புதன், டிசம்பர் 02, 2015

10. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை



10.  50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில்   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை 

      (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                               மு.சிவகுருநாதன்


             சுயசரிதை  1964 இல் ஆங்கிலத்தில் வெளியானது. 50 ஆண்டுகள் கழித்து அதன் தமிழாக்கம் 2014 இல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் அதன் உரிமை பெற்றவர்கள் ஏன் முடக்கி வைத்தனர் என்று தெரியவில்லை. இப்போதாவது வெளியிடத் தோன்றியதற்கு நன்றி சொல்வோம். சுதந்திரப் போராட்ட வீரர் கே.சந்தானம் அவர்களின் பேத்தி எஸ்.ராஜலட்சுமி             டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 
  
    இந்நூலில் 32 தலைப்புக்களில் கட்டுரைகளும் பிற்சேர்க்கையாக மூன்று சட்டமன்ற உரைகள் (மசோதா அறிமுக உரை) உள்ளன. குழந்தைத் திருமண ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தைகளுக்கான மருத்துவமனை ஆகியவை தொடர்பானவை இவை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கல்வியின் மூலமே பெண்விடுதலை சாத்தியமாகும் என்பதை முன்னுரையில் உணர்த்துகிறார். 

  அக்காலங்களில் வசதி படைத்த வீட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில்லை. இவர்கள் பாலூட்டுவதற்கு செவிலியர்களை நியமித்திருந்தனர். இத்தவறான பழக்கத்தால் குழந்தைகள் வயற்றுப்போக்கால் அவதிப்படுவார்கள். தானும் தங்கையும் இவ்வாறு அவதிப்பட்டதை முத்துலட்சுமி வெளிப்படுத்துகிறார். ஓரே ஆண்குழந்தையாதலால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு, படிப்பில் உரிய கவனமின்றி இருந்து, உயர்கல்வி கற்கும்போது, பொறுப்புண்டாகி சென்னை உயர்நீதி மன்ற வழக்குறிஞராகவும் ஹரிஜனங்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட சமூக சேவகனாகவும் மாறிய தனது தம்பி சி.என்.ராமையா பற்றி நினைவு கூர்கிறார். தங்கை நல்லமுத்துவும் இவரைப்போலவே சென்னையிலும் லண்டனிலும் மேற்படிப்புகள் படித்து  ராணி மேரி கல்லூரியில் பேராசிரியை ஆனார். பிற்காலத்தில் அக்கல்லூரியின் முதல்வராக நியமிக்க முதல் பெண் இவர்தான் என்பது புதிய செய்தி. மற்றொரு சகோதரி படிப்பில் அதிக ஆர்வம் காட்டாது இசை, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றை வீட்டிலிருந்து கற்றதையும் நினைவு படுத்துகிறார். 

  பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாத அக்கால கட்டத்தில் பள்ளிக்குச் சென்றது, தனது திறமையால ஆங்கில கற்றுக்கொண்டது, போட்டித்தேர்வில் வெற்றி பெற்றது போன்ற நிகழ்வுகள் இயல்பாக விவரிக்கப்படுகின்றன. புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்த அப்பா, திவானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றதும் அம்மா படிப்பை நிறுத்திய நிலையும் ஆசிரியர் பாலையா வற்புறுத்தலின்பேரில் 13 வயது வரை படிக்க அனுமதி கிடைத்ததும் இவரது இளமைக்கால போராட்டங்களாக நூலில் இடம் பெறுகிறது. 

   1902 இல் 100 பேர் பங்கு பெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 பேரில் ஒருவராக இருந்து, புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரியில் போராடிச் சேர்ந்து இன்டர்மீடியட் தேர்வில் வென்றது, பையன்களின் குறும்புத்தனங்களையும் தாண்டி திரை போட்டு மூடிய வண்டியில் சென்று படித்தது, உடல்நிலை பாதிப்புகள், தெருமுனை இளைஞர்களின் அவதூறுகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் செய்த உதவிகள் அனைத்தையும் வரிசைக்கிரமாக எழுதிச் செல்கிறார். பிற்காலத்தில் தேவதாசி ஒழிப்பு, குழந்தை திருமண ஒழிப்பு போன்ற சமூகப்பணிக்காக மல்லுக்கட்ட வேண்டியிருந்த புகழ் வாய்ந்த பேச்சாளரும் அரசியல்வாதியுமான திரு. சத்தியமூர்த்தி தனது வகுப்பு மாணவர்களில் ஒருவர் என்பதையும் பெருந்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்.
  
  தேவதாசி ஒழிப்பு, குழந்தை திருமண ஒழிப்பு ஆகியவற்றுக்காக ராஜாஜி, எஸ்.சத்தியமூர்த்தி போன்றோருடன் கடுமையான வாக்குவாதம் செய்யவேண்டிய சூழலை மிகவும் எளிமையாகவும் கண்ணியமான சொற்களாலும் கடந்து போவது நமக்கு வியப்பளிக்கிறது. தேவதாசிகள் முறை தடைச் சட்டம் (1929 ஆம் ஆண்டு சென்னை மாகாணச் சட்டம் V) ராஜாஜியால் 1937 இல் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து எழுதும் முத்துலட்சுமி, “பெண்களைக் கோவில்களுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் மசோதா ஜனங்களின் முழு ஆதரவுடன் சட்டமன்றத்துக்குத் திரும்பிவந்தாலும், காந்திஜி வேண்டிக்கொண்டாலும், திரு. ராஜகோபாலாச்சாரியார் இந்தத் தீய வழக்கத்தை நிறுத்துவதற்கு ஆதரவு காட்டாததால் இதைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்துவதைத் தாமதித்தார். 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் மந்திரி சபை ராஜினாமா செய்தது. ஆகவே இந்த மசோதாவின் இறுதி முடிவு தள்ளிவைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் மந்திரி சபையால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு திரு. ராஜகோபாலாச்சாரியார் நம் சமூகத்தில் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர் என்பது நிருபிக்கப்பட்டது.” (பக். 103, 104) என்று எழுதுவது குறிப்பிடத்தக்கது. 

   1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் எடுத்த முடிவின்படி, தேர்தலில் நிற்க திரு. சி.ராஜகோபாலாச்சாரியும் திரு.சத்தியமூர்த்தியும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லும் இவர் காந்திஜி மீதுள்ள பெருமதிப்பினால் நீதிக்கட்சியின் அழைப்பை ஏற்கவில்லை என்றும் சொல்கிறார். அதன்பிறகு முதல்வரான ராஜாஜி கொடுத்த வாக்குறுதியை மீறியதோடு, மாகாண சட்டசபையில் தனக்கு இடமளிக்க மறுத்ததை பதிவு செய்கிறார். 

   தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேற எஸ்.சத்தியமூர்த்தியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து இந்நூலில் பதிவுகள் இல்லை. இதுபற்றி பேசவும் இதன்மூலம் எஸ்.சத்தியமூர்த்திக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பாதது கூட காரணமாக இருக்கலாம்.

   ஆனால் ராஜாஜி குறித்த அவரது பதிவை மட்டும் பார்ப்போம். “ராஜாஜி ஒரு பெரிய அரசியல்வாதி. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக நிறைய தியாகம் செய்திருந்தாலும், என்னுடைய கருத்தின்படி அவர் சமூக சீர்திருத்தங்களைப் பொருத்தவரை, முக்கியமாகப் பெண்களின் விடுதலையைப் பொருத்தவரை, ஒரு பழமைவாதி. அவர் பழங்கால பழக்கவழக்கங்களில் நம்பிக்கைக் கொண்டவர். மாற்றத்தை விரும்பாதவர். இந்த மனோபாவம் நிச்சயமாகச் சமூகத்தின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும் என்று நான் நினைத்தேன்.” (பக். 145)

   13 வயதில் படிப்பில் மட்டும் நாட்டம் ஏற்பட்டு திருமண யோசனையை நிராகரித்து, படிப்பில் மட்டும் முனைப்பாக இருந்து, புடவைகள், நகைகள் மீது விருப்பமின்றி இருந்ததும், டாக்டர் நஞ்சுண்ட ராவின் இளைய பெண்ணின் நகைகளையும் புடவைகளையும் அணிந்து கொண்டு, “நான் எப்படி இருக்கிறேன்,” என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு வினவியதையும் குறிப்பிட்டு, அக்காலத்தில் திருமதி நாயுடு இளமையாகவும் அழகாகவும் இருந்ததாக சுவைபடக் கூறுகிறார். 

  டைபாய்டு – நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அம்மா, சென்னையில் தங்கி மருத்துவப் படிப்பு, டாக்டர் நஞ்சுண்ட ராவின் உதவி, அவரது இல்லத்தில் தங்கியது என விலாவாரியான வாழ்க்கை நிகழ்வுகள் பட்டியலிடப்படுகின்றன.

  டாக்டர் நஞ்சுண்ட ராவ் தனது இல்லத்திற்கு வந்து அப்பாவுடன் திலகர், கோகலே போன்றவர்கள் பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிப்பதையும் அவர் தொடர்ந்து தன்னை மருத்துவத்தைக் கைவிட்டு பத்தரிக்கையாளராக வரவேண்டும் என்று வலியுறுத்தியதையும் குறிப்பிடுகிறார். அவரது வீட்டில் நடந்த கூட்டங்களில் ஓர் முறை மகாகவி பாரதியை சந்தித்ததையும் அவர் ‘இந்தியா’ பத்திரிக்கைக்கு எழுத அழைப்பு விடுத்ததையும் கூறுகிறார். மருத்துவராகி அதன்மூலம் நாட்டுக்கும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கும் உழைப்பதென இவரது ஆழ்மனம் முடிவு செய்துவிட்டாதால், இவரால் வேறு எதையும் ஏற்க இயலவில்லை என்பது புலனாகிறது. 

   அக்காலத்தில்  M.B. & C.M. என்ற 5 ஆண்டுகள் கடினமான படிப்பும், எளிய  L.M. & S என்ற படிப்பும் இருந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் எளிமையான L.M. & S படிப்பைப் படிக்க முத்துலட்சுமியை வலியுறுத்த, தந்தை “இவள் நல்ல உழைப்பாளி, புத்திசாலி, வெற்றிகரமாக படிப்பை முடிப்பாள். அப்படி முடிக்காவிட்டால் இரண்டாம் ஆண்டில் L.M. & S இல் சேர்க்கலாம்”, என்று உத்திரவாதமளிக்க M.B. & C.M. படிப்பில் சேருகிறார். L.M. & S படிப்பை 1938 இல் டாக்டர் பி.ட்டி.ராஜன் அமைச்சரவை ரத்து செய்கிறது. இதே படிப்பைப் படித்த டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் அக்காலத்தில் சிறந்த மகப்பேறு மருத்துவராக அறியப்பட்டவர். 

  முத்துலட்சுமியுடன் மருத்துவம் பயின்ற பிரஞ்சுப் பெண் மற்றும் ஜே.சி.குமரப்பாவின் சகோதரி மகள் ஆகியோர் பாதியில் நின்றுவிட இவர் மட்டுமே M.B. & C.M. படிப்பை 5 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். 

   1913 இல் டாக்டர் சுந்தர் ரெட்டியுடன், “ அவர் எப்போதும் என்னைச் சமமாக நினைப்பதோடு, எனது விருப்பங்களில் குறுக்கிடக் கூடாது.” என்கிற நிபந்தனையின் அடிப்படையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார். இவர் பிற்காலத்தில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் சென்னை மாகாண முதல்வராக இருந்த திவான்பக்தூர் சுப்பராயலு ரெட்டியின் மருமகனாவார். 

  சென்னை மற்றும் புதுக்கோட்டையில் இவர்களது மருத்துவப் பணி தொடர்கிறது. இவர்களிருவரும் மருத்துவர்களாக இருந்தபோதிலும் உதவியாளர்களின் குளறுபடியால் 1914 முதல் பிரசவத்தில் பல்வேறு சிக்கல்கள் உண்டானதும் டாக்டர் ஏ.எல். முதலியார் செய்த உதவியும் விலாவாரியாக சொல்லப்படுகிறது. 1919 இரண்டாவது பிரசவத்திற்கு டாக்டர் ஏ.எல். முதலியாரை வீட்டிலேயே தங்க வைத்திருந்தும் மருத்துவ உதவியாளர் ‘லைசால்’ திரவத்தைக் கொண்டு குழந்தையின் கண்களை கழுவியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்ட கதை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

   இவரது 24 வயது தங்கைக்கு ஏற்பட்ட மலக்குழாய் கட்டியை (புற்றுநோய்) நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ரத்தப்போக்கைத் தடுக்க பயன்படுத்திய துணி ஒன்றை அகற்றாமல் விட்டதால் உண்டான பாதிப்பு, அவரது மரணம்  போன்றவை புற்றுநோய்க்கு நிரந்தரத் தீர்வுக்காக பாடுபட அவருக்கு உந்துதல் தந்தது.  

  1925 இல் சென்னை மாகாண நீதிக்கட்சி அரசில் சுகாதார அமைச்சராக இருந்த பனகல் அரசரின் பரிந்துரையின்படி மேற்படிப்பிற்க இங்கிலாந்து பயணமாகிறார். கூடவே தனது மகன்கள் ராம்மோகன் (11), கிருஷ்ணமூர்த்தி (6), சகோதரி மகள் (18) ஆகியோரை அழைத்துச் சென்றார். பின்னாளில் மூத்தமகன் ராம்மோகன் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். இளைய மகன் கிருஷ்ணமூர்த்தி மருத்துவரானார். 

  1926 இல் பாரிஸில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் மாநாட்டில் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகப் பங்கெடுத்தார். அங்கு பேசும்போது, “இராஜபுத்திர பத்மினி, தக்காண சாந்த் பீவி, மால்வா அகல்யாதேவி போன்றோருடைய ஆட்சியில் குடிமக்களுக்கு நன்மைகள் ஏற்பட்டன. கணவன் தசரதனுடன் இணைந்து போர் புரிந்த கைகேயி, தமிழ்ப்புலவர் அவ்வை, தங்களது கணவர்களைத் தாங்களே தேர்வு செய்த இராமாயண, மகாபாரதப் பெண்கள் என ஓர் சித்திரத்தை வரைகிறார். இது விவாதத்திற்குரியது. 

  குழந்தைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சுகாதாரம், பால்வினை நோய்கள், இவற்றிற்கான சமூகக்கேடுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு ‘இலவச கட்டாயத் தொடக்கக்கல்வி’யைத் தீர்வாக முன்வைக்கிறார். நாடு திரும்பியதும் 1926 இல் உலகத்திலேயே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பதவியே இரண்டாம் நாளே சபையை நடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அரசியலுக்காக மருத்துவப்பணியையும் ஆராய்ச்சியையும் விடமுடியாது என்றார். 

  1927 இல் அன்றைய காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்கார் இல்லத்தில் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பெண்களுக்கு என்ன செவை செய்யப்போகிறீர்கள்? என்று காந்தி கேட்க, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவைக் காட்டி அவரது ஆசியை வேண்டியதாகவும், மசோதாவின் விவரங்களை அறியாவிட்டாலும் அதன் மைய நோக்கத்துடன் ஒத்துப்போவதாக காந்தி குறிப்பிட்டதாக பதிவு செய்கிறார். காந்தி ஓர் வலுவான பெண்ணியவாதி (பக்.137) என்று காந்தி குறித்த தனது மதிப்பீட்டைப் பதிவு செய்கிறார். 

   தேவதாசி முறை பற்றிச் சொல்லும்போது, “நாம் நமது சகோதரிகளை கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரையும் வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம்.” என்கிறார். இவரது இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 

   சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் குறித்த எவ்விதப் பதிவும் இந்த சுயசரிதையில் இல்லை. சத்தியமூர்த்தியைப் பற்றிகூட இரண்டு இடங்களில் குறிப்பிடும்போது, தேவதாசி முறை ஒழிப்பிற்கும், 1929 இல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தேவதாசிகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சுயமரியாதை இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதைப் பின்பற்றி குத்தூசி குருசாமி குஞ்சிதபாதம் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டது போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து இப்போராட்டத்தை முன்னெடுத்தவர் மவுனம் சாதிக்க முடியுமா என்பது வியப்பிற்குரியது.  

   முத்துலட்சுமி மருத்துவராக இருந்த  காரணத்தாலும், தனது குழந்தைகள் பிரசவத்தின்போது பட்ட துன்பங்களாலும் குழந்தைத் திருமணத்தின் இன்னல்கள், குழந்தைகள் மருத்துவமனையின் அவசியம் ஆகியவற்றின் தேவையை நன்கு உணர்ந்திருந்தார். 10-15 வயது குழந்தைத் தாய்களுக்கு ஏற்படும் இன்னல்களை அவர் பட்டியலிடும்போது நம் கண்கள் கலங்காதிருக்காது. 10, 12 வயதுப் பெண்கள் திருமணமாகமல் இருக்க விடுவதில்லை. மணமான பெண்களில் சுமார் பாதிப்பேர் விதவைகள் என்கிற புள்ளிவிவரம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். 

    குழந்தைப் பருவ திருமணம், அதன் நிறைவாக உடலுறவு ஆகியவற்றைத் தடுத்து குழந்தைகளைக் காப்பாற்றி, அவர்களது வாழ்க்கையைப் பாதுகாக்க, ராவ் சாஹிப் ஹரிலால் சாரதா கொண்டுவந்த மசோதா (சாரதா சட்டம்) நிறைவேற பாடுபட்டார்.  ஆண் சிறுவர்களுக்கும் திருமணத்தால் ஏற்படும் இன்னல்களை இவர் பட்டியலிடுகிறார். படிக்கும் பருவத்தில் குடும்பச்சுமையை ஏற்கவேண்டியுள்ளது, மகிழ்ச்சியான இளமைப்பருவம் குலைகிறது என்றும் எழுதுகிறார். 

  புற்றுநோய் மருத்துவமனை அமைக்க இவர் எடுத்த கடுமையான முயற்சியை நாடறியும். கர்ப்பப்பை புற்றுநோய் பற்றிச் சொல்லும்போது, “பெண்களுக்கு சாதாரணமாக அந்த இடத்தில்தான் புற்றுநோய் வரும் என்பது இந்தியாவின் மருத்துவத்துறை இன்றுவரை புரிந்துகொள்ளாதது.” என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

  இந்திய மாதர் சங்கம், சாரதா இல்லம், பெண்கள் பணி இல்லம் (இன்று சென்னை சேவாசதன்), வயது முதிர்ச்சியடையாத பெண்களுக்கான இந்தியப் பெண்கள் சமாஜம், டாக்டர் வரதப்ப நாயுடு இல்லம், அவ்வை இல்லம், முஸ்லீம் பெண்கள் சங்கம் ஆகியவற்றின் மூலம் எனப் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உழைப்பை அறுவடை செய்பவர்கள் யாருக்காக பணிசெய்கிறார்கள் என்பதும் அவர்களுடைய சமூகப்பார்வையும் விமர்சனத்திற்குரியதாக இன்று உள்ளது. இது நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பலன்களைக் அறுவடை செய்வோருக்கும் பொருந்தக்கூடியது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இடம்பெற்றிருந்தபோதிலும் தமிழக அரசின் நிபுணர் குழுவில் இடம் பெற்ற டாக்டர் சாந்தா அணு உலைக்கு ஆதரவாக நின்று கதிரியக்கப் பாதிப்பே அணு உலைகளில் இல்லை என நற்சான்று அளித்தது வேதனைக்குரிய ஒன்று. 

  மொழியாக்கத்தில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம். மந்திரி போன்ற பழங்சொற்கள் பலவற்றைத் தவிர்த்து அவற்றிற்கு மாற்றாக புதிய பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். Anatomy என்பது உடற்கூறியல் என்ற சொல்லாக்கம் வந்துவிட்ட பிறகு உடல் உறுப்புத்துறை என்று சொல்வது நன்றாக இல்லை. இதைப்போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். 


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை 

தமிழில்: எஸ்.ராஜலட்சுமி

பக்கம்:   204
விலை: ரூ.  150
முதல் பதிப்பு: ஜூலை 2014 

வெளியீடு:

அவ்வை இல்லம்,
ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை

(இந்நூலை ஜனவரி 2015 சென்னைப் புத்தகக் காட்சியில் ‘க்ரியா’ அரங்கில் வாங்கினேன். விற்பனை உரிமை, நூல் கிடைக்குமிடம் குறித்த தகவல்கள் நூலில் இல்லை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக