ஞாயிறு, டிசம்பர் 13, 2015

19. குழந்தைகளின் fantasy உலகம்19.   குழந்தைகளின் fantasy  உலகம்

                 (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                      மு.சிவகுருநாதன்     (‘Books for Children’ வெளியிட்டுள்ள. ச.முருகபூபதியின்  ‘மந்திர மரம் – தாம்போய் குழந்தைக்கதைகள்’  என்னும் சிறுவர் கதைநூல் அறிமுகம்)
 
கதை சொல்லிகள்


 • ஜெயஶ்ரீ,  5 ஆம் வகுப்பு ஆவியூர்
 • முத்தீஸ்வரி, 5 ஆம் வகுப்பு ஆவியூர்
 • டி.பிரவீன், 4 ஆம் வகுப்பு பாரபத்தி
 • சிவா அரவிந்த்,  சேலம்


    ஆகிய குழந்தை கதைசொல்லிகள் சொல்லிய கதைகளைச் சேர்த்தெழுதி (Retold) இந்நூலுள்ள கதைகளை ச.முருகபூபதி உருவாக்கியுள்ளார். பின்வரும் சித்திரக்காரர்களின்  பங்களிப்பில் (கவனிக்க… ஓவியர்கள் அல்ல.) பக்கந்தோறும் வண்ணச் சித்திரங்கள் மிளிர மிக அழகான இந்நூல் உருவானது.

சித்திரக்காரர்கள்


 • அபராஜிதன்
 • மணிவண்ணன்
 • நரேந்தர்
 • கிருஷ்ணப்பிரியா
 • பேய்க்காமன்

    
கதைகள்


 1. கண்ணாடிகளின் ஊர்
 2. மந்திரக் கூந்தல்
 3. மாயக்கண்கள்
 4. பாடும் குகை
 5. தும்மலின் கதை
 6. ஏப்பம் உருவான கதை
 7. அற்புத வயல்
 8. முதலைக் கோமாளி
 9. பேசும் ஷூவும் முதலையும்
 10. மலையும் நண்பனும்
 11. மந்திர மரம்
 12. பொம்மையின் மொழி
 13. கவிதை விரும்பும் அரசன்
 14. விளக்கொளி நிழல்கள்


    ஆகிய 14 கதைகள்  ‘கதைக் கம்பளத்திலிருந்து’ விரிந்து பரவுகிறது. ச. முருகபூபதி, வேலு சரவணன் போன்றோர்கள் பல்லாண்டுகளாக குழந்தைகள் நாடக உலகில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இவர்கள் நாடகங்கள் ‘புரிதல்’ குறித்த கேள்விகள் எழுப்பப் படுவதுண்டு. பெரியவர்களுக்கு வேண்டுமானால் புரியாமற் போகக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு எவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்கள் இல்லை என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன.      சிறுவர்கள் கதை உலகம் fantasy தன்மை மிக்கது. இந்த மாய உலகில் கதைகளின் சிறகுகள் பறவையென விரிகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளவும், இணைந்து பயணிக்கவும் நமக்கு குழந்தை மனநிலை தேவைப்படுகிறது. இது இல்லாதபோது இந்த fantasy உலகம் நம்மை அந்நியப்படுத்துகிறது. இங்குதான் ‘புரிதல்’ பற்றிய சிக்கல் எழுகிறது.

     மனிதர்கள் இல்லாத ஊரில் உருவம் பார்க்கும் கண்ணாடிகள், உணவு, உடையின்றி வந்த ஏழை மனிதர்கள் கண்ணாடியைப் பார்த்து நேர்த்தியான ஆடை ஆபரணங்களோடு மாற, இதைக்கேட்ட வசதி படைத்தோர் வேடமிட்டு கண்ணாடி முன் நின்று பெரும் வறுமைக்குள்ளாக, கண்ணாடியைப் பார்த்த மரங்களும் வயல்களும் செழிக்க, காயமுற்றவர்கள் குணமாக, வயோதிகப் பெண்கள் இளமைத் தோற்றம் கொள்ள, ஒரு கட்டத்தில் கண்ணாடிகள் இவர்களிடமிருந்து தப்பிக்க நிலத்தில் சென்று மறைகின்றன. – இதுதான் முதல் கதையான ‘கண்ணாடிகளின் ஊர்’ கதைச்சுருக்கம். 

   செடிகளாகிக் கொண்டிருக்கும் குழந்தைகளும் கழுதைகளும், பாடல் பெட்டகமான குகை, விடாது சிரிக்கும் முதலை, தன்னைத் தானே சிலையாகச் செதுக்கிக் கொள்ளும் மலை, கண் மூடித் தொடும்போது அனைவருக்கும் வார்த்தைகள் அளித்த ‘வார்த்தைக் குதிர்’ மரம், கவிதை விரும்பிய அரசனை கவிஞனாக்கிய பறவைகள் என்று  முழந்தைகளின் மாயாவுலகம் முடிவற்று நீளும் சிறுமியின் கூந்தலைப் போல நீண்டுகொண்டே இருக்கிறது. 

    இங்கு புதிர் மற்றும் மாயத்தன்மை இருக்கிறதே தவிர ஒற்றை கதாநாயகத் தன்மையும் மையங்களற்றும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இங்கு பெரியவர்கள் குழந்தைகளுக்காகக் கட்டமைக்கும் கதைகளில் தனி நபர் சாகசம், கதாநாயக மையம், புராணங்கள், ஆதிக்க – நீதிச் சொல்லாடல்கள் நிரம்பியிருப்பதைக் கவனிக்கலாம். (எ.கா) அனுமான், சக்திமான், ஹாரி பாட்டர் போன்றவை.

    குழந்தகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதும் அவர்களை சுயமாக சிந்திக்க, செயல்பட விடுவதும், முடிந்தால் நாமும் குழந்தையாக மாறுவதுமே சரியாக இருக்க முடியும்  என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.     இது போன்ற குழந்தைகளின் அக உலகை பிரதிபளிக்கும் கண்ணாடிகளாக நிறைய கதைகள் காடு, மலை, மரம், செடி, கொடி, நீரோடை, மழை என  அனைத்திலும் கருக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய யதார்த்த உலகை அவர்கள் கடக்க முடியும். இதை வெளிக்கொண்டு வந்த முருகபூபதிக்கும் பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.
 

மந்திர மரம் – தாம்போய் குழந்தைக்கதைகள்
 - ச.முருகபூபதி
  
வெளியீடு:  Books for Children
விலை:      ரூ. 60

விற்பனை உரிமை:

பாரதி புத்தகாலயம்,
421 அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

1 கருத்து:

கருத்துரையிடுக