வியாழன், டிசம்பர் 10, 2015

18 அ. போராளி ஏஜிகே நினைவுகளில் கீழத்தஞ்சை வரலாறு: சில குறிப்புகள் (முதல் பகுதி)



  18 அ. போராளி ஏஜிகே நினைவுகளில் கீழத்தஞ்சை வரலாறு: சில குறிப்புகள்  (முதல் பகுதி)

                 (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                      மு.சிவகுருநாதன்



(மூத்த போராளி ஏ.ஜி.கே. என்கிற தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் அவர்கள் தனது போராட்ட வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…’, என்ற நூல் ‘ரிவோல்ட்’ பதிப்பகத்தால் டிசம்பர் 2013 இல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பும் பதிவும்: பசு.கவுதமன். மற்றொரு குறுநூல் ‘வெண்மணிச்சூழல்’ ஏஜிகே நேர்காணல், நேர்கண்டவர்: பாவெல் சூரியன். இவற்றைப் பற்றிய ஓர் அறிமுகப் பதிவு இது.)


   “முதல் குற்றவாளியான நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருக்கும் இடது கம்யூனிஸ்ட் கிசான்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதான சந்தேகத்தையும் இடது கம்யூனிஸ்ட்கள் தம்மை குற்ற வழக்குகளில் வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சிப்பதையும் குறிப்பிட்டு இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் முதலாவது குற்றவாளி சென்னை மாகாண முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்ததையும் கூட நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இவ்வாறு பரஸ்பரம் சந்தேகமும் பகைமையும் கொண்ட மனநிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை சிக்கவைக்கும் எண்ணத்திற்குத் தடைபோடுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 42 அப்பாவிகளின் சோகமான கொலைப்பழியையும் அதேபோல் துப்பாக்கிக் குண்டுகள், அரிவாள்கள், சுளுக்கிகள், தடிக்கம்புகள் ஆகியவற்றால் மற்ற பலர் காயப்படுத்தப்பட்ட குற்றத்தையும் அவர் மீது சுமத்தாமல் இருப்பதும் கிசான்களுக்கு சிரமமாக இருந்திருக்க வேண்டும்.” (பக். 429)


   “மேலும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது.” (பக். 435)


(மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் மயிலை பாலு மொழிபெயர்த்த ‘நின்று கெடுத்த நீதி – வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. ஏப்ரல் 06, 1973 சென்னை உயர்நீதிமன்ற வெண்மணிக் கொலையாளிகளை விடுதலை செய்த  மேல்முறையீட்டு வழக்குத் தீர்ப்பிலுள்ள சில வரிகள். பலியான உயிர்கள் 44; 42 என்பது அரசுக்கணக்கு. வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்)


   44 பேர் படுகொலை ஆளும், அதிகார வர்க்கத்தின் மனச்சாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஆண்டுதோறும் டிசம்பர், 25  தோழர் ஏஜிகே குறிப்பிடுவதுபோல தியாகிகள் தினம், அஞ்சலி செலுத்துல் என்பதாக முடக்கப்பட்டிருக்கிறது ஒடுக்கப்பட்ட, விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சி. இது தொடர்ச்சி இல்லாமல் முற்றுப்புள்ளியானது எவ்வளவு பெரிய இழப்பு? அதிகார வர்க்கங்களுக்கு இசைவாக இயக்கங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் மாறிப்போனதன் அவலம் என்று மட்டும் சொல்லிவிடமுடியுமா? வரலாறு / வருங்காலம் நம்மை மன்னிக்குமா?



    டிசம்பர் 14, 1980 இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொன்றழிக்கப்பட்ட நிகழ்வை கவித்துவமாக, “வடவூரில் தொடங்கப்பட்டு ஆய்மழையில் வளர்க்கப்பட்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் இரிஞ்சூரில் புதைக்கப்பட்டது”, என்று தோழர் ஏஜிகே சொல்கிறார். டிசம்பர் 25, 1968 இல் 44 பேரின் படுகொலையோடு ஒடுக்கப்பட்டோர் மற்றும் விவசாயிகள் எழுச்சியும் முடங்கிப் போனதும் பெருந்துயரமல்லவா!


    கீழ வெண்மணிப் படுகொலைக்குப் பிறகு அன்றிலிருந்து இன்று வரை நிறைய இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்னும் நாவல் எழுதினார். இந்தப் பார்வையை மறுத்து சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’ நாவலைக் கொண்டு வந்தார். அதன்பிறகு பாட்டாளி ‘கீழைத்தீ’யை மூட்டினார். ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு இன்னும் வெளியாகவில்லை. இந்நிகழ்வு குறித்து எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு அளவில்லை. ‘மனுசங்கடா’ என்ற இன்குலாப் கவிதைப் பாடல் நினைவிருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமாரின் ‘ராமய்யாவின் குடிசை’ ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வெண்மணி என்று பெயர் சூட்டல்கள் அநேகம் நிகழ்ந்தது.  வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் எழுதிய கவிதையின் தன்மை பற்றி இம்மாத உயிர்மை (டிசம்பர், 2015) இதழில் கூட நஞ்சுண்டனின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 


   வெண்மணி சம்பவத்திற்கு முன்னும் பின்னுமான கீழத்தஞ்சையின் வரலாறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆங்காங்கே தனிப்பட்ட நபர்களின் பதிவுகளிலிருந்துதான் நாம் வரலாற்றைத் தொகுக்கவேண்டியுள்ளது. 

  

    பி.சீனிவாசராவ் – அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்! என்ற என்.ராமகிருஷ்ணனின் குறுநூல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்), மணலி சி.கந்தசாமி – கு.வெ.பழனிதுரை (விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்), செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் – கோ.வீரய்யன் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்), மேலும் இவரது விவசாயிகள் சங்க வரலாறு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க வரலாறு ஆகிய இரண்டு நூற்கள், நின்று கெடுத்த நீதி – வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும் (அலைகள் வெளியீட்டகம்), தியாகுவின் நூல் என ஒன்றிரண்டு நமது பார்வையில் படுகின்றன. அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை, சோலை சுந்தரபெருமாள் தொகுத்த 21 பேரில் வாய்மொழி வரலாறு வெண்மணியிலிருந்து… ஆகியவற்றைத் தவிர பிற  வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்கிற நிலைதான். கவிஞர் வாய்மைநாதன், பேரா.தி நடராஜன் (கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் - பாரதி புத்தகாலயம் ) ஆகியோர் தொகுத்த  பாடல்கள் கொஞ்சம் இருக்கின்றன. வெண்மணி நிகழ்வு, அக்காலப் போராட்டங்கள், பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. போன்ற தலைவர்களைப் பற்றிய வாய்மொழிப்பதிவுகள் வரலாறுகள் ஏன் தொகுக்கப்படவில்லை?  ராமய்யாவின் குடிசையின் சுவர் மீதியை ஓவியமாக வரைந்து வைக்காமல் விட்டு விட்டோம் என்று தோழர் கோ.வீரய்யன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். (இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. எனது பார்வைக்கு பட்டவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். விடுபடுதல்கள் இருக்கலாம். இருந்தால் தெரிவிக்கவும்.)




    இவையனைத்திலும் இயக்கம் அல்லது தனிநபர் சார்ந்த பார்வைகளே பதிவாகியுள்ளன. சமகால கீழத்தஞ்சை வரலாற்றை நடுநிலையுடன் அணுகும் பிரதியை இனிதான் யாரேனும் உருவாக்க வேண்டும். நடுநிலை என்பதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை இந்நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இம்மாதிரியான தனித்தனி வரலாற்றுப் பதிவுகள் பிற்காலத்தில் முழு வரலாற்றை எழுத உதவலாம். அந்த வகையில் மூத்த போராளி ஏ.ஜி.கே. அவர்களின் நூல் முக்கியத்துவம் ஒன்றாக உள்ளது. பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. ஆகியோர் கீழத்தஞ்சை விவசாய எழுச்சியை முன்னெடுத்த முக்கியமான ஆளுமைகள். முதலிருவர்கள் பற்றிய சுயபதிவுகள் இல்லாத போது ஏஜிகே உடைய  இந்நூலின் முக்கியத்துவம் விளங்கும். 


      வெண்மணி குறித்தப் பதிவுகளே முறையாக இல்லாத போது, அதற்கு முன்னும் பின்னுமான வரலாற்றை எங்கே தேடுவது? தமிழர்களுக்கு வரலாற்று உணர்வில்லை என்று அடிக்கடி சொல்வதைப் போல தப்பித்துக் கொள்ளமுடியுமா? இருண்ட காலம் என்று சொல்லி அழித்தொழிக்கப்பட்ட களப்பிரர் வரலாற்றை இலங்கை பவுத்த நூற்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றையும் பிற ஆய்வுகளையும் கொண்டு மயிலை சீனி.வேங்கடசாமி போன்றோர் வரலாற்றைத் திருத்தி எழுதினர். இங்கு சமகால வரலாற்றைத் தவறவிட்டோமே என்று ஏக்கமும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி சரியான பாதையில் பயணிக்கவில்லை என்ற தவிப்பும் உண்டாவது தவிர்க்க முடியாதது. 


   தோழர் சேர்த்து வைத்திருந்த குறிப்புகள், ஆவணங்கள், தேதிவாரியான விபரங்கள், நடந்த விவாதச் சான்றுகள் எல்லாம் 1969 இல் போலீஸாரின் அராஜகச் சூறையாடலில் அழிக்கப்பட்டன என்பதைப் படிக்கும்போது, காவல்துறை, ராணுவம், போர் மூலம் இத்தகைய அழிப்பு வேலைகளைச் செய்வதுதானே கடமையாக வைத்திருக்கின்றன. இங்கு சமண, பவுத்த சின்னங்கள், இடங்கள், யாழ் நூலகம், ஆப்கன் பவுத்த சின்னங்கள் ஆகியவை இவ்வாறுதான் அழிக்கப்பட்டன. கீழத்தஞ்சையின் ஒரு பகுதி வரலாறு அழிந்த வருத்தம் ஒருபுறமிருக்க, தனது அபார நினைவாற்றல் மூலமாக அதில் பெருமளவு ஈடு செய்த மகிழ்ச்சியும் இருக்கிறது. சான்றாதாரங்கள், ஆவணங்கள் தான் இல்லை. சில பெயர்கள் விடுபட்டிருக்கல்லாம். ஆனால் நிகழ்வுகள் கோர்வையாக அடுக்கி 200 பக்கங்களுக்கு மேல் விவரிக்கும் நினைவாற்றல் அபாரமானது. 


   இதை என்னுடைய சுயசரிதை என்று கருதிட வேண்டாம் என்கிறார் ஏஜிகே. அப்படி சுய சரிதையாக இருந்தாலும் தவறொன்றுமில்லை. போராட்டமே வாழ்வு என்றான பிறகு, ஒரு போராளிக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. சித்தாந்தம், போராட்டம் என்பதான வாழ்வு முறையுடன் வாழ்க்கையை இணைப்பதில் என்ன தவறிருக்க முடியும்? போராளிகளின் சுயசரிதைகள் அவர்களது அகவாழ்வை மட்டும் பேசுவதாக இருந்ததில்லை. 


    முக்கொலை வழக்கில் தூக்குத்தண்டனைக் கைதியாக தூக்குமேடை வரை சென்று திரும்பிய தோழர் ஏஜிகே, 24 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, விவசாயத் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஈடாக சிறைப்பட்டோருக்கான போராட்டங்கள் என அவரிடம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது. அந்த வரலாறுகள்  பதிவு செய்யப்படாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. இப்போது வெளிவந்திருப்பது ஓர் துளிதான் என்று எண்ணத் தோன்றுகிறது. 


    இந்நூலில் தனது தந்தையைப் பற்றிச் சொல்லும்போது  பர்வதராஜ குலம் (உடையார்) என்பதைச் சொல்லுகிறார். இதை யாரவது வித்தியாசமாக பார்க்கக்கூடும். அதற்காக ஓர் உதாரணத்தைக் கூற விரும்பிகிறேன். எல்ஜிஎஸ் என்று அழைக்கப்பட்ட இல.கோவிந்தசாமி என்ற ஓர் இடதுசாரி இயக்கத் தோழரை ‘சஞ்சாரம்’ இரண்டாவது இதழுக்காக நேர்காணல் (2008) செய்தேன். அதில் அவரிடம் கேட்ட முதல் கேள்விக்கே தந்தை, தாய் வர்க்கம், சாதி, மதம், மொழி ஆகியவற்றை சொல்லித்தான் பேசத் தொடங்கினார். அவர் ‘இந்திய மக்களாட்சி இயக்கம்’ என்றொரு அமைப்பைக் கட்ட முனைந்தார். அதன் உறுப்பினர்களுக்கு மேலே சொன்னவற்றை முன் நிபந்தனையாக்குவதாகவும் கூறினார். சாதியொழிப்பை முன்னெடுக்கிற இடதுசாரிக் கொள்கையுடையோர்  சாதி, வர்க்கத்தைப் பதிவு செய்வதும் சாதியவாதிகளின் செயல்பாடுகளும் ஒன்றாகாது.  (2009 இறுதியில் அவர் மரணமடைந்தார். இதழும் அந்த நேர்காணலும் இதுவரையில் வெளியாகவில்லை.) 

 
   கிராம நலச்சங்கம், திராவிடர் கழகம்., திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மீண்டும் தி.க., 2000 லிருந்து தமிழர் தன்மானப் பேரவை என்ற தனி அமைப்பு என்கிற மாற்றங்கள் ஏஜிகே வின் பொது வாழ்வில் நிகழ்ந்துள்ளது. பெரியாரியம், மார்க்சியம் என்ற அடிப்படைக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான சாத்தியப்பாடுகளில் ஒன்றாகவே இதை நாம் அணுகவேண்டியுள்ளது. இறுதியாக அவர் வந்தடைந்த தமிழ் தேசிய அடையாளம், இங்கு பலரால் கட்டமைக்கப்படும் இனவாத அரசியலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றே கூறலாம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் சில மார்க்சியர்கள் (உ.ம். கோவை ஞானி) வலியுறுத்தும் மார்க்சிய தமிழ் தேசியத் தொடர்ச்சியை இதில் காணமுடியும். 


     இந்திய வரலாற்றில் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லமுடியும். அவர்தான்  அண்ணல் அம்பேத்கர். பஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்) மூலம் தலித் உரிமைப் போராட்டங்கள், பிறகு சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுதல், பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் பங்கேற்றல், அரசியல் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெற்று தனித்துவமான பங்களித்தல், நேரு அமைச்சரவையில் பங்கேற்பு, அதிலிருந்து விலகி குடியரசுக் கட்சியை தொடங்குதல், இறுதியாக இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தம் தழுவுதல் என்கிற பல்வேறு நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் தலித் மீட்சி – விடுதலை ஒரே நோக்கமே. பவுத்தம் தழுவியதும் இம்மாதிரியான ஓர் அரசியல் நடவடிக்கையே. இம்மாதிரியான தன்மைகள் ஏஜிகே வின் பொதுவாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது.


     நூற்களுக்குள்ரண்டாம் குதியில் பயணிப்போம். இறுதியாக ஒன்று. நூலாக்கம், அச்சு, எழுத்துரு அளவு, மாதிரி  போன்றவற்றில் இன்றுள்ள எவ்வளவோ நவீன வசதிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். தேவையற்ற இடைவெளிகளைக் குறைத்தால் பக்கங்கள் மேலும் குறையும். எனவே விலையும் குறையும். மக்கள் போராட்டத்திற்காக வாழ்வைத் தொலைத்த போராளி ஏஜிகே யை அனைவரும் வாசிக்க வாய்ப்பு ஏற்படும். அடுத்த பதிப்பில் இது சரி செய்யப்படும் என்று நம்புவோம். 

               
              (தொடரும்… இரண்டாம் பகுதியில்...)


01.ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… (நாகை தாலுக்கா விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சி)

தொகுப்பும், பதிவும்: பசு.கவுதமன்
பேச: 9884991001

வெளியீடு:

இளங்கோவன்
பேச: 9786540367

ரிவோல்ட் பதிப்பகம்,
சாக்கோட்டை,
கும்பகோணம்.

முதல் பதிப்பு: டிசம்பர்  2013
பக்கங்கள்: 217
நன்கொடை: ரூ. 185 

02.வெண்மணிச் சூழல் 

தோழர் அ.கோ.க. (ஏஜிகே) நேர்காணல்
நேர்கண்டவர்: பாவெல் சூரியன்

மூன்றாம் பதிப்பு: கி.பி. 2015

வெளியீடு:

பாவாணர் பதிப்பகம்,
வேலங்குடி – 610109,
கீழப்படுகை – அஞ்சல்,
திருவாரூர் – வட்டம்.
பேச:  9842011244

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக