வியாழன், ஜனவரி 14, 2016

32. இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல்



32.  இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல்


(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்


     (பேரா. தொ.பரமசிவன் எழுதிய அய்ந்து குறுநூல்களைத் தொகுத்து கலப்பை பதிப்பகம் வெளியிட்ட ‘இந்து தேசியம்’ என்ற நூல் குறித்த  அறிமுகப் பதிவு இது.) 

நூலட்டை

     சிறு வெளியீடுகள் மற்றும் குறுநூல்கள் அவ்வப்போது எழும் தேவையடிப்படையில் வெளிவருபவை. ஒரு வகையில் தனிச்சுற்று இதழ்களைப் போல பிறகு வாசிப்புக்குக் கிடைக்காமல் போகிறது. சிவக்குமரன் என்ற புனைப்பெயரில் தொ.பரமசிவன் எழுதிய கீழ்க்கண்ட ஐந்து குறுநூல்களை ‘யாதுமாகி பதிப்பகம்’ (லேனா குமார்) முதலில் வெளியிட்டது.
நான் இந்துவல்ல…. நீங்கள்…?


  • சங்கர மடம் – தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்
  • ‘இந்து’ தேசியம் – இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு
  • இதுதான் பார்ப்பனியம்
  • புனா ஒப்பந்தம் – ஒரு சோகக் கதை


          பின்னர் இதில் முதல் மூன்று குறுநூல்களை தொ.ப. பெயரில் மணி பதிப்பகம் வெளியிட்டது. மொத்தமாக ஐந்தையும் சேர்த்து தற்போது ‘கலப்பை பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு கொளத்தூர் மணி அணிந்துரை வழங்கியுள்ளார்.

    முதலிரண்டு  குறுநூல்களான ‘நான் இதுவல்ல நீங்கள்…?’ மற்றும் ‘சங்கர மடம் – தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்’ ஆகிய இரண்டும்  கேள்வி – பதில் வடிவில்  அமைந்துள்ளது. 

பின்னட்டை


   இந்துத்துவா ஆட்கள் கொண்டாடும் சர் வில்லியம் ஜோன்ஸ் 1799 இல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுத்து ‘Hindu Law’ என்று வெளியிட்டார். அதுவரையில் இந்து என்ற சொல் திராவிட, ஆரிய மொழிகளில் கிடையாது என்பதை தொ.ப. விளக்குகிறார். மேலும் மதம் என்றால் அதற்கு முழு முதற்கடவுள், ஆகமங்கள், குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகள் ஆகிய அடிப்படைகள் இருக்க வேண்டும். இந்து மதத்திற்கு இவை ஏதுமில்லை என்பதையும் சுட்டுகிறார்.

    சிருங்கேரி மடத்தில் கிளை ஒன்று கும்பகோணத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அவர்கள் காஞ்சிக்கு வந்து காமாட்சியம்மன் கோயிலை ஆக்ரமித்துக் கொண்டனர். இது காலடி ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்ட மடமல்ல. பூரி, சிருங்கேரி சங்கராச்சாரிகள் காஞ்சி மடத்தை இன்றளவும் ஏற்பதில்லை என்பதை தொ.ப. ஆதாரமாகக் காட்டுகிறார். 

    காரணாகமம், காமிகாகமம் என்று சிவன் கோயில் பூசை செய்கின்ற, வழி நடத்துகிற தொகுப்பிற்கு ஆகமம் என்று பெயர். வைணவத்திலும் 108 ஆகமங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். பொதுவாக வேதத்திற்கும் ஆகமத்திற்கும் தொடர்பில்லை. கொயில்களுக்குச் சம்மந்தமில்லாத சங்கராச்சாரிகள் ஆகமத்தை மதிக்க மாட்டார்கள். ஆகம வழிபாட்டார்கள் சங்கராச்சாரியை ஏற்பதில்லை. சங்கராச்சாரி  மூலஸ்தனத்திற்குள் நுழையக்கூடாது, சாமியைத் தொட்டுப் பூசை செய்யக்கூடாது என்றெல்லாம் வைணவர்கள் 1960 மற்றும் 1980 களில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் என்பதையும் தெரிவிக்கிறார். 

தொ.ப.


     வைணவம் தாழ்த்தப்பட்டோருக்கும் தீட்சை வழங்கும். வைணவரான பின்பு யாரும் சாதி கேட்கக்கூடாது; ஒன்றாக சமைத்துச் சாப்பிடவேண்டும். சைவத்தில் இது நடக்காது. ஆனால் இவர்களிருவரும் ‘இந்து’ என்ற போர்வையில் தலித்களை வெறுப்போடு தள்ளிவைக்கும் பார்வையே உள்ளது. ராமானுஜரின் சாதி எதிர்ப்புக் குரல் தோற்றுவிட்டதாகவும் கூறுகிறார்.

     தமிழகத்தில் வருணாசிரமம் எப்போதும் நடைமுறையில் இல்லை. பிராமணர்களின் அடுத்தப் பிரிவான வைசியரான வணிகர்களுக்கு கோயிலில் இடமில்லை. அடுத்த சத்திரியர்களுக்கும் இதே நிலைதான். சைவ மடங்களை வைத்திருப்போர் வருணாசிரமத்தின்படி சூத்திரர்கள். எனவே கோயில் சாதியைப் பேணுகிறதே தவிர வருணத்தை அல்ல என்றும் விளக்குகிறார்.  
  
    தென் தமிழகக் கடற்கரையிலுள்ள பரதவர்கள் நமது  தொல்குடியினர். நாயக்கர் ஆட்சி, கடற்கொள்ளையர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகிய பல்முனைத் தாக்குதலில் போர்சுகீசியர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கிருத்தவத்திற்குச் சென்றார்கள். உலக வரலாற்றில் அனைத்து மதங்களும், ஒரு காலகட்டத்தில் ஆயுதத்தை எடுத்து மக்களை ஒடுக்கிய மதங்களே என்று தொ.ப. வரையறுக்கிறார். 

   சங்கர மடத்தைப் பற்றிய வினா விடைப் பகுதியான இரண்டாவது குறுநூலில் சங்கரமடத்தின் ஏமாற்றுத்தனங்களையும் பொய்மைகளையும் அம்பலப்படுத்துகிறார். காஞ்சி மடத்திற்கு நெருக்கமான தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் இரா.நாகசாமி கூட காஞ்சி மடத்தின் வரலாற்றை ஒத்துக்கொள்ளமாட்டார் என்கிறார். பார்ப்பனர் அல்லாத கோயில்களையும் அய்யனார் (சாத்தனார்) வழிபாட்டையும் தன்வயமாக்கி ‘காமக்கோட்டம்’ என்பதை காமகோடி என்று சமஸ்கிருதப்படுத்தினர். காமம் (விருப்பம்) என்பது திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லாகும். 

    வேதங்கள் என்பவை பன்னெடுங்காலத்திற்கு முன்பு கங்கைக் கரையில் வேதமொழி பேசிய மக்களின் பாடல்களாகும். இந்த மொழியிலிருந்து வளர்ச்சி பெற்ற திருந்திய மொழி சமஸ்கிருதம். ரிக் வேதப்பாடல்கள் பல்வேறு வகையான தெய்வங்களை அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல (Henotheism) குறிக்கும். உஷா விடியல்கால தேவதை, நிஷா இரவின் தேவதை, அருணன் சூரிய உதயத்திற்கு முந்தைய விடியல் தேவதை. இவற்றிற்கு உருவம் கிடையாது. 

   யஜூர் வேதம் வேதக்கிரியைகளின் குறிப்புத் தொகுதியாகும். இவை சாதிவாரி வித்தியாசப்படும் என்பதால் கிருஷ்ண யஜூர் வேதம் (கருப்பு), சுக்ல யஜூர் வேதம் என இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். சாம வேதம் இசைப்பாடல்களால் ஆனது. அதர்வண வேதம் ஒரு காலத்தில் கிடையாது. இவ்வேதம் நாட்டார் மந்திரங்கள் எனப்படும் செய்வினை மந்திரங்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்த வேதங்களில் சொல்லப்படும் தெய்வங்கள் செத்து இரண்டாயிரம் ஆண்டாகிறது, என்று வேதங்களைப் பற்றி தொ.ப. ஆய்வு செய்கிறார். 

தொ.ப.


   சங்கர வேதாந்திகளான ஸ்மார்த்தப் பிராமணர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. மூத்த ஆசிரியர் சமாதியை வணங்கும் ‘அதிஷ்டானம்’ என்னும் வழிபாடு மட்டுமே உண்டு. சங்கராச்சாரிகளுக்கும் கோயில்களுக்கும் உறவே இல்லை. 

    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைத் தவிர வேறெந்த கோயிலும் இவர்களது கட்டுப்பாட்டில் இல்லை. இதுவும் இவர்களாக ஆக்ரமிப்பு செய்த ஒன்று. இவர்களது வேலை ஸ்மார்த்தப் பிராமணர்களுக்கு சமஸ்கிருதக் கல்வியும், சந்நியாச தீட்சை கொடுப்பதுமே.

   சங்கராச்சாரிகள் விதவைகள் முகத்தில் விழிப்பதில்லை. இந்திராகாந்தி இறந்துபோன மூத்த சங்கராச்சாரியை சந்திக்க விரும்பியபோது, தீட்டுப் போய்விடும் என்பதற்காக கிணற்றுக்கு மறுபுறம் அமரவைத்தனர். துறவு என்றால் எளிமை என்பது மரபு. எளிமைக்கும் இவர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை. இவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் உயரத்தைவிட யாரும் உயரமாக அமரக்கூடாது. குடியரசுத்தலைவராக இருப்பினும் தரையில்தான் அமரவேண்டும். அப்துல் கலாம், பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் தரையில் அமர்ந்ததும் சுப்பிரமணியன் சுவாமி நாற்காலியில் சமமாக அமர்ந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம். சிறைவாசம், காவல் வாகனப் பயணம், விமானப்பயணம் போன்றவற்றில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

    கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு பெரிய சங்கராச்சாரி வந்தபோது தலித் மக்கள் காலில் விழுந்துவிட்டால் தீட்டாகிவிடும் என்பதால் காலில் பட்டுத்துணியைக் கட்டிக்கொண்டு நின்றார். தீண்டாமையைக் கடைபிடிக்கும் இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. உயர்வு தாழ்வு பார்க்கும் மடாதிபதிகளை சிறையில் அடைக்கவேண்டும் என்று பெரியார் 1928 லிலேயே பேசியுள்ளார். காவல்துறையினர் நடு சங்கராச்சாரியை  அழைத்துச் செல்ல்லும்போது இடைவெளியைக் கடைபிடிப்பதை வீடியோக்களில் காணலாம் என்றும் கூறுகிறார்.

     1817 –ல் கொண்டுவரப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடங்கி இந்து தேசியம் வளர்த்தெடுக்கப்பட்ட வரலாற்றை மூன்றாவது குறுநூல் விளக்குகிறது. ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் போன்ற வார, மாத இதழ்கள் தினமணி, இந்து, சுதேசமித்திரன் ஆகிய இதழ்கள் கருத்தியல் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவின. ஆரிய நாகரீகமும் சமஸ்கிருத வேதங்களும் உலகிற்கு வழிகாட்டும் என்ற பிரம்ம ஞான சபையின் பங்கு இதில் குறிப்பிடத்தக்கது. 

    ஜி.சுப்ரமணிய அய்யரும், அனந்தாச்சார்யலும் சென்னை மகாஜன் சபையைத் தொடங்கியவர்கள். இவர்களையும் சேர்த்து முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்ட 8 பேரில் 6 பேர் பார்ப்பனர்கள். 

    தமிழின் மேன்மை, சைவச் சிறப்பினை எடுத்துச் சொல்ல சி.வை.தாமோதரம் பிள்ளை, கனகசபைப் பிள்ளை, ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை, ஞானியார் அடிகள் என இந்திய தேசியத்திற்கு வெளியே தமிழ் அறிவாளிகள் கூட்டம் உருவானது. இவர்களுடன் ஜி.யு.போப், உ.வே.சா போன்றவர்கள் வேதமல்லாத தமிழ் மரபு நூற்களை அச்சிட்டனர். இந்திய தேசியத்திற்கு மாற்றாக திராவிடம் என்ற கருத்தியலை முன்னெடுத்து பார்ப்பன அல்லாதோர் அடையாளத்தை உருவாக்கியவர் அயோத்திதாசப் பண்டிதர்.

    பி.நடேசனார், பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகியோர் முயற்சியால் எழுந்த நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் பற்றிக் குறிப்பிட்டு, நீதிக்கட்சியின் தோற்றத்தால் தமிழ்ச் சமூக அசைவுகள் விரைவடைந்தன என்றும் சொல்கிறார். கடவுள் நம்பிக்கையுடைய தமிழ் அறிவாளிகள் பெரியாரிடம் விலகி நிற்றல், குடி அரசு இதழில் பொதுவுடமை, இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள் வெளிவருதல், சிங்காரவேலர், மயிலையார் போன்றோர் தமிழ்ப்பண்டிதர்களை இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு அழைத்தல் ஆகியன விவரிக்கப்படுகின்றன. 1937 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்த தெம்பில் பெரியார் 1938 –ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். திராவிட தேசியம் உருவான காலகட்டத்தில் (1937-1944) மிட்டா, மிராசுகள் இதிலிருந்து விலகினர். 1949 –ல்  அண்ணாவின் விலகல் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சரிவாகும் என்றும், இன்றும் பார்ப்பனியம் அதிகார மையங்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் சொல்கிறார். 

      பிறப்பு வழிப்பட்ட பார்ர்பனியத்தைப் போன்று இந்தக் கருத்தியலை ஏற்றுக்கொண்ட புதிய பார்ப்பனர்களையும் ‘இதுதான் பார்ப்பனியம்’ என்கிற நான்காவது குறுநூல் சுட்டுகிறது. பார்ப்பனர் அல்லாதோர் புரிந்துகொள்வதற்கு வசதியாக இவர்களை வைஷ்ணவர்கள், அர்ச்சகர்கள், ஸ்மார்த்தர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கும் தொ.ப. தமிழ் மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பவர்கள் ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே என்றும் சொல்கிறார். 

   தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளில் நடந்த இந்திய எழுச்சியை இந்து மறுமலர்ச்சியாக காட்டும் முயற்சிகள் நடைபெற்றன. தமிழ் நாவலாசிரியர் வத்தலகுண்டு ராஜமய்யர், மராட்டிய திலகர் போன்றோர் இதற்குக் காரணமாக இருந்தனர். திலகர் விநாயகர் அரசியலுக்கு காரணகர்த்தா. இந்து மகாசபை வேதகாலத்திற்குத் திரும்புதல் என்ற தன் கொள்கையை முன்வைத்து 1925 இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. 

    வேதக்கல்வி என்பது மனப்பாடத்திறனை மட்டும் கொண்டது. மெக்காலே கல்வியின் இந்த அம்சத்தின் பலன்கள் அனைத்தையும் பார்ப்பனர்கள் பெற்று கோலோச்சினர். சதிராட்டத்தை பரத நாட்டியம் என்று பெயர் மாற்றியும் வேறுபல  கலை வடிவங்களையும் அபகரித்துத் தனதாக்கிக்கொண்டது பார்ப்பனியம்.  

    1920 முதல் 1937 வரை தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அல்லது அதன் ஆதரவு பெற்ற ஆட்சி நடந்தது. இக்காலகட்டத்தில் பார்ப்பனர்களிடமிருந்து ஆட்சியதிகாரம் பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளிடம் இருந்தது. இவர்கள் நிகழ்த்த அரிய சாதனைகள் அன்றிய சமூகச்சூழலில் மிகவும் முக்கியமானவை.

    தமிழ்நாட்டு வரலாற்றில் இறுதி மூச்சு வரை பார்ப்பனியத்தின் நலன்களை வலிமையான, புதிய புதிய பாதுகாப்பு அரண்களோடு காப்பாற்றப் போராடியவர் ராஜாஜியைத் தவிர வேறு யாருமில்லை, என்று அறுதியிடுகிறார். நேருவின் தலைமையிலான காங்கிரசின் இடது சார்பைக் கண்டு அஞ்சிய ராஜாஜி தனியுடைமைக் கொள்கையை வலியுறுத்தி சுதந்திரா கட்சியைத் தொடங்கி, தி.மு.க., காங்கிரஸ் என்று மாறி மாறி உறவாடினார். 

     பூணூல், குடுமி, பஞ்சகச்சம், தீண்டாமை, புலால் உண்ணாமை போன்ற பழக்கங்களை பார்ப்பனர்கள் விட்டிருக்கலாம். அவர்களது கருத்தியல் இன்னும் அப்படியேதான் உள்ளது. பிறவியால் ஒருவனை மேல், கீழ் என பாகுபடுத்துவது, கடும் உடலுழைப்பை இழிவு செய்வது, குலத்தொழிலை செய்ய வலியுறுத்தி அவர்களை முடக்கிவைப்பது, இந்துமதம், பார்ப்பனக் கருத்தாக்கங்களை பரப்புரை செய்வது போன்ற் நிலை இன்றும் நீடிக்கிறது. இதை மாற்ற பார்ப்பனியத்தின் பாதுகாவலராக இருக்கும் பார்ப்பனர்களை எதிர்த்தல், பார்ப்பனியத்திற்குத் துணைபோகும் பார்ப்பனரல்லாதோரை அடையாளம் காணல், அறியாமையால் பார்ப்பனியத்திற்கு துணைபோவோரை விமர்சன ரீதியில் தெளிவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு எதிராக அணிதிரட்டுதல் என்ற வகையில் இருக்கவேண்டும் என்பதையும் இன்னும் போர் முடியவில்லை என்றும் எச்சரிக்கை செய்கிறார். 

     1992 இல் ‘படுபாதகன் காந்தி புனா ஒப்பந்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களைக் கழுத்தறுத்த நாள் செப்டம்பர் 24’ என்ற சுவரொட்டியை ஒட்டி ‘புனா ஒப்பந்தம்: ஒரு சோகக் கதை’ என்னும் ஐந்தாவது குறுநூல் அலசுகிறது. இந்த ஒப்பந்தம் யார் யாருக்கு இடையிலானது என்பதை நுணுக்கமாக ஆராயவேண்டும் என்கிறார். அம்பேத்கர் (அம்பேத்கார் என்றே குறிப்பிடப் படுகிறது. அடுத்தப் பதிப்பில் திருத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.) தன்னுடைய இயக்கத்திற்கும் காந்தி தலைமையிலான காங்கிரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்று நினைத்தார். காந்தியோ தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரதிநிதியான காங்கிரஸ் கட்சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் இரு பெரும் பிரிவுகளுக்கும் (அம்பேத்கர் மற்றும் எம்.சி.ராஜா) ஏற்பட்ட ஒப்பந்தம் என்று கருதினார். அவர் நன்றிகளை இருவருக்கும் தனித்தனியே தெரிவித்துக் கொண்டார்.

      ஆனால் உண்மையில் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் சார்பாக கையெழுத்திட்டவர்களிலும் இரண்டு பிரிவினர் இருந்தனர். காந்தியின் தலைமையை ஏற்றுக் காங்கிரசில் இருந்த ராஜாஜி, தேவதாஸ் காந்தி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் ஓர் பிரிவு. இந்து மிதவாதத் தலைவர்கள் என்றறியப்பட்ட மதன் மோகன் மாளவியா, தேஜ் பக்தூர் சாப்ரு, ஜி.டி.பிர்லா, எம்.ஆர்.ஜெயகர் ஆகியோர் மற்றொரு பிரிவினர் என்று வகைப்படுத்துகிறார். இதே போன்றதொரு ஒப்பந்தத்தை அம்பேத்கரை எதிர்த்து நின்ற எம்.சி.ராஜாவுடன் பி.எஸ்.மூஞ்சே தலைமையிலான இந்து மகாசபை மூன்று மாதங்களுக்கு முன்னதாக செய்திருந்ததும் குறிப்பிடப்படுகிறது. இவ்வொப்பந்தம் குறித்த விரிவான, புதிய  பார்வைக் கோணத்தை இந்நூல் பதிவு செய்கிறது. 

    புனா ஒப்பந்தம் ஏற்பட்ட கால காட்டத்தில் தலைவர்கள் மத்தியில் இருந்த மனநிலையும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் அவர்கள் போட்ட கணக்குகளும் தவறாகப் போயிருப்பதைக் காலம் காட்டுவதைச் சுட்டுகிறார். தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளை வெறும் மதம் சார்ந்த ஒன்றாகப் பார்த்த காந்திக்கும் நேருவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளைக் குறிப்பிடும் தொ.ப. இன்று தனித்தொகுதி என்பது உண்மைப் பொருளை இழந்துவிட்டது என்றும் சொல்கிறார். தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான போராட்டம் இன்று மேலும் கூர்மையடைந்திருப்பதும் அரிசன், பட்டியல் சாதி என்றெல்லாம் பிறர் அழைத்ததை மறுத்து இன்று ‘மண் சார்ந்தவர்கள்’ என்கிற பொருளில் தலித் என்று தாங்களே அழைத்துக்கொள்ளும் நிலையை திருப்புமுனையாக தொ.ப. அவதானிக்கிறார். இன்று செயற்கையாக கட்டப்படும் ‘இந்து’ தேசியத்தை உணர்ந்து கொள்ளவும் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவும் இந்நூல் உதவும். 


‘இந்து’ தேசியம்
தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்
விலை:      ரூ. 130
பக்கம்: 30
முதல் பதிப்பு: ஜூலை 2015

தொடர்பு முகவரி:

கலப்பை,
9/10, முதல் தளம், 2 –வது தெரு,
திருநகர், வடபழனி,
சென்னை – 600026.
மின்னஞ்சல்: kalappai.in@gmail.com


இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக