செவ்வாய், மார்ச் 01, 2011

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

- மு. சிவகுருநாதன்

(‘அம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்’ என்ற அ. மார்க்ஸ்-இன் குறுநூல் குறித்த பார்வை)


          தமிழகத்தில் தந்தை பெரியாருக்குக் கிடைக்காத நல்வாய்ப்பாய் அண்ணல் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் 37 தொகுதிகளாக பல்லாயிரம் பக்கங்கள் மலிவு விலையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் தனஞ்செய கீரின் நூல் மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  அவர் சவார்க்கர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பதால் அதிலுள்ள போதாமைகளை இட்டு நிரப்ப தற்போது தமிழில் வழி நூல் இல்லை.

            சி.பி. கேர்மோட் என்பவர் அம்பேத்கர் வாழ்க்கையை மிக விரிவாக 14 தொகுதிகளில் வெளியிட்டுள்ளார்.   அவை இனிமேல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழுக்கு வரவேண்டும்.  கெய்ல் ஓம்வேத், கிறிஸ்டோப் ஜேப்ரிலோ போன்ற அம்பேத்கரிய ஆய்வாளர்கள் எழுதியுள்ள நூற்கள் மற்றும் வேறு சில கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு அ. மார்க்ஸ் தனது வழக்கமான மொழியில் ‘தீராநதி’ இதழில் எழுதிய 3 கட்டுரைகளின் தொகுப்பாக இக்குறுநூல் அமைந்துள்ளது.

             அம்பேத்கர் வாழ்வினூடாக, “கட்டமைக்கப்படும் சில அரசியல் சொல்லாடல்கள் ரொம்பவும் இறுக்கமாகவும் தட்டையாகவும் போய்விடக் கூடிய வாய்ப்புண்டு.  வரலாறு குறித்த தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்கு இத்தகைய தட்டைப் பார்வை வழிவகுக்கும்.  இந்தப் புரிதலின் அடிப்படையிலான இன்றை நமது வழிமுறைகளிலுங்கூட சில தவறுகளுக்கு அது இட்டுச் செல்லக்கூடும்.” என்று சொல்லும் அ. மார்க்ஸ் இங்கு காந்திக்கும் அம்பேத்கருக்குமிடையே கட்டமைக்கப்பட்டுள்ள பகைமுரண் இன்று வரை தொடர வாய்ப்பில்லை என்கிறார்.

            மேலவளவு முருகேசன் வீடு நினைவிடம், தலித் குடியிருப்புகள் உள்ள பகுதி காந்தி நகர் என்று அழைக்கப்பட்டு தற்போது வழக்கறிஞர் பொ. இரத்தினத்தால் அம்பேத்கர் நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைச் சுட்டுவதுடன், அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்தில் காந்தியின் படம் இடம் பெற்றதையும் குற்றால அருவிகளில் தலித்கள் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதால் காந்தியும் குளிக்காமல் சென்று விட்ட நிகழ்வையும் குறிப்பிடுகிறார் அ. மார்க்ஸ்.
            மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஒட்டி அமைக்கப்பட்ட சவுத்பாரோ ஆணையத்தில் தலித்களின் பிரதிநிதியாக தன்னை அழைக்கவில்லையென்றாலும் தாமாகவே கலந்து கொண்ட அம்பேத்கர் தனி வாக்காளர் தொகுதி என்ற கருத்தை முன் வைக்கிறார்.    காந்தி சிறையில் நடத்திய  உண்ணாநோன்பு, பின்னர் ஏற்பட்ட புனா ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் தனி வாக்காளர் தொகுதியை காந்தி முறியடித்தார்.   காந்தி ஜனநாயகப் பெரும்பான்மையை இந்துப் பெரும்பான்மையாக கருதியதன் விளைவுதான், இன்றளவும் வகுப்புக்கலவரங்களில் தலித்துகளையும் பழங்குடியினரையும் இந்துக்களாக உணர வைத்து முஸ்லீம்களுக்கு எதிராக நிறுத்தும் பணியை இந்துத்துவ அமைப்புகளுக்கு எளிதாக்கியதை அ. மார்க்ஸ் விளக்குகிறார்.

             காந்தி வருணாஸ்ரமத்தையும் இந்துத்துவத்தையும் சரிவர புரிந்து கொள்ளத் தவறினார்.  அவர் தன் வாழ்நாளில் கட்டிக் காக்க நினைத்த இந்து மதமே அவரைப் பழிவாங்கியது என்பதையும் இதன் பின்னால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

            1918 வாக்கில் மதமாற்றமென்பது அம்பேத்கரின் கொள்கையாக இருந்திருக்கவில்லை.  1920களில் அம்பேத்கர் “பஹிஷ்கரிக் ஹிதகரிணி சபா” (ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கம்) தொடங்கியபோது அவரிடம் ‘சமஸ்கிருதமயமாதல்’ எண்ணங்கள் குடி கொண்டிருந்ததையும் இந்து மதம் தீண்டாமை முதலிய கொடுமைகளை உதறி எறிந்து, இந்து மதம் தன்னை தூய்மை செய்து கொள்ள வேண்டும்.  இந்து மதம் தானாக அதைச் செய்யாது.  எனவே தலித்கள் அதை நோக்கிப் போராட வேண்டும் என்ற வகையில் சமகால சீர்திருத்தவாதிகளிடமிருந்து அம்பேத்கர் வேறுபட்ட நின்ற புள்ளிகளையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

            1935 வாக்கில் தலித்துகளுக்கு தனி வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கை வீழ்த்தப்பட்டதன் பின்னணியில்தான் அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு வெளியேறுதல் என்ற முடிவை எடுக்கிறார்.  அப்போதும் கூட பவுத்தம் அவரது தெரிவாக இருக்கவில்லை.   இஸ்லாம், கிருஸ்தவம், சீக்கியம் ஆகியனவே அம்பேத்கரின் விருப்பத்தேர்வாக இருந்தது.  சாதியத்திற்குப் பலியாகியிருந்த சீக்கியமும் கிருஸ்தவமும் தலித்களை ஏற்க அஞ்சிய நிலையில் இஸ்லாம் மட்டுமே அம்பேத்கரை வரவேற்றது என்ற உண்மைச் சொல்லும் அ. மார்க்ஸ், ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் அல்லது கிருஸ்தவத்திற்கு மாறினால் அவர்கள் தேசியத்தன்மையை இழப்பர் என்றும் குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு மாறினால் முஸ்லீம்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி முஸ்லீம் ஆதிக்க ஆபத்து உண்மையாகிவிடும் என்று அம்பேத்கர் திறந்த மடலில் குறிப்பிட்டதையும் நினைவு கூர்கிறார்.

            இறுதியாக அம்பேத்கர் ஆழ்ந்த முன் யோசனைகள் மற்றும் நடைமுறையில் கண்ட உண்மைகள் வாயிலாகவே அவர் பவுத்தத்திற்கு செல்கிற முடிவை எடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.

            இந்து மதத்தில் இருந்து கொண்டு உரிமைகளுக்கான போரடிப் பின்னர் வெளியேறுதல் என்ற நிலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்திலிருந்து சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட்ட நிலை, மீண்டும் பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் பங்கேற்று தோல்வியுற்ற நிலை, அரசியல் சட்ட அவையில் தனித்துவமான பங்களிப்பு செய்தல்,  நேரு அமைச்சரவையிலிருந்து விலகி ‘பட்டியல் சாதி’ என்ற குறுகிய அடையாளத்திலிருந்து குடியரசுக் கட்சி என்ற விரிவான அடையாளத்தை நோக்கி நகர்தல் என அம்பேத்கர் வாழ்வில் கவனம் குவிக்க வேண்டிய சில அம்சங்களாக அ. மார்க்ஸ் கவனப்படுத்துகிறார்.

            அம்பேத்கர் - ரமாபாய் திருமணம், தொடர்ந்து பிறந்த 4 குழந்தைகள், அக்குழந்தைகளின் திடீர் மரணங்கள், அதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட அம்பேத்கர், ஃபானியுடனான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, இறுதிக் காலத்தில் டாக்டர் சாரதா கபீருடன்  ஏற்பட்ட பழக்கம், அவரைத் திருமணம் செய்து கொண்டது போன்ற அம்பேத்கர் வாழ்வு நிகழ்வுகளை அக்காலச் சூழல் மற்றும் அம்பேத்கரின் எழுத்துக்களுடன் இணைத்து தெளிவாக விளக்குகிறார்.  இவற்றை ஜெயமோகன் அருண்ஷோரி துணையுடன் முன் வைக்கும் அவதூறுகளுடன் இணைத்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

             அரசியல் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமையேற்ற அம்பேத்கர் கல்வி போன்றவற்றை அடிப்படை உரிமையாக்கப் போரடி முடியாத காரணத்தால் வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்தார்.  அடிப்படை உரிமைகளுக்கு உள்ள சட்ட அங்கீகாரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இல்லை.  எனவேதான் சாதித் தொழில்கள், மதுவிலக்கு, பசுப் பராமரிப்பு, எல்லா மதத்தினருக்கு பொது சிவில் சட்டம் போன்ற கோரிக்கைகள் வழிகாட்டும் நெறிமுறைகளில் கொண்டு போய் முடக்க அம்பேத்கர் காரணமாக இருந்ததை அ. மா. குறிப்பிடுகிறார்.

             நடைமுறையில் கிராமங்கள் என்பவை சாதி இந்துக்களின் ஆதிக்கத்திலுள்ளவை என்பதால் காந்தியின் கிராம ராஜ்யம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலனையும் தராது என்றுணர்ந்த அம்பேத்கர், இதை அரசியல் சட்டத்தின் முதல் பிரிவாக்க மறுத்து 31-ம் பிரிவாக ஏற்றுக் கொண்டதன் பின்னணியைப் புலப்படுத்துகிறார்.

             ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சேவை மதமாற்றம் தொடர்பான பிரச்சினையில் அம்பேத்கர் சந்திக்கிறார்.  இதன் மூலம் மதமாற்ற முடிவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம். அக்கால சமூக,அரசியல் சூழலைக்கொண்டே இப்பிரச்சினையை அணுகவேண்டியுள்ளது. அம்பேத்கருக்கு மார்க்சியம், இஸ்லாம் பற்றிய விமர்சனப் பார்வை கூட உண்டு.

            தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைதல், சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தல் போன்றவற்றை சந்தர்ப்பவாதமாக பார்க்க வாய்ப்பில்லை.   தலித்கள், முஸ்லீம்கள் போன்றோர் தேர்தல் முறையில் பங்கு பெறும்போது தமது சுயத்தைக் காப்பாற்றுவதோடு, தனது ஆதரவுத் தொகுதியை விரிவாக்க வேண்டிய நெருக்கடிக்கும் உள்ளாக நேரிடுகிறது என்பதையும் இது அம்பேத்கருக்கு மட்டுமல்ல இன்றைய தலித் தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதையும் இறுதியாக தெளிவுபடுத்துகிறார். 

                        முன்பு அ.மா. பெரியாரை பின் நவீனத்துவப் பார்வையில் அணுகி
பெரியார்? என்ற குறுநூல் மூலம் பெரியார் ஆய்வில் புது அணுகுமுறையை இணைத்தார்.   அந்த வகையில் இந்நூலும் அம்பேத்கர் பற்றியும் அவரை அணுக வேண்டிய முறை பற்றிய நாம் அறியாத பல புதிய கோணங்களையும் வெளிகளையும் திறந்து விடுகிறார். 


அம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் 
- அ. மார்க்ஸ்

பக். 48, விலை ரூ. 25.

 வெளியீடு:

            புலம்,
            332 / 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
            திருவல்லிக்கேணி,
            சென்னை - 600 005.
            செல் : 9840603499,
            மின்னஞ்சல் : pulam2008@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக