21. வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும்
கடலோடிகள்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
மு.சிவகுருநாதன்
(எதிர் வெளியீடாக டிசம்பர்
2014 –ல் வெளியான, வறீதையா கான்ஸ்தந்தின்
எழுதிய ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை – தமிழகக் கடற்கரை – சுனாமிக்குப் பின் 10
ஆண்டுகள்’ ஆய்வு / பயணக்கட்டுரை நூல் குறித்த பதிவு இது.)
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு வாழ்வாதாரப்
பிரச்சினைகள் குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட 10 கட்டுரைகள் இரண்டு பகுதிகளாக இந்நூலில்
தொகுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் குமுதம் தீராநதி, பூவுலகு, உயிர் எழுத்து,
அம்ருதா, புதிய உலகு, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் சென்ற ஆண்டில் (2014)
வெளியானவை.
கடந்த 10
அண்டுகளாக கடற்கரை சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து வரும் இவர் கன்னியாகுமரி நெய்தல்
படைப்பார்வலர்கள் ஒருங்கிணைப்பில் நெய்தல் வெளி பதிப்பகம் மூலம் 30 க்கு மேற்பட்ட
நூல்கள் வெளியிட்டார். இவர் எழுதிய
நூற்களும் 30 ஐ எட்டுகிறது.
வடக்கே
ஆந்திர எல்லையான பழவேற்காடு முதல் மேற்கே கேரள எல்லையான ஏழுதேசம் முடிய 1076 கி.மீ.
நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட தமிழகம் குஜராத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது
இடத்தில் இருக்கிறது. மேலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில்
மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசு, சமூகம் இவற்றின் பாராமுகம்,
சுனாமிக்குப் பின் இவர்களை உள்நாட்டு அகதிகளாக மாற்றியிருக்கிறது. கடலோடிகள்
எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து இந்நூல் விவாதிக்கிறது.
இக்கடற்பகுதியில் அமைக்கப்படும் செய்யூர், உப்பூர் அனல் மின் நிலையங்கள்,
திட்டமிடப்படும் அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம் - கூடங்குளம் அணுவுலைகள்,
துறைமுகங்கள் – விரிவாக்கம், கிழக்குக் கடற்கரைச்சாலை, ஶ்ரீஹரிகோட்டா ராக்கெட்
ஏவுதளம், சேது சமுத்திரத் திட்டம், அலையத்திக்காடுகள் – பவளப்பாறைகள் அழிவு, பல்வேறு
தொழிற்சாலைகளின் கழிவுகள் போன்ற எண்ணற்ற காரணிகளால் கடலோடிகளின் வாழ்வாதாரம்
கேள்விக்குள்ளாகி உள்ளது.
ஆந்திரா,
இலங்கை, கேரளா ஆகியவற்றுக்கு அருகிலிருக்கும் முறையே பழவேற்காடு, தனுஷ்கோடி,
இரயுமந்துறை (எதிர்கால அத்திப்பட்டி?) ஆகிய மூன்று கடற்கரைகளுக்கும் வலுவான
முடிச்சு இருப்பதுபோல் தோன்றும் எனக் குறிப்பிட்டு அதை விளக்குகிறார். பழவேற்காடு
கழிமுகத்தின் அழிவு தற்போதைய சென்னை
வெள்ளத்தில் உணரப்படுகிறது. சில மாதங்களில் இது மறக்கடிக்கப்படும். 1964
புயலால் அழிக்கப்பட்ட தனுஷ்கோடி கடந்த 50 ஆண்டுகளாக பேய் நகரமாக மாறிப்போனது.
விவசாயிகள்
உள்ளிட்ட எந்த ஒரு பிரிவினரிடம் இல்லாத ஒற்றுமையின்மை மீனவர்களைப் பாகுபடுத்தி
வைத்துள்ளது. 21 சாதிகள், மூன்று மதங்கள், பல்வேறு பொருளாதார நிலை, தொழில்முறை என
வேற்றுமைக்கு அளவில்லை. பாரம்பரிய முறையில் மீன்பிடிப்போர், உயர்தொழில் நுட்ப
மீனவர்கள், பெருமுதலீடுகள் மூலம் மீனவர்களை தனது கட்டுக்குள் வைத்திருக்கும்
மீனவரல்லாத சாதிகள், இவர்களுக்கு அப்பால் கடலைச் சூறையாடும் கார்ப்பரேட்
முதலாளிகள் என பிளவுண்ட நிலையில் பாரம்பரிய மீனவர்களது குரல் ஓங்கி ஒலிப்பதில்லை.
ரெட்டை மடி
வலைகளைப் பயன்படுத்தும் தேவர் – நாடார் சமூகங்கள், பாரம்பரிய மீனவர்களான கடையர் –
வலையர் – கரையார் சமூகங்களிடையே பல கசப்புணர்வு தலைதூக்கியுள்ளது. இவற்றைக் கடக்க
இளைய தலைமுறையினர் உரையாடலைத் தொடங்கவேன்டும் என வலியுறுத்துகிறார்.
கிருஸ்தவத்தில் புரையோடிப் போயுள்ள சாதி பற்றிப் பேசப்படுகிறது.
சிவகங்கையைச் சேர்ந்த 80 பாதிரியார்கள் உள்ளிட்ட 220 உடையார் பாதிரியார்கள்
கத்தோலிக்க தலைமையிடங்களுக்கு அனுப்பியுள்ள தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சியடைய
வைக்கும். “உடையார் பாதிரிகளாகிய நாம் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் எந்தப் பொறுப்பில்
இருந்தாலும் சரி – தலித் கிறித்தவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக
ரீதியில் எந்த உதவியும் கிடைத்துவிடகூடாது என்பதை மனத்திலிருத்திச்
செயல்படவேண்டும்”, (பக். 115) என்பதே அந்தத் தீர்மான வாசகம். சிவகங்கை, இறையூர் போன்று
பல இடங்களில் தலித் கிருஸ்தவர்களுக்கு எதிராக சாதிக் கிருஸ்தவர்கள் திரளும் போக்கு
அதிகரித்துள்ளது. இந்த நிலை மீனவர்களையும் பாதிக்கிறது.
தூத்துக்குடி
மாவட்டம் காயல்பட்டினத்தில் ‘உலகக் காயலர் அமைப்பை’ நடத்திவரும் இஸ்லாமியர்கள் மீனவர்
பிரச்சினைகளில் “எங்கள் சிக்கல்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்”, என்று சொல்லப்பட்டதாக
குறிப்பு இருக்கிறது. இதற்கான பின்புலத்தையும் நாம் ஆராயவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் பழங்குடிகளைப் போல
மீனவர்களை மத ரீதியில் திரட்டும் வேலையைப் பல்லாண்டுகளாகச் செய்து வருகின்றன.
நாகூரில் நடந்த கலவரம் தொடர்பான ஓர் உண்மையறியும் குழுவில் சென்றபோது மீனவ
இளைஞர்கள், அர்த்த ஜாம இளைஞர்கள் சங்கம்,
ஆன்மீக இலைஞர்கள் பேரவை என்றெல்லாம் திரட்டப்பட்டிருப்பத்கையும் அவர்களுக்குள்
வேலைப்பிரிவினை உள்ளதையும் கண்டு அதிர்ந்தோம். பெரியார் பயரைப் பயன்படுத்திப்
பலனடைந்தோர் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றனர். இவ்வாறான அணிதிரட்டல்கள்
இஸ்லாமியர்களை அந்நியப்படுத்துவதையும் கவனிக்கவேண்டும்.
கச்சத்தீவு,
மீனவர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை எதுவானாலும் இங்கு தீர்வுகள்
தொடர்புடையவர்களை கலக்காமல் இறக்குமதியாகிற ஒன்றாகவே உள்ளது. கச்சத்தீவு சிக்கலைப்
போல மன்னார் கடல் சிக்கலில் ஆறு தரப்பு இருப்பது இங்கு எடுத்த்க்காட்டப்படுகிறது.
ஆழ்கடல்
மீன்பிடிக் கப்பல்களைக் கட்டுப்படுத்தி, நமக்குள்ள உரிமையையை நிலைநாட்ட, மஜூம்தார்
கமிட்டி (1976), முராரி கமிட்டி (1997) ஆகியவற்றின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மீன்வள
மசோதா (2009), கடலோர ஒழுங்காற்று
அறிவிக்கை (2011) போன்ற புதிய சட்டங்கள் அமல் செய்யப்படுவதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை
அழிக்கக்கூடிய, சேதுக்கால்வாய், அனல் மின் நிலையங்கள் போன்றவற்றை நிறுவுவதிலும்
அரசு கவனம் செலுத்துகிறது.
புதிய சட்டங்கள், திட்டங்கள் கொண்டுவரப்படும்
போது நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்களின் அபத்தநிலை, தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களின் பணம் சுட்டும் போக்கு ஆகியவை இங்கு விமர்சிக்கப்படுகிறது. அனல் மின்திட்டம்,
இறால் பண்ணைகள் போன்ற பல திட்டங்களின்
மூலம் நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பெரும்பாதிப்பை உண்டாக்கும் அரசு எந்திரம் மாவட்ட
ஆட்சியர்கள் மூலம் ‘கடல் மாசு காப்போம்’, என்று விளம்பரம் செய்வது அவலமன்றி
வேறென்ன?
“இராமேஸ்வரத்திற்கு
வடக்கே ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக் கடற்கரைகளும் பண்ணைச் சுற்றுலா, தொழிற்பேட்டைகள்,
இறால் பண்ணைகள், அணு / அனல் மின்நிலையங்களால் சின்னாபின்னமாகிக் கிடப்பதை”, இந்நூல்
தெளிவுபடுத்துகிறது. (ப. 95) நூலாசிரியரது பயணத்திட்டத்தில் நாகப்பட்டினம்,
திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரைகள் விடுபட்டுள்ளதை இங்கு
குறிப்பிடவேண்டும்.
சதுப்புநிலக்காடுகளுக்கு (அலையத்திக்காடுகள்) பெயர்போன இப்பகுதியில்தான்
மிக ஏராளமான இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு கடலோரம் மட்டுமல்லாது சமவெளியும்
அழிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட எல்லையோரம் (நாகூர்) அமைந்துள்ள காரைக்கால்
தனியார் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதியில் சுமார் 20 தனியார்
அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஒன்று செயல்படுகிறது; எஞ்சியவை
கட்டுமானத்தில் உள்ளன. இந்த தனியார் துறைமுகத்தில் நிலக்கரி சாம்பல் மலைபோல
குவிக்கப்பட்டு இப்பகுதியை மயானக் காடாக மாற்றியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடலோரச்
சமூகங்களில் கணவனால் கைவிடப்படும் மனைவியர் அரிதாக இருப்பார்கள் என்கிற இவரது
நம்பிக்கை இன்று நாட்டில் அரசால் விற்கப்படும் மதுவகைகளால் பொய்த்துப்
போயிருக்கிறது. மீனவ சமூகத்தின் மீதி சில விமர்சனங்களும் இந்நூலி வைக்கப்படுகிறது.
மீனவக் குடும்பங்களில் கழிவறை இல்லாத நிலை இங்கு விமர்சிக்கப்படுகிறது.
கம்யூட்டர், ஹோம் தியேட்டர் டி.வி., புத்தம் புதிய புல்லட் (மதிப்பு: ரூ.
1,40,000), லேட்டஸ்ட் செல்போன் (மதிப்பு: ரூ. 26000) என அனைத்து வசதிகளும்
பொருளாதார நிலையில் முன்னேறியிருந்தும் வீட்டில் கழிவறை இல்லை என்று சொல்லி, மீனவ
சமூகம் நிறைய கற்றுக் கொண்டு ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகரவேண்டும் என
வலியுறுத்தப்படுகிறது. (பக். 91)
மீனவர்களையும் கடலையும் தட்டையாகவும் மொண்ணையாகவும் அணுகும்
தன்மையிலிருந்து மக்களின் பொதுபுத்தியை அகற்ற இந்நூல் உதவும் என்று நம்பலாம்.
இறுதியாக,
நெருடலான ஓரம்சத்தை மட்டும் கூறி முடித்துக் கொள்வோம். “விடுதலைக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில்
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் ஒரேயொருவர்தான் தமிழர். காமராசருக்கு முன்பும்,
பிறகும் தமிழ் மாநிலத்தை ஆள ஒரு தமிழினத்தவன் கிடைக்கவில்லை”, என்றும் மேலும், ”ஆக்கிரமிப்பாளர்கள்,
குடியேறிகள் எனப்படும் பல்லவர், நாயக்கர், தெலுங்கர், வடுகர் எல்லாரையும்
கணக்கிட்டுப் பார்த்தால் இன்று தமிழ்நாட்டில் 60% தமிழ்பேசும் மக்கள்; வெறும் 40%
மட்டுமே ஆதித் தமிழர் (தமிழினத்தவர்)”, என்று எழுதுவது பச்சையான இனவாதமின்றி
வேறென்ன? இந்த இனவெறியும் இனவாதமும் மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று
நூலாசிரியர் கருதுவாரேயானால், தமிழ் தேசிய இனவெறியர்களின் பரப்புரைகளுக்கு பலியாகிவிட்டதாக கணிக்கமுடியும்.
பச்சைத் தமிழர்
காமராசரும் தலித் அமைச்சர் கக்கனும் பண்ணையார்களுக்கு ஆதரவாகவும் ஒடுக்கப்பட்ட
தலித் ஆதித் தமிழர்களுக்கு எதிராக
செயல்பட்டதையும் வரலாற்றில் பார்த்தாகிவிட்டது. இனத் தூய்மைவாதம் எல்லாவற்றிற்கும்
சர்வரோக நிவாரணி என்பதெல்லாம் வெறும் மாயை. தமிழ் அறிவுஜீவிகளும் இதற்கு பலியாவது
பேரவலம்.
‘பழவேற்காடு
முதல் நீரோடி வரை
தமிழகக் கடற்கரை –
சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள் ஆய்வு / பயணக்கட்டுரை நூல்
வறீதையா கான்ஸ்தந்தின்
முதல் பதிப்பு: டிச. 2014
பக்கம்: 147
விலை: ரூ. 130
வெளியீடு:
எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.
பேச: 04259 226012 9865005084
மின்னஞ்சல்:
ethirveliyedu@gmail.com
இணையம்: ethirveliyedu.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக