செவ்வாய், அக்டோபர் 07, 2025

10. பிற்காலச் சோழர் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

10. பிற்காலச் சோழர் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

       விஜயாலய சோழன் (கி.பி. 846 கி.பி. 881) முதல் மூன்றாம் ராஜேந்திர  சோழன் (கி.பி. 1246கி.பி. 1279)  ஈறாக உள்ள சோழ மன்னர்களைப் பிற்காலச் சோழர்கள் என்று வகைப்படுத்துவதே வரலாற்றாசிரியர்களின் வழக்கம். இவர்களில்  விஜயாலய சோழன் (கி.பி. 846கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர  சோழன் (கி.பி. 1067கி.பி. 1070) முடிய உள்ள அரசர்களும் விஜயாலயச் சோழமரபினர் (கி.பி. 846 கி.பி. 1070) என்றும், முதலாம் குலோத்துங்க  சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) முதல் மூன்றாம் ராஜேந்திர  சோழன் (கி.பி. 1246கி.பி. 1279) ஈறாக உள்ள அரசர்களும்  ஆண் வழிச் சமூக அமைப்பில் சாளுக்கிய சோழ மரபினர் (கி.பி. 1070 கி.பி. 1279) என்றும் சொல்லப்படுகின்றனர்.

     முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவர். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் மொத்தம் 8 அரசர்களும் கீழை சாளுக்கிய சோழ மரபினர். இதைப் பெரிய குறையாகக் கருதிய வரலாற்று ஆசிரியர்கள் தங்களுக்குள்ளாக பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக்கொண்டனர்.     குலோத்துங்கனின் உடலில் பெருமளவு ஓடியது சோழர்குலக் குருதிதான்”, என்று மரபணு ஆய்வு செய்யும் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் வரிகள் இதனை உணர்த்தும் (பக். 290, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்). 

       பிற்காலச் சோழ அரசர்களில் முதலாம் இராஜராஜன் (கி.பி. 985 கி.பி. 1014), முதலாம் இராஜேந்திரன் ஆகியோரின் காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம் என வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்ட பலராலும் போற்றப்படுகிறது. கல்கியின்பொன்னியின் செல்வன்போன்ற புனைவுகள் இதற்குப் பேருதவி புரிந்தன. உண்மை வரலாற்றைப் புறக்கணித்து, இக்கற்பிதங்களின் வழி தமிழர்களின் மீது இத்தகைய கட்டமைக்கப்பட்ட பெருமித வரலாறு திணிக்கப்பட்டது. 1891-92 இல் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகள் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டாலும் 1907 இல் ஹூல்ஸ் (Hultesh) மூலமே தெரியவந்தது. அதுவரையில் தஞ்சைப் பெரியகோயில் காடுவெட்டிச் சோழனால் கட்டப்பட்டதாக தமிழ்ச்சமூகம் அறிந்திருந்தது. இதன் பின்னர் எண்ணற்றப் புனைவுகளும்   கற்பிதங்களும் உற்பத்தியாயின.

       இளவரசு பட்டமேற்ற ஆதித்த கரிகாலனை (கி.பி. 966 – கி.பி. 969) கொலை செய்தது சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்தோர் என்றும் அவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருந்தபடியால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அந்தணர்கள் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார். (பிற்காலச் சோழர் வரலாறு)

       இந்தக் கொலைகாரப் பிராமணர்களைப் பிடித்துத் தண்டனை வழங்குகையில்  மனு தர்மப்படியே முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014) தண்டனை வழங்குகிறார். அவர்களது சொத்துக்களை காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலுக்கு உடைமையாக்கி அவர்களை நாடு கடத்துவதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஆகும்.          குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதால் மனு தர்மப்படி, அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கப்படவில்லை. பிராமணர்கள் செய்யும் கொலைக்கு மனுதர்மம் அளிக்கும் தண்டனைகள் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.

      ஒரு சத்திரியன் கொலை செய்யப்பட்டிருந்தால், பிராமணனைக் கொலை செய்தற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் நாலில் ஒரு பங்கு தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைசியனாக இருந்தால் எட்டில் ஒரு பங்கும், ஒரு சூத்திரனைக் கொலை செய்துவிட்டால் அதுவும் அச்சூத்திரன் நற்குணவானாக வாழ்ந்திருப்பின் பதினாறில் ஒரு பங்கும் தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இரு பிறப்பெடுத்தவர்களில் உயர்ந்தோன் (பிராமணன்) சத்திரியனைத் தன்னிச்சையில்லாது கொலை செய்துவிட்டால் அதிலிருந்து அவனை விடுவித்துக் கொள்வதற்கு நூறு பசுவும் ஒரு காளையும் அவன் கொடுக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டுகள் தலைமுடியை முடிந்துகொண்டு புலனுணர்வுகளை அடக்கிக் கொண்டு பிராமணனைக் கொலை செய்த ஒருவன் கடைபிடிப்பதைப் போலவே அவனும் கடைபிடித்துக் கொண்டு நகருக்கு வெளியே வெகு தூரத்தில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில்தான் அவன் வசிக்கத்தக்க இடமாகும்” (பக். 67, அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்? தொகுதி - 13).

       பிற்காலச் சோழர்கள் மட்டுமல்ல, பிற்காலப் பாண்டியர்களும் தாங்கள் மனுநீதிப்படி அரசாள்வதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். சமஸ்கிருதம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட தங்களது மெய்கீர்த்திகளில் இடம்பெறும் மனு நெறி விளங்க’, 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்', ‘வேத நெறி தழைத்தோங்கபோன்ற சொல்லாட்சிகள் வாயிலாக பிற்காலச் சோழர்/பாண்டியர் கால மனுதர்ம ஆட்சியை விளங்கிக் கொள்ளலாம். இதனோடு கூடவே மனுநீதிச் சோழன் என்ற அடைமொழிகளுடன் இவர்கள் வாழ்ந்தனர்.   சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மனு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.   

       பெயரளவில் பிற்காலச் சோழர்கள் ஆண்டாலும் மனுநீதியே ஆட்சி செய்தது என்பதே கள நிலவரம்.  ஆட்சியதிகாரம் பிராமணர்களிடமே இருக்க, சோழர்கள் வெறும் பொம்மைகளாக இருந்ததுதான் தமிழகப் பொற்காலவரலாறுச் சாதனை. பிற்காலச் சோழர்களின் இறுதிக்காலத்தில்தான் சூத்திரச் சாதியினர் மேலாதிக்கம் பெற்றதையும், அப்போது சூத்திர மடங்களைப் பொறுக்காத பார்ப்பனர்களால் செய்யப்பட்டவை குகையடிக் கலகங்கள் என்பதையும் தெ.பொ.மீ. குறிப்பிடுவார். பிற்காலச் சோழர்கள்/பாண்டியர்கள் அனைவருமே மனுநீதிச் சோழர்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

       சோழர்கள் அரசர்களாயிருந்தாலும், புரோகிதர், அமைச்சர், அலுவலர் என்னும் விதத்தில், பிராமணர் உண்மையான அதிகாரம் பெற்றிருந்ததனர். தமக்கே உரித்தான அக்கிரகாரங்களில் (அ) சதுர்வேதிமங்களங்களில், உணவையும் கல்வியையும் இலவசமாகப் பெற்று, அவர்கள் வாழ்ந்தனர். இப்பிராமணர்களின் நன்மைக்காக, மன்னர்கள் கோயில்களுக்கு கணிசமான மானியங்களைத் தந்தனர். தேவதாசிகளாகக் கோயில்களுக்குள் ஈர்க்கப்பட்டிருந்த கவர்ச்சியான யுவதியர், இசை, நடனம் (ம) தம் உடலால் பிராமணரை மகிழ்ச்சிப்படுத்தினர். மறுபுறத்தில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்பட்டனர்”, (பக். 151, தமிழ்நாட்டு வரலாறு, பேரா. கே.ராஜய்யன்) என்று குறிப்பிடுகிறார்.  

      பெரும்பாலான பண்ணைக் கூலிகள் அடிமைகளாய் (அ) கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். குரூரமாய் நடத்தப்பட்டனர், விற்கப்பட்டனர், மீளவும் விற்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இவ்வடிமைகள் அதிகமானோரை கோயில்கள் வைத்திருந்தன”, (பக்.152)  மேற்கண்ட நூல் எடுத்துக்காட்டுகிறது.     தமிழ்நாட்டில் அடிமை முறை இருந்ததையும் பிராமணர் தவிர பிறர் இவ்வாறு அடிமையாக விற்கப்பட்டதும் அடிமைகளுக்கு சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது நடைபெற்றது. இவ்வாறே தேவதாசிகளுக்குப் பாதங்களில் சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது. (பார்க்க: தமிழகத்தில் அடிமை முறை, ஆ.சிவசுப்பிரமணியன்) பிராமணர்களை அடிமைகளாக்க மனு தர்ம சாத்திரங்களில் வழியில்லை.   சோழர் காலத்தில் அடிமைகள் இருந்ததை புலவர் செ.ராசு,  .சிவசுப்பிரமணியன், பொ.வேல்சாமி ஆகியோரின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

      சைவமும் வைணவமும் ஏற்றம் பெற சமணமும் பௌத்தமும் நலியுற்றன. சோழர்களைப் பிராமணர்கள் கட்டுப்படுத்தியதாலும் பகை மிக்க மதங்கள் வதைக்கப்பட்டதாலும், ஆலயங்கள், மடங்கள், அக்கிரகாரங்களின் நிர்மாணத்திற்காக அரசநிதி திருப்பிவிடப் பட்டதாலும் இது தவிர்க்க முடியாததாக இருந்தது. சோழர்கள் சைவர்களாதலால், அவர்தம் மதம் சலுகையுடன் நடத்தப்பட்டது”, (பக்.152)  

      எல்லோருக்கும் நிலங்கள் உடைமையாக இருந்தன என்பதும் கற்பனையே. நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடைப்படையாக வைத்து நிலங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் உழவுத்தொழிலை வழிவழியாகச் செய்து, நிலங்களை அனுபவித்து வந்த குடிகளுக்கே உரிமையுள்ள வெள்ளான் வகைஒன்றாகும். மற்றொரு வகை, நிலங்கள் சில தொழில் செய்வோருக்கு கொடுக்கப்பட்டவையாகும். அவை சீவிதம், போகம், காணி, விருத்தி போன்ற பெயர்களால் குறிக்கப்பட்டன. மூன்றாவது வகை தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களாகும். அவை பிரம்மதேயம், தேவதானம் சாலபோகம் என்று வழங்கின”. (பக்.747, சோழர்கள் -2, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி)

      கோயில்களில் அபிஷேகம் செய்ய, தண்ணீர் கொண்டுவந்தவர்கள், கோயிலில் காவல் புரிந்தோர், சங்கு முழங்குபவர், அர்ச்சகர், ஓதுவார் மற்றும் பல கைங்கர்யங்கள் செய்தவர்களுக்கும், சீவிதம், போகம், காணி என்று பல்வேறு பெயர்கொண்ட மானியங்கள் விடப்பட்டன”. (பக்757, மேலது)

     மூன்று வகையில் தரும ஸ்தாபனங்களுக்கு நிலமானியம் அளிக்கப்பட்டன. அவை பிரமதேயம், தேவதானம், சாலாபோகம் என்று வழங்கலாயின. சில சமயங்களில் முதல் இரண்டும் சேர்ந்து தேவதான-பிரமதேயம் என்று வழங்கப்பட்டது. தேவதானம் என்பது, திருவிடையாட்டம், திருநாமத்துக்காணி என்பவற்றிலிருந்து வேறுபட்டது”. (பக்.753, மேலது)

    விஷ்ணுக் கோயில் நிலங்களைக் குறிக்க சக்கரம்பொறிக்கப்பட்ட கல்லும். சிவன் கோயில் நிலத்தைக் குறிக்க சூலம்பொறிக்கப்பட்ட கற்களும் ஊன்றப்பட்டன. சமணப்பள்ளிகளில் நிலங்களைக் குறிக்க வைக்கப்பட்ட கற்கள் குண்டிகைக் கல்எனவும் முக்குடைக்கல்எனவும் வழங்கப்பட்டன என்பர்”. (பக்.756, மேலது)

        பார்ப்பனச் சேரிகளான பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், அகரம்  போன்றவற்றிலுள்ள சபைகளை நிர்வகிக்க  பார்ப்பனர்களை மட்டும் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சீட்டுக் குலுக்கும் முறையே குடவோலை முறை ஆகும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று வேதம் கற்ற பார்ப்பனராக இருக்கவேண்டும் என்பது முதன்மையானது. இந்தச் சீட்டுகளில் பார்ப்பனர்கள் பெயர்கள் மட்டுமே எழுதப்பட்டு, பார்ப்பனச் சிறுவன் ஒருவனால் திருவுளச்சீட்டாக எடுக்கப்பட்டது.

    குடத்திலிட்ட ஓலைகளை எடுப்பதைப் போல கழுகு போர்க்களத்தில் இறந்த வீரனது உடலிலிருந்து குடலை எடுக்கும்”, (மருதன் இள நாகனார் பாடல்: அகம்.77) என்பதான உவமை அகப்பாடலில் சொல்லப்படுகிறது. இது சங்ககாலம் எனப்படும் கி.மு. 300 – கி.பி. 300 காலப்பகுதியைச் சேர்ந்த இந்த இலக்கியச் சான்றுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுகள் இரண்டையும் (காலம்: கி.பி. 916, 921) இணைத்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வரலாறாக்கும் வேலையை பன்னெடுங்காலமாகச் செய்து வருகின்றனர். தமிழ் அறிவுலகமும் இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது  வேதனைக்குரியது. 

       சோழர் காலம் பற்றி மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில் பிராமணர் அல்லாதாரின் ஊர்கள் அதாவது வெள்ளான் ஊர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை. பிராமணர்களுக்கு தானம் வழங்கப்பட்ட பிரமதேயங்கள் சோழநாட்டில் பரவலாக இருந்தன. (…) 1930களில் கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார் முதலிய பல ஆய்வாளர்கள் இவைகளைப் பற்றி விரிவான ஆய்வுகள் செய்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம்  உச்சநிலையிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டமையால் இவற்றில் பொதுவாகவே அளவுக்கதிகமாகப் பழமையைப் போற்றும் போக்கு இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். காட்டாக, சபைகளின் தேர்தல்முறை குடியரசுத்தன்மை கொண்டிருந்தது என்ற செய்தி நடுநாயகமாக இருந்தது”. (பக்.21)  வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்என்ற நொபொரு கராஷிமா நூல் தெளிவுபடுத்துகிறது.

     பிரம்மதேயப்பகுதியில் உள்ள பிறர் நிலங்களை பிராமணர்களிடம் விற்றுவிட முதலாம் இராஜராஜன் ஆணயிடுகிறார். “இவ்வாறு பிரமதேயமும் வெள்ளான் வகையும் கலந்திருந்த ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி நடத்துவதற்கு இரண்டிரண்டு சபைகள் தனித்தனியே இருந்து வந்தன. (…)  பிரமதேயப் பகுதியை அனுபவிக்கும் பார்ப்பனரையும் வெள்ளான் வகை நிலங்களுக்குரிமையாளராகிய பிற வகுப்பினரையும் சேர்த்துக் கிராமசபை அமைத்தல் வேண்டும். இவ்விரு பகுதியிலுள்ளவர்கள் ஒருங்கே ஒரே சபையில் உறுப்பினராகி ஊராட்சி நடத்தும் உட்கழகங்களில் அமர்வதற்கு உறுப்பினர்க்குரிய தகுதி பற்றிய விதிகள் இடங்கொடுக்கவில்லை. அதனால் பார்ப்பன ஊர்களில் கிராம ஊழியத்தின் பொருட்டுப் பணிமக்கட்குக் கொடுக்கப்பட்டுள்ள மானியஙகளைத் தவிர, மற்ற வகுப்பினர் வெள்ளான் வகையில் அனுபவித்துவரும் நிலங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட வேண்டுமென்று அவ்வேந்தன் ஓர் உத்தரவு செய்யும் நிலைமை ஏற்பட்டதென்று தெரிகிறது. (பக். 519, தி.வை. சதாசிவ பண்டாரத்தார்)

      முதலாம் இராஜராஜன், இராஜேந்திரனின் ஆட்சிக் காலங்களில் பிரமதேயக் கிராமங்களில் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப்பட்டன. (…) பிரமதேய சபைகளின் அமைப்புடன் மற்றவர்களை இணைப்பதில் ஏற்பட்ட சங்கடங்களே உண்மையான காரணமாகும். (…) இராஜராஜனின் 17-ம் ஆண்டில் (கி.பி. 1002) ஒரு பொதுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லாரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும்; நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப்பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும்”. (பக். 755 & 756, சோழர்கள் 2, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி)

       சதுர்வேதிமங்கல பிரமதேய சபைகளில் பாமர வகுப்பினர் இடம்பெறுவது எப்படி என்பதை சாஸ்திரியார் விளக்குவதில்லை. ஏதோ இத்தகுதி கல்வியால் கிடைப்பதான பாவனையில் பூசி மெழுகி எழுதுகிறார். இவை பிறப்பால் நிர்ணயிக்கப்படும் வருண தர்மம் என்பதை சாஸ்திரியார் அறியாமலிருக்க முடியாது. சூத்திர வகுப்பார் எங்ஙனம் சதுர்வேதியாக இயலும்? மற்றவர்களை இணைக்க உண்டான சங்கடங்கள் வருணத் தீண்டாமையன்றி வேறில்லை.

     தகுதி இடம் கொடுக்கவில்லைஎன்றால் என்ன? பிறப்பால் பிராமணராக இருக்க வேண்டும் என்பதுதானே தகுதி? பிராமணரல்லாதோர் சமஸ்கிருத வேதப் பயிற்சியை எப்படிப் பெற முடியும்? அதற்கு வருண தர்மத்தில் இடமுண்டா? என்ற கேள்விகள் இந்த பென்னம்பெரியவரலாற்றாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

      பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் கே.கே. பிள்ளை போன்ற வரலாற்றாளர்கள் பிரமதேய ஆதிக்கம், பிரமதேயத்திலிருந்த ஊரவையை வெளியேற்றிய விதம் ஆகியவற்றை ஒத்துக்கொள்கின்றனர். பிராமணர்கள் பெற்ற முதன்மை இயல்பான ஒன்று என்ற வருணக் கருத்தியலின்படியே இவர்கள் வரலாறு எழுதத் தலைப்பட்டுள்ளனர் என்பது தமிழக வரலாற்றெழுதியலின் துயரமாகும்.

      இவர்கள் அனைவரிடமும் காணப்படும் ஒற்றுமை பொதுப்புத்திக்கேற்ப தமிழ்ப் பெருமிதச் சொல்லாடல்களை புனைவதில் இருக்கிறது. மேலும் குடவோலையில் மக்களாட்சியை இனங்காணும்  கிருஷ்ணசாமி அய்யங்கார் தொடங்கி வைத்ததை எவ்வித சுயமான ஆய்வுகள் இன்றி அப்படியே வழிமொழிகின்றனர்.  குடவோலை முறை இன்றும் சோழர்கால பெருமிதங்களில் ஒன்றாகச் சுட்டப்படுகிறது.

      தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக்குறைபாடுகளைக் கண்டார்கள என்பது விளங்கவில்லை. (…) வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும் மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். (…) அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன”. (பக். 316, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை)

     வடநாட்டு பிராமண ஆதிக்கம் பற்றி வருந்தும் கே.கே. பிள்ளை தமிழ்நாட்டுப் பிராமணர்களிடம் எவ்வித குற்றம் குறையும் காணாமலிப்பது வியப்பளிக்கும் செய்தியாகும். இவர்களனைவரும் குடவோலை முறை மற்றும் பிற்காலச் சோழப் பெருமிதங்களை உரைப்பதிலும் விதந்தோதுவதிலும் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்கதாக உள்ளது. மேலே காணும் இவர்களது மேற்கோள்களுடன் குடவோலை முறை குறித்த இவர்களது  கருத்துகளையும் இணைத்து வாசிப்பது நமது வரலாற்றெழுதியலின் அவலத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

           இவர்கள் கட்டமைக்கும் பொற்காலக் கட்டப்பகுதியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சி அறவே இல்லை எனலாம். அந்தக் காலகட்டத்தில் இங்கு வடமொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதம் இங்கு அரசமொழியாகவே கோலோச்சியிருந்தது. நாடெங்கும் சமகிருதம் கற்பிக்க வேதபாடசாலைகள் தொடங்கப்பட்டன. சம்ஸ்கிருத அறிஞர்கள் குமாரிலர், சங்கரர் இவர்கள் காலத்தவர்கள். இவர்களின் மெய்கீர்த்திகளைக்கூட (பிரசஸ்தி)  சமஸ்கிருதத்தில்தான் எழுதினர்.

    காவிரியின் தென்கரையில் வேங்கடாச்சார்யாசுந்தரி என்கிற பார்ப்பனரின் மகன் வேங்கட மாதவர் ரிக் வேதத்திற்கு மிகவிரிவான பாஷ்யம் (உரை) எழுதினார். உலகத்திலேயே மிகவும் புகழ் நிறைந்த வீரதீரப் போர்வீரனின் நாட்டில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்ததாக அவர் கூறுகிறார். இவரை ஆதரித்த அரசர் வீரசோழன், வீரராஜேந்திரன் என்றெல்லாம் புகழப்பட்ட முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – கி.பி. 955) ஆவார்.

      தஞ்சைப் பெரியகோயிலில் நடிப்பதற்காக இராஜ ராஜஸ்வர நாடகமும் திருப்பூந்துருத்தி கோயிலில் படிப்பதற்காக இராஜராஜ விஜயம் என்ற காவியமும் இருந்ததாக கூறப்படுகிறது. பெயரைப் பார்க்கும்போதே இது தமிழில் இல்லை என்பது விளங்கும். முதலாம் இராஜேந்திரனைப் பற்றிய திருவாலங்காட்டுச் செப்பேட்டை வரைந்தவர் நாராயண கவி என்ற சமஸ்கிருதப் பண்டிதர்.

     தென்னார்க்காட்டில் எண்ணாயிரம் என்ற ஊரில் பெரிய சமஸ்கிருதக் கல்லூரி நடத்தப்பட்டது. இவ்வூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. திருபுவனை என்னுமிடத்திலும் சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது (பக்.212, சோழர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). இவ்வாறாக நாடெங்கும் இருந்த வேதபாடசாலைகள் எண்ணற்றவை. தமிழ்க்கல்வி பற்றிய பேச்சே இல்லை.

    சமஸ்கிருத இலக்கணப் பயிற்சி அளிப்பதற்காக வியாகரணதான வியாக்யான மண்டபம்திருவொற்றியூர் கோயிலில் கட்டப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கள் காவனூர் எனும் ஊரை இதற்கு இறையிலியாக்கக் கட்டளையிட்டான். தஞ்சைப் பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கில் தேவரடியார்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கோயிலுக்கும் பொருந்தும். முதலாம் குலோத்துங்கன் சமஸ்கிருதப் புலமைகொண்ட சைவப் பிராமணர்கள் ஒரு கிராமத்தை நிர்மாணித்தார். அக்கிராமத்தில் வாழ்ந்த கேஸவ ஸ்வாமின் இரண்டாம் இராஜராஜனிடம் பணிசெய்தார். அவரை சமஸ்கிருதப் பேரகராதி  உருவாக்க அரசர் கட்டளையிட்டார்.

      இம்மாதிரியான சமஸ்கிருத சேவைகளுக்கு இடையேதான் தமிழ் கொஞ்சம் தலைகாட்டியது. அதுவும் சோழ அரசின் இறுதிப்பகுதியில் நடைபெற்றது மறைக்கமுடியாத உண்மை.   அவற்றில்  வடமொழிகளின் இலக்கண அமைப்பை தமிழாகக் காட்டிய புத்தமித்தரர் எழுதிய வீர சோழியம், பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் போன்றவையும் உள்ளன.

           பெரிய புராணத்தை (திருத்தொண்டர் புராணம்) எழுதிய சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர். இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலம் கி.பி. 1133 -1150. கம்பரின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியாகும். பிற்காலச் சோழர்களின் தமிழிலக்கிய அடையாளமாக முன்னிறுத்தப்படுபவை அனைத்தும் சாளுக்கிய-சோழ மரபில் வந்த முதலாம் குலோத்துங்கன் மற்றும்  அவருக்குப் பிந்தைய காலத்துப் படைப்புகளாகும்.  சங்க காலத்திலும் (தோராயமாக கி.மு. 300 – கி.பி. 300) களப்பிரர்கள் காலத்திலும் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார் தவிர்த்த பிற நூல்கள் உருவான காலம், கி.பி.275-575) ) சிறந்து விளங்கிய தமிழ் இந்தப் பெருவேந்தர் காலத்தில் இருந்த இடம் தெரியவில்லை. ஏனென்றால் இவர்களது கைகள் கட்டப்பட்டிருந்தன, வைதீகம் ஆட்சி செய்தது, சமஸ்கிருதம் ஆட்சிமொழியை விடவும் உயர்வாக இருந்தது. சமஸ்கிருத மொழிக்கல்வியே வழங்கப்பட்டது. அந்த வகையில் இவர்கள் நரேந்திர மோடி போன்ற வைதீகப் பாரம்பரிய  முன்னோடிகள் என்று சொல்லலாம்.

        குறிப்பாக முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகிய பெருவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒன்றைக்கூட பட்டியலிட முடியவில்லை. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஜெயங்கொண்டார், சேக்கிழார் போன்ற அனைவரும் பிற்காலத்திய சாளுக்கியசோழ மரபைச் சேர்ந்த மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் என்கிற உண்மையைப் பலர் காண மறுக்கின்றனர்.

                முதலாம் குலோத்துங்கனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன், கரிகாலன், திருநீற்றுச் சோழன் என்பனவற்றோடு மநுகுலதீபன் என்னும் பட்டப்பெயரும் உண்டு. இதிலிருந்து மநுநீதிச்சோழன் என்பது பிற்காலச் சோழர்களுக்கு பலருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்பது விளங்கும். இருப்பினும் மநுகுலதீபன்காலத்தில்தான் தமிழ்மொழி ஓரளவு தனக்குரிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது என்பதையும் மறக்க இயலாது.

      கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஜெயங்கொண்டார், சேக்கிழார்  ஆகியோரின் படைப்புகள்தான் மிஞ்சுகின்றன. முதலாம் குலோத்துங்களின் ஆட்சியின் இறுதியில் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடுகிறார். தீபங்குடிப் பத்து என்னும் நூலை இயற்றிய இவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் கம்பர்  இராமாயணம் எழுதுகிறார். ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிகோவை ஆகியவையும் கம்பர் எழுதியதாகும்.  ஒட்டகூத்தர் மூவருலா, ஈட்டி எழுபது, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். புகழேந்திப்புலவர் நளவெண்பாவையும் சேக்கிழார் பெரிய புராணத்தையும் படைத்தனர்.

       இவைகளை வரலாற்றை நேர்மையாகவும் புறவயமாகவும் அணுகாமல், சுய விருப்பு, வெறுப்பு, சாதி, இனம், மொழி என்கிற குறுகிய கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இந்திய, தமிழக வரலாற்றெழுதியலின் (Historiography) அவலமாகக் கொள்ளலாம். இவை யாருக்குப் பொற்காலமாகத் தோற்றமளித்தது, எவருக்கு இருண்ட காலமாக மாறியது என்பதை பகுத்தறிந்து உணர்வது  அவசியம். செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட இப்புனைவுகளை விரிவான ஆய்வுக்குட்படுத்துவது வரலாற்றைச் செழுமையாக்கும்.-       

-          வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் அக்டோபர் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக