24.
சொற்களை ஆயுதமாக
உருமாற்றும் ரசவாதியான கவிஞன்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
மு.சிவகுருநாதன்
நூல் அட்டைப்படம் |
(கொம்பு வெளியீடாக, அக்டோபர் 2012 –ல் வெளியான நக்கீரனின்
‘என் பெயர் ஜிப்சி’ (கவிதைத் தொகுப்பு) கவிதை நூல் குறித்த பதிவு இது.)
கவிதைகளுக்கான வெளியீட்டு வெளி தமிழ்ச்சூழலில் இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். கவிதைகளை முக்கியத்துவமளித்து வெளியிடும் இதழ்கள் கூட அவற்றை
நூலாக்கும் போது தவிர்த்து விடுகின்றன. எனவே கவிஞன் சொந்தச் செலவில் பதிப்பிக்க வேண்டும்
அல்லது பணம் கொடுத்து வேறு பதிப்பகங்கள் மூலம் வெளியிடவேண்டும். வேறு வழியில்லை.
மனுஷ்யபுத்திரன் போல பதிப்பக உரிமையாளராக இருந்தால் எவ்வளவு பெரிய கவிதை நூலை
வெளியிடலாம்.
பதிப்பகங்கள் கவிதை நூற்களை வெளியிடுதல் போலும் வாசகர்கள் அவற்றை வாங்கிப்
படிப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல; விரட்டிப் பிடித்து கையில் திணித்தாவது
படிக்கச் சொல்லவேண்டும். நல்லவேளை இந்த குட்டிக் கவிதைப் புத்தகத்திற்கு அந்நிலை
நேரவில்லை. சொல் வணிகர்களாய் இருக்கும், நக்கீரன் சொல்வது போல” ஒரு பிணத்துக்கும்
உயிரூட்ட முடியாத”, சொற்களுக்காக ஆயிரக் கணக்கில் மரங்களும் காடுகளும் அழிவது
வேதனை.
நண்பர்
நக்கீரன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை வாழ்விடமாகக் கொண்டவர். ‘தட்டான்கள்
பறக்கும் மழைக்காலம்’ இவரது சிறுவர் கதை நூலாகும். மழைக்காடுகளின் மரணம், அலையத்திக் காடுகளும்
அனல்மின் நிலையங்களும், திருடப்பட்ட தேசம், கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்
போன்ற சூழலியல் குறுநூற்கள் பலவற்றை எழுதியுள்ளார். காடு, பூவுலகு, பூவுலகு
மின்மினி, தி இந்து, ஆனந்த விகடன் ஆகிய
பல்வேறு இதழ்களில் சூழலியல் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். 2014
இல் ‘காடோடி’ என்னும் சூழலியல் நாவலைத் (அடையாளம் – வெளியீடு) தந்துள்ளார். ‘என்
பெயர் ஜிப்சி’ என்னும் இக்கவிதை நூலுக்கு 2012 ஆம் ஆண்டு விகடன் விருது பெற்றது.
“அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு”, என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்காவின்
வாக்கியத்துடன் இக்கவிதை நூல் வண்ணத்துப் பூச்சியென சிறகடிக்கிறது. அ முதல் ஃ முடிய
ஓர் கவித்துவமான முன்னுரை ஒன்றை நண்பர் நக்கீரன் தந்துள்ளார். சொற்களுக்கு உயிர் உண்டா?
‘உண்டு’ என்கிறார் கவிதை சொல்லி. அதிகாரத்தை மறுத்து, ஆடைகள் என்கிற பொய்கள் நீங்கிய
நிர்வாணச் சொற்களெல்லாம் உயிர்ப்புள்ளவையே. ‘கடைசிப் பென்சில்’ கவிதை இதைத்தான் வேறு மாதிரி சொல்கிறது.
“இதுதான் கடைசிப் பென்சில்
என்றாள் அம்மா
பென்சிலை சீவ சீவ சுருள்
சுருளாய்
உதிர்கிறது
அம்மாவின் பொய்”. (பக்.26)
நூலின் இறுதியில் நக்கீரன் என்ற தலைப்பில் ஓர் சுயவிமர்சனக் கவிதை இருக்கிறது.
“கோடிழுத்து
தன்னைக் கிழிக்கும்
நீர்ப் பூச்சியை
வேடிக்கை நோக்கும்
கரை மரம்”. (பக்.60)
தமிழின் மூத்த மார்க்சிய – பெரியாரிய சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான
எஸ்.வி.ராஜதுரை அவர்களின் பெரிய கட்டுரைத் தொகுப்பு நூலின் தலைப்பு, ‘சாட்சி சொல்ல
ஒரு மரம்’. (வெளியீடு: விடியல் பதிப்பகம்) நூலின் முன்னுரையில் எஸ்.வி.ஆர்.,
“நானும் ஒரு மரந்தான்;
உயிர் ராசிகளில் விலங்குகள், பறவைகள், பூச்சிப் புழுக்கள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றில்
மிகப் பெரும்பாலானவை போல, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியாத
தாவர இனத்தைச் சேர்ந்த மரத்தை ஒத்தவனாகவே இருக்கச் செய்துவிட்டன”,
என்கிறார். இங்கு மரம் ஓர் குறியீடு. மரம் ஓரிடத்தில் இருந்தாலும் வெறுமனே இருப்பதில்லை. அது ஓர்
உயிர்; எல்லாம் செய்கிறது. உற்றுநோக்கி வேடிக்கை பார்ப்பதோடு இவ்வுலக சாட்சியாய் நிற்கிறது.
கவிதையோ வேறு எந்த செயல்பாடோ அரசியலின்றி ஏது? அது என்ன வகையான அரசியல், யாருக்கான
அரசியல் என்பதில்தான் இருக்கிறது படைப்பின் சார்பு. ‘வெயில் தின்னும் சிறுப் பெண்’
கவிதை, வெள்ளரி விற்கும் பெண் மற்றும் வெள்ளரியோடு பிறவற்றையும் பேசுகிறது. வெள்ளரியில்
இருப்பதோ, “தேசியத்தை பழிக்கும் காவிரியின் நீர்ச்சுவை”. சாம் மாமாவைப் போல வண்ண மூத்திரங்கள்
பெய்து விற்க வெள்ளரி விற்கும் சிறுமிக்கு ஏது திறமை? அதைத்தான் இக்கவிதை சொல்லிப்
போகிறது.
“சாம் மாமா சாம் மாமாதான்
கரிகாற் பெருவளத்தானின் பேரன்கள் பலர்
அவர் தந்த பானத்தைதானே
பலப்பல வண்ணங்களில்
பெருமிதத்தோடு உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்
என்ன இருந்தாலும் சாம் மாமாவின் திறமை
அச்சிறுமிக்கு வரவே வராது
வெயில் தின்று தின்று
அவள் பெய்யும் மெய்நீர்
எப்போதும் எலுமிச்சை நிறம்தானே”.
(பக். 45)
இன்றைய கல்வி முறையை இப்படியும் விமர்சிக்கலாம். ‘ஹெர்பேரியம் தயாரிப்பது எப்படி?’
மலரைக் கொய்து அதன் இயல்பை மாற்றி, நிறம் – மணம் போக்கி, நிழலில் உலர்த்தி குழந்தைகளைச்
சருகாக்குவதுதானே நமது கல்வியின் வேலை. இக்கவிதையின் இறுதி இப்படியாக முடிகிறது.
“விடுபட்ட குறிப்புகள்
01.
ஹெர்பேரியம் தயாரிக்க எப்போதுமே
வகுப்பறைகளே சிறந்த இடம்.
02.
மலர் கிடைக்கவில்லை எனில்
குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்”. (பக்.
54)
சிறிய
இத்தொகுப்பில் 44 சிறிய கவிதைகள் இருக்கின்றன. இவைகளில் குழந்தைமை, சுற்றுச்சூழல் ஆகியவைதான்
உள்ளீடாக உள்ளது. புல்லாங்குழல் துளைகளில் துப்பாக்கி ரவைகளை நிரப்பி வாசிக்கச் செய்யும்
கொடூரம், இருவாட்சிகளோடு வெட்டி வீழ்த்தப்பட்ட ஜெலுத்தோங் மரத்தில் செய்யப்பட்ட பியானோவில்
“இருவாட்சிகளின் ஆழ்ந்த அடர் சோகக் கூவலை”, வாசிக்காத இசைக்கலைஞன், பவளப்பூச்சி, துறவி
நண்டு, ஆலா என கடலோரம், அகதி வாழ்வு, இனவாதப் போரவலம் என்று அனைத்தையும் விட்டுச் செல்கிறது
கவிதை.
‘யுரேகா குளம்’ என்றொரு கவிதை இப்படியாக இருக்கிறது.
“ஆர்க்கிமிடீசின் தொட்டியில்
அயிஸ்டின் அமிழ்கிறான்
வெளியேறிய நீரின் எடை
நாகசாகிக்கு சமமாக இல்லை
இருப்பினும்
ஒரு நீலநிற முண்டாசுக்காரன்
யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு
கூடங்குளம் தெருக்களில்
ஓடிக் கொண்டேயிருக்கிறான்”,
(பக். 15)
இதை அரசியல் கவிதை எனலாமா? பிரச்சாரம் செய்வதல்ல கவிதையின் வேலை. கவிதை தனக்குள்
அரசியலையும் குறியீடுகளையும் அமிழ்த்திக் கொண்டு வாசகப் பரப்பை மேலும் நீட்டிக்கொண்டேயிருக்கிறது.
“நிறமற்ற பூவொன்றை வரைந்தவள்
அதற்கு நிறம் பொருந்துமா
என யோசிக்கிறாள்
எங்கிருந்தோ வந்த
வண்ணத்து பூச்சியொன்று
தன் வண்ணங்களோடு
மகரந்தத்தையும்
அதில் நிரப்பி பறக்கிறது”, (பக். 18)
என்பது போல இக்கவிதைகளை வாசிக்கும் உங்களுக்கும் புது அர்த்தங்களும் வண்ணங்களும்
நிரம்பி வழியட்டும்.
என் பெயர் ஜிப்சி (கவிதைத் தொகுப்பு)
நக்கீரன்
பேச: 9790440220
முதல் பதிப்பு: அக்டோபர்
2012
பக்கம்: 60
விலை: ரூ. 50
தொடர்புக்கு:
கொம்பு வெளியீட்டகம்,
2 –வது தளம்,
கே.எம்.ஜி.நகர்,
கோதை இல்லம்,
தலத்தெரு,
காரைக்கால்.
பேசி: 9952326742
மின்னஞ்சல்:
veilmuthu@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக