வெள்ளி, டிசம்பர் 10, 2010

2ஜி அலைக்கற்றை ஊழல் : நடப்பது என்ன? - மு. சிவகுருநாதன்

2ஜி அலைக்கற்றை ஊழல் :  நடப்பது என்ன?
            - மு. சிவகுருநாதன்


          ஆ. ராசாவின் பொறுப்பிலுள்ள தொலை தொடர்புத்துறை 2ஜி  (2G SPECTRUM ) அலைக்கற்றையை ஏலம் விடாமல் 2001 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிமாட்டு விலையில் 2008 ஜனவரியில் 122 உரிமங்களை வழங்கியது.  அப்போதிருந்தே ரூ.60,000/- கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது.  ஊடகங்களின் விருப்பத்திற்கேற்ப இவ்வூழல் ஊற்றி மூடப்பட்டது.  இடதுசாரிகள் தவிர பிரதான எதிர்கட்சிகளும் ஊடகங்களும் இவ்வளவு காலம் ஏன் மௌனம் காத்தன என்பதை தனியே ஆராய வேண்டும்.

       தற்போது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரின் (CAG - Comptroller and Auditor General of India) அறிக்கையின் மூலம் அமைச்சரவைக் குழு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) ஆகியவற்றின் ஆலோசனைகளையும் மீறி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

       டாடா, அம்பானிகளுக்கு புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியா என்ற பெண்மணியின் தொலைபேசி உரையாடல் வெளிவந்து அதன் மூலம் இந்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் கைகட்டி சேவகம் செய்வதை அம்பலப்படுத்தியுள்ளது.

      மூன்றாவதாக சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் நீதிமன்றம் அரசுக்குக் கேட்ட கேள்விகள்போன்ற காரணங்களால் இறுதியாக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.  எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக பிரணாப்முகர்ஜி மூலம் மு. கருணாநிதியின் சம்மதம் பெறப்பட்டு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலகிய நாடகம் கடைசியில் நிகழ்த்தப்பட்டது.

        இம்மாபெரும் முறைகேட்டிற்கு யார் பொறுப்பு, யார் பலிகடா என்பதையெல்லாம் விட பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவர், அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை, அவருக்கு தி.மு.க விடமிருந்து நெருக்கடி இருந்தது, அவரது திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean!) இமேஜ் பாதிக்காது என ஊடகங்கள், அத்துறைக்கு முன்னர் பொறுப்பு வகித்த தி.மு.கவின் தயாநிதிமாறன், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

     இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்பாக மு. கருணாநிதி அடிக்கடி பிரதமருக்குக் கடிதம் எழுதுவதைப்போல அமைச்சர் ஆ. ராசாவுக்கு கடிதம் எழுதியதோடு பிரதமரின் பொறுப்பு முடிந்து விடுகிறதா என்ன?

     2ஜி அலைக்கற்றையை முறைகேடாக பெற்ற நிறுவனங்கள், இவற்றில் பல தொலை தொடர்புத்துறையில் தடம் பதிக்காத கட்டிட கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட உரிமம் இதுவரையில் ரத்து செய்யப்படவில்லை.  இதில் இன்னும் பல நிறுவனங்கள் தங்களது தொலைத்தொடர்பு சேவையை இன்னும் தொடங்கவில்லை.  சேவை தொடங்காத 6 நிறுவனங்களுக்கு தற்போது தான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  இந்த ஊழலில் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள், முதலாளிகள் போன்றோரையும் பிரதமரையும் பாதுகாப்பதற்கு பெருவாரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     இந்த ஊழல் சங்கிலியில் பா.ஜ.க.வின் தொடர்பும் முக்கியமானது.  பிரமோத் மகாஜன், அருண் ஷோரி,தயாநிதிமாறன் போன்றோர் காலத்திலிருந்தே பொதுச்சொத்து பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது.  போர்ஃபர்ஸ் ஊழலை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமான அருண் ஷோரி பா.ஜ.க. அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராகவும்  இருந்தார்.  ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாட்டு அழைப்புக்களை உள்நாட்டு அழைப்புக்களாக பொய்க் கணக்கு காட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டது.  அதற்கு மிகச்சிறிய தொகை மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.  இதன் காரணமாக அவர்கள் பெற்ற ஆதாயம் பல்லாயிரம் கோடி ரூபாய்.  தனி நபருக்கு கையூட்டாகவும் அரசியல் கட்சிக்கு தேர்தல் நன்கொடையாக பெருந்தொகை பெறுவதற்கு பொதுச் சொத்துக்கள் பதிலீடு செய்யப்படுகின்றன.

    2009 பொதுத் தேர்தலில் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் பிரச்சினையை பெரிதாக்க பா.ஜ.க விரும்பவில்லை.  இதில் தங்களுக்குப் பங்குண்டு என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  இப்போது அவர்கள் பேசுவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கக் கூடும்.

    நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி பல நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கிறது.  அரசுத்தரப்போ சி.பி.அய், பொதுக்கணக்குக் குழு, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் விசாரணைiயில் இருப்பதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவையில்லை என்று பிடிவாதம் செய்கிறது.  சுதந்திர இந்தியாவின் 63 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாதிரியான ஊழல்கள் பலமுறை வெளிப்பட்டும் யாரும் தண்டனை பெற்றதில்லை.  முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அறிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதில்லை.  சி.பி.அய், பொதுக் கணக்குக்குழு, கூட்டுக்குழு, விசாரணைக் கமிஷன் போன்ற எதுவும் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.  அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் குப்பைக்குதான் போகும்.  இதுதான் நடக்கும் என்பதற்கு நிறைய முன்னுதாரணங்களைச் சுட்ட முடியும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள், கேள்விகள் போன்றவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  நமது நீதிபதிகள் விசாரணைகளின்போது இவ்வாறு தான் மிகவும் உருப்படியாக கேள்வி எழுப்புவார்கள்.  இதனையொட்டி நாமாக தீர்ப்பை கற்பனை செய்து கொள்ளக்கூடாது.  இறுதியாக இந்தியர்களின் கூட்டு மனச்சாட்சிபடியோ, அயோத்தி தீர்ப்பைப் போன்றோ ஒரு ‘கட்ட பஞ்சாயத்து’ முடிவைச் சொல்வார்கள்.  அதுவும் அத்தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயமிருக்காது.  தனிநபர் நீதிமன்றத் தீர்ப்பை மீறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு (Contempt of Court) ஆளாக நேரிடலாம்.  அத்தீர்ப்பை அருந்ததிராய் போன்ற ‘தேசத்துரோகிகள்’ விமர்சித்தால் சிறைத்தண்டனை கூட கிடைக்கலாம்.  போபால் யூனியன் கார்பைடு விஷ வாயு கசிவு, நஷ்ட ஈடு தொடர்பான வழக்குகளின் கதை நமக்கெல்லாம் தெரியும்தானே !

    உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டிலுள்ள இன்னொரு அரசியலையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.  சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடும் போதெல்லாம் மிக விரைவாக காரியம் ஆவதேன்?  ‘ராமர்பாலம்’ தகர்க்கப்படக் கூடாது என்று தொடர்ந்த வழக்கில் ‘சேது சமுத்திரத்திட்டம்’ உடன் நிறுத்தப்பட்டது.

    கேபினட் அமைச்சராகவிருந்த ஆ. ராசா மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடர பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கில்தான் பிரதமரை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு சுப்ரமணியன் சுவாமியே பிரமருக்கு ஆதரவாக பேசியதும் நடந்தேறியது. வேறு யாரும் வழக்கு தொடர்ந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

   நர்மதை நதியின் சர்தார் சரோவர் அணைக்கட்டு பிரச்சினையில் மேதா பட்கர் (நர்மதா பச்சாவோ அந்தோலன்) தலைமையில் எவ்வளவு போராட்டங்கள், வழக்குகள்.  இறுதியில் நீதிமன்றம் அணையை உயர்த்தச் சொல்லி தீர்ப்பு சொன்னது.  அத்தீர்ப்பை ‘நாகரீக வன்முறை’ என்று விமர்சனம் செய்த அருந்தததிராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது.  பன்னாட்டு, உள்நாட்டு மூலதனங்களால் பாதிக்கப்படும் மக்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் அவர்கள் சார்பாக நீதிமன்றம் செயல்பட்டதில்லை.  முதலாளிகளுக்கு எதிராக எந்தத் தீர்ப்பும் வந்ததில்லை.

     2ஜி அலைக்கற்றை வழக்கில் கூட முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய எந்த நீதிமன்றமும் உத்திரவிடப்போவதில்லை.  இது அரசின் தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் முடிவு, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதில்லை என்று கூறி எளிதில் தப்பித்துக் கொள்ளும்.

      அரசு தானியக் களஞ்சியங்களில் வீணாகும் உணவு தானியங்களை பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பி.யூ.சி.எல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியதில்லை என்று திருவாய் மலர்ந்தார் உணவு அமைச்சராக இருக்க லாயக்கில்லாத ICC தலைவர் சரத்பவார்.  அதைக் கேட்ட நிதிமன்றம் வெகுண்டெழுந்து ஆணையைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியது.  அதுவரையில் அமைதியாக இருந்து திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean!) மன்மோகன்சிங் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தார்.

      மத்தியக் கணக்குத் தணிக்கை அலுவலரின் (CAG) அறிக்கையால்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் பூதாகரமாக வெளிப்பட்டது.  இதனையெடுத்து நடைபெற்ற தணிக்கைத் துறை ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசிய பிரதமர், தணிக்கையாளர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.  இதே கருத்தை சென்னை தணிக்கைத்துறை கூட்டத்தில் தமிழக முதல்வர் உரையில் வலியுறுத்தியது துணை முதல்வர்மு.க. ஸ்டாலின் முதல்வர் உரையைப் படித்த போது வெளிப்பட்டது.  சி.பி.அய் போன்று வளைக்க வேண்டியவற்றை வளைத்தும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தணிக்கைத்துறை போன்றவற்றை மிரட்டியும் பல்வேறு ஊழல்களில் விசாரிக்கப்பட வேண்டிய பி.ஜே. தாமஸை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தும் பல ஊழல்களை கண்டும் காணாமலும் இருக்கின்ற பிரமர் கறைபடியாதவர், செயல்படாத பிரதமர் (லேசான விமர்சனம்) என்றெல்லாம் ஊடகங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

      உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றவற்றிற்கும் அமெரிக்காவிற்கும் வேண்டப்பட்டவர்கள் மட்டும் இந்தியா அரசியலில் உயர் பதவி வகிப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?  நீரா ராடியாவின் உரையாடல் பதிவுகளிலிருந்து ஆ. ராசா தான் தொலை தொடர்புத் துறைக்கு மந்திரியாக வேண்டும் என்ற உள்ளூர் முதலாளிகளின் விருப்பம் வெளிப்பட்டது.  அதைப் போல அமெரிக்கா இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ப. சிதம்பரம், ரெங்கராஜன், மாண்டேக் சிங் அனுவாலியா, சுப்பாராவ் போன்றவர்கள் நிதியமைச்சராகவும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

     ரிசர்வ் வங்கி கவர்னர்களுக்கெல்லாம் யோகம் காத்திருக்கிறது.  உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனத்தில் பதவி அல்லது மாநில கவர்னர் ஆகியவற்றில் ஏதோ ஒன்று கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  பிரதமர்தான் திட்டக்குழு தலைவர்; துணைத் தலைவரும் நம்மாளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க முதலாளித்துவம் எதிர்ப்பார்க்கிறது.  திட்டக்குழுவிற்கு பிரதமர் பெயரளவில் தான் தலைவர்.  செயல்பாடு துணைத் தலைவரைச் சார்ந்தது.  எனவே, மாண்டேக் சிங் அனுவாலியாக்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது.  இதற்கு அடுத்து சர்வதேச நிதி நிறுவனத் (IMF) தலைவர் பதவி கூட காத்திருக்கிறது.

    தயாநிதிமாறன் வேண்டாம் ஆ. ராசாதான் வேண்டும் என இந்திய முதலாளிகள் அடம் பிடிப்பதனால் ஆ. ராசா மட்டும் ஊழல் பேர்வழி; தயாநிதிமாறன் போன்றோர் நேர்மைசாலிகள் என்று அர்த்தமல்ல.  ஏற்கனவே, டீலிங் முடிந்து விட்டது.  எனவே, புதுக்கணக்கு தொடங்க வேண்டியதில்லை.  பழகிய மாட்டை வைத்துதானே எளிதாக ஏர், வண்டி ஓட்ட முடியும்.  ‘வேதாந்தா’ நிறுவனத்திற்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டும் என்றால் முன்னாள் வழக்கறிஞர் ப. சிதம்பரம் அந்நிறுவனத்திற்கு பயன்படுவார் தானே !  எனவே, அந்த நிறுவனங்கள் மீண்டும் அவர்களையே நாடுகிறது.

      இதைப் போலவே அமெரிக்காவின் சர்வதேச முதலாளியம் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அனுவாலியா போன்றவர்களை விரும்புகிறது.  இந்த விசுவாசமே அணுஉலை விபத்து நடந்தால் ரூ.500/- கோடி இழப்பீடு அளித்தால் போதும் என மசோதா நிறைவேற்றத் துடிக்கிறது.  ஏன் எதற்கு என்று கேள்வியில்லாமல் பன்னாட்டு மூலதனங்களுக்கு இந்தியாவை விருந்தாக்குகிறது.  நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நாட்டின் கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்த்தல் எனப் பல்வேறு மோசடிகளை ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் அரங்கேற்ற வைக்கிறது.  இதற்கு இடையூறாக இருக்கும் மாவோயிஸ்ட்டுகளை “உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என வீரிடவும் வைக்கிறது.  கனிம வளங்களைப் போல 2ஜி அலைக்கற்றையும் நவீன இயற்கை வளம்.  அதை இவ்வாறு கூறுகட்டி விற்று லாபம் பார்த்திருக்கின்றன தேசிய முன்னணி (NDA) மற்றும் ஐக்கிய முன்னணி (UPA) கூட்டணி அரசுகள்.

       2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு தொடுத்த சு. சுவாமி அமெரிக்காவிலிருந்து ஆதாரங்கள் வந்தது என்கிறார்.  மன்மோகன் சிங், சு. சுவாமிக்கிடையில் அமெரிக்க விசுவாசத்தில் பெரும் போட்டியே இருக்கும் போலிருக்கிறது.

      நீரா ராடியா பேச்சு ஒலிப்பதிவிலிருந்து ஊடகத்துறையினரின் அயோக்கியத்தனங்களும் ஒரு சேர வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.  அவர்களும் ஆளும் வர்க்கத் தரகர்களாக நான்காவது தூண் என்று சொல்லிக் கொண்டு மூன்று தூண்களைப் போலவே கேவலமாக சீரழிந்திருப்பதை இது உணர்த்துகிறது.  ஊடகங்கள் எந்த மாதிரியான செய்திகள் வர வேண்டும், யாரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் முன் முடிவுடன் செயல்படுகின்றன.  ஊடகத் தொழிலதிபர்களில் கையில் பத்திரிக்கை தர்மம் என்பதெல்லாம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுதான்.  வேறு எந்தத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் இவர்கள் தங்கள் துறையில் மட்டும் எதிர்ப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

       2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தில் சோனியாகாந்திக்கு 60% மு. கருணாநிதிக்கு 30% ஆ. ராசாவுக்கு 10% என பங்கு பிரிக்கும் ‘கோமாளி’ சு. சுவாமி, இதில் தொடர்புடைய பிரதமர், முந்தைய பா.ஜ.க அரசுகள், தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆதாயம் அடைந்த பிறர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை என்பதையும் அதன் பின்னாலுள்ள அரசியலையும் கவனிக்க வேண்டும்.

       இப்பெரும் ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவரும் கூட்டுக் களவாணிகள் தான்.  அவர்களில் ஒரு சிலரை மட்டும் காப்பாற்ற ஊடகங்களும் சு. சுவாமி உள்ளிட்ட பலரும் விரும்புவது நமது அய்யத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில்  மு. கருணாநிதியின் ‘தலித் பாசம்’ நம்மை புல்லரிக்க வைக்கிறது.  ஊழலிலும் இட ஒதுக்கீடு கேட்பதாக ‘தினமணி’ கிண்டல் செய்கிறது.  ஆ. ராசா இத்துறை அமைச்சராக வந்ததன் பின்னணியைப் பார்த்தால் மு. கருணாநிதியின் கபட நாடகம் புலனாகும்.  ‘பசை’யான இத்துறையை தன் பேரனுக்காகப் போராடிப் பெற்று குடும்பச்சண்டையின் காரணமாக வேறு வழியின்றி அப்பதவியைப் பிடுங்கி ஆ. ராசாவிடம் அளித்தவர் மு. கருணாநிதி.  தயாநிதி மாறனை விட கட்சியில் மூத்தவரான ஆ. ராசாவுக்கு முன்னரே அத்துறை அமைச்சர் பதவியை அளிக்கவிடாமல் தடுத்தது எது?  அப்போது ஏன் ‘தலித் பாசம்’ பொங்கி எழவில்லை என்று கேட்டால் பதிலிருக்கப் போவதில்லை.

      2ஜி அலைக்கற்றை ஊழலில் பலிகடாவாக்கப்பட்டுள்ள ஆ. ராசா பிறப்பால் தலித்தாக இருக்கலாமே தவிர தலித் மக்களின் பிரதிநிதி அல்ல.  பிராமணர் சங்கம் உள்ளிட்ட எந்த சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சியாக மாறுகிறபோது தனித்தொகுதிகளில் வேற வழியில்லாமல் போட்டியிடச் செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்ற இத்தலைவர்கள் அடித்தட்டு தலித் மக்களுக்கு விசுவாசமாக செயல்படுவது நடைமுறையில் சாத்தியமில்லை.  தம்முடைய கட்சித்தலைவருக்கு விசுவாசம் காட்டவே அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.  இல்லாவிட்டால் தங்களது பதவி கூட அவர்களுக்கு நிரந்தரமில்லை என்பதே அன்றாட யதார்த்தமாக உள்ளது.  நிலைமை இப்படியிருக்க தலித் என்று பேசுவது அர்த்தமற்ற ஒன்று.

      ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர தனித்தொகுதி தவிர்த்த பொதுத் தொகுதிகளில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்த எந்த கட்சியும் முன்வருவதில்லை.  முரசொலி மாறன் இருந்த வரையில் தில்லியில் வேறு தி.மு.க தலைவர்கள் வெளிப்படவேயில்லை.  மாறனுக்குப் பிறகு டி.ஆர். பாலு போன்ற அடுத்தக்கட்ட தலைவர்கள் உருவாகாமல் தயாநிதி மாறன்,
மு.க.அழகிரி,கனிமொழி போன்ற குடும்ப வாரிசுகளை தொடர்ந்து உருவாக்கித்தந்துள்ள தி.மு.க தலைமை தலித் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மிகவும் அபாயகரமானது.


    அம்பானி, டாடாக்களின் முகவராக செயல்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அலைக்கற்றை ஊழலுக்கு முக்கிய ஆதாரமாகும்.  அதில் வெளியானது சிறுபகுதிதான் ; முற்றிலும் வெளியாக வேண்டும்.  இந்த உரையாடல் பதிவு வெளியீட்டிலும் வேண்டியவர்களைப் பாதுகாக்கும் சூழல் உருவாகும்.  இதற்கிடையில் ரத்தன் டாடா தனி நபர் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாகவும் உரையாடல் பதிவை வெளியிடத் தடையளிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

     சினிமா நடிகைகளின் அந்தரங்கத்தில் சில ஊடகங்கள் மூக்கை நுழைப்பதை தங்கள் வழக்கமாகவே கொண்டுள்ளன.  மாறாக அரசும் அரசைச் சார்ந்தவர்களும் பெருமுதலாளிகளும் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க, தங்களுக்கு சாதகமான அரசு எந்திரத்தை வளைக்கின்ற வேலையைத்தானே டாடா, அம்பானிகளுக்காக நீரா ராடியா தரகுவேலை செய்திருக்கின்றார். இது தேச நலன் சம்மந்தப்பட்டது.  டாடாவின் தனி நபர் அந்தரங்க உரிமை பற்றி கதையளப்பவர்கள் 100 கோடி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து எவ்வித கவலையும் கொண்டதில்லை.  ‘விக்கி லீக்ஸ்’ இணையதளம் அமெரிக்க அத்துமீறல்களை வெளியிடுவதை அந்நாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் “உலக நாடுகள் மீதான தாக்குதல்,” என்கிறார்.  எப்படி நம்ம மன்மோகன்சிங் மாதிரி பேசுகிறார்கள் பாருங்கள் !  உலக நாடுகள் மீது அமெரிக்க நடத்திய, நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது?  டாடா, அம்பானி போன்றவர்கள் இந்திய மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்க செய்த சதி ஆலோசனை வெளிப்பட்டால் தனிநபர் அந்தரங்கம் என்று நீதிமன்றத்திற்கு வருகிறார்கள்.  நீதிமன்றமும் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பெழுதக் கூடும்.  நமது பிரதமருக்கு ஏன் இதெல்லாம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தெரிவதில்லை?  ஏனென்றால் அவரும் அவர் சார்ந்த கட்சியும் (ஏன் எதிரணியும் கூட) மக்களுக்கானது அல்ல;  மாறாக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கானது.

     2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.  பிரதமர், சோனியாகாந்தி, ஆ. ராசா, தி.மு.க., பா.ஜ.க., ஊடகத்துறையினர், அரசு அதிகாரிகள், நீரா ராடியா போன்ற தரகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் என பல நூறு பேர்கள் இவ்வலைப் பின்னலின் கண்ணிகளாக இருக்கின்றனர்.  நமது முந்தைய உதாரணங்களைப் பார்க்கும்போது எந்த அமைப்பின் விசாரணையும் எவ்வித பலனையும் அளிக்காமல் போகவும் வாய்ப்புண்டு.  சராசரி இந்தியனின் அன்றாட பரபரப்புக்குத் தீனிபோட்ட இவ்விவகாரம் கொஞ்ச நாட்களில் மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறந்து போகவும் கூடும்.  அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாத பல கோடி இந்திய மக்களுக்கு இதைப்பற்றி யோசிக்க கூட முடியாமற் போகலாம்.  ஆனால் அதிகார வர்க்கம் தொடர்ந்து தனது கொள்ளையிடலுக்கான செயல் திட்டங்களை வகுத்தபடியே இருக்கும்.

1 கருத்து:

கருத்துரையிடுக