ஞாயிறு, டிசம்பர் 06, 2015

14. அண்ணல் அம்பேத்கரின் சூத்திரர்கள் பற்றிய ஆய்வு நூல்



14. அண்ணல் அம்பேத்கரின் சூத்திரர்கள் பற்றிய ஆய்வு நூல்

 (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

                    மு.சிவகுருநாதன்



(அண்ணல் அம்பேத்கரின் “சூத்திரர்கள் யார்? – அவர்கள் எவ்வாறு இந்தோ – ஆரிய சமுதாயத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்?” என்ற ஆய்வு நூல் பற்றிய குறிப்பு.)

   காந்தி, பெரியார் போன்ற  இந்திய சிந்தனையாளர் யாருக்கும் இல்லாத சிறப்பு அண்ணல் அம்பேத்கருக்கு உண்டு. அம்பேத்கரது ஒட்டுமொத்த எழுத்துகள் இந்திய மொழிகளில் அரசால் மலிவு விலையில் வெளியிடப்படுவதுதான் அது. வெறும் ரூ. 40 க்கு சுமார் 40 தொகுதிகளாக ஆயிரக்கணக்கான பக்கங்கள் அம்பேத்கர் எழுத்துகள் தமிழில் கிடைக்கின்றன. 

   இவற்றில் நாடாளுமன்ற உரைகள், விவாதங்கள் ஆகியவற்றினூடாக பல ஆழமான ஆய்வு நூற்களும் உண்டு. புத்தமும் தம்மமும், சூத்திரர்கள் யார்? ஆகியவை இதில் அடக்கம். புத்தமும் தம்மமும் பொதுவாக அச்சில் கிடைப்பதேயில்லை. அதற்கு அவ்வளவு வரவேற்பிருக்கிறது. அச்சில் வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. 

 “இந்தோ-ஆரியர்களின் சமூக அமைப்பு சதுர்வருண கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சதுர்வருண ஏற்பாடு என்பது சமுதாயத்தைப் பிராமணர்கள் (புரோகிதர்கள்), சத்திரியர்கள் (படைவீரர்கள்), வைசியர்கள் (வணிகர்கள்), சூத்திரர்கள் (குற்றேவலர்கள்) என்று பிரிப்பதைக் குறிக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இதனைக் கொண்டு சூத்திரர்கள் பிரச்சினையின் உண்மையான இயல்பையும், அப்பிரச்சினையின் பரிமாணத்தையும் புரிந்து கொள்வது சாத்தியமல்ல.” என்று விளக்குகிறார் அண்ணல் அம்பேத்கர். (சூத்திரர்கள் யார்?  தொகுதி – 13, முன்னுரை)

   அவருக்கு இருந்த பல்வேறு பணிச்சுமைகளுடன் இந்த ஆய்வு நூலையும் மிகுந்த சிரத்தையுடன் எழுதி முடிக்கிறார். “சூத்திரர்களின் தோற்றம் பற்றி ஆராய்வது வரவேற்கத்தக்கதே என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்த விஷயத்தை கையாள்வதற்கு எனக்குள்ள தகுதி பற்றி சிலர் ஐயப்படக்கூடும். இந்திய அரசியல் பற்றிப் பேசுவதற்கு எனக்கு உரிமை இருந்தபோதிலும், சமயமும் இந்தியாவின் சமய வரலாறும் எனது துறை அல்ல என்று ஏற்கனவே நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.” என்று குறிப்பிடும் அம்பேத்கர், “தேவதைகள் தூங்கச் சென்று விடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது  ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்று இவ்வாய்வில் இறங்கியதாகச் சொல்கிறார். 

  12 இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்நூல் சூத்திரர்கள் குறித்த விரிவான் ஆய்வை மேற்கொள்கிறது. நால் வருணங்களில் சூத்திரர்கள் தவிர்த்த இதர மூன்று வருணங்கள் மட்டுமே இரு பிறப்பாளர்கள் எனப்படுவர். முதல் பிறப்பு தாயிடமிருந்தும், இரண்டாவது பிறப்பு அவர்கள் பூணூல் அணிவதாலும் ஏற்படுகிறது. 

    பிராமணர்கள் சூத்திரர்களுக்கு உபநயனம் செய்துவைக்க மறுத்தனர். உபநயனம் வேத பிராமணர் வேதத்தைப் போதிப்பதைக் குறிப்பதாகும். உபநயனம் செய்யாமலிருப்பது சூத்திரத்தன்மைக்கு ஓர் அறிகுறியாகும், என்று சொல்லும் அம்பேத்கர் மராட்டிய மன்னர் சிவாஜிக்கு பிராமணர்கள் முடிசூட மறுத்தது, பின்னர் முடிசூட்டியது  பற்றியும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறார். 

    அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்டதர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட முறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1.
    சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2.
    சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள்.  அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக்கூடாது.
3.
    மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடாது.
4.
    சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது.  அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம்.  அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
5.
    சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது.  அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
6.
    ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது.  ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக்கொள்ளலாம்.
7.
    சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
8.
    சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.
9.
    மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாகவேண்டும்.
10.
    சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்;  எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81).

        (பக். 80,81 - அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்?  தொகுதி - 13 )
   346 பக்கங்கள் நீளும் இவ்வாய்வு நூலின் இறுதியில் அண்ணல் பின்வரும் முடிவுகளை வந்தடைகிறார்.


  • சூத்திரர்கள் ஆரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஓர் இனத்தினராக இருந்தனர்.
  •   சூத்திரர்கள் இந்தோ – ஆரிய சமுதாயத்தில் சத்திரிய வருணத்தினர் அந்தஸ்தைப் பெற்றிருந்தனர்.
  • பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வருணத்தினரை மட்டும் ஆரிய சமுதாயம் அங்கீகரித்த ஒரு காலம் இருந்தது. அப்போது சூத்திரர்கள் ஒரு தனி வருணமாக இல்லாமல் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தனர்.
  • சூத்திர மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே தொடர்ந்து பகைமையும், சச்சரவும், மோதலும் இருந்து வந்தன. இவற்ரில் பிராமணர்கள் பல கொடுமைகளுக்கும் அவமதிப்புக்கும் ஆளாயினர்.
  • சூத்திரர்களின் அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் அவர்கள்பால் வெறுப்பும் பகைமையும் கொண்ட பிராமணர்கள் சூத்திரர்களுக்கு பூணூல் சடங்கு நடத்தித் தர மறுத்துவிட்டனர். 
  • பூணூல் அணியும் உரிமையை இழந்ததன் காரணமாக சூத்திரர்கள் சமூக ரீதியில் இழிவுபடுத்தப்பட்டனர். வைசியர்களுக்குக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு நான்காவது வருணமாயினர். (பக். 339, 340)

    இந்த ஆய்வு முடிவுகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதை முன்னுரையில் தெளிவாக விளக்கியுள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கும் இம்முடிவுகள் சிலர் நிராகரிக்கக் கூடும் என்பதையும் குறிப்பிட்டு, எனது நூல் நுண்ணறிவுத் திறமும் தொலைநோக்கும் கொண்டதை விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும், என்றும் வலியுறுத்துகிறார்.
   இன்றைய இந்துக்கள் ஐந்து பிரிவாக உள்ளனர். இந்து சமூக அமைப்பில் தவறு இருப்பதையும் அதை சீர்திருத்துவது பற்றி பேசாத கடைந்தெடுத்த வைதீகர்கள் ஒரு பிரிவு. வேதங்களைத் தவிர வேறெதையும் நம்பாத ஆரிய சமாஜிகள் மற்றொரு வகை. இந்து சமூக அமைப்பு தவறானது என ஒத்துகொண்டவர்கள், இத்தகைய பிரச்சினைகளில் அக்கறை காட்டாத சுயராஜ்யமே முக்கியம் என்றெண்ணுபவர்கள், ஐந்தாவதாக பகுத்தறிவுவாதிகள் சுயராஜ்யத்தைவிட சமூக சீர்திருத்தத்தை முதன்மையாக கருதுபவர்கள் இவர்கள், என்று பகுப்பாய்வு செய்து இவர்களின் எதிர்வினை எவ்வாறாக இருக்கும் என்பதை முன்னுரையில் உணர்த்தி விடுகிறார்.
    மிகப்பெரிய ஆய்வு நூலான இது அனைவரும் படிக்கக்கூடிய இலகுவான நடையில் இனிமையாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. மொழிபெயர்ப்பும் நெருடல் இல்லாத வகையில் அமைந்துள்ளது. தமிழில் வெளியாகியுள்ள டி.டி.கோசாம்பியின் நூற்கள் பல மொழிபெயர்ப்புகள் வாசகனை மிரட்டும் விதமாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
    ஜம்புநாதன் மொழிபெயர்ப்பில் நான்கு வேதங்களையும் அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பைவிட கால்டுவெல்லின் மூன்று ரிக் வேதப் பாடல்களின் மொழிபெயர்ப்பு தெளிவாகவும் அழகாகவும் உள்ளதாக ‘பரதகண்ட புராதனம்’ என்ற கால்டுவெல் நூல் முன்னுரையில் ஆய்வாளர் பொ.வேல்சாமி சொல்வதும் இங்கு குறிப்பிட வேண்டியது.

சூத்திரர்கள் யார்?
 – அவர்கள் எவ்வாறு இந்தோ – ஆரிய சமுதாயத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்? 
- தொகுதி 13

 பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழில்: ரா.ரங்கசாமி (மாஜினி), நா,ஜெயராமன்

முதல் பதிப்பு: 1947 (ஆங்கிலம்)
முதல்பதிப்பு: 1999 (தமிழ்)
விலை: ரூ. 40
 பக். : 346 

வெளியீடு:
டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்,
நல அமைச்சகம்,
இந்திய அரசு,
புதுதில்லி.

விற்பனை உரிமை:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.

அச்சாக்கம்:

பாவை பப்ளிகேஷன்ஸ், 
16 ஜானி கான் கான் சாலை,
 ராயப்பேட்டை, 
சென்னை 600014.

பேச: 044-28482441, 28482973
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

(டிசம்பர் 06, 2015 இன்று அண்ணல் பி.ஆர்.அம்பேத்கரின்
59 -வது நினைவு நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக