வியாழன், டிசம்பர் 03, 2015

11. பெண் கல்விக்கான போராட்டம்



11. பெண் கல்விக்கான போராட்டம் 

       (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                            மு.சிவகுருநாதன்




     (பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள. ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுதிய ‘மலாலா: கரும்பலகை யுத்தம்’
என்னும் குறுநூல் அறிமுகப் பதிவு.) 

     ‘ஆயிஷா’ இரா.நடராசனின் இந்தக் குறுநூலான ‘மலாலா: கரும்பலகை யுத்தம்’ அனைவருக்கும் குறிப்பாக மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக மலாலாவிற்கு கடிதம் எழுதும் பாணியில் அமைந்த ஒன்பது கட்டுரைகள் அல்லது கடிதங்கள் இருக்கின்றன. இந்நூலுக்கு எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா  அழகான முன்னுரை ஒன்றைத் தந்திருக்கிறார். 

     இக்கட்டுரைகளின் வழியாக இந்தியா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் பழங்கால வரலாறு, பிரிட்டன் ஏகாதிபத்தியம், விடுதலைப் போராட்டம், இந்திய – பாகிஸ்தான் உருவாக்கம், ஆப்கனில் சோவியத் உதவி, ஒசாமாவை அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உருவாக்குதல், ஆப்கன் – பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத குழுக்கள், ஆயுத வணிகம், மூன்றாம் உலக நாடுகளின் கல்வி, தற்போதிய கல்வி முறை, கல்வி மறுக்கப்படும் ஏழைகள் – பெண்கள் என பல்வேறு செய்திகள் பேசப்படுகின்றன. 

    நிறைய வரலாற்றுத் தகவல்கள். செய்திகள் கடிதங்களில் இரைந்து கிடக்கின்றன. இவற்றை சரியான நேரத்தில், இடத்தில் இணைக்கும் வேலையை ஆசிரியர் கச்சிதமாக செய்திருக்கிறார். குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் விதமாக இருப்பது இதன் சிறப்பு.

   இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு தேசத்தந்தைகளான காந்தி மற்றும் ஜின்னா கனவு கண்டதைப்போலவே இரு நாடுகளும் இன்று இல்லை என்பதை மிக எளிமையாகவும் கவித்துவமாகவும் பதிவு செய்கிறார். (பக்.17,18)

   ஜின்னாவும் நேருவும் சோசலிசத்தை வலியுறுத்திய நவீன இலகின் சிற்பிகள். கிராம ராஜ்யம் பேசிய காந்தியிடம் இவர்களிருவரும் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியவர்கள். காந்தியை மதவெறி கொன்றது. நேருவில் சோசலிசம் இன்று கேள்விக்குரியதாகிவிட்டது. ஜின்னாவின் கனவுகள் பாகிஸ்தானிலும் காந்தி, நேருவின் கனவுகள் இந்தியாவிலும் புதைக்கப்பட்டன. 

  “பெண்களும் சரிசமமாக ஆண்களோடு தோள் கொடுத்து ஈடுபடாத எந்தப் போராட்டமும் வெற்றி அடையமுடியாது.” என்ற ஜின்னாவின் கருத்து எவ்வளவு பொருத்தமானது. (பக்.21) 

  இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் வளர்ந்த நாடுகளும் தனது ராணுவ செல்வீனத்தில் ஒரு விழுக்காட்டைக்கூட கல்விக்கு செலவிட மறுக்கின்றன. 

  சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தொடர்ந்து மாறிமாறி ஆப்கானிஸ்தானை ஆயுதபாணியாக மாற்றின. அதன் தொடர்ச்சிதான் தாலிபான்களும் ஒசாமா பின் லேடனும். சோவியத் ஒன்றியத்திடமிருந்து சில பலன்களை ஆப்கன் பெற்றிருப்பினும் அதை ஆக்ரமிப்பு என்று சொல்லாமல் மென்மையாக அணுகமுடியாது. அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் நலன்களுக்கான ஆப்கானியர்கள் பகடையாக்கப்பட்டனர் என்பதே உண்மை. 

  “எளிமையான வாழ்வு, பெண்களைச் சமமாக மதித்தல், உழைத்து உண்ணுதல், எதிரிகள் அனைவருக்கும் சமநீதி, ஏற்றத்தாழ்வுகளைத் தூக்கி எறிதல், கொண்ட கொள்கையில் உறுதி, தான் கூறிய அனைத்தையும் முதலில் தாம் கடைபிடித்துக் காட்டியது, எதிரிகளாய் இருப்பினும் மன்னித்தல், பிற சமுதாய மக்களிடம் நல்லிணக்கம், தமக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த சொத்தையும் சேர்க்காதிருத்தல், இறக்கும் தறுவாயில் தன்னிடம் இருந்ததையும் அரசுக் கருவூலத்தில் பொது ஜன மேம்பாட்டிற்காக சேர்த்தல், குழந்தைகளிடம் அன்பும் கருணையும் காட்டுதல், எந்த அரசின் (அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும்) நிதியையும் தனது குடும்பம் எந்தக் காலத்திலும் பெறக்கூடாது என கண்டிப்பாகக் கட்டளையிட்டது….. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்பண்புகளைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். (பக். 50,51)

  இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்த சிரில் ரெட்கிளிஃப் எல்லைக்கோடு, பஞ்சாப், ஆப்கன், காஷ்மீர், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய பெயர்களை இணைத்து 1933 இல் சவுத்ரி ரகமத் அலி உண்டாக்கிய பாகிஸ்தான் என்ற பெயர் உருவானது போன்றவை சொல்லப்படுகின்றன. 



  மலாலாவை சுட்டது தாலிபான்கள், ஆனால் அந்தத் துப்பாக்கி அமெரிக்காவுடையது. இதுவே இன்றைய உலகையும் தீவிரவாதத்தையும் புரிந்து கொள்ள உதவும்.

  ‘குல்மாக்காய்’ என்னும் பெயரில் மலாலா யூசுப் சாய் எழுதிய குறிப்புகள் அவரை மட்டுமல்ல, பெண்கல்வி மறுப்பையும் தாலிபான்களின் அடிப்படைவாத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகளுடன் ஒப்பிடப்படும் மலாலாவின் வலைப்பூ (blog) பக்கங்கள் உலகமே வாசித்தது. ஆனால் அதற்கான பின்னணியை இந்த உலகம் விளங்கிக் கொண்டதற்கான எவ்வித தடயமும் இல்லை.

   எகிப்து, துனிஷியா ஆகிய நாடுகளில் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே புரட்சி பரவி ஆட்சிமாற்றத்திற்கான வழி ஏற்பட்டது. அதைப்போலவே மலாலாவின் வலைப்பூவும் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தியது. நம்மூரில் சமூக வலைத்தளங்கள் எவ்விதம் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இக்கணத்தில் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது. முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு உதாரணங்களே தேவையில்லை. 

  நாம் நமது குழந்தைகளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை ஊக்குவிப்பதில்லை. தனிப்பட்டதாக  மட்டுமல்லாது பொதுவான, சமூகம் சார்ந்த பார்வையுடன் யோசிக்க, அதை நாட்குறிப்பாக எழுத அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வாய்ப்பையும் இச்சமூகம் அவர்களுக்கு வழங்கவில்லை.

  மலாலாவின் தாய்மொழியான பாஷ்டூனின் பழமை பற்றிச் சொல்லும்போது, “எங்கள் தமிழ்மொழியைப் போலவே கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி,” என்பதைத் தவிர்த்திருக்கலாம். இங்கு ‘சீரியஸ்’ க்குப் பதிலாக கிண்டல் தொனிக்கிறது. 

  அய்க்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் 187 என்றிருக்கிறது. தெற்கு சூடானையும் சேர்த்து இதுவரையில் 193 நாடுகள் அய்.நா.வில் உறுப்பினராக உள்ளன. தைமூர்கள் (தீமூர்கள்) என்பதுதான் நூலில் ‘திமூரிதர்கள்’ என்றிருக்கிறதா?

மலாலா: கரும்பலகை யுத்தம்

    - ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல்பதிப்பு: பிப். 2015.
பக்க்கம்: 64
விலை:  ரூ. 40

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக