சனி, டிசம்பர் 12, 2015

18 ஆ. அடக்குமுறைகளும் போராட்ட வடிவங்களும்18 ஆ. அடக்குமுறைகளும் போராட்ட வடிவங்களும் 

 (இரண்டாம் பகுதி)

                 (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                      மு.சிவகுருநாதன்


    நாகப்பட்டினம் தாலுகா என்பது இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர், திருக்குவளை, கீழ் வேளூர் ஆகிய வட்டங்களடங்கியது. நாகை விவசாயத் தொழிலாளர்கள் வீரெழுச்சி என்பது 1962 – 1975 காலகட்டத்தில் நிகழ்ந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்த எழுச்சி பிற வட்டங்களுக்கும் பரவி கீழத்தஞ்சை மாவட்டத்தின் எழுச்சியாக பரிமாணம் அடைந்தது என்று தொடக்கத்தில் ஏஜிகே வரையறை செய்துகொள்கிறார்.

    இந்த எழுச்சிக்குத் தலைமை தாங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தாலுகா கமிட்டி. அதன் தலைமை கூட்டுணர்வு, கூட்டு முடிவு, கூட்டுச் செயல்பாட்டில் தனிநபர் பொறுப்பு, விமர்சனம் – சுய விமர்சனம் போன்ற இயக்கக் கோட்பாடுகளை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கடைபிடித்ததை ஏஜிகே தெளிவுபடுத்துகிறார். (பக். 5)

   ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியிம் மாநிலக் குழுச் செயலாளர் தோழர் மணலி கந்தசாமி, “ஒரு குலைக் காய்களாக நிற்கின்றீர்களே… உருப்படாத பயல்களே…”, நாகை தாலுகா கமிட்டிச் செயலாளர் தோழர் முருகையனிடம் கூறியதை எடுத்துக்காட்டுகிறார். மேலும் தோழர் பி.ராமமூர்த்தி கூட நாகை தாலுகா பகுதி கட்சியானது ‘செக்டேரியன்’ (sectarian) போக்கில் சென்றுகொண்டிருப்பதை கண்டித்திருக்கிறார். (பக். 144)


     “எல்லாமே  அமைப்பின் முடிவு. எல்லாமே அமைப்பின் செயல். எல்லாரும் அமைப்பைக் காத்தனர். எல்லோரையும் அமைப்பு காக்க வேண்டுமென விரும்பினோம்”, (பக். 139) என்று தனி நபரை முன்னிலைப்படுத்தாத, கொள்கை வழிப்பட்ட இயக்கக் கட்டமைப்பு செயல்பட்ட விதம் வெற்றியை நோக்கிப் போராட்டத்தை உந்தித் தள்ள காரணமாக இருந்திருக்கிறது. கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களை தனிநபராக பார்த்ததில் தவறில்லை. அமைப்பில் இருந்தவர்கள் தன்னை அவ்வாறு பார்த்த தருணங்களில் தோழர் மீனாட்சிசுந்தரம் (மீயன்னா) “மாற்றுக் கருத்திருந்தால் கமிட்டியில் விமர்சனம் செய்யலாம். வெளியே செய்வது கட்சி விரோத நடவடிக்கை”, (பக்.122) என்று வலியுறுத்திப் பேசியது பெரும் நம்பிக்கையூட்டியதாகக் குறிப்பிடுகிறார். 

     ‘பச்சைத் தமிழர்’ காமராஜை ஆதரிக்கும் பெரியாரின் முடிவு, உள்ளூர் கள நிலவரம் அவருக்கு சரியாக உணர்த்தப்படாமை, பெரியாரின் ‘சம்மந்தமில்லை’ என்கிற வெளிப்படையான அறிவிப்பு போன்றவற்றால் பெரியாருக்கு நீண்ட கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்திலுள்ள காட்டமான வாசகங்களை மாற்றாமல் அப்படியே அனுப்பியதை, “எனது அனுபவ அணுகுமுறை போதாமையோ அல்லது அல்லது சூழ்நிலை நிர்ப்பந்தமோ அப்படியே கடிதத்தை பெரியாருக்கு அனுப்பியதும், (பக்.42) கொலை முயற்சியிலிருந்து துணிச்சலாக சென்று மீண்டதை, “நாங்கள் செய்தது புத்திசாலித்தனமான செயல் அல்ல. அசட்டுத்தனம், வாலிபத்திமிர் அவ்வளவே”, (பக்.44)  என்றும் சுயவிமர்சனம் செய்துகொள்ள முடிகிறது.

    பெரியாரிய, மார்க்சிய இயக்கங்கள் இரண்டிலும் பணியாற்றக் கூடிய ஒரு நல்வாய்ப்பு தோழர் ஏஜிகே விற்கு கிடைத்தது. அதனால் இவை இரண்டிற்குமான ஒருங்கிணைவை நடைமுறையில் பயன்படுத்த முடிந்தது. இவர்களது போராட்ட வடிவங்களைப் பார்த்து அதிர்ந்து “இதெல்லாம் ரொம்ப அதிகம்”, என்று சொன்னவர்களிடம் “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே  பெரியாரியம்”, (பக்.102) என்று சொல்ல முடிந்திருக்கிறது. வயல்வெளிகளில், களத்து மேடுகளில் பெரியாரும் மார்க்சும் கைகோர்க்க முடிந்ததது. (பக்.84) உலகில் காரல் மார்க்சை விமர்சிக்காத ஒரே தலைவர் பெரியார்தான் என்று கூறமுடிகிறது. (பக்.157) பொதுவாக கருத்து மாறுபாட்டால் பிரிந்து செல்பவர்கள் செய்யும் தனிநபர் அவதூறுகள், வசைபாடல்களுக்கு ஏஜிகே யிடம் இடமில்லை. பெரியார், கார்ல் மார்க்ஸ் செய்த தனி மனிதத் தவறுகளைக் கொண்டு  அவர்களுடைய சித்தாந்தங்களை  நிராகரிக்க முடியாது என்பது இவரது திடமான எண்ணமாக உள்ளது. தனிநபர் வாதத்தை முன்வைத்து அமைப்பைக் காலி செய்கின்ற பிறரும் தோழர் ஏஜிகே யும் வேறுபடும் புள்ளி இதுவே. 

    மலபார் போலீஸ், உள்ளூர் போலீஸ், பண்ணையார்கள், காரியக்காரர்கள், அடியாட்கள் ஆகிய பல தரப்பு வன்கொடுமைகள் சொல்லில் வடிக்க இயலாதவை. ‘சாணிப்பால் சவுக்கடி’ என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போகாமல் பண்ணையார்களின் வன்செயல்களை விலாவாரியாகவும்  அதற்குத் துணை நின்ற அரசு எந்திரம், ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டங்கள் என எல்லாவற்றையும் தோழர் விளக்குகிறார். 


  “போலீஸ் லத்திக்கு மட்டும் பிள்ளைக் கொடுக்கும் சக்தியிருந்தால் நான் பல குழந்தைகளுக்கு தாயாகியிருப்பேன்”, (பக்.77) என்று கெளரியம்மா சொன்னதுதான் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினிக்கும் நடந்தது. இவர்களின் ‘ஆழம் பார்க்கும்’ வன்கொடுமை அன்றிலிருந்து இன்று வரை மாறவேயில்லை. இதைப் புதிதாகக் கேள்விப்படும் இளைஞர்களுக்கு ஆச்சரியமாகவோ, மிகையாகவோ தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. 

    தலைமறைவுத் தோழர்களுக்கு ‘கொரியராக’ செயல்பட்ட தலைஞாயிறு வடிவேலுவைத் தேடி அவரது குடிசைக்குச் சென்ற போலீஸ் நிறைமாத கர்ப்பிணி மனைவியை சித்ரவதை செய்து சிசுவைக் கொன்ற (பக்.82) நிகழ்வு, குஜராத்தில்  நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின் முன்னோட்டம் போல இருக்கிறது. ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே மாதிரியாகவே தனது கொடுமைகளை அரங்கேற்றுகிறது. 

     கர்ப்பிணிப் பெண்கள் அரை மணி நேரம் வரையில் வயலில் நடவு நட்டுவிட்டுக் கரையேறி மறைவில் துணிவிரித்துப் போட்டு பிள்ளை பெற்ற சம்பவங்களும் உண்டு. பிள்ளை பெற்ற மூன்றாம் நாளே வேலைக்கும் திரும்பவேண்டும். (பக்.71)

    பண்ணையாளின் குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல், பண்ணை வீட்டுக்குச் சேவகம் செய்யவேண்டும். பண்ணையார் தாலி வாங்கிக் கொடுத்து திருமணம் செய்து வைப்பார். முதலிரவு அவருடன்தான். (பக்.71)  எவ்வளவு பெரிய கொடுமை! இதற்கு எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? அதைதான் இவர்கள் சரியாக செய்திருக்கிறார்கள். 

   சேரிப்பெண்கள் பண்ணையார், பண்ணையாரின் காரியக்காரன், கையாட்கள் கைகளில் சிக்காமல் வாழ்வது அரிது. தொட்டால் தீட்டு என்ற பார்ப்பன ஜாலம் காட்டும் இவர்களுக்கு, வீட்டு வாசல்படி வரை இவர்கள் தொட்டுத் தூக்கிவரும் நெல் மூட்டைகளும், இவர்களின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளாகும் பெண்களும் தீட்டாவதில்லை. (பக். 70,72)

    உயிர்ப்பலிகள், உடல் ஊனம், குடிசை அழிப்பு, கூரைகள் எரிப்பு, சேரிகள் சூறையாடல், பெண்களை மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, போலீஸ் சித்ரவதைகள், பொய் வழக்குகள் எனப் பல்வேறு அடக்குமுறைகள் அன்றாட நிகழ்வாக (பக்.85) எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் களப்பணியாளர்களுக்கு இருப்பதை கட்சியின் மேல்மட்டம் பல சமயங்களில் உணர்வதில்லை. 

   சில போராட்ட வடிவங்கள் 

    பண்ணையார்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் பரம்பரை எதிரிகளை ஒழிக்கவரும் மன்னர்களின் குணத்தை ஒத்திருப்பார்கள், எனவே அவர்களது வல்லாதிக்கத்தை எதிர்க்க, உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு போராட்ட வடிவங்களை இவர்கள் கைக்கொண்டதாக தோழர் ஏஜிகே விளக்குகிறார்.

    குலக் கல்வித்திட்ட எதிர்ப்பு, விநாயகர் சிலை உடைப்பு, கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறைகூவல், கோர்ட் அவமதிப்புக் குற்றச்சாட்டில் கோர்ட் படியேறி கோர்ட்டை அவமதித்த தீரம், ராமன் பட எரிப்பு, சாதியொழிப்பிற்காக சட்ட எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு (பக். 21) போன்ற வித்தியாசமான போராட்டங்களை நடத்திய பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கி இறக்கும் (1973) வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது கிடையாது என்பது இங்கு மனங் கொள்ளத்தக்கது. அந்த வகையில் அடித்தட்டு மக்களின் பங்கேற்பில் இவர்கள் நடத்திய சில போராட்ட வடிவங்கள்  வித்தியாசமானது மட்டுமல்ல, ஆதிக்கத்தின் ஆணிவேரை அசைக்ககூடியவை. இத்தகைய ‘புதிய போராட்டங்கள்’ அனைத்தும் பெண்களைக் கொண்டு நடத்தப்பட்டவை. மேலும் நாகை நகர சுத்தித் தொழிலாளர்களின் பங்கும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இப்போராட்டங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவும், சில சமயங்களில் ஆண்களுக்கு மேலாக அற்புதமான ஆலோசனைகளையும் வழங்கியதை ஏஜிகே நன்றியுடன் நினைவு கூர்கிறார். (பக்.154)


   அடித்தட்டு மக்களின் போராட்டம் வேறெப்படி இருக்கமுடியும்? அம்பேத்கர் சிலைகளுக்கு செருப்பு மாலை போட்ட நிகழ்வு நடந்தபோது, செருப்பு நமது பெருமையின் அடையாளம் என்று சொல்லி அனைத்து சிலைகளுக்கும் செருப்பு மாலையை அணிவிக்கும் போராட்டம் நடத்தவேண்டும் என ஒரு எழுத்தாளர் சொன்னது நினைவிற்கு வருகிறது.

ஒப்பாரிப் போராட்டம்

   கூலிப் பிரச்சினையில், பச்சைக் கீற்று மட்டைகளை முடைந்து பாடை கட்டி, தாரை தப்பட்டை முழங்க, பெண்கள் தலையில் முக்காடு போட்டு பண்ணை வீட்டின் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பறையைத் தன் தோளில் மாட்டி, வயல்வரப்பில் நின்று பறை அடித்துக்கொண்டே ஆட்களை ஏவி வேலை வாங்கக்கூடிய துணிச்சலான நபரான  மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர் பண்ணைவீட்டில் தினமும் ஒப்பாரிப் போராட்டம் நடக்க, அய்யர் அலறியடித்து புலம்ப, அவரது மனைவி வேண்டுகோளின்படி அரைப்படி கூலி உயர்வுடன் போராட்டம் நிறைவு பெற்றது. (பக்.120)

 மலப்பொட்டல வீச்சு

  ஆர்.எம்.சம்மந்தமூர்த்தி முதலியார் பண்ணையில் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நேரடி மேற்பார்வையில் வெளியூர் ஆட்களைக் கொண்டு அறுவடை செய்ய முயலும்போது, பெண்கள் மலப்பொட்டலங்களை வீசியெறியும் போராட்டம் நடந்தது. ஆல இலையை பொட்டலத்திற்கு உகந்தது என்கிறார் ஏஜிகே. (பக்.160) கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கு நேரடியாக நிகழ்ந்த முதல் பின்னடைவு இது.  “ஏதால வேணுன்னாலும் அடிச்சிருக்கலாம்.  ‘அதை’ப் பெண்களைக் கொண்டு அடித்ததுதான் கொடுமை”, என்றார்களாம். (பக்.154) இதுதான் கொடுங்கோலர்களுக்கான உளவியல் சிகிச்சை. பின்பு ஓர் முறை இழிவாகப் பேசிய மாவட்ட நீதிபதிக்கும் இதே நிலைமைதான். (பக்.160)

மலக்கரைசல் உடைப்பு

   நாகை வணிகர் ஏ.டி.ஜெகவீரபான்டிய நாடார் (கல்வி நிறுவன முதலாளி) நகர சுத்தித் தொழிலாளர்களையும் பெண்களையும் இழிவாகப் பேசியதைக் கண்டித்து வெளிப்படையாகக் காலிக்குடங்களுடன் நடந்த போராட்டத்தில் திட்டமிட்டபடி மூன்று ‘தண்டனைக்கலம்’ (மலக்கரைசல்) கொண்டுவரப்பட்டு அவரது வீட்டு முன்கூடத்தில் உடைக்கப்பட்டது. (பக்.160)

  கரைசல் தயாரிப்பு முறை பற்றி  ஏஜிகே அளிக்கும் குறிப்பு இதோ. “திரவமாகவும் கெட்டியாகவும் இல்லாமல் ஒரு பசைபோல குழம்பாகத் தயார் செய்த கரைசலில், புளிய இலையை உருவிப்போட்டு நன்றாகக் கலந்துவிடவும். பிறகு பத்துக் கோழி முட்டைகளை உடைத்து அக்கரைசலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இப்போது சேற்றுக் குட்டைகளில் நீந்திக் கொண்டிருக்கும் பச்சைத் தவளைகளை (உயிருடன் பிடித்து) பத்து அல்லது பதினைந்து எண்ணிக்கைக்குக் குறையாமல், கரைசல் இருக்கும் பானைக்குள் லாவகமாகப் போட்டுவிட்டு, பானையின் வாய்ப்பகுதியை துணியால் மூடிக் கட்டவும்.” (பக்.166,167)

   டி.அருணாசலச் செட்டியாரின் பண்ணைவீட்டில்  அவரது காமக்களியாட்டங்களுக்கு வரும் பெண்களுக்குப் பணிவிடை செய்ய, பண்ணையில் வேலை செய்யும் பெண்களுக்கு இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு உத்தரவிட, ஒரு நாள் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் கூட்டமாக பண்ணைவீட்டுக்குச் செல்ல, ‘’கூலி உயர்வு பற்றி இப்போது பேசமுடியாது”, என அவர் மறுக்க, “இல்லைங்க. மரியாதை உயர்வு”, என்று சொல்லி பெண்கள் நடுவீட்டில் ‘கரைசல்’ பானைகளைப் போட்டு உடைத்து எச்சரித்தனர்.  டி.அருணாசலச் செட்டியாரும் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அதன்பிறகு அவ்விடத்தில் அடியெடுத்து வைக்கவில்லை. (பக். 165,166)

வீட்டு வாசலில் சாணிக்கரைசல் தெளிக்கும் போராட்டம்

   மஞ்சக்கொல்லை  கண்ணையா முதலியார் வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்வதை எதிர்த்து, அவர்கள் வீட்டு வாசலில் சாணிக்கரைசல் தெளித்து வாயில் வந்தபடி திட்டுதல் அரங்கேறியது. செய்தி போனதும், ஆயுதங்களுடன் டிராக்டரில் ஆட்களை அழைத்து வந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு வீடு திரும்பினார். சிக்கல் சுமூகமாகத் தீர்க்கப்பட்டது. (பக்.168,169)

 கற்கள் வீச்சு

     திருவாரூர் சிவவடிவேல் உடையார் வியாபார நோக்கில் நாகை அந்தணப்பேட்டை மில்லை விலைக்கு வாங்குகிறார். இவர் தலைமையில் தஞ்சை மாவட்ட மிராசுதார் சங்கம் இயங்கியது. அங்கு செயல்பட்ட வணிக வைசியர் சங்கத்திற்கு இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தொல்லைகொடுக்க, சிவவடிவேல் உடையார் மில்லுக்கு அடிக்கடி வரும் இரிஞ்சூர் கோபாலகுஷ்ண நாயுடுவை கற்கள் வீசி விரட்டியடித்த நிகழ்வை சுவைபட விவரிக்கிறார். மில் விற்கப்பட, தொல்லை நீங்கியது. (பக்.174, 175)

இரட்டைக் குவளைப் போராட்டம்

 தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை வழக்கிலிருந்தது. சாதி இந்துக்கள் நடத்தும் கடைகளில் டீ கேட்கும்போது அவர்கள் கொல்லைப்புறம் சென்றுவிட, நாங்களே டீ போட்டுக் குடித்துவிட்டு, குவளையை அப்படியே வைத்துவிட்டு, டீக்கான காசை மேசையில் வைத்துவிடுவோம். (பக். 170)

செருப்பாலடித்தல்

   நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆய்மழை மைனர் வருகையை கோயில் மணியடித்து அறிவிக்கும் பழக்கத்தை தொடங்கியதற்காக பெரிய பண்ணை முத்தையா பிள்ளை செருப்பால் அடிக்கப்பட்டார். (பக்.130) சர்.சி.பி.ராமசாமி அய்யர்  அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தபோது பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவினைக்காக ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் வருகை தந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தரை ஏஜிகே தலைமையில் ஓர் மாணவர்கள் குழு செருப்பாலடித்ததையும் அதனால் படிப்பைப் பாதியில் விட்டதும் பின்னுரையில் பசு.கவுதமனால் விரிவாகச் சொல்லப்படுகிறது. (பக்.198)

கொடும்பாவி போராட்டம்

   ஜெகதாபுரம் பண்ணை பழனியாண்டி மழவராயர் கூலிப்பிரச்சினையில் முரண்டு பிடிக்க, கொடும்பாவி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் அவருக்கு மூளை பிசகிவிட, ஏ.எம்.திருநாவுக்கரசு முதலியார், சூரிய மூர்த்தி செட்டியார் ஆகியோர் இப்போராட்டத்திற்கு பயந்து இணங்கி வந்தனர். ஆய்மழை மைனர் தூதுவிட, அவர் மீதிருந்த நம்பிக்கை தகர்ந்ததால் பதவி விலக, இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரானார். (பக்.132,133)

   இவர் ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ராமநாத தேவர் போல் சாதியைப் பார்க்காமல் செங்கொடி இயக்கத்தை அழிக்க, தாழ்த்தப்பட்டோரையும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்கிறார். வெளியூர்களில் தமக்கு எதிர்ப்பும் அவமானமும் மிஞ்ச, அருகிலுள்ள கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, தேவூர், இருக்கை, மேல வெண்மணி, கீழ வெண்மணி, இரிஞ்சூர் ஆகிய பகுதியிலாவது விவசாயத் தொழிலாளர் சங்கம் இருக்கக் கூடாது என்பதே அவரது வெறி. இதுதான் வெண்மணிப் படுகொலைகளுக்கு காரணமே தவிர, கூலி உயர்வுப் பிரச்சினை அல்ல. பிற தாலுகாக்களைவிட நாகை தாலுகா அதிக கூலி பெற்றதுதான் உண்மை என்று ஏஜிகே  மிக விளக்கமாக விவரிக்கிறார். (பக். 185)

    மேலே கூறப்பட்ட போராட்ட வடிவங்கள், நிகழ்வுகளைப் பார்க்கும்போது யாருக்கும் பண்ணையார்கள் மீது இரக்கம் தோன்றிட நியாயமில்லை. ஏனெனில் அவர்களது அடக்குமுறைகள் கொடிதிலும் கொடிது. 

    வழக்கமாக சொல்லப்படும் சவுக்கடி, சாணிப்பால் பற்றி தெரியுமா? பண்ணையார் வீட்டு முகப்பில் எப்போதும் தொங்கிகொண்டிருக்கும் திருக்கை வால் சவுக்கால் மயங்கும் வரை அடிப்பார்கள். உடம்பில் வழியும் ரத்தத்துடன் மூங்கில் குழாயில் நிரப்பிய சாணிப்பாலை குடிக்க வைப்பார்கள். 

   சாணிப்பால் தயாரிப்பது எப்படி? சாணியை குடத்திலிட்டு நன்றாகக் கரைத்த பின்னர் துணியால் வடிகட்டினால் சாணிப்பால் தயார். (தமிழகத்தில் அடிமை முறை – ஆ.சிவசுப்பிரமணியன் நூலிலுள்ள மேற்கோள்)

இன்னும் சில தண்டனைகள்

  • காலில் கிட்டி போட்டு ரத்த நாளங்கள் தெறிக்க மரம்போல் கீழே சாயவிட்டு ரசித்தல். (கிட்டி போடுதல்)
  • சுடுமணலில் ஒற்றைக் காலில் நிற்க வைத்தல். (கொக்குப் பிடித்தல்)
  • மரத்தில் தொங்கச் செய்து கீழே கற்றாழை முள்ளைப் பரப்பி வலியால் கீழே விழும்போது முள்ளால் குத்தப்படுதல்.
  • கடுமையாக அடித்து, மயங்கி, தண்ணீர் கேட்கும்போது பெண்களின் சிறு நீரைக் குடிக்க வைத்தல்.
  • சூட்டுகோலால் பண்ணையாரின் முதலெழுத்தை சூடு வைத்தல்.
  • பெண்களை நிர்வாணமாக்கி தலைமுடியை அறுத்து மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமைக்குள்ளாகுதல்.
  • பெண்களை நிர்வாணமாக்கி முருங்கை, பூவரசு மரங்களில் உள்ள மொசுக்கட்டைப் புழுக்களை கட்டியணைக்கச் செய்தல்.
  • ஆண்களை முட்டுக்காலிடச் செய்து பெண்களைக் கழுதை போல் சுமக்க செய்து அடித்து ஓட்டுதல்.

  இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயக் கூலிகள் நடத்திய போராட்டங்கள் மிகவும் நாகரிகமானது என்பது விளங்கும். 

   இறுதியாக, தோழர் ஏஜிகே வை திராவிடர் கழகமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அமைப்பு பலமுள்ள இடதுசாரி இயக்கங்களில் கூட மேலிருந்து கருத்துத் திணிப்பு மேற்கொள்ளப்படுவது இயக்கத்தின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. தோழர் ஏஜிகே வின் அனுபவப் பகிர்விலிருந்து கட்சியும் நாமும் பாடம் கற்க வேண்டியுள்ளது. 

    தோழர் ஏஜிகே யின் நேர்காணலில் வெண்மணி நிகழ்வு பற்றிய பதிவுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சிறையனுபவங்கள் மிக முக்கியமானதாகப் படுகிறது. சிறைப்பட்டோர் உரிமைகளுக்கான போராட்டம், சிறைப்பட்டோர் நல உரிமைச் சங்கம் (1973) கட்டியது, உரிமைக் குரல் கைப்பிரதியேடு, 1100 பேரில் ஆயிரம் பேர் உறுப்பினரானது, சிறையில் பணியாற்றும் காவலர்களுக்காகவும் இணைந்து போராடியது ஏஜிகே போன்ற போராளிகளுக்கு மட்டுமே சாத்தியப்படும்.

    திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம். அங்கே செவ்வொளி கைப்பிரதி; இறுதியில் போராட்டங்கள் வெற்றி; முதன்முறையாக சிறைத்துறைச் சீர்திருத்தங்கள் தொடங்கின. சில காவலர்கள் வேலை நீக்கம்; அவர்களுக்கு ரயில்வேயில் வேலைக்கு ஏற்பாடு. “சிறையா, வெளியிலா என்பதல்ல பிரச்சினை. போராட்டம்னா என்ன? சூழலைப் புரிந்துகொண்டு அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பதுதான் போராட்டம். அது சிறையிலென்றாலும், சமூகத்தினாலும் இதுதான் யதார்த்தம்; உண்மை”. என்ற இறுதிவரிகள் எவ்வளவு பொருத்தமானது. இதன் பின்னால் இருக்கும் பெரியாரியம், மார்க்சியம் என்கிற மிகப்பெரிய தத்துவ வீச்சை உணரமுடிகிறது. 

                       (முற்றும்)


01.ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… (நாகை தாலுக்கா விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சி)

தொகுப்பும், பதிவும்: பசு.கவுதமன்
பேச: 9884991001

வெளியீடு:
இளங்கோவன்
பேச: 9786540367

ரிவோல்ட் பதிப்பகம்,
சாக்கோட்டை,
கும்பகோணம்.

முதல் பதிப்பு: டிசம்பர்  2013
பக்கங்கள்: 217
நன்கொடை: ரூ. 185 

02.வெண்மணிச் சூழல் 

தோழர் அ.கோ.க. (ஏஜிகே) நேர்காணல்
நேர்கண்டவர்: பாவெல் சூரியன்

மூன்றாம் பதிப்பு: கி.பி. 2015
விலை: ரூ. 12

வெளியீடு:

பாவாணர் பதிப்பகம்,
வேலங்குடி – 610109,
கீழப்படுகை – அஞ்சல்,
திருவாரூர் – வட்டம்.
பேச:  9842011244

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக