீட்டை மறுத்து, அனைவருக்கும் 60% மதிப்பெண்கள் என நிர்ணயித்து அறிவிக்கை வெளியிட்டது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கிய உரிமையைத் அன்றைய தமிழக அரசின் ஆசிரியத் தேர்வு வாரியம் பறித்தது. இதன்படி தேசிய ஆசிரியர் கல்விக் குழும வழிகாட்டுதல்படி 23.08.2010க்குப் பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தகுதித்தேர்வை எழுதவேண்டும் என்றும் அதற்கு முன்னர் பணியில் சேர்ந்தோருக்கு தகுதித்தேர்விலிருந்து விலக்களித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.
ஆனால் சட்டிஸ்கர், மணிப்பூர், ஒடிசா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், பீகார், அருணாசலப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் 20% வரை சலுகை வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தின்போது ஆந்திர மாநிலத்தில் ‘டெட்’ தேர்வில் வெற்றி பெற பிற்படுத்தப்பட்டோர் 50% பெற்றால் போதும் எனவும் பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 40% பெற்றால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்–மாணவர் விகிதாச்சாரம் குறைக்கப்படாமை, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களின்மை, நிர்வாகச் சீர்கேடுகள், உரிய அகக்கட்டுமானங்கள் இன்மை, கல்வி தொடர்பில்லாத நிர்வாகப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அரசுப் பள்ளிகளின் தரக் குறைவிற்குக் காரணமாக உள்ளன. இவற்றைக் கணக்கில் எடுக்காமல் ஆசிரியரிடம் மட்டும் தகுதியைத் (?!) தேடுவதும் இட ஒதுக்கீட்டை மறுப்பதும் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளாகும்.
இதுவரை 2012, 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒரு துணைத்தேர்வும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தேர்வும் (தாள்:2) நடைபெற்றுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விழுக்காடு மிகவும் சொற்பமே. இது தொடர்பாக பல நீதிமன்ற வழக்குகள் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் மூலம் இடஒதுக்கீட்டு வகுப்பாருக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டது. தற்போது 2025 நவம்பரில் அடுத்த தேர்வு குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொதுப்பிரிவினருக்கு மொத்த மதிப்பெண்கள் 150இல் 90 மதிப்பெண்கள் (60%), இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு 82 மதிப்பெண்கள் (55%), பழங்குடியினருக்கு 60 மதிப்பெண்கள் (40%) எனத் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பட்டியலினத்தவர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்களை வைத்துள்ளது வியப்பாக உள்ளது.
ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது, ஆசிரியர் பட்டயம் மற்றும் பட்டங்களை அளிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துவது பற்றி எந்தக் கொள்கையும் ஒன்றிய அரசிடம் இல்லை. பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆசிரியருக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லாத நிலை இருக்கிறது. முன்பு தமிழ்நாடு தவிர்த்த பல்வேறு மாநிலங்களில் உரிய ஆசிரியர் பயிற்சிப் பட்டயங்கள் மற்றும் பட்டங்கள் பெறாதவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கும் போக்கு இருந்தது. தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறாக இல்லை. உரிய கல்வித் தகுதியுடையவர்களை மட்டும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித் தேர்வுகள் போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 2012க்குப் பிறகு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் புற்றீசல் போல பி.எட். கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள். எவ்வித அடிப்படை வசதி மற்றும் முறையான பயிற்சியின்றி லட்சக்கணக்கான தரமற்ற ஆசிரியர்களை உருவாக்கி கல்விக் கொள்ளையில் ஈடுபடும் நிலைக்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகும். பணம் மட்டுமிருந்தால் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர் பயிற்சியையும், பட்டதாரிகள் பி.எட். பட்டத்தையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம் நிலை கல்வித்தரத்தைச் சீரழிக்கும் என்று யாரும் குரல் கொடுக்கவில்லை. கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் பலருக்கு இருந்தது. ஆனால் தேர்வுகள் மட்டுமே கல்வித் தரத்தை உயர்த்திவிடும் என்று நம்புவதற்கில்லை.
தகுதித் தேர்வு என்பது ஒருவகையான பணி நியமன முறையாகும். இதையே பணிக்கான தகுதியாக்கியது சரியன்று. இந்தத் தகுதித் தேர்வுகள் அனைத்தும் ஒருவகையில் உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைச்சலாகும். கல்வியை வணிகமயமாக்கி எண்ணற்ற கல்லூரிகளை தேவையின்றித் திறந்து, அவற்றில் பணத்திற்காகப் பட்டமளித்துப் பின், வடிகட்ட இவ்வாறான தேர்வுகள் தேவை என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
கல்வி உரிமைச்சட்ட வரையறைப்படி 1-8 வகுப்பு (6-14 வயது) ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு பொருந்தும். 9-12 வகுப்பு ஆசிரியர்கள் தகுதித்தேர்வுக்குள் வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1-5 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும் 6-10 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பார்த்தால் 9, 10 வகுப்பெடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் +1,+2 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என்பதே சட்டத்தின் சாரமாகும். தற்போது பட்டதாரி ஆசிரியராக இருக்கும் ஒருவர் தகுதித்தேர்வு தேவையில்லாத முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம் என்பதும் முரணாக உள்ளது. தமிழகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித்தேர்வின் மூலம் தேர்வாகின்றனர். தலைமையாசிரியர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளுக்கான பதவிஉயர்விற்கு துறைத்தேர்வுகள் எழுதுவது ஏற்கனவே நடைமுறையிலுள்ளது. தகுதித்தேர்வை பதவி உயர்விற்கு முன் நிபந்தனையாக்குவது சரியன்று. இவற்றை அமல்படுத்தினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு நிர்வாகத்தில் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசுத் துறைகளில் பெருமளவு ஆட்குறைப்பு செய்யவும் கல்வியில் தனியார் மயத்தை அதிகரிக்கவும் அடித்தட்டு குழந்தைகளின் கல்வி பாதிக்கவும் இட ஒதுக்கீட்டு முறைகளை ஒழிக்கவும் இம்மாதிரியான திட்டங்கள் வழி அமைத்திடக் கூடாது.
ஆசிரியர்கள் இந்திய சாதிகளைப் போல பலகூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். சாதிமுறையைப் போன்றே இவர்கள் தங்களுக்குள்ளாக உயர்வு-தாழ்வு கற்பித்துக் கொள்கின்றனர். நூற்றுக்கணக்கில் தனித்தனியே சங்கங்கள் வைத்துக்கொண்டு சுயநலப் போக்குடன் செயல்படுவது அதிகரித்துள்ளது. தகுதித்தேர்வில் வந்தவர்கள் தனிச்சங்கம்; அதுவும் 90 நிமிடத் தகுதிதேர்வில் தேர்வானவர்கள் தங்களை உயர்வாகக் காட்டிக் கொண்டு தனி அமைப்பாகத் திரள்கின்றனர். நேரடி நியமனம் பெற்றவர்கள், 90 மற்றும் 180 நிமிடங்களில் தேர்வான ஆசிரியர் சங்கங்கள், பதவி உயர்வு பெற்றோர், 2016க்கு பிறகு நியமனம் பெற்றவர்கள், ஊதியக்குழு முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நூற்றுக்கணக்கான வேறுபாடுகள் ஆசிரியர் சங்கங்களிடம் உள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டம், தனியார் மய எதிர்ப்பு போன்ற பொதுக் கோரிக்கைக்களுக்குக்கூட ஓருங்கிணைப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. இத்தகையப் பாகுபாடுகளால் இவர்களைக் கையாள்வது ஆளும் வர்க்கத்திற்கு மிக எளிதாக உள்ளது. மேலும் பிளவுகளை உருவாக்குவதும் அதிகரிப்பதும் ஆளும் வர்க்கத்தின் செயல்பாடாகவும் அமைகிறது.
பதவி உயர்வு குறித்த பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்த வழக்குகளை முறியடிக்கும் வண்ணம் ‘டெட்’ தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை மட்டும் பதவி உயர்வு தர வேண்டும் என்று புதிய வழக்கு தொடுக்கப்பட்டது. சட்ட அளவுகோல்களின்படி இதை ஏற்பதோ, மறுப்பதோ நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாகும். இக்கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பதவி உயர்விற்குத் தகுதித்தேர்வை கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோரடங்கிய அமர்வு பதவி உயர்விற்கு மட்டுமல்ல, 30 ஆண்டுகளாகப் பணியிலிருப்போர் மேலும் பணியில் தொடரவும் ‘டெட்’ தேர்வு கட்டாயம் என்றும் பணி ஓய்விற்கு ஐந்தாண்டுகள் பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்களித்தும் பிறர் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தீப்பளித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தீர்ப்பால் இந்திய அளவில் சுமார் 25 லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பு செய்ய அரசுக்குச் கட்டாய சிறப்பு ஓய்வுத்திட்டம் இத்தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது.
தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பிற்குப் பிறகு ஆசிரியர்களிடையே ஒரு தேவையற்ற பதற்றம் உருவாகியுள்ளது. சங்கங்கள் விளக்கமாக எடுத்துரைத்த போதும் பெரும்பாலான ஆசிரியர்கள் அதைக் கேட்பதாக இல்லை. இதற்கு மிகவும் சுயநலப்போக்குடன் உருவாகியுள்ள தற்கால சமூகத்தின் ஓர் அங்கமாக ஆசிரியர்களும் இருப்பது ஒரு காரணமாகும். தனிநபர் மீது அளிக்கப்பட்டத் தீர்ப்பு எனில் அது உடனடியாக அமுலுக்கு வரலாம். பணி நியமனம் அளிக்கும் மாநில அரசு உரிய அமைப்புகளின் வழியே அறிவிக்கும் வரை நாம் பொறுமை காக்க வேண்டும். 2025 நவம்பரில் தகுதித்தேர்வு நடத்தப்போவதாக ஆகஸ்டில் அறிவிக்கை வெளியான நிலையில், இத்தீர்ப்பிற்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சில நாள்கள் மட்டும் எஞ்சியிருந்த நிலையில் சில ஆசிரியர்கள் தேர்வுக்கு மனு செய்யத் தொடங்கினார். இதற்கான தடையின்மைச் சான்று (NOC) பெற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வேண்டுகோள்கள் குவியத் தொடங்கியதால் தடையின்மைச் சான்று தேவையில்லை என்று அறிவிக்க வேண்டி வந்தது.
தீர்ப்பு வந்த அன்று தமிழக முதல்வர் அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த அரசு ஆசிரியர்களைக் கைவிடாது என்று அறிவித்தார். எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வது, தீர்ப்பை ஏற்பது, ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித்தேர்வை நடத்துவது என்கிற முடிவுகள் மாறி மாறி அரசின் நிலைப்பாடுகளாக அமையும் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது ஆசிரியர்களை மேலும் பதற்றமடைய வைத்துவிட்டது. அரசு அதிகாரிகள் தீர்ப்பை ஏற்று தேர்வு வைப்பதுதான் சரியான அணுகுமுறை என்று கருதியிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் தேர்வுகள் வைப்பதுதான் சர்வரோக நிவாரணி என்ற எண்ணம் பலரிடம் மேலோங்கியுள்ளது ஒரு முதன்மைக் காரணமாகும்.
உத்திரப்பிரதேசம், கேரளம் போன்ற மாநிலங்கள் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன. தமிழக அரசும் இந்தப்பாதையில் செல்வதுதான் சரியாக இருக்க முடியும். ஆசிரியர்களுக்கு என்று சிறப்புத் தகுதித்தேர்வு நடத்துவது எல்லாம் தற்காலிகத் தீர்வாகவே அமையும். இப்போது வழக்கறிஞர்களுக்கும் தகுதித்தேர்வுகள் நடைமுறையில் உள்ளது. இதை முன்தேதியிட்டு 55 வயது வரையுள்ள வழக்கறிஞராகப் பணியாற்றும் அனைவரும் இத்தேர்வினை எழுத வேண்டும் என்று உத்திரவிட இயலுமா? எந்த ஒரு சட்டத்தையும் முன்தேதியிட்டு அமல் செய்ந்து இயற்கை நீதிகளுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு மூலம் நீதியை நிலை நாட்டலாம் என்று நம்பலாம்.
ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆசிரியர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொள்ள இயலும். பெருமளவிலான ஆசிரியர்கள் பாதிக்கப்படக் கூடும். முந்தைய தகுதித் தேர்வுகளின் தேர்ச்சி விழுக்காட்டைக் கவனித்தால் இது எளிதில் விளங்கும். மிகக்கடினமான வினாக்களைக் கொண்டு தேர்வு நடத்துவதல் வாயிலாக தகுதித் தேர்வுக்குப் பிறகான போட்டித் தேர்வுக்கான வடிகட்டல் என்பதாக இது அமைகிறது. இதைத்தவிர வேறு எந்தப் பலனும் இத்தேர்வுகளில் இல்லை. கல்வித் தரத்தை மேம்படுத்துவதான பாவனையும் இதனுள் ஒளிந்துள்ளது. நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் என்போர் அதாவது மனப்பாடம் செய்பவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இவர்களால் எந்தப் பணியையும் திறம்பட செய்ய இயலும் என்ற பழமைவாத கண்ணோட்டத்துடன் போட்டி மற்றும் தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. உண்மையில் இவை தரம் மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கான தகுதிகள் ஆகாது என்பதே உண்மை.
குழந்தைகளின் கற்றலுக்கு உதவிபுரியும் ஆசிரியர் பல்வேறு திறன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நல்ல பேச்சு, கையெழுத்து, பாட்டு, இசை, நடனம், ஓவியம், உளவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறை, அறம் போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது நல்லது. இவற்றை மனப்பாடத் தகுதித் தேர்வில் அடையாளம் காண இயலாது. எடுத்துக்காட்டாக, கிராம நிர்வாக அலுவலர் (Group:IV) தன்னுடைய நில அளவை உள்ளிட்ட பணித் திறன்களை இந்த மனப்பாடத் தேர்வுகளால் அடைவதில்லை. அவரது பணிக்கான பயிற்சிகள், தொடர் அனுபவம் வாயிலாகவே இவற்றைப் படிப்படியாக அடைகிறார். அவற்றை தன் பணிக்காலத்தில் நிறைவாக அடையாமல் போவோரும் உண்டு. இந்நிலை இந்திய ஆட்சிப்பணி, உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடியதாகும்.
பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தேர்வுகளின் மீது பெரும் வேட்கையுண்டு. குழந்தைகளுக்குத் தேர்வுகள் வைத்துப் பெயிலாக்கும் முறைக்கு பலர் ஆதரவாக இருக்கின்றனர். தங்களுக்குத் தேர்வு என்கிறபோது அதிர்ச்சியடையும் ஆசிரியர் சமூகம் குழந்தைகளின் தேர்வு வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க முன்வரவேண்டும். அனைவருக்கும் தேர்ச்சியளிப்பதால் கல்வித்தரம் குறைகிறது என்கிற ஒன்றிய மனநிலையுடன் ஒத்துப்போகும் பழமைவாத ஆசிரியர்கள் இங்குண்டு. ஒன்றிய அரசும் கல்வி உரிமைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பெயிலாக்கும் தேர்வுகளை நடைமுறைப்படுத்துகிறது. தமிழ்நாடு இவற்றை ஏற்காமல் கல்வி வளர்ச்சியில் முன்னோக்கிச் செல்கிறது.
இதை வெறும் ஆசிரியர்களின் பிரச்சினை என்று கடந்துபோகாமல் தகுதி/போட்டித் தேர்வுகளின் பின்னணியையும் அரசியலையும் நாமனைவரும் உணர்வது அவசியம். கல்வியை வணிகமயமாவதையும் கோச்சிங் சென்டர் கலாச்சாரத்தையும் வேரறுக்க வேண்டும். ‘நீட்’ போன்ற தேர்வுகளால் அப்பாவிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் அவர்கள் மீது தேர்வுகள் செலுத்தும் வன்முறைகளையும் ஒழிக்க முன்வரவேண்டும். தகுதி என்கிற சொல்லாடல் இடஒதுக்கீடு முறைக்குச் சவாலாக மாறியுள்ளது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இவற்றை ஆதரிப்பதன் சூழ்ச்சியையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று தேர்வுகள் குழந்தைகளுக்கா, ஆசிரியர்களுக்கா என்பதல்ல பிரச்சினை. மனப்பாடத் தேர்வுகளின் வன்முறையிலிருந்து ஒட்டுமொத்தச் சமூகத்தை விடுவிக்க அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமான மாற்று வழிகளைக் கண்டடைய வேண்டிய தேவையை இது வலியுறுத்துகிறது.
நன்றி: பேசும் புதியசக்தி – மாத இதழ் அக்டோபர் 2025

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக