செவ்வாய், டிசம்பர் 01, 2015

பத்தாம் வகுப்பு மாணவர் சுட்டிய பாடநூல் பிழை


பத்தாம் வகுப்பு மாணவர் சுட்டிய பாடநூல் பிழை
                                
                                  - மு.சிவகுருநாதன்

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) சார்பில் இந்தக் கல்வியாண்டில் (2015-2016) மாநில, மாவட்ட முதலிடங்கள், அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெறுவதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமான சிறப்புப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. 

   ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் தலா 100 பேர்கள் வீதம் 68 கல்வி மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 6,800 மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. வார விடுமுறையான சனி, ஞாயிறு மற்றும் அரையாண்டுத்தேர்வு விடுமுறை என 50 விடுமுறை நாட்களில் இப்பயிற்சி திட்டமிடப்பட்டு நவம்பர் 2015 முதல் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது. இப்புதிய முயற்சியை வரவேற்போம்; பாராட்டுவோம்.

   பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் ’19 ஆம் நூற்றாண்டு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்றொரு பாடமுண்டு. மொத்தம் 8 பக்கங்கள் உள்ள இப்பாடத்தில் சமயத்திற்கு 6 பக்கமும் சமூகத்ததிற்கு 2 பக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடத் தலைப்பிற்கு மாறாக சமயத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கருக்கு மூன்று பத்தியும் பெரியாருக்கு ஓர் பத்தியும் போதுமென்று முடிவு செய்துவிட்டார்கள். . என்னே இவர்கள் சமூக அக்கறை! இது போகட்டும். (அம்பேத்கரின் ‘பகிஷ்ஹரித் ஹிதகரிணி சபா’ ‘பகிஷ் கிருத்திகா ராணி சபா’ வானது இப்பாடத்தில்தான்.)

  இப்பாடம் மிகவும் முக்கியமானதாக்கும்! எனவே சுமார் 12 அல்லது 13 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இப்பாடத்திலிருந்து கேட்கப்படும். வரலாற்றில் ‘தலைப்பு வினா’ என்ற ஒரு தலைப்பின் கீழ் நான்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரம்ம ஞானசபை, இராமகிருஷ்ண மடம் ஆகிய 4 தலைப்பு வினாக்களோடு அலிகார் இயக்கம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (இன்னும் அம்பேத்கார் தான்.!) என இறுதியாக இரண்டு வினாவும் பெயருக்கு இடம்பெறும். அலிகார் இயக்கம் வினாத்தாள் தயாரிப்பவர் கண்ணில் படவே படாது. எனவே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரம்ம ஞானசபை, இராமகிருஷ்ண மடம் என்று தொடர்ந்து வினாக்களில் கேட்டுகொண்டே இருப்பார்கள். மதச்சார்பற்ற நாட்டில் நமது கல்வியின் நிலை இதுதான். இதுவும் போகட்டும்.

  ‘இராமகிருஷ்ண மடம்’ என்ற தலைப்பு வினாவில் (அ) இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவர் யார்?  என்ற வினா உண்டு. “தட்சிணேஸ்வரத்திலுள்ள காளி கோயில் அர்ச்சகர்.” என்பது இதன் பதில். ஓர் முறை, “சுவாமி விவேகானந்தரின் குரு.” என்று எழுதினாலும் மதிப்பெண் உண்டு என்றனர். 

   இதைச் சொன்னபோது ஒரு மாணவர், “அவரது  துணைவியார் சாரதாமணிதேவி தான் கோயில் அர்ச்சகர் என்று பாடநூலில் இருக்கிறது.” என்றார். 

  பாடநூலில் இருப்பதைக் கீழே தருகிறேன். 

“இராமகிருஷ்ண பரம்ஹம்சர் வங்காளத்தில் ஓர் பிராமணக் குடும்பத்தில் 1836 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது துணைவியார் பெயர் சாரதாமணிதேவி. இவர் தட்சிணேசுவரம் என்னும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.”  

   இதிலுள்ள முதல் மற்றும் மூன்றாவது சொற்றொடர் மட்டும் இருப்பின் சிக்கலில்லை. நடுவிலுள்ள சொற்றொடர் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. அம்மாணவர் சுட்டிய தவற்றை ஒத்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. 

  உண்மையில் காளி கோயில் அர்ச்சகர் இராமகிருஷ்ண பரமஹம்சரே தவிர அவரது மனைவியல்ல. இந்து மதம் அனைத்து சாதி ஆண்களைக் கூட அர்ச்சகர்களாக இன்றுவரை ஏற்றுக்கொண்டதில்லை. ஓர் பெண்ணை அர்ச்சகராக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்து மதம் உள்ளிட்ட எந்த வைதீக மதங்களுக்கும் வாய்த்ததில்லை என்று அவருக்கு விளக்கம் சொன்னேன். 

  இதிலிருந்து நான் சொல்ல வருவது இதுதான். பாடநூல்கள் தயாரிக்கும் குழுக்களில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மட்டும் இருந்தால் மட்டும் போதாது. இக்குழுவில் மாணவர்களுக்கும் இடம் தரப்பட வேண்டும். 

   பாடத்திட்ட உருவாக்கத்தில் மாணவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். உருவான  பாடநூற்களை மாணவர்கள் குழு மதிப்பீடு செய்ய வேண்டும். மாணவர்கள் சுட்டிக்காட்டும் பிழைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும். இணையத்தில் வெளியிட்டுக் கருத்து கேட்கிறோம் என்று கூறி தப்பித்துக் கொள்ளவேண்டாம். மாணவர்கள் எத்தனை பேருக்கு இணையம் வழியே கருத்துரைக்க வாய்ப்பு கிடைக்கும்?

  இதற்கெல்லாம் முதற்படியாக மாணவர்களை வெறும் களிமண்ணாகப் பார்க்கும் குருகுல மதிப்பீடுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் விடுபடவேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக