பெண்கள்
சபரிமலையில் நுழைந்தால் தீட்டாகிவிடுமா? அய்யப்பன் பிறப்பே அசிங்கமான கதையல்லவா!
பொ.இரத்தினம் மு.சிவகுருநாதன்
சபரிமலை அய்யப்பன் கோயிலில்
அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் எனக்கோரி இளம் வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட
பொது நல வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்களை
கோயிலுக்குல் நுழைய அனுமதி மறுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி கேரள
அரசுக்கும் சபரிமலை தேவசம் போர்டுக்கும் அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கைத்
தொடுத்த இளம் வழக்கறிஞர்கள் இது குறித்து இதுவரையில் 500 -க்கும் மேற்பட்ட மிரட்டல்கள்
வந்துள்ள நிலையில் வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னபோது, இந்நிலையில் வழக்கைத் திரும்பப்
பெறுவது சாத்தியமில்லை என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
‘தினமணி’யின்
பார்ப்பன இந்து மத வெறித்தனம் நாடறிந்த ஒன்று. அதன் ஒரு பகுதியாக சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது
குறித்த வழக்குக் குறித்து தனது தலையங்கத்தில்
வழி அடிப்படைவாத இந்து மத வெறித்தனத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. (‘தலையீடு கூடாது!’ தலையங்கம், ஜனவரி 15, 2016) மக்கள்தொகையில் சரிபாதியாக
இருக்கும் பெண்ணினத்தையும் இந்திய அரசியமைப்பையும் ஒருசேர இழிபடுத்தியிருக்கும்
தினமணியை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். ‘தினமணி’ நாளிதழை முற்றாகப் புறக்கணிப்பது
போன்ற நடவடிக்கைகளைக் கூட எடுக்கலாம். தினமலத்தைப் போல (தினமலரின் வேறு பெயரிது)
தினமணியும் புறக்கணிக்கப்பட வேண்டும்; கொளுத்தப்படவும் வேண்டும். மிகவும்
கெட்டித்தட்டிப்போன இந்த ஆணாதிக்க, சாதீய, வருணாசிரம சமூகத்தில் இதற்கான எதிர்வினை
பெரிதாக இல்லாமலிருப்பது கவலை தரும் செய்தியாகும்.
மதம் மற்றும் மக்களின்
நம்பிக்கைகள் சார்ந்த பிரச்சினைகளில் அரசும் நீதிமன்றமும் தலையிடக்கூடாதாம்! நம்பிக்கைகளைக்
கேள்வி கேட்கத் தொடங்கினால் பட்டியல் நீண்டுகொண்டே போகுமாம்!! பார்ப்பன வருணதர்ம,
மனுநீதிச் சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கும் இவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை
தீர்த்துக்கட்ட முனைகிறார்கள். இவர்களுடைய அதிகாரம் கேள்விக்குள்ளாகும் போதெல்லாம்
நம்பிக்கைகளிடம் சரணாகதி அடைகிறார்கள். சாதி, தீண்டாமை, வருணாசிரமம், சதி என்னும்
உடன்கட்டையேறுதல், நரபலி, குழந்தைத் திருமணம், விதவைக் கொடுமைகள், பலியிடல்
எல்லாம் நம்பிக்கைகள் தானே? இதை ஏன் நீங்கள் செய்வதில்லை?
இன்று பெண்களை மடியில் வைத்துத்
தாலிகட்டுபவர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை. கணவன் இறந்தால்
மொட்டையடித்து, வெள்ளுடை உடுத்தி மூலையில் உட்கார வைப்பதில்லை. குடுமியை வெட்டவும்
கடல் தாண்டி பயணம் செய்யவும் பயப்படுவதுமில்லை. திருமணமாகாத முதிர்கன்னிகளும்
அதிகம் உண்டே! ஆனால் மாதவிலக்கான பெண்கள் மட்டும் இன்னும் கடவுளுக்கு ஆவதில்லையே
ஏன்?
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு?”, “கல்லானாலும்
கணவன், புல்லானலும் புருஷன்” என்பது போன்ற சொல்லாடல்களை உற்பத்தி செய்த ஆரியர்கள் இதற்காக
புராணங்களையும் புனைவுகளையும் உருவாக்கினர். இந்து மதப் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தவே
அம்பேத்கர் சமஸ்கிருதம் கற்றார். “அன்றைய அரசர்களில் மிகவும் ஒழுக்கங்கெட்டவன் ராமன்”,
என்று வால்மீகி முனிவர் குறிப்பிடுவதை ‘இந்துமதத்தின்
புதிர்கள்’ என்னும் நூலில் விவரிக்கிறார்.
வங்காளத்தைச்
சேர்ந்த பிராமணரான ராஜாராம் மோகன் ராய் சதி என்னும் உடன்கட்டையேறுதல் என்கிற கொடிய
இந்துமதப் பழக்கத்திற்கு எதிராகப் போராடினார். சமஸ்கிருதம் தேவையற்ற, குழப்பமான, மக்கள்
மத்தியில் வழங்கமுடியாத மொழி என்றும் வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்
என்றும் இவர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
திருவாங்கூர் தேவஸ்தானம் எவ்வாறு வழக்காட வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் ‘தினமணி’
மாதவிலக்கான பெண்களை அனுமதிக்க மறுப்பது மரபு சார்ந்தது, நடைமுறை அறிவியல் சார்ந்தது
என்று வாதிடுகிறது. இவர்களின் மூடநம்பிக்கைகளை அறிவியல் என்று சொல்லி மதவெறியை ஊட்டும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி பிரதமர் மோடி, விநாயகர் சிலையில் உள்ள மனித உடல், யானை முகம் அக்காலத்தில் பிளாஸ்டிக்
சர்ஜரி நுணுக்கங்கள் அறிந்ததற்கான ஆதாரம் என்று பேசினார். சில நாட்களுக்கு முன்பு மைசூருவில்
நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் சிவனையும் சுற்றுச்சூழலையும் சம்மந்தப்படுத்தி ஆய்வுக்கட்டுரை
வாசிக்கப்பட்டது. நோபல்பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்,
மாநாடு அறிவியலை ஒதுக்கி மதத்திற்கும் புராணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு
‘சர்க்கஸ்’ போன்று நடத்தப்படுகிறது. இனிமேல் இம்மாநாடுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை
என்றும் அறிவித்தது நினைவிருக்கும்.
அய்யப்பன் நைஷ்டீக பிரம்மாச்சாரியாம்! இந்து மதத்தில் திருமணம் செய்யாத துறவறத்திற்கு
இடமேது? சமண, பவுத்த மதங்களிலிருந்து கடன் வாங்கிய துறவை தங்களுடையதாக பறைசாற்றிக்
கொள்ளும் இந்துத்துவ மூடர்கள் இதை அறிந்ததுண்டா?
இந்து மதத்தினர் மனிதவாழ்வை ஆசிரமம் என
நான்காகப் பிரிக்கின்றனர்.
பிறப்பிலிருந்து 16 வயது வரை உள்ள குழந்தைப்பருவம் தவிர்த்து பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம்,
சந்நியாசம் என்றும் இந்துமதம் வரையறுக்கிறது.
இங்கு பிரம்மச்சரியம் என்பது 16 – 24
வயதுக்குள், அதாவது திருமணத்திற்கு முன்பு மட்டுமே. அதன்பிறகு 56 வயது வரை குடும்ப
வாழ்க்கை (கிரகஸ்தம்). 56 வயதிற்குப் பிறகு துறவுக்கான ஆயத்தநிலை (வனப்பிரஸ்தம்).
இறுதியாக சந்நியாசம் (துறவுநிலை).
ஆனால்
இங்கு நடப்பது என்ன? இந்துமதம் மற்றும் அதன்பிரிவுகளில் திருமணம் செய்துகொள்ளாமல்
துறவறம் மேற்கொண்டு வாழ்வது புகழுக்குரிய ஒன்றாக உள்ளது. இந்து மதத்தை காப்பாற்றப்
போவதாகச் சொல்லும் பலர் இவ்வாறான வாழ்வை மேற்கொண்டுள்ளனர். சங்கராச்சாரிகள், சைவ
மடாதிபதிகள், பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற அனைத்து சாமியார்களும் இதில்
அடக்கம். இவர்கள் உண்மையில் இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்களா? அப்படி என்று ஒன்று
இந்து மதத்தில் இருக்கிறதா என்ன?
இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள்
திருமணம் செய்துகொள்ளாமல் துறவறம் மேற்கொள்வது இந்து மதத்தின் கொள்கை அல்ல. சமணம்
போன்ற பிறமதக் கொள்கையான துறவறத்தையே இவர்கள் காப்பியடிக்கின்றனர். அதைக்கூட
ஒழுங்காக, முழுமையாக செய்யாமல் ஆடம்பரமான போலித் துறவறம் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பாலியல், கொலை வழக்குகளில் சிக்குகின்றனர். இந்துத்துவ
ஆதிக்க சக்திகளின் துணையிருப்பதால் பிரேமானந்தா தவிர பிற மோசடிப் பேர்வழிகள்
தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை.
பவுத்த சங்கம் அமைத்தக் காலகட்டத்தின்
ஆணாதிக்கச் சூழலில் சங்கத்தில் பெண்களை இணைப்பதில் புத்தருக்கும் தயக்கமிருந்தது. தோழர்களின்
வேண்டுகோளை ஏற்ற புத்தர் சங்கத்தில் பெண்துறவிகளுக்கு இடமளிக்கிறார். தனது சித்தி
கவுதமியே முதல் பிக்குணியாகிறார்.
இவரது காலத்தில் விவசாய சமூகம் எழுச்சி
பெறுகிறது. கால்நடைகள் இவர்களுக்கு பேருதவி புரிகின்றன. ஆரியர்கள் தங்களது
சடங்குகளில் நூற்றுக்கணக்கான கால்நடைகளைப் பலியிடுகின்றனர். உணவுக்காக
விலங்குகளைக் கொல்வதை எதிர்க்காத புத்தர் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளை ஒட்டுமொத்தமாக
யாகங்களில் பலியிடுவதை கடுமையாக கண்டிக்கிறார். பிற்காலத்தில் ஆரியர்கள் இத்தகைய
மதங்களிடமிருந்து சைவ உணவுப் பழக்கத்தைக் கடன்பெற்றனர். பசு புனிதம் போன்ற கற்பிதங்களைக்
கட்டமைத்தனர்.
மாதவிலக்கான பெண்கள் உடலில் எற்படும்
மாற்றங்களினால் அந்த நாட்களில் முழு ஓய்வு தேவை என்பதுதான் அக்கால நடைமுறையாம். ‘தினமணி’
தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அந்த நாட்களில் ஊதியத்துடன்
கூடிய விடுப்பை வழங்குமா? விருப்பம், நம்பிக்கை என்று கதைக்கும் இந்த வருணாசிரம,
மத வெறியர்கள் மாட்டைப் பாதுகாக்க கூக்குரலிடுவார்கள். சக மனிதர்கள், பெண்களைத்
தீட்டு முத்திரை குத்தி ஒதுக்குவதை கடவுள், வேதங்கள், புராணங்களின் வழி நியாயப்படுத்துவதை விட வேறு அயோக்கியத்தனம்
இருக்கமுடியாது.
நேதாஜியின்
இந்திய தேசிய ராணுவத்தில் லெட்சுமி சேகல் என்ற பெண்தான் தளபதியாகச் செயல்பட்டார். ஆதிகாலம்
தொட்டே பெண்கள் சமூகத்தின் அனைத்துப் பணிகளிலும்
ஈடுபட்டனர். ஆதிச்சமூகம் தாய்வழிச் சமூகமாகவே பரிணமித்தது. படைப்புத் தொழில் பெண்களுடையதாக
பார்க்கப்பட்டது. இதற்கு அடிப்படை மாதவிலக்கு. பெண்களை அடிமைப்படுத்த இயற்கையான மாதவிலக்கைத்
தீட்டாகவும் அதற்குத் தோதாக புனைவுப் புராணங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இவர்களை
அம்பலப்படுத்திய பெரியார், “பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை
அடி”, என்று சொல்லுமளவிற்கு சென்றார். மெத்தப் படித்தப் பார்ப்பனர்கள் இன்றும் இவ்வாறு
எழுதும்போது பெரியாரின் இவ்வரிகள் நினைவுக்கு வருகிறது.
மேல்மருவத்தூரைப்போல சபரிமலை சக்தி
பீடமில்லையாம்! கோயில்களில் காந்தவிசை இருக்கிறதாம்! பூமியெங்கும் உள்ள காந்தவிசை
உங்கள் கோயிலில் மட்டும் இருப்பதாக சொல்லும் மடைமையை என்ன சொல்வது? அறிவியலுக்கு
இந்து முலாம் பண்ணுவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கடன் பெற்றே
வாழும் இந்து மதம் பிற வழிபாட்டு முறைகளைப் பேசும் அருகதையற்றது. மனிதர்களையும்
பெண்களையும் பல்வேறு வழிமுறைகளில் ஒதுக்கி வைக்கும் இந்துமதத்திற்கு பெருந்தன்மை
ஒரு கேடா?
அய்யப்பன் பற்றி புராணக்கதை உங்களுக்குத்
தெரியுந்தானே! மகசி அரக்கர்களின் அரசன் மகிசாசூரனின் தங்கை. தேவர்கள் மகிசாசூரனை
வதம் செய்து கொல்ல, அவர்களை வதைக்க மகசி முடிவு செய்கிறாள். இதற்குப் பயந்து
தேவர்கள் தவமிருக்க, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறக்கும் பிள்ளையால்தான் மகசியை
அழிக்கமுடியும் என்ற வரம் கிடைக்கிறது. மோகினி உருவங்கொண்ட விஷ்ணுவும் சிவனும்
சேர்ந்து பிறந்தவன் அய்யப்பன் என்று புராணம் சொல்கிறது. அய்யப்பனை எடுத்து வளர்த்த
பந்தல ராஜா அவனுக்கு முடிசூட்ட விரும்ப, இதை விரும்பாத அரசி தனது உடல்நலக்குறைவிற்குப்
புலிப்பால் வேண்டுமெனக் கேட்க, காட்டிற்குச் செல்லும் அய்யப்பன் மகசியை வதம்
செய்ததாக புராணக்கதை நீள்கிறது. பிரம்மாவின் உடலுறுப்புகளில் நால்வர்ணம் உண்டாவது
மற்றும் அய்யப்பன் பிறப்பு கதைகளைக் கட்டுடைத்த பெரியார், தலித்கள் (பஞ்சமர்கள்) மட்டுமே
உண்மையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது அப்பா-அம்மாவிற்குப் பிறந்தவர்கள் என்று
குறிப்பிட்டார்.
அய்யப்பன், பிள்ளையார் பற்றிய மிக மிக இழிவான
புராணக்கதைகளை உற்பத்திச் செய்யும் இந்து மதவெறி மூடர்கள் அய்யப்பன் வழிபாடும் கடன் பெற்றது என்பதை உணர
மறுக்கிறார்கள். சமண, பவுத்த மதங்களின்
அய்யனார் (சாஸ்தா) வழிபாட்டை இந்துக்கள் என்று சொல்லியவர்கள் திருடியது வரலாறு.
மயிலை சீனி வேங்கடசாமியின் பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூற்களை இதனை
விரிவாகக் காணலாம்.
அய்யப்ப பக்தர்கள் 48 நாள்கள்
விரதம் இருக்கிறார்கள் என்பது ரொம்ப அபத்தம். இவர்கள் புலனடக்கிய முனிவர்கள் இல்லையாம்!
இந்து மதப் புராணங்களில் புலனடக்கிய முனிவர்கள் உண்டா? பெண்கள் சபரிமலைக்குச்
சென்றால் இந்த புலனடக்காத ஆண் பக்தர்கள் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திவிடுவார்கள்
என்று சொல்வதே இந்து மதத்தை அம்பலப்படுத்துவதுதான். பார்ப்பனர்களின் அறிவு இதற்கு
மேல் வேலை செய்யாது.
பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ்
அணிந்து சென்றால் அங்கு வரும் ஆண் பக்த கோடிகளுக்கு காமவெறியுண்டாகும் என்று
சொல்லி ஆடைக்கட்டுப்பாடு விதிக்கும் நீதிமன்றங்களும் அரசுகளும் அர்ச்சகர்கள் அரை
நிர்வாணமாக இருப்பதைக் கண்டுகொள்வதில்லை. காரணம் கேட்டால் இல்லாத ஒன்றை ஆகமம்
என்று கதைப்பதும் புராணக்கதைகளை உற்பத்தி செய்வதும் இந்து கொடுங்கோன்மையின்
வரலாறு.
காலத்திற்கு ஒவ்வாதவற்றை
மாற்றிக்கொள்ளும் உரிமையை அந்த சமூகத்திற்கே வழங்கிவிட்டு அரசும் நீதிமன்றமும்
ஒதுங்கிக்கொள்ள வேண்டுமாம்! சட்டப்படி குற்றமான தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை
அரசும் நீதிமன்றமும் கண்டுகொள்ளக் கூடாது; இந்திய அரசியல் சாசனத்திற்குப் பதிலாக
பார்ப்பனீய மனுதர்ம சட்டங்களை அமல்படுத்தவேண்டும் என்பதே இவர்களது வேட்கையும்
விருப்பமும்.
அனைத்து மக்களும் சமூக நீதியும்
பாலினச் சமத்துவமும் உறுதி செய்யப்படவேண்டும். இதுதான் நமது அரசியல் சட்டம்
வழங்கியுள்ள அடைப்படை உரிமை. இதை நிறைவேற்றுவதுதான் நீதிமன்றங்களின் பணி. அனைத்து
மதங்களும் சாதி மற்றும் பாலினப்பாகுப்படின்றி மக்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யும்
கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது. அனைத்து
சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குறுக்கு வழியில் தகர்த்த ‘பார்ப்பனீய’ நீதிமன்றங்களிடம்
இதை எதிர்பார்ப்பது ஓர் வகையில் நியாயமில்லைதான். வேறு என்ன செய்வது?
வழக்கறிஞர்
பொ.இரத்தினம்
அமைப்பாளர்
பகத்சிங்
மக்கள் சங்கம்
தொடர்புக்கு:
94434 58118
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்:
musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக