சனி, டிசம்பர் 19, 2015

22. உடலுழைப்பின் மேன்மையை உணர்த்தும் பாடங்கள்



22.  உடலுழைப்பின் மேன்மையை உணர்த்தும் பாடங்கள்

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                 மு.சிவகுருநாதன்


(துளிகா வெளியீடாக  2009 –ல் வெளியான, காஞ்சா அய்லய்யா எழுதிய ‘பானை செய்வோம், பயிர் செய்வோம் – நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு’ நூல் குறித்த பதிவு இது.)

     பெரும்பாலான மதங்களில் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை கடும் உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு இல்லை. இங்கு பிச்சை என்று குறிப்பிடுவது மத நிறுவனம் அங்கீகரித்தவற்றையே குறிப்பிடுகிறேன். “இந்து ஆன்மீகமே பாசிசம்”, என்று வரையறுக்கும் ஓர் மதம் எப்படியிருக்கும் என்று விளக்க வேண்டியதில்லை.

   இவற்றை மாற்ற என்ன செய்யவேண்டும்? இதற்கான மாற்றங்களை நாம் குழந்தைகளிடமே தொடங்கவேண்டும். அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகப் பேராசிரியரான காஞ்சா அய்லய்யா, ஏழு முதல் பத்தாம் வகுப்பு முடிய உள்ள குழந்தைகளுக்கும் அவர்களுடைய ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்களுக்கும் உதவும் வகையிலான ஓர் பாடநூலை எழுதியிருக்கிறார். இவை இந்தியாவெங்கும் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டியவை. துரதிஷ்டவசமாக அப்படி ஏதும் நடந்துவிடுமா என்ன?

   காஞ்சா அய்லய்யா Why I am not a Hindu?, Post Hindu India, Buffalo Nationalism, Weapon of the Other, God as Political Philosopher – Buddha’s Challenges to Brahminism  ஆகிய நூல்களை எழுதிய அம்பேத்கரிய, தலித் சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த இவர், தலித், பிற்பட்டோர், சிறுபான்மையினர் ஒருங்கிணைவை விரும்புபவர். இவரது Why I am not a Hindu? தமிழில் ‘நான் ஏன் இந்து அல்ல?’, என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்து மத பார்ப்பனியத்தை இந்நூல் கேள்விக்குள்ளாக்கியது. 

   காஞ்சா அய்லய்யாவின்  ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் ‘பானை செய்வோம், பயிர் செய்வோம்’  (நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு) அருணா ரத்னத்தால் தமிழாக்கப்பட்டுள்ளது. துர்காபாய் வ்யாமின் கோட்டோவியங்கள் இந்நூலை மெருகூட்டுகின்றன. இந்நூலைப் பற்றி காஞ்சா அய்லய்யா சொல்வதைக் கேட்போம்.

   “கல்வித்துறையில் பாடத்திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் கவனம் செலுத்த் வேண்டும் என்கிறேன். என்னுடைய ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேன்டும். அதன் பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களைச் சேர்க்கமுடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும். A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும்.  C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்கவேண்டும்”. (பக்.36, ‘இந்து ஆன்மீகமே பாசிசம்தான்’ – காஞ்சா அய்லய்யா நேர்காணல், தமிழில்: கவின்மலர், வெளியீடு: கருப்புப் பிரதிகள், டிச. 2010)

   அவர் மேலும் சொல்வதைக் கவனியுங்கள், “பார்ப்பன இலக்கியங்களை ஒழிக்கவேண்டும். அவை Subject, Object, Predication என்றுதான் இலக்கணத்தைக் கற்றுத் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana.  இதில் ராமன் Object, ராவணன் Subject. செய்யும் செயல் கொல்வது. இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்குப் பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer tilling the land அல்லது  Mother is cooking the food, Father is looking after the cattle என்பது இப்படி மாறவேண்டும்.  Father should also cook after the cattle and Mother should also look after cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.  Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இது தேவையா? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்கவேண்டும்”. (மேலது நூல்)

    இவ்வாறு வெறும் வாய்ப்பேச்சளவில் இல்லாமல், காஞ்சா அய்லய்யா செயலில் இறங்கியதன் விளைவே இந்நூல். பழங்குடியினர், மேய்ப்பர்கள், தோல்பொருள் கலைஞர்கள், விவசாயிகள், மண்பொருள் வினைஞர் (குயவர்), நெசவாளர்கள், சலவையாளர்கள், நாவிதர்கள் ஆகிய உடலுழைப்புத் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களது உழைப்பு, மரபார்ந்த அறிவு, தொழில்நுட்பத் திறன், அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை விளக்கமாக எழுதிச் செல்கிறார். மாணவர்களைக் கருத்தில் கொண்டதால் ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் செய்து பாருங்கள், உங்களுக்குத் தெரியுமா?, கண்டுபிடிங்க, பெட்டிச்செய்தி, பக்கவாட்டுப் பெட்டி, சிறப்புப் பெட்டி என்ற பல்வேறு பகுதிகள் உண்டு. 



   மார்ச், 2006 மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு அறிவித்தபோது, எதிர்ப்பு என்ற பெயரில் தெருக்களைக் கூட்டுவது, காலணிகளுக்கு மெருகிடுவது, காய்கறி விற்பது போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டதை முன்னுரையில் சுட்டிக்காட்டுக் காஞ்சா அய்லய்யா, இவர்களுக்குப் பள்ளிப் பாடங்கள் உடலுழைப்பின் மேன்மையைக் கற்றுக்கொடுக்கவில்லை, சாதிய சிந்தனைப்படி இவ்வேலைகள் அவமானத்திற்குரியதாக ஆக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார். தெருவில் இறந்து கிடக்கும் விலங்கை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்யவோ, ஏர் பூட்டி உழவோ அவர்கள் விரும்பவில்லை. ஏர்பூட்டி உழும் தொழில்நுட்பம் அவர்கள் அறியாதது என்றும் குறிப்பிடுகிறார்.

   பல்வேறு வகையான பறவை மற்றும் விலங்கின் கறியை அனுபவ ரீதியாக சோதித்து, தரப்படுத்தி அவற்றை மனித உணவாக மாற்றியவர்கள். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை மூலிகைகள், , மரப்பிசின்கள், இயற்கைச் சாயங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்த பழங்குடி மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தருவது நம் கடமையென விளக்குகிறார்.

    எருமைகளும் பசுக்களும் விவசாயத்திற்கு உதவினாலும் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. கேரளாவில் 72% மாட்டிறைச்சி உண்பவர்கள். செம்மறியாடுகளின் ரோமத்தை அவற்றிற்கு காயம் ஏற்படாமல் லாவகமாக கத்தரித்துக் கம்பளியாடைகள் செய்து நம்மைக் குளிரிலிருந்து காப்பவர் இடையர்கள். இவர்கள் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை வளர்த்து, அவற்றை எண்ணிக் கணக்கிடும் ஆற்றல் பெற்றிருந்தமையால் பூச்சியம் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று உறுதிபட நேர்காணலில் தெரிவிக்கிறார். பல சமூகப் பெண்கள் வெளி வேலைகளில் ஈடுபடாத நிலையில், மேய்ப்பர் குலப் பெண்கள் பால் கறப்பது, பாலைக் காய்ச்சி தயிர், வெண்ணைய், பாலாடைக்கட்டி, பால் கோவா ஆகியன செய்வது, நெய் தயாரிப்பது, கம்பளி உடைகள் தயாரிப்பது என நுட்பமான திறமைகளைப் பெற்றிருந்தனர்.

   தோல் பதனிடும் தொழிலைச் செய்வோர் ஆந்திராவில் மடிகா, தமிழகத்தில் அருந்ததியர், வட இந்தியாவில் சாமர் அல்லது சாம்பர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். உரித்த தொலை நனைத்து அழுகிப் போகாமலிருக்க உப்பைச் சேர்க்கும் தொழில்நுட்பத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டவர்கள் இவர்கள். உப்பினால் பாடம் செய்யப்பட்ட கரைசலை ஆவாரம்பட்டைக் கரைசலில் ஊறவைக்க வேண்டும். ஆவாரம் பட்டையில் டானின் என்ற துவர்ப்பான தாது உப்பு உள்ளது. டானின் தோலை விரைப்பாக்கும். இன்றைய தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்களை மடிகர்களும் அருந்ததியர்களும் பயன்படுத்தியதில்லை. 

   சாதி முறையால் தோல் தொழிலும் துப்புரவுத் தொழிலும் பரம்பரைத் தொழிலாக மாற்றப்பட்டன. மரியாதைக் குறைவு மற்றும் ஊதியக்குறைவால் அவதிப்படும் இவர்கள் இத்தொழிலை வீடு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதையும் குறிப்பிடும் அய்லய்யா, இவர்களாலும் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்படமுடியும் என எடுத்துக்காட்டுகிறார். தற்போதைய சென்னை வெள்ளத்திலும் இத்தகைய துப்புரவுத் தொழிலாளர்கள் மிகக் குறைவான ஊதியத்தில் அரசாலும் தனியார் அமைப்புகளாலும் சுரண்டப்படுவதை வெள்ள மீட்பு, உதவிப் பணிகள் என்று இவ்வளவு நாள்கள் பெருமை பேசிய உயர் மற்றும் நடுத்தர வர்க்கம் வாய்  திறக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்னும் ரயில்வே உள்ளிட்ட பல இடங்களில் மனிதக்கழிவுகளை மனைதர்களே கைகளால் அள்ளும் கொடுமை நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. 

   இறக்குமதியான குதிரைகள் மீதேறி சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் புகழப்படும் வேளையில், இந்திய மாடுகளை ஏரில் பூட்டி விவசாயம் செய்த  அனைத்துச் சாதிக்குழுக்களும் சூத்திரர்கள் என அடித்தட்டில் வைக்கப்பட்டனர். விவசாயம் என்னும் அறிவியலை முறையாகப் பயன்படுத்தி, பிற்பட்ட சாதியினரும் தலித்கள் மற்றும் பழங்குடியினர்கள் இல்லாவிட்டால் இவ்வுலகிற்கு உணவு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. 

  மெசபடோமியா (இன்றைய ஈராக்) மக்கள் முதன் முதலில் சக்கரத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறோம். ஆனால் அதறகு முன்பே சக்கரத்தைப் பயன்படுத்தி மட்பாண்டங்கள் செய்யும் கலையை நாம் பெற்றிருந்தோம் என்பதை விளக்கும் அய்லய்யா, உலக அளவில் மண்வினைக் கலைஞர்களுக்கு கிடைக்கும்  மரியாதை  நம் நாட்டில் இல்லை என்றும் இவர்களும் படைப்பாளிகளாக, பொறியியலாளராக, வடிவமைப்பு வல்லுநராக மாற வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறார்.

    நுண்கலைகளில் ஒன்றான கைத்தறி நெசவிற்கு ஊடும் பாவும் தேவை. கி.மு. 4000 லிருந்து தக்ளி அல்லது நூற்புக்கதிர் கொண்டு நூற்றனர். சக்கர வடிவிலமைந்த ராட்டை (சர்க்கா) கி.மு.500 வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.  நெசவுத் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்தவர்கள் சூத்திரர்களே. பிரிட்டிஷ் இந்தியாவில் அந்நிய துணிகளுக்கு எதிராக தேசிய உணர்வைத் தூண்ட ராட்டையைப் பண்பாட்டு அடையாளமாக காந்தி பயன்படுத்தினார். 

   சலவையாளர்கள் தமிழில் வண்ணார் எனவும் தெலுங்கில் சாகலி எனவும் பிற மொழிகளில் டோபி என்றும் வழங்கப் படுகின்றன. இந்தியா முழுவதிலும் உவர் மண்ணை கறைநீக்கியாக பயன்படுத்தியுள்ளனர். உவர் மண்ணுக்கு சவுடுமட்டி என்று பெயர். இந்தியாவின் முதல் சலவை சோப்பு உவர் மண்ணே. இதை நீரில் கலந்து கொதிக்க வைத்து துணிகளை வெளுப்பது தமிழில் வெள்ளாவி எனவும் தெலுங்கில் பட்டி எனவும் அழைக்கப்படுகிறது. உவர் மண் கரையை நீக்க, ஆவி கிருமிகளை அழிக்கிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் பட்டியல் சாதியினராகவும் சிலவற்றில் பிற்பட்ட வகுப்பினராக இருக்கும் வண்ணார்கள் சமூகத்தில் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். 

   கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் எகிப்தியர்கள் முதன்முதலில் முகச்சவரம் செய்துகொண்டதாக வரலாற்றில் பதிவுள்ளது. அதற்கு முன்பே இந்தியாவில் இந்தப் பழக்கம் இருந்திருக்கவேண்டும். சிந்துவெளியில் கிடைத்த நேர்த்தியான தாடியுடைய சிற்பம் இதை உறுதி செய்யும்.

    சமணர்கள் முடியை மழித்துக் கொண்டனர். இவர்கள் மயிரைப் பிடுங்கினர் என்றும் சொல்வதுண்டு. அக்காலச் சாமியார்கள் நீண்ட சடைமுடியுடன் இருந்தனர். ‘கடைச்சாதி’ நாவிதர்கள் தம் முடியைத் தொட இவர்கள் விரும்பவில்லை. இப்போக்கைக் கண்டித்த புத்தர் உபாலி என்ற நாவிதரிடம் முடி மழித்துக்கொண்டார். உபாலியும் அன்றிலிருந்து கவுதம புத்தரின் சீடரானார். சங்கத்தில் ஒழுக்க மேற்பார்வைப் பொறுப்பு உபாலிக்கு வழங்கப்பட்டது. 

   நாவிதர்களே முதலில் வைத்தியமும் அறுவைச் சிகிச்சையும் செய்த மருத்துவர்களாக விளங்கினர். தமிழில் இவர்கள் மருத்துவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இச்சமூகப் பெண்கள் கிராமங்களில் மருத்துவச்சியாக இருந்தனர். அக்காலத்தில் பெண்களுக்கு தம் தலைமுடியை தமது விருப்பப்படி வைத்துக் கொள்ள சமூக அனுமதியில்லை. எனவே பெண்கள் நாவிதர்களாக பணியாற்றவும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வளவு திறமைமிக்க ஓர் சமூகம் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து இன்றி துன்பத்தில் உழல்வது மாற்றப்படவேண்டாமா என்று கேள்வி எழுப்புகிறார்.

     இறுதி மூன்று கட்டுரைகள் உடலுழைப்பைப் பற்றிப் பேசுகின்றன. உற்பத்தித் தொழில்களை அறியாத குருக்கள், போர் வீரர்கள், நிர்வாகிகள், வணிகர்கள் ஆகியோர் கடின உழைப்பை மேற்கொள்ளாது மட்டுமின்றி  எந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும்  உருவாக்காமல் அதன் பலனை மட்டும் அனுபவித்தனர். உழைப்பை இழிவானதாகவும் அதில் ஈடுபடுவோர் முட்டாள்களாகவும் சித்தரிக்கும் போக்கு சமூகக் குற்றமாகும். வாழ்க்கையின் உயிரோட்டமான உழைப்பின் பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். 

   துப்புரவுப் பணியாளர், மருத்துவர் ஆகியோரின் பணிகளும் ஒன்றே. பிணி தீர்க்கும் மருத்துவருக்கும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்கப் படவேண்டும். தோல் தொழிலாளர்களுக்கு பொறியிலாளர்களுக்கு இணையான ஊதியம் இருக்கவேண்டும். உடலுழைப்பையும் அதில் ஈடுபடுவோரையும் சிறுமைப் படுத்தி தீண்டாமைக் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது சரியா என வினா தொடுக்கிறார்.

    உடலுழைப்பில் பாலினப் பாகுபாடு உள்ளது. ஆண்-பெண்ணுக்கான வேலைப் பங்கீடு அறிவீனம். இவர்களில் யாரும் எந்தப் பணியையும் செய்யமுடியும் என்பதே அறிவியல். குழந்தைக்குப் பாலூட்டுதல் தவிர்த்து அனைத்து பணிகளையும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளமுடியும். சிறுவனும் சிறுமியும் சமமாக நடத்தப்படவேண்டும். சம அளவில் உணவு அளிக்கப்படவும் வேண்டும். அனைத்து விதமான பயிற்சிகளும் பெண்களுக்கும் வேண்டும். அப்போதுதான் பெண்களால் திறம்பட செயல்படமுடியும், என்றெல்லாம் வலியுறுத்தும் இந்நூலால் மாணவர்களிடம் ஓர் மாற்றத்தை விதைக்கமுடியும்.

   நமது பள்ளிப் பாடநூல்களில் இந்தப் பாடங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அரசேகூட இதை அனுமதித்தாலும் நமது கல்வியாளர்கள் (!?) விடுவார்களா?


பானை செய்வோம், பயிர் செய்வோம் – நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு’
(ஏழு முதல் பத்தாம் வகுப்பு முடிய படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கும் உதவும் நூல்.)

ஆசிரியர்: காஞ்சா அய்லய்யா
தமிழில்:  அருணா ரத்னம்
ஓவியம்: துர்காபாய் வ்யாம்

முதல் பதிப்பு: 2007  ஆங்கிலம் (நவ்யானா பதிப்பகம், புதுச்சேரி)
தமிழில்: 2009 (துளிகா)
பக்கம்: 148
விலை: ரூ.65

வெளியீடு:

துளிகா,
13, பிரித்வி அவென்யூ,
அபிராமபுரம்,
சென்னை – 600018.
மின்னஞ்சல்: tulikabooks@vsnl.com
இணையம்:  www.tuliabooks.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக