செவ்வாய், மார்ச் 01, 2011

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?

- மு. சிவகுருநாதன்


          தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்வழிக் கல்வி (ABL), படைப்பாற்றல் கல்வி (ALM) போன்ற கற்பித்தல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது.  மேலும் இவ்வாண்டு முதல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்களும் வெளியிடப்பட்டுள்ளன.  இவற்றைச் சிலர் பாவ்லோ ஃப்ரெய்ரே அறிமுகப்படுத்திய மாற்றுக் கல்விக்கு இணையாக வைத்து பாராட்டுகின்றனர்.  சிலர் மாற்றுக் கல்வியை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்றும் கூறுகின்றனர். 

            1921-ல் பிரேசிலில் பிறந்த பாவ்லோ ஃப்ரெய்ரே வயது வந்தோர் கல்விக்கான டாக்டர் பட்டம் பெற்றவர்.  பிரேசில் அரசில் எழுத்தறிவு இயக்கத்தின் தலைவராகி (1963) 20000 பண்பாட்டுக் குழுக்கள் மூலம் 20 இலட்சம் பேரை சமூக விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அஞ்சிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 

            அமெரிக்காவிற்கும் கடவுளுக்கும் எதிரானவராக குற்றஞ்சாட்டப்பட்ட  ஃப்ரெய்ரே 70 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பொலிவியாவில் தஞ்சமடைகிறார்.  அங்கும் ஆட்சி கவிழ்க்கப்படவே அவர் சிலிக்கு ஓட நேரிட்டது.

            1965 சிலி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவரை சிலி அரசு வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஈடுபடுத்தியது.  கல்விக் கோட்பாடு நூற்களை இக்காலக் கட்டத்தில்தான் அவர் எழுதினார்.  1973 இல் சிலியில் அலெண்டேவின் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு ராணுவ அரசிற்கு வேண்டப்படாதவராக மாறிய பிறகு, பெரு, அங்கோலா, மொசாம்பிக், தான்சானியா, கினியாபிசா போன்ற லத்தின் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கல்விப் பணி செய்கிறார். 

             1969 ஹார்வார்டு கல்வியியல் பள்ளியில் கவுரவ விரிவுரையாளராகவும் பின்னர் ஜெனிவாவில் இயங்கும் சர்வதேச திருச்சபை அமைப்புக்களின் கல்வி ஆலோசகராகவும் நியமிக்கப்படுகிறார்.  1979 தம் சொந்த நாடான பிரேசிலுக்குத் திரும்பும் இவர் 1991ல் பாவ்லோ  ஃப்ரெய்ரே நிறுவனம் தொடங்கி பணியாற்றி 1997இல் மரணமடைகிறார்.

             சமூகத்தின் ஆதிக்க சக்தியினர் உருவாக்கிய பாடத்திட்டம் மற்றும் பாடநூற்கள் ஆசிரியர் சேகரித்த தகவல்களை அனைத்தையும் அறிவைத் தருதல் என்ற பெயரில் மாணவர்களிடம் திணிப்பதே இன்றைய கல்வி முறையாகும்.   ஆசிரியரின் விரிவுரைகளை கேட்டு அதை மறு உற்பத்தி செய்யும் இம்முறையை வங்கி முறைக் கல்வி என்கிறார்கள்.  மாணவர்கள் கேட்கின்றவர்களாக மட்டும் இருப்பதால் விமர்சனக் கண்ணோட்டமின்றி சமூகத்தில் நிலவும் அவலங்களை கண்டும் காணாததும் போல் இருக்கின்றனர். 

             ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் ஒரு கூட்டத்தை மட்டும் உருவாக்காமல், ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை நோக்கிய கல்வியின் மூலம் அவர்களின் விடுதலையை சாத்தியப்படும் கல்வி முறையை   ஃப்ரெய்ரே செயல்படுத்தினார்.  அதிகாரம் இல்லாத உரையாடல்கள் மூலம் வறுமை, எழுத்தறிவின்மை, பொருளாதார, சமூக ஆதிக்கங்களின் பிடியில் இருக்கும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வதற்குண்டான கல்வி முறையை அவர் பரிந்துரைத்தார்.

             பாவ்லோ  ஃப்ரெய்ரேவின் மாற்றுக் கல்வி அரசியல், கருத்தியல், பயிற்று முறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதோடு அநீதிகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு பொங்கியெழும் மனப்பான்மையை கல்வி உண்டாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

             கல்வியில் உள்ளடக்கம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கற்பனையான ஒன்றின் மீது அமைக்கப்படக் கூடாது.  பாடத்திட்டம் ஒரு நிபுணர்குழுவின் நிபுணத்துவத்தால் மட்டுமே அமையக்கூடாது.  உலகம், உலகில் வாழும் மனிதர் மட்டுமே இக்கல்வியின் கருப்பொருளாக அமைய முடியும் என்பது  ஃப்ரெய்ரேவின் கருத்து.

            நமது பாடத்திட்டமும் புதிய பாடநூற்களும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என மீண்டும் மீண்டும் சொல்லவும் வேண்டுமா?  யாருக்கும் தெரியாமல் வல்லுநர் குழுவால் ரகசியமாக தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்,  அதைப் போலவே நிபுணர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாடங்கள் என குழந்தைகளையும் சமூகத்தையும் உலகையும் கவனத்தில் கொள்ளாத பாடநூற்களைத் தானே நாம் பெற்றிருக்கிறோம்!.

            மாற்றுக் கல்வியின் உள்ளடக்கத்தில் அரசியல், கருத்தியல் ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன.   அரசின் கொள்கைத் திட்டங்கள்,  தனிநபர் துதிபாடல், அறிவை மழுங்கடித்தல், வரலாற்றைத் திரித்தல் என்ற ஆளும் கட்சி அரசியலுக்கு பாடநூற்கள் மட்டுமல்ல வருங்கால தலைமுறையும் பலியாகின்றன.  தமிழ், திராவிடம் என்று சொல்லிக் கொண்டு இந்துத்துவ கருத்தியலுக்கு இணங்கவே பாடங்கள் உள்ளன.

            விவாதத்திற்கும் உரையாடலுக்கும் சாத்தியமில்லாத அல்லது அதை மறுக்கிற பாடங்களின் மூலம் மாற்றுக் கல்வி சாத்தியமில்லை.   அதிகாரம் செயல்படுமிடத்தில் உரையாடல் செயல்பட வாய்ப்பில்லை.  ஆசிரியர்களின் அதிகாரங்கள் பயிற்சியால் பலமிழந்து போவதாகவேக் கொள்வோம்.  பாடத்திட்டம் மற்றும் பாடநூற்களின் அதிகாரத்தை என்ன செய்வது?   இவை வங்கி முறைக் கல்வியை விட்டு இன்னும் தாண்டவில்லை.  பிரச்சினைகள் மையமான பாடம்,  சமூகத்தோடு தொடர்புடைய சூழல் இவை எதுவும் குழந்தைகளுடன் நெருக்கம் கொள்ளவும் சமூகத்தின் மீது ஈடுபாடு கொள்ளவும் பாடநூற்கள் வாய்ப்பு தரவில்லை.

            சமூகத்தில் கல்வி அமைப்பு எப்படி இருக்கம் வேண்டும், அதன் உள்ளடக்கமும் நோக்கமும் எப்படியிருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பதை அதிகார வர்க்கமே நிர்ணயம் செய்கிறது.  நமது பாடநூற்களையும் மேல்மட்டத்திலுள்ள அதிகார அமைப்பு முடிவு செய்கிறது.  அதை  எப்படி ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியாக, பாடத்திட்டமாக, பாடநூலாக இருக்க முடியும்? வட்டார அளவிலான வேறுபாடுகளை இவை கண்டு கொள்வதில்லை. 

            இந்திய, தமிழ்ச் சூழலில் பாடநூற்கள் தரமாகவும் அதிகார வர்க்கத் தலையீடு இல்லாமலும் சுயேட்சையான அமைப்பு ஒன்று, கற்கும் குழந்தைகளிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தயாரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.  அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.  தமிழ் சினிமாக்களில் பெரியவர்களின் பேச்சை குழந்தைகளும் ஆண்களின் பேச்சை பெண்களும் பேசுவார்கள்.   ஒரு ஆண் தன்னிலை என்ன நினைக்கிறானோ அதை பெண்கள் மற்றும் குழந்தைகளின் வழி பேச வைக்கும் நிலை தான் இங்குள்ளது.  அதைப் போலவே குழந்தைகளுக்கு இதுதான் வேண்டுமென பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.

             அடுத்து பயிற்று முறை, செயல் வழிக் கல்வியில் பாடப்புத்தகம் மற்றும் அட்டைகளில் உள்ளதைத் தானே வாந்தியயடுக்க வேண்டியுள்ளது.  புதிதாக, இயல்பாக, சொந்தமாக குழந்தைகள் என்ன செய்ய போகின்றன?  இப்படித்தான், இந்த ஏணிப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற போது கூடவே ஒரு அதிகாரமும் பிறக்கிறதுதானே!.  முதல் நான்கு வகுப்புகளுக்குள்ள செயல் வழிக் கற்றல் முறையாவது பரவாயில்லை.  ஓரளவிற்கு குழந்தைகளை மையப்படுத்துவதாக உள்ளது.

            ஆனால் 6, 7, 8 வகுப்புகளுக்கான ‘படைப்பாற்றல் கல்வி’ என்பதே மோசடியான ஒன்றாகும்.  கட்டமைக்கப்பட்டுள்ள பாடநூலிலுள்ள பாடத்தை எந்தவிதமான விமர்சனமுமின்றி மனவரைபடம் வரைந்து பாடக்கருத்தை மனத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.  இதில் எங்கிருந்து வந்தது படைப்பாற்றல்?  வல்லுநர் குழு முடிவு செய்த பாடத்தை (வங்கி முறைக் கல்வி), தகவல்களை, அறிவை விரிவுரை முறையை மட்டும் பயன்படுத்தாமல் வேறு வகையில் மனப்பாடம் செய்ய வைப்பது எப்படி மாற்றுக் கல்வியாக இருக்க முடியும்?

            நமது மதிப்பீடு மற்றும் தேர்வு முறைகள் எப்படியிருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.  மனப்பாடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கும் தேர்வு முறையை நாம் மாற்றாமல் வைத்துக் கொண்டு எப்படி ஆனந்தக் கூத்தாடுவது?  கல்வியை அளவிட தற்போதைய தேர்வு முறை ஒரு கருவியே அல்ல.  தேர்வு முறையைக் கைவிடாமலும் அதற்கேற்ற பாடங்களையும் தயாரித்து வைத்துக் கொண்டு கற்பித்தல் முறையில் மட்டும் மாற்றத்தைக் கொணர்ந்து விட்டால் புரட்சி நடந்து விடும் என்று கனவு காணுவது அபாயகரமானது.

உதவியவை:


01. மாற்றுக் கல்வி :- பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன? 

     - அ. மார்க்ஸ் - புலம் வெளியீடு

02. மூன்றாம் உலகில் குரல் - பவுலோ பிரையரின் விடுதலைக் கல்வி       சிந்தனைகள்        - மக்கள் கண்காணிப்பக வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக