சனி, டிசம்பர் 26, 2015

25 ஆ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (இரண்டாம் பகுதி)25 ஆ. தலித்  விடுதலைப் போராளி அய்யன் காளி
                  (இரண்டாம் பகுதி)

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                 மு.சிவகுருநாதன்

நூல் அட்டைப்படம்


(நிர்மால்யா எழுதி ‘தமிழினி’  2001 இல் வெளியிட்ட ‘கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி’ என்னும் வரலாற்று நூல் குறித்த பதிவின் இரண்டாம் பகுதி.)


     ஈழவர், நாடார், ஆசாரி, புலையர், பறையர், குறவர் முதலிய  சாதி மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகச் சூழல்கள் பின்னணியில்தான் நெய்யாற்றின்கரை தாலுக்கா, கோட்டுக்கல் கிராமத்திற்குட்பட்ட வெங்கனூரில் ஓர் புலையர் குடும்பத்தில் அய்யன் காளி 1863 ஆகஸ்ட் 28 –ல் பிறந்தார். ஆவணி அவிட்டத்தில் பிறந்த குழந்தைக்கு காளி என்று பெயரிட்டனர். நாளடைவில் தந்தையின் பெயரோடு இணைந்து அய்யன் காளி ஆயிற்று. வெங்கனூரில் புத்தளத்துக் குடும்பம் என்ற நாயர் குடும்பத்தில் அடிமையாகவும் பண்ணையாளாகவும் அய்யன் காளி இருந்தார்.  ஜமீன்தார் பரமேஸ்வரன் பிள்ளை எட்டேகால் ஏக்கர் நிலத்தை அய்யன் காளி பெயரில் எழுதி வைக்கிறார். இதற்கு வந்த எதிர்ப்பை செல்வாக்குமிக்க   ஜமீன்தார் பரமேஸ்வரன் பிள்ளை பொருட்படுத்தவில்லை. 

    ஸ்வர்ணன் வீட்டு வாசலை மிதித்தது, ஸ்வர்ணச் சிறுவர்களுடன் விளையாடியது, கிணற்றைத் தொட்டது போன்றவற்றால் மிக இழிவாக நடத்தப்பட்ட விதம் அய்யன் காளியின் மனத்தை மாற்றின. புலையர் சமூகத்துடன் நெருங்கிப் பழகி, தனது அனுபவங்களைப் பகிர்தல், அவர்களுக்கு கல்வி, வழிபாட்டு உரிமை பற்றி ஆயத்தப்படுத்தத் தொடங்கினார். புலையர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாடல்கள்  பாடுவது, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, நாடகங்கள் போடுவது என்றி இயங்கத் தொடங்கினர். திருவிதாங்கூர் புலையர் மக்கள் பேசிய தமிழும் மலையாளமும் கலந்த பேச்சுமொழியால் உரையாடல்களும் பாடல்களையும் ஓர் வடிவம் சமைக்கப்பட்டது. பின்னாளில் தனது நாடகக் குழுவை உடன் அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்தார். இவ்வளவிற்கும் அய்யன் காளி கல்வியறிவு பெறாதவர்.

அய்யன் காளி


  கி.பி. 1888 இல் ஶ்ரீ நாராயணகுரு அருவிப்புறம் என்னுமிடத்தில் பிராமணர்களுக்கு எதிராக சிவனை பிரதிஷ்டை செய்தார். ஈழவர்கள் சிவனை பிரதிஷ்டை செய்யலாமா என்ற ஓர் நம்பூதிரியின் வினாவிறகு ஈழவச் சிவனைத்தான் பிரதிஷ்டை செய்தேன் என பதில் சொன்னார்   நாராயணகுரு. இது நடந்தபோது அய்யன் காளிக்கு 25 வயது.   நாராயணகுருவை நேரில் சந்திக்க விரும்பிய அய்யன் காளி தனது நண்பர்களுடன் அருவிப்புறம் சென்று ஈழவப் பழைமைவாதிகளின் எதிர்ப்பை மீறி  நாராயணகுருவை அருகில் சென்று உரையாடினார். அய்யன் காளி சொன்னவற்றைக் கேட்ட நாராயணகுரு அய்யன் காளிக்கு ஆசியும் அறிவுரையும் வழங்கினார். இது அய்யன் காளிக்கு புதுத்தெம்பையும் புத்துணர்வையும் கொடுத்தது.

   1888 மார்ச்சில் செல்லம்மாவை அய்யன் காளி மணமுடித்தார். ஆறு ஆண்கள், ஓர் பெண் என மொத்தம் ஏழு பிள்ளைகள். பொன்னு, செல்லப்பன், கொச்சுகுஞ்ஞூ, சிவதாணு ஆகிய நான்கு ஆண்பிள்ளைகளும் தங்கம்மா என்ற ஓர் பெண்ணும் நீண்டகாலம் வாழ்ந்தனர். சிவதாணுவின் மகன் சி.அபிமன்யு அய்யன் காளி வரலாற்றை மலையாளத்தில் எழுதியவர்.  தங்கம்மாவிற்கு மணமுடிக்கப்பட்ட டி.டி.கேசவன் சாஸ்திரி புலையர் இனத்தலைவராகவும் அய்யன் காளியின் வாரிசாகவும் அறியப்பட்டார். 

   அய்யன் காளி முதலில் தீண்டப்படாதவர்கள் பொதுவழிகளில் நடந்து போகும் உரிமைகளை மீட்டெடுக்க போராட முனைந்தார். 1893 இல் ஓர் வில்வண்டியை வாங்கி இரண்டு வெள்ளைக் காளைகள் பூட்டி பெருமணியொலிக்க ஆதிக்க சாதியினர் பயம் கொள்ளுமளவிற்கு வலம் வந்தார். தேநீர்க் கடைகளில் தலித்களுக்கு தேநீர் வழங்கும் சிரட்டைகளை உடைத்தெறிய தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

   அய்யன் காளியின் அடுத்த இலக்கு புலையர் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் அனுமதி பெற்றுத்தருவதாக இருந்தது. 1905 இல் வெங்கனூரில் தரையில் எழுதும் கேரளாவின் முதல் தலித் பள்ளியைத் திறந்தார். ஓலைகள் மற்றும் மூங்கிலால் கட்டப்பட்ட இப்பள்ளி ஆதிக்க சாதி வெறியர்களால் தீக்கிரையானது. 

  1910 இல் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பள்ளிகளில் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அனுமதி 30 பள்ளிகளில் மட்டுமே. இதையும்  செயல்படுத்தாமல் அதிகாரிகள் ஆதிக்க சக்திகளுக்கு உதவியாக இருந்தனர். தலித் மாணவர்களின் கல்வி அனுமதி குறித்த புதுப்பிக்கப்பட்ட உத்தரவு 1914 இல் பிறப்பிக்கப்பட்டது. அய்ந்தாம் வகுப்பிற்கு பின் புல்லாட்டு அரசுப்பள்ளிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது ஶ்ரீ மூலம் மக்கள் சபை உறுப்பினராக இருந்த வெள்ளிகர சோதியின் முயற்சியால் மூன்று குழந்தைகள் புல்லாட்டு அரசுப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் பின்னாளில் கொச்சி  சட்டசபையில் துணை சபாநாயகராக இருந்த டி.டி. கேசவன் சாஸ்திரியும் ஒருவர். ஆதிக்க சாதியினர் பள்ளியை விட்டு ஒட்டுமொத்தமாக விலக அரசு பள்ளியை மூடியது. கோபமுற்ற சாதிவெறியர்கள் பள்ளிக்கு தீவைத்தனர். இப்பள்ளிக்கு ‘நெருப்பு வைத்த பள்ளிக்கூடம்’ என்று பெயர். 

  1907 பிப்ரவரியில் தீண்டத்தகாத சாதியினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக வெங்கனூரில் ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ தொடங்கப்பட்டது. தாழத்தப்பட்ட புலையர், பறையர், குறவர் போன்றோர் உரிமைகள் பெற ஒருங்கிணைந்தனர். சங்கத்தின் தலைவராக அய்யன் காளி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நீதிபதி கோவிந்தன் அறிவுரைகளும் ஊக்கமும் தந்தார். 

அய்யன் காளி


    இச்சங்கத்திற்கு 24 பிரிவுகள் கொண்ட விதிமுறைப்பட்டியல் தயாரித்தனர். அதில் தூய்மை, ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டன. விவசாயத்தொழிலாளர்களுக்கு வாரம் ஆறு நாள் வேலை, ஞாயிறு ஓய்வு நாள் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் மாத சந்தாவாக ஆண்களுக்கு அரைச்சக்கரமும் பெண்களுக்கு கால் சக்கரமும் (4 காசு) (8 காசு) தர முடிவானது. (சக்கரம் என்பது திருவிதாங்கூர் நாணயம், மதிப்பு 16 காசு) மூன்றாண்டு உழைப்பில் வெங்கனூரில் சொந்த இடம் வாங்கி, சங்கம் மெல்ல வலிமையடைந்தது.

     அய்யன் காளியின் ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் அனுமதி பெறுதலை உடனடிப்பணியாக கருதி செயல்பட்டது. 1909 – 1914 காலகட்டத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த வெளியூர் பிராமணர் பி.ராஜாகோபாலாச்சாரி தாழ்த்தப்பட்டவர்களிடம் கருணை காட்டியவர். அவரைச் சந்தித்து அய்யன் காளியும் அவரது தோழர்களும் மனு அளிக்க, 1907 –லேயே தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக திவான் தகவல் சொல்கிறார். 

     தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்கக்கூடாது, அவர்கள் கல்வி கற்றால் வேலைக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்று அரசின் உத்தரவை மறைத்தனர்; செயல்படுத்த மறுத்தனர். 1907 இல் இட்ட உத்தரவில் சில மாற்றங்கள் செய்து 1910, மார்ச் 02 இல் பள்ளிச் சேர்க்கையில் ஈழவர்களை அனுமதித்த பள்ளிகள் புலையர்களையும் அனுமதிக்க அறிவுறுத்தியபோதும் தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் நீக்கப்படவில்லை. இந்த உத்தரவை மறுநாள் (மார்ச், 02, 1910) முற்போக்குவாதியாக அறியப்பட்ட,  சுதேசாபிமானி ஆசிரியர் கெ.ராமகிருஷ்ண பிள்ளை சுதேசாபிமானியில் கடுமையாக விமர்சனம் செய்து தலையங்கம் எழுதினார். “பல தலைமுறையாக அறிவை விளைய வைத்துவரும் சாதியினரையும், அதைவிட பல தலைமுறையாக பயிரை விளைய வைத்துவரும் சாதியினரையும் ஒன்றாக சேர்ப்பது குதிரையையும் எருமையையும் ஒரே நுகத்தில் பூட்டுவதைப் போன்றதாகும்”, என்பது இவரது பிற்போக்குவாதம். அடுத்த ஆண்டே இவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்குள் மதமாற்றத்தைத் தடுக்கும் முயற்சி இருந்ததை மறுக்க இயலாது. 

   ஶ்ரீ மூலம் திருநாள் மகாராஜா ஆட்சி சீரமைப்பில் 1888 –ல் எட்டு உறுப்பினர் கொண்ட சட்டசபை உருவாக்கப்பட்டது. இந்திய சமஸ்தானங்களில் திருவிதாங்கூரில் மட்டும் தொடங்கப்பட்ட சட்டசபையில் உறுப்பினர் எண்ணிக்கை 1898 –ல் எட்டிலிருந்து பதினைந்தாக உயர்ந்தது. 1904 முதல் ஶ்ரீ மூலம் மக்கள் சபை செயல்பட, மக்கள் சபைக்கு பிரதிநிதிகளை அரசு தேர்ந்தெடுக்க, குறிப்பிட்ட விழுக்காடு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்கள் சபைக்கு வழங்கப்பட்டது. 

   1920 –ல் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 25 ஆகி, 1922 –ல் 50 ஆக உயர்ந்தது. இதில் பணி சாராத உறுப்பினர்கள் 35. இவர்களில் 28 பேரை பொது வாக்காளர் தொகுதிலிருந்தும் மீதி எழுவரை பிரத்யேக வாக்காளர் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. ரூபாய் 5 செலுத்தும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்கும் ஓட்டுரிமை இருந்ததாகச் சொல்லும் நூலில் தலித்கள் பற்றி தகவல் இல்லை. 

    ‘சாது ஜன பரிபாலன் சங்க’த்தின் பிரதிநிதியாக சுபாஷினி பத்தரிக்கையாசிரியர் பி.கெ.கோவிந்தப்பிள்ளை 1911 –ல் தேர்வானார். இவர் புலையர்களின் இழிநிலை குறித்த விவரங்களைத் திரட்டி மக்கள் சபை முன்வைத்தார். அய்யன் காளி திவான் ராஜகோபாலாச்சாரியை சந்திக்க சென்றபோது ஆதிக்க வெறியர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் தந்தி அனுப்பி திவானைச் சந்தித்து உரையாடினார் அய்யன் காளி. மக்கள் சபைக்கு அய்யன் காளி தேர்வு செய்யப்படவேண்டும் என்று திவானிடம் செல்வாக்கு பெற்ற பத்மநாபப்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று, திவான் பரிந்துரைக்க, மகாராஜா 1911 டிசம்பர் 5 –ல் நியமன உத்தரவைப் பிறப்பித்தார். 

   இதற்கு நன்றி தெரிவித்து திவானுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்துகொண்ட அய்யன் காளி தொடர்ந்து மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டு தரிசு நிலங்களை புலையர்களின் பெயரில் பட்டா வழங்குதல், புலையர் குழந்தைகள் சேர்க்கையை ஏழு பள்ளிகள் மட்டுமல்லாது  அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் பற்றிய உரையாற்றினார்.

    அரசின் உத்தரவை அமல்படுத்த ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. வெங்கனூர் சாவடிப் பள்ளிக்கூடத்திற்கு அய்யன் காளி புலையக் குழந்தைகளுடன் சென்றார். அப்பள்ளி தலைமையாசிரியர்  இவர்களை விரட்டியடித்தார். ஸ்வர்ணர்கள் அய்யன் காளியையும் அவரது தோழர்களையும் தாக்கினர். இவர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். 

    கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஆதிக்க சாதிக் குழந்தைகளைக் கொண்டு நிரப்பிவிடும் உத்தியை சாதி வெறியர்கள் பின்பற்றினர். அய்யன் காளியின் வேண்டுகோளின்படி  வெங்கனூர் புதுவல்விளாகம் மலையாளத் தொடக்கப்பள்ளிக்கு முதலிரண்டு வகுப்புகளுக்கான அனுமதி கிடைத்தது. புலையர்களில் படித்தவர்கள் இல்லை. ஆதிக்க சாதியினர் புலையக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர விரும்பவில்லை. எனவே ஆசிரியர்களைத் தேட வேண்டிய கட்டாயம் உண்டானது. பாடம் சொல்லிக் கொடுக்க இசைந்த திருவனந்தபுரம் கைதமுக்கு பரமேஸ்வரன் பிள்ளையை தடுத்து ரகளையில் ஈடுபட்டவர்களைத் தடுத்த அவரைப் பாதுக்காக்கும் வேலையை நாள்தோறும் ‘அய்யன் காளி படையினர்’ மேற்கொண்டனர். 

   1914 –ல் அரசின் உத்தரவிற்கிணங்க மக்கள் சபை உறுப்பினரான அய்யன் காளி பூசாரி அய்யப்பன் என்பவரின் மகளான எட்டு வயது பஞ்சமியை அழைத்துச் சென்றார். தலைமையாசியர் மறுக்க வாக்குவாதம் மூண்டு, ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கினர். இவர்கள் வேறுவழியின்றிப் பின்வாங்க, அன்றிரவே அப்பள்ளி தீயிடப்பட்டது. மலையாள ஆண்டு 1090 இல் (கி.பி. 1915) நடந்த இந்த  கலவரம் தொண்ணூறாம் ஆண்டு கலவரம் என்றும் புலையர் கலகம் என்றும் சொல்லப்படுகிறது. நாயர்களால் உண்டாக்கப்பட்ட இக்கலகம் ‘புலையர் கலகம்’ என அழைக்கப்படுவது விநோதமல்ல; நமது வரலாற்றில் தொடரும் அவலம். 

    1915 அக்டோபர் 24 ஆம் நாள் கொல்லம் பெரிநாடு அருகே செறுமூடு கூட்டத்தைச் சீர்குலைக்கவும் புலையர்களை அணிதிரட்டிய கோபால் தாஸை கொலைசெய்யத் திட்டமிட்ட முயற்சி பெருங்கலகமாக உருவெடுத்தது. கலவர இடங்களைச் சென்று பார்வையிட பணமின்றி சிரமப்பட்ட அய்யன் காளி ரூ.500 பணத்தை திரட்டிக்கொண்டு கலவரப்பகுதிக்குச் சென்றார். கலவரம் அடங்கி இயல்பு நிலை திரும்ப அரசுடன் இணைந்து பணி செய்தார். பின்னர் நடைபெற்ற சாது பரிபாலன சங்கக் கூட்டத்தில் புலையர்களின் அடையாளச்சின்னமாக  இருந்த கல்மாலைகளை அய்யன் காளியின் வேண்டுகோளுக்கிணங்க அறுத்து எறிந்தனர். ‘மிதவாதி’ செய்திதாள் வெளியிட்ட ஒப்பீட்டின்படி 1914-1917 கால இடைவெளியில் புலையர்களின் கல்வியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. அவர்களது எழுச்சி இல்லையே இது சாத்தியமாகியிருக்காது. 

   1912 முதல் 1933 வரை 22 ஆண்டுகள் மக்கள் சபை உறுப்பினராக இருந்த அய்யன் காளி உடல்நிலைக் குறைவு காரணமாக 1933 –ல் பதவி விலகினார். பிறகு இவரது மருமகன் டி.டி.கேசவ சாஸ்திரி  திருவிதாங்கூர் அரசாங்கம் அப்பதவிக்கு நியமனம் செய்தது. அய்யன் காளியுடன் இணைந்து பணி செய்தவர்களில் குறும்பன் தெய்வத்தான், வெள்ளிக்கர சோதி, பாறாடி ஆப்ரஹாம் ஐசக், பாழூர் சேனன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

    1931 –ல் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மன்னரானார். மன்னரின் ஆலோசராக இருந்த சர் சி.பி.ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவனாக நியமிக்கப்பட்டார். ஈழவர்களின் மதமாற்றம் தொடர்பான நூலொன்றை சி.வி.குஞ்ஞிராமன் வெளியிட்டார். 1933 –ல் கோயில் நுழைவுப் பிரச்சாரக்குழு நியமிக்கப்பட்டது. அன்று திருவிதாங்கூரில் உள்ள 11 லட்சம் ஈழவர்களும் மதம் மாறினால் நாடு கிருஸ்தவ தேசமாகி விடும் என்ற பயமே 1936 நவம்பர் 12 கோயில் நுழைவு ஆணை வெளியிடக் காரணமானது. 1937 ஜனவில் 14 –ல் மகாத்மா காந்தி வெங்கனூரில் அய்யன் காளியை சந்தித்து, அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அய்யன் காளியை வெகுவாகப் பாராட்டிய காந்தி, “கோயிலில் நுழையக் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நீங்கள் அறிவு சார்ந்தும், மதம் சார்ந்தும் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன். கோயிலுக்குச் செல்வதால் நமக்கு ஏதேனும் பயனுண்டா இல்லையா என்பது நமது மனநிலையைச் சார்ந்த விஷயம். எளிமையும் தன்னிரக்கம் கொண்ட மனத்தோடு நாம் கோயில்களை அணுகவேண்டுமென”, கோரிக்கை வைத்தார். 

    அய்யன் காளியை கிருஸ்தவ மதத்தில் இணைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. மதமாற்ற முயற்சிகளைக் குறிப்பிட்டு “இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவது” குறித்து மகாராஜாவிற்கு வேன்டுகோள் விடுத்து “கட்டாய மதமாற்றம் கூடாது”, என்ற அரசாணையைப் பெறுகிறார். அய்யன் காளி மதமாற்றத்தை விரும்பாததும் அதற்கு எதிராக செயல்பட்டதும் வெளிப்படையானது. மதமாற்றம் புலையர்களின் ஒருங்கிணைப்பைக் குலைத்துவிடும், அதன் பிறகு கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாமற்போகும் என்பதே அவரது எண்ணம். அம்மக்களின் சமூக, பொருளாதார நிலை உயர கள்ளுண்ணாமை குறித்தும் அவர் வலியுறுத்துகிறார்.

   மாறாக சுவாமி விவேகானந்தரும் பிறரும் மதமாற்றத்திற்கு எதிராகப் பேசியதும் செயல்பட்டதும் முற்றிலும் வேறுபடும் புள்ளிகள் என்பதை எளிதில் உணரலாம். 1897 –ல் சென்னையில் நடந்த பிரசங்கக் கூட்டத்தில் விவேகானந்தர், “மலபாரில் நான் காண நேர்ந்ததைக் காட்டிலும் மோசமான முட்டாள்தனம் உலகில் வேறெங்கும் இருந்ததுண்டா? மேல்சாதிக்காரர்கள் நடக்கும் தெருவில் ஏழைப்பறையன் நடக்கக்கூடாது. ஆனால், ஒரு ஆங்கில கலப்புப் பெயர் அல்லது இஸ்லாமியப் பெயரை ஏற்றுக்கொண்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும். இந்த மலபார்க்காரர்கள் பைத்தியக்காரர்கள். இவர்களின் வீடுகள் அனைத்தும் பைத்தியக்கார விடுதிகள்”, என்று பேசியது குறிப்பிடத்தக்கது. 

  1905 –ல் சதானந்த சுவாமிகள் கேரளப்பகுதிகளுக்கு வந்து மதமாற்றத்திற்கு எதிராக பரப்புரை செய்தார். இந்து மத மூட நம்பிக்கைகளையும் தீண்டல், தொடீல் போன்ற தீண்டாமையையும் சாடினார். பொது வெளிகளில் உலவுதல், கோயில் நுழைவு போன்ற தீண்டத்தாகதவர்களின் உரிமைக்கான குரல் இவரிடமிருந்தது. அதனால் அய்யன் காளி சதானந்த சுவாமிகளைச் சந்தித்தார்; இணைந்து செயல்பட்டார். சதாந்த சுவாமிகள், தைவிளாகத்து காளியை ‘பெரிய காளி’ என்றும் அய்யன் காளியை ‘சின்ன காளி’ என்றும் தலைமைப் பொறுப்புகளில் நியமனம் செய்தார். 

  புலையர்கள் எழுச்சியை முன்னெடுத்த அய்யன் காளி உடல்நலக்குறைவினால் 1941, ஜூன் 18 –ல் மரணமடைந்தார். இவருடைய வாழ்வு, போராட்டங்களிலிருந்து இன்றைய தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. அம்பேத்கர் (மகாராஷ்டிரா), பெரியார் (தமிழ்நாடு) போன்ற சிந்தனையாளர்களை குறிப்பிட்ட சாதி, இன, மொழி, மாநிலம் சார்ந்து பார்க்கும் மோசமான பார்வை ஒன்றிருக்கிறது. அய்யன் காளியையும் அவ்வாறு அணுகாமல் இருப்பதும் இத்தகைய போக்குகளை மறுபரிசீலனை செய்வதும் அவசியம். 

   நூலின் பிற்சேர்க்கை ஒன்றில் தைக்காடு அய்யா சுவாமிகள், ஶ்ரீ சட்டம்பி சுவாமிகள், ஶ்ரீநாராயண குரு, சுபானந்த குருதேவன், பிரமானந்த சிவயோகி, மகாகவி குமாரன் ஆசான், சங்ஙனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை, வைக்கம் சத்தியாகிரகி டி.கே.மாதவன், ஸ்வர்ண பேரணி மன்னத்து பத்மநாபன், குருவாயூர் சத்தியாகிரகி கேளப்பன், சகோதரன் கெ.அய்யப்பன், கிருஷ்ணாதி (கொச்சி புலைய மகாஜன் சபை), பண்டிட் கெ.பி.கருப்பன், பி.சி.சாஞ்சன், கெ.பி.வள்ளோன் என கேரளாவில் தலித் முன்னேற்றத்திற்கு உழைத்த பலரைப் பற்றிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது.      கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி  (வரலாறு)

நிர்மால்யா

முதல் பதிப்பு: அக்டோபர் 2001
இரண்டாம் பதிப்பு: மே 2007
பக்கம்: 173
விலை: ரூ. 85

தொடர்புக்கு:

தமிழினி,
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600014.
பேசி: 98844196552
மின்னஞ்சல்: tamizhininool@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக