சுயநிதிப்பள்ளிகளாக
மாறும் அரசு உதவிபெறும் பள்ளிகள்
மு.சிவகுருநாதன்
தமிழக முன்னாள் முதல்வரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான
மு.கருணாநிதி இரு நாட்கள் திருவாரூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சின்னசேலம் (பங்காரம்) எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும்
யோகா மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்காவின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் சொல்லி
ஒரு லட்சம் இழப்பீட்டை கட்சியின் சார்பில் வழங்கியிருக்கிறார். தனது தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ. 7.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். காட்டூர்
அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல அரசுப்பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்
கொள்வோம். இன்னும் மீதமிருக்கிற தொகையையும் செலவு செய்ய வேண்டிய தேவை மிகவும் பின்தங்கிய
திருவாரூர் பகுதிக்கு உண்டு என்றபோதிலும் இனி அதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இத்திட்டங்களைச்
செயல்படுத்தத் தடையாக உள்ள அரசியல் காரணங்களை இங்குச் சொல்லவேண்டியதில்லை.
திருவாரூரில்
தான் படித்த பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20 லட்சம் செலவில் 3 கூடுதல்
வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதனை மு.கருணாநிதி திறந்து வைத்திருக்கிறார். தனது
பால்ய நினைவுகளை அந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க செய்தி
என்னவென்றால் அவர் படித்தபோது அரசுப்பள்ளியாக இருந்து, பக்தவச்சலம் முதல்வராக இருந்த
காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இப்போது இது அரசு உதவி பெறும் தனியார்
பள்ளி. பேரா.க.அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இப்பள்ளிக்கு ‘நமக்கு
நாமே’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ 60 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இங்குதான் நான் தொடர்ந்து வலியுறுத்தும்
சிக்கல் இருக்கிறது. தனியார் பள்ளிகள் என்று பொதுவாகச் சொல்வது சரியாக இருக்காது. அரசு
உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள் (அரசின் உதவி பெறாத) என்றே சொல்லவேண்டும்.
நமது அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக பள்ளிக்கல்வி முற்றிலும் வணிகமயமாகியுள்ளது.
கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை சாமான்ய மக்களுக்கு உறுதிப்படுத்த
எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று WTO வின் GATS ஒப்பந்தத்தின் மூலம் உயர்கல்வியும்
வியாபாரமாக மாறப்போகிறது. இனி கல்வி ஏழைகளுக்கு எட்டாத சோழர்கள் காலகட்டத்திற்கு செல்லப்
போகிறோம். சோழர் கால பெருமிதங்களில் உழலும் நமக்கு இது மகிழ்வளிக்கக் கூடியதாக இருக்கலாம்.
மக்கள் நல அரசு (welfare state) என்பதெல்லாம் வெறும் ஏட்டில் மட்டுமே!
சுயநிதிப்பள்ளிகளின் கல்விக்கொள்ளை பற்றி சொல்லவேண்டியதில்லை. நாம் இங்கு சொல்ல
வருவது அரசு உதவி பெறும் பள்ளிகள் என்ற போர்வையில் உள்ளுக்குள் ஓர் சுயநிதிப்பள்ளியை
நடத்தும் மோசடியைத்தான் எதிர்க்கவேண்டும், தடுக்கவேண்டும் என்கிறேன். இதற்கும் அரசின்
தவறான கொள்கைகளே காரணம். இவர்களுடைய பள்ளி வளாகத்திலேயே சுயநிதிப்பிரிவுகள் தொடங்க
அனுமதித்தது மாபெரும் தவறு. பல அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதிப்பிரிவுகளில் படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை உதவி பெறும் மாணவர்களைவிட மிக அதிகமாக உள்ளது. இங்கும் கல்வித்
தீண்டாமை நடைமுறையில் இருக்கிறது. ஒரே வளாகத்தில் சீருடையில் கூட வேறுபட்ட இரண்டு வர்க்க
பேதத்தை உருவாக்குவது எவ்வளவு விபரீதம்?
மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு பள்ளிகளின் பரப்பளவு அதிகரிக்கவேண்டுமல்லவா?
அரசு உதவிபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது வசதிகளை இழந்து, சென்னையை
விட்டு துரத்தப்பட்ட பூர்வகுடி மக்களைப் போன்று விளிம்பில் இருக்கவேண்டிய அவலம் யாராலும்
கண்டுகொள்ளப்படாதது. தனியார் பள்ளிகளை வளர்த்துவிடும் அரசுகள் அரசு உதவி பெறும் பள்ளிகளையும்
வணிகமயமாக்க உதவுவது அரசியல் சட்ட மீறல்.
அரசின் உதவியால் செய்யப்படும் வசதிகள் முழுமையாக
அரசு உதவிபெறும் மாணவர்களுக்குக் கிடைக்கும்
என்ற உத்தரவாதம் இல்லை. புதிய வகுப்பறைகள், வசதிகள் எது வந்தாலும் சுயநிதிப் பிரிவுகளுக்கே
சென்று சேரும். அவர்களிடம் பணம் வாங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு வசதி என எளிய சமன்பாடு
போடப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓர் தீண்டாமைச் சேரியை அரசும் அதிகார வர்க்கமும்
திட்டமிட்டு உருவாக்குகிறது.
சுயநிதிப் பிரிவே இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள் கிராமங்களில் இன்றும் உண்டு.
அவர்களது பணி மகத்தானது. ஆனால் அவர்களுக்கு இம்மாதிரியான உதவிகள் கிடைப்பதில்லை என்பது
வேதனை தரும் உண்மை. பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிக்கணக்கில்
மானியம் வழங்கிவிட்டு, அமார்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டும் 100 நாள்
வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதுதான் நமது அரசுகளில் வேலை. கல்வி,
சுகாதாரம் போன்ற அடிப்படையானவற்றில் வியாபாரத்தைத் தடுத்து அரசே இவற்றை மக்களுக்கு
அளிக்கவேண்டும்.
இந்த உதவி அளிப்பதில் சட்டப்படி குற்றமில்லை
என்று வாதிடுவது எளிது. பல்லாண்டாக மது விற்பனையும் சட்டப்படியே நடக்கிறது. அதை முறைப்படுத்துதல்,
குறைத்தல், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல் என்றெல்லாம் ஏன் பேசுகிறோம்.
மதுவின் வருமானம் பற்றி மட்டும் பேசும் பலர் அதனால் அரசுக்கு ஏற்படும் மருத்துவம் உள்ளிட்ட
இதர செலவினங்களைப் பற்றி யாரும் வாய்திறப்பதில்லை. கல்வி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை
ஏன் அரசுகள் மேற்கொள்வதில்லை? அரசியல்வாதிகளே கல்வி வியாபாரிகளாக இருப்பதுதான் காரணமா?
தமிழகத்தில்தான் கல்லூரிகள் அதிகம் உள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் சாதனையாகக்
குறிப்பிடுகிறார். இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் அதிக கொலைகள், தற்கொலைகள் நடைபெறும்
சாதனையையும் இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் பாதி அரசுக்கல்லூரி என்றாலுகூட உண்மையாக பெருமைப்படலாம். தமிழகத்தில்தான் கல்விக்
கொள்ளியர்கள் அதிகம் என்பதுதானே இதன் பொருள். வெறெந்த தொழிலைக் காட்டிலும் கல்வி சிறந்ததாக
இருக்க யார் காரணம்? ‘அரசுப்பள்ளிகளைக் காப்போம்’ என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்
நடத்தும் நிலையில் அரசும் அதிகார வர்க்கமும் தனியாருக்குச் சேவை செய்வது வருத்தமளிக்கக்கூடியது.
உதவிபெறும் பள்ளிகளை நடத்துபவர்கள் தங்களால் முடியவில்லை என்றால் முகவாண்மையை
அரசிடம் ஒப்படைக்கலாம். அதற்கான அரசின் உதவிகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு சுயநிதிப்பள்ளிகளாக
மாற்றிவரும் கொடுமையை என்னவென்பது? இதன் மறுபுறம் அரசுப்பள்ளிகளுக்கு எந்த உதவிகளும்
தேவையில்லை, அவைகள் தன்னிறைவடைந்துவிட்டன என்று பொருளல்ல.
40% ‘கமிஷன்’ திட்டத்தின் கீழ் கட்டப்படும்
அரசுப்பள்ளிக் கட்டடங்களின் ஆயுள் கேள்விக்குரியது. மவுலிவாக்கம் அடுக்குமாடியை போன்ற
நிலை அரசுப்பள்ளிக் கட்டடங்களுக்கு என்றும் உண்டு. ஒரு சில மெழுகுவர்த்திகளை வாங்கி
அஞ்சலி செலுத்திவிட்டு போய்விடலாம். சாமான்ய மனித உயிர்கள் அவ்வளவு கேவலமானதா?
அரசுப்பள்ளிகளில் கழிவறை கட்ட உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்தும் அத்தகைய
வசதிகள் இன்னும் செய்து கொடுத்தபாடில்லை. உலர்கழிவறைகளைக் கட்டுவது சட்டத்தால் தடை
செய்யப்பட்டபோதிலும் இன்னும் தண்ணீர் வசதி இல்லாத வெறும் கழிவறைகளைத்தானே பள்ளிகளில்
கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
“தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்”, என்று சொல்லும் வழக்கமுண்டு. அரசுப்பள்ளிகள்
கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பெறாத நிலையில் அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும் தனியார்
பள்ளிகளுக்கு அரசு நிதியை இதுக்கீடு செய்வது நியாயமல்ல. மேலும் கல்வி வணிமயமாவதைத்
தடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளின் முறைகேடுகளைக் களையும் பொறுப்பும் அரசு, அரசியல்வாதிகள்,
அதிகார வர்க்கம் ஆகியோருக்கு உண்டு.
இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்:
musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010