வியாழன், செப்டம்பர் 04, 2025

இந்தியத் தேர்தல் ஆணையமும் ஜனநாயகமும்

 

இந்தியத் தேர்தல் ஆணையமும் ஜனநாயகமும்

மு.சிவகுருநாதன்


 

      வலதுசாரி பாசிச சக்திகளுக்கு என்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. இவை சர்வாதிகார நடவடிக்கைகளை மட்டுமே விரும்புகின்றன. நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரசியல் அமைப்பையும் அவற்றைப் பாதுகாக்கும், உறுதிப்படுத்தும்  அமைப்புகளையும் உருக்குலைப்பதை இவை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. அந்தவகையில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்ணியக்குறைவான நடவடிக்கைகளில் இறங்க வைக்கப்படுகின்றன. சி.பி.., அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, ஒன்றிய உளவு அமைப்புகள் என ஒவ்வொன்றாக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போதைய இறுதி நம்பிக்கையான நீதித்துறை மீதும் எதிர்காலத்தில்  இத்தகைய பாசிச கொடுங்கரங்களின் நிழல் படிந்தால் நமது ஜனநாயகம் முற்றாக அழிந்துப் போகும் நிலை உருவாகும்.

    ஒன்றியத்தில் ஆளும் வலதுசாரி பா.ஜ.க. அரசு  இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக நிழல் அரசு நடத்தி வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. 

      தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் அவர் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் வழங்குவதற்கு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு எதிராக அரசியல் சாசன உயர்பதவி வகிக்கும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்  மூலமாக நீதித்துறை  மீது மிக மோசமான விமர்சனங்களை வெளியிட வைத்தனர். உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் இது குறித்து சில வினாக்களைக் கேட்டுள்ளார். இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் தற்போது பதவி விலகியுள்ளார்; காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதே  யாருக்கும் தெரியவில்லை, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறுமளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. மிரட்டி, முடக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படும் நிலை உள்ளது. இந்திய ஜனநாயகமும் அதே நிலையில் இருப்பது மிகவும் மோசமான சூழலாகும். 

     புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதே நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த அச்சம் எழுந்தது. இல்லை என்று ஆளும் தரப்பு மறுத்தாலும் அதுகுறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை. புதிய நாடாளுமன்றத் திறப்புவிழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பில்லை. துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மட்டும் அழைக்கப்பட்டார். இன்று அவரின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. ஜனநாயகத்தையும் அதன் அமைப்புகளையும் கேலிக்கூத்தாக்கும் செய்கைகளை பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

        முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது. தற்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமே களத்தில் இறங்குவது யாரும் எதிர்பாராத ஒன்று. இந்திய அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI)  இந்தியா குடியரசாக ஆவதற்கு முதல்நாள் ஜனவரி 25, 1950இல் அமைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் மூலம் தேர்வு செய்வது இந்த ஜனநாயக அமைப்பின் பணியாகும். இவ்வமைப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்ட ஓர் அமைப்பாகும். 

          ஒரு நபர் ஆணையமாக இருந்த தேர்தல் ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு மூவரடங்கிய ஆணையமாக மாற்றியமைக்கப்பட்டது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரடங்கிய குழுவிற்கு  இவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதை மோடி அரசு மாற்றியமைத்து,  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயல் என்பவர், மூன்றாவது ஆணையர் நியமிக்கப்படாத நிலையில்  திடீரென்று பதவி விலகினார். மீண்டும் ஒருநபர் ஆணையமாக மாற்றும் சர்வாதிகார முயற்சி கைவிடப்பட்டு, வேறு வழியின்றி எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பையும் மீறி இரு ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போதே ஆணையத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது வெட்ட வெளிச்சமானது

     மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) முறைகேடுகளில் ஈடுபட முடியும் எனப் பலர் ஆதாரங்களை அளித்தபோதும் அதற்கு வாய்ப்பே இல்லை என நிராகரிக்கும் போக்கு அதிர்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது. அச்சிடும் கருவியில் (VVPAT) உள்ள வாக்குச் சீட்டுகளையும் எண்ணி மின்னணு எந்திரத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்  என்ற வேண்டுகோள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சோதனைரீதியாக சில இடங்களில் எண்ணப்பட்ட சீட்டுகள் மின்னணு எந்திர எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அலுவலக நடைமுறைகளுக்கு காகிதங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள வளர்ந்த நாடுகள் கூட வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தித்தான் பொதுத் தேர்தல்களை நடத்துகின்றன

        சென்ற 2024 பொதுத்தேர்தல் முறைகேடுகள், அவதூறுப் பேச்சுகள் தொடர்பான ராகுல் காந்தி இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்த ஆணையம் பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளையும் அவரது கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளவே இல்லை. வாக்குப்பதிவின் இறுதிவேளையில் மிகவும் அதிகரித்த வாக்குப்பதிவு விழுக்காடு குறித்த புகாருக்கும் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை.  ஒரு மாநிலத்திற்கே 7 கட்டங்களில் பொதுத்தேர்தல் நடத்தும் நிலையில் ஓரே நாடு; ஒரே தேர்தல்என்று பெயருக்கு ஒரு குழு அமைத்து சாதகமானப் பரிந்துரையைப் பெற்று, இந்தியாவில் மக்களாட்சியை வீழ்த்த  ஆளும் பா.ஜ.க. நேரம் பார்த்துக் காத்துக் கொண்டுள்ளது. அதற்கு துணைபோவதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி என்றாகிவிட்டது. புகார்களை எதிர்கொள்ளாமல், இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக விடும்  அறிக்கைகள் இதனை நிருபிக்கின்றன.

         இவ்வளவு சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து ஜனநாயகத்தைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது. பீகாரில் இத்திருத்தத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப்  பதிவு செய்துள்ளனர் அல்லது 26 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருக்கலாம் என்றும் அவர்கள் அங்கு நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் எனும்  செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. "நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்" எனக்கூறுவது புலம்பெயர் தொழிலாளர்களை அவமதிக்கும் செயல் என்றும், இது தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவர்களின் விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது எனவும்முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும்  தேர்தல் ஆணையத்தின்  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் சீர்திருத்தங்களான சுயேட்சையான அமைப்பு (Association for Democratic Reforms – ADR) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வரும் நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள  பீகாரில்  ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் குடியுரிமையை நிரூபிக்க 11 குறிப்பிட்ட ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

         மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய கட்டண ஆணை, ஜூலை 1, 1987 க்கு முன்னர் இந்தியா அரசு, உள்ளூர் அதிகாரிகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடும்பப் பதிவேடு, நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் ஆகிய 11 ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் பட்டியலில் உள்ளன. அனைவரிடமும் இருக்கும் ஆதார் மற்றும் குடும்ப அட்டை இந்த ஆவணங்களில் சேர்க்கப்படவில்லை. பான் கார்டும் இதில் இணைக்கப்படவில்லை; ஆனால் பாஸ்போர்ட் உள்ளது. இதற்கு ஒரு மாத காலம் மட்டும் கால அவகாசம் என்பதும் போதுமானதாக இல்லை. இதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

      முஸ்லிம்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், புலம் பெயர் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலைச் சமூகங்களை குடியுரிமை ஆவணங்கள் கேட்பதன் மூலம் வாக்குரிமையிலிருந்து விலக்கப்படுகின்றனர். வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையையும் அவர்களின் பெற்றோரின் குடியுரிமையையும் நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் வாயிலாக இது அரசியலமைப்பின் 326-வது பிரிவை மீறுகிறது. 

  இம்மாதிரியான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால்  தன்னிச்சையாகவும் உரிய செயல்முறைகள் இன்றியும்   லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதோடுசுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடப்பதையும் தடுத்து,   அரசியலமைப்பின் அடிப்படையாக  இருக்கும் ஜனநாயகத்தைக் குலைக்கும் நடவடிக்கை என்றும்  உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

    அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்தல், தகுதியற்ற வாக்காளர்கள் யாரும் சேர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், வாக்காளர்களைச் சேர்க்கும் அல்லது நீக்கும் செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத் தன்மையை அறிமுகப்படுத்துதல்  என்றெல்லாம் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு விளக்கங்கள் அளித்தாலும் அவர்களது செயல்பாடும் நோக்கமும் அந்த வழியில் இல்லை என்பது தெளிவாகிறது. இதை வெளிப்படையாக எதிர்கொள்ளாமல் பதற்றமடைவது அவர்களது பத்தரிக்கைச் செய்திகளில் வெளிப்படுகிறது. 

              உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும் பீகாரிலிருந்து 26 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்திருக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கப்படலாம் எனப் பரவிய செய்தி பலர் எதிர்வினையாற்றினர். இதை உடனடியாக மறுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தவறான பரப்புரை என்று சொன்னது. ஆனால் பீகாரைப் போல பிற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

     வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் வாக்குச் சாவடி வாரியாக வெளியிடுதல், ஒவ்வொரு வாக்காளரின் அடையாள எண் அடிப்படையில் பார்க்க வழி செய்தல், பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான  காரணத்தையும் அளித்தல், மாவட்ட தேர்தல் அலுவலர் அதாவது மாவட்ட ஆட்சியரின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடுதல்,  இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பீகார் மாநிலத்தின் உள்ளூர் மொழிகள் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் விரிவான விளம்பரம் வெளியிடுதல், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் பட்டியல் வெளியிடுவதை ஒளிபரப்புதல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் இருப்பின் திலும்  காட்சிப்படுத்துதல், வாக்குச்சாவடி வாரியான சுமார் 65 லட்சம் வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அதிகாரியும் ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சிலுவலர்கள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டுதல் போன்ற உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று, முழு அறிக்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிறப்புத் திருத்தச் செயல்முறைக்குத் தேவையான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டையையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

               தேர்தல் பத்திர முறைகேட்டில் அவற்றை வெளியிடுமாறு கேட்ட உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்ட இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டதைப் போன்று,  பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தரமறுத்த தேர்தல் ஆணையத்தை  உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அளித்த காலக்கெடுவுக்கு பொதுவெளிக்குத் தர வேண்டிய கட்டாயத்தில், தற்போது ஆகஸ்ட் 18 மாலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இவ்வழக்கில் இன்னும் ஒரு மாதத்தில்  இறுதித்தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.  

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடுகளை "வாக்குத் திருட்டு" என்று வருணிக்கிறார். நீதிமன்றத்திற்குச் செல்வதைவிட மக்களிடம் செல்வதையே அவர் விரும்புகிறார். இதற்கான பரப்புரைகளை மக்கள் மன்றத்திலும் இணையதளம் வாயிலாகவும் (https://rahulgandhi.in/awaazbharatki/votechori) மேற்கொண்டு வருகிறார். வாக்காளர் பட்டியல் மோசடிக்கான தெளிவான ஆதாரங்களை ஊடகங்களுக்கு அளித்தும் தமது இணையதளத்தில் விரிவாக வெளியிட்டும் உள்ளார். போலி வாக்காளர்கள் (11,965), போலி முகவரிகள் (40,009), ஒரே வீட்டில் மொத்த வாக்காளர்கள் (10,452), செல்லாத புகைப்படங்கள் (4,132), படிவம் 6 இன் தவறான பயன்பாடு (33,692) என ஐந்து வகையான முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார். இதற்குரிய உரிய ஆதாரங்களும் இணையத்தில்  இணைக்கப்பட்டுள்ளன. 

    இதற்கென பீகாரில் வாக்குரிமைப் பேரணிஎன்ற 1,300 கி.மீ. பரப்புரைப் பயணத்தையும் இந்தியா கூட்டணிக் கட்சிகள்  தொடங்கியுள்ளன. மேலும் ராகுல்காந்தி மகாராஷ்டிரா, அரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டு இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பைத் தடுத்ததாக வெளிப்படையாக புகார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மாலை 5:30 மணிக்கு மேல் அதிக வாக்குகள் பதிவானது, வாக்காளர் பட்டியலை அளிக்க மறுத்தது, வாக்குப்பதிவின் சிசிடிவி பதிவுகளை அழிக்க முயன்றது என தேர்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் ஆளும் பா.ஜ.க. போல் தேர்தல் ஆணையம் அறிக்கைகளை வெளியிடுகிறது. உரிய முறையில் பதிலளிக்காமல் ராகுல் காந்தி வாக்காளர்களை அவமதிக்கிறார், அரசியல் சட்டத்தை அவமதிக்கிறார், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது நகைப்பிற்கிடமானது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிபோல் செயல்படக்கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவர இந்தியா கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இக்கூட்டணிக்கு போதிய பலம் இல்லை என்றபோதிலும் இப்பிரச்சினை அடுத்தடுத்த மாநிலங்களில் தொடராமலிருக்க இது வழிவகுக்கும்.

      மின்னணு வடிவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மறுப்பது, கையேடுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடுவது  போன்றவை இந்திய அரசியலை சாசனத்தை மதிக்கும் செயல் அல்ல. இனியாவது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளபடி அனைத்து வடிவிலும் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதும் கையேடுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். 

   இந்திய ஜனநாயகத்திற்கு தாக்குதல் வரும்போதெல்லாம் உடனடியாகச் செயலாற்றித் தடுப்பது உச்சநீதிமன்றம்  என்ற நிலை இந்திய மக்களுக்குச் சற்று ஆறுதலளிக்கும் நிலையாகும். மக்கள் தீர்ப்புகளுக்கு சிலகாலம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் சாசன அடிப்படையில் செயல்படுவதையும் இந்தியாவில் அரசியல் சாசனத்தின் ஆட்சியையும் மக்களாட்சி நடைமுறைகளையும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்யும்  என்று நம்புவோம். 

நன்றி: பேசும் புதியசக்தி – மாத இதழ் செப்டம்பர் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக