சனி, ஜனவரி 02, 2016

நாளை (ஜனவரி 03, 2016) உதயமாகும் பகத்சிங் மக்கள் சங்கம்நாளை  (ஜனவரி 03, 2016) உதயமாகும்  பகத்சிங்  மக்கள் சங்கம்

                   - மு.சிவகுருநாதன்
     பொதுவாக பிரபல வழக்கறிஞர் என்பது அவரது சம்பளத்தை வைத்தே அளவிடப்படும் அவலம் இங்கே இருக்கிறது. ராம் ஜேத்மலானி, ப.சிதம்பரம், அருண் ஜேட்லி, கபில் சிபல் போன்றோரைத்தான் ஊடகங்களும் உயர்த்தப்பட்ட வர்க்கமும் கொண்டாடுகிறது. பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளிடம் கொள்ளைப் பணத்தை பெற்றுக் கொள்ளும் இவர்கள், அதற்காக தங்களது அரச பதவிகளையும் தவறாகப் பயன்படுத்தி சேவகம் செய்யும் இவர்கள் தார்மீக அடிப்படையில் வழக்கறிஞர்களே இல்லை. இவர்கள் வாங்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணமும், தனி விமானப் பயணமும் நாட்டு மக்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருபகுதி என்பதை நாடறியும். அடித்தட்டு மக்களுக்காக நாள்தோறும் உழைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.      தமிழில் வெளியாகும் புலனாய்வு இதழ்கள் மீது எனக்கு அவ்வளவாக மதிப்பில்லை. (உம். நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை) வழக்கறிஞரை சந்தித்த பிறகுதான் இதன் வேறொரு பரிமாணத்தை உணரமுடிந்தது. ஒவ்வொரு வாரமும் இவற்றை வாங்குப் படித்துவிட்டு, “உடனே வன்கொடுமை  நடக்கும் இடத்திற்கு பயணமாகி விடுவேன்”, என்று அவர் சொன்ன பிறகு எனக்கு உண்மை விளங்கியது. 

      வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக தனது வாழ்வையும் பணிகளையும் அர்ப்பணித்தவர். தலித் மக்கள் மீதான வன்கொடுமை, படுகொலை வழக்குகளில் நீதியைத்தேடி நீண்ட நெடிய போராட்டம் நடத்துபவர். 

     அத்தியூர் விஜயா, மேலவளவு முருகேசன் கொலை வழக்கு, சென்னகரம்பட்டி கொலை வழக்கு, திண்ணியம், விருத்தாசலம் முருகேசன் கண்ணகி கொலை எனப் பல்வேறு வழக்குகளில் தலித்களுக்கு ஆதரவாக எவ்வித ஊதியமும் பெறாமல் வழக்காடும் இவர், சமூகநீதி வழக்கறிஞர் மையம்,  புத்தர் பாசறை,  சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு  என பல்வேறு அமைப்புகளில் வழி தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சமத்துவப் போராளிகள்’ என்றொரு அமைப்பைக் கட்டினார். 

   அவ்வமைப்பின் அறிக்கையைக் கொண்டு ‘பகத்சிங் மக்கள் சங்கம்என்ற பெயரில் புதிய அமைப்பை நாளை (ஜனவரி 03, 2016) சேலத்தில் தொடங்கவிருக்கிறார். இவ்வமைப்பின் அறிமுக நிகழ்வு 30.01.2016 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை சேலம் நால்ரோடு சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் நடைபெற உள்ளது. 

      புத்தரின் போதனைகளில் போர்க்குணத்தைக் காண்பவர் வழக்கறிஞர் பொ.இரத்தினம். சாந்த ரூபியாக வரையப்படும் / செதுக்கப்படும் புத்தரின் உருவங்களுக்கு மாற்றாக போர்க்குணமிக்க புத்தரின் உருவங்களை வரைந்து / செதுக்கி அவற்றை பிரபலப்படுத்தவேண்டும் என்ற ஆவல் கொண்டவர். இவரது விரிவான நேர்காணல் பேரா. அ.மார்க்ஸ் வழிகாட்டலின்படி .சஞ்சாரம்’ முதல் இதழில் (மார்ச் 2008) பதிவு செய்யப்பட்டது. அதன் இணைப்பு இதோ.

புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது:
        வழக்கறிஞர்      பொ.இரத்தினம்

   ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ தொடர்பான  இவரது ஆவணத்தொகுப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த ஓர் அறிமுகப் பதிவின் இணைப்பு கீழே தரப்படுகிறது. 

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்

      ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அவர்கள் மீது தொடுக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு எதிராகவும், வழக்குத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் துண்டுப்பிரசுரம் (ஆங்கிலத்தில்) வெளியிட்டார். மதுவிலக்கிற்கு ஆதரவாக நீதிபதி ஒருவரின்  பரிந்துரைகளை நூலாக வெளிக்கொண்டு வந்து பரப்புரை செய்தது இவரது சமீபத்திய சாதனை. 
   புத்தர், அம்பேத்கர், பெரியார், பகத்சிங் ஆகியோரை முன்னோடியாகக் கொண்டு சமூக மாற்றத்திற்கான மக்கள் இயக்கமாக ‘பகத்சிங் மக்கள் சங்கம்’ கட்டப்படுகிறது. இச்சங்கத்தை வாழ்த்தி, வரவேற்போம். வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக