31. பெயிலாக்கும் ஆசிரியரின் அதிகாரம்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
மு.சிவகுருநாதன்
(‘வாசல்’ வெளியிட்ட ஜே.
ஷாஜஹான் தமிழில் மொழிபெயர்த்த ‘எங்களை ஏன்
டீச்சர் பெயிலாக்கினீங்க?’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.)
நூலட்டை |
1960
களில் இத்தாலியில் உள்ள பார்பியானா பள்ளி மாணவர்கள் எட்டு பேர் எழுதிய ‘Letter to
A Teacher’ என்ற நூலின் அறிமுகமாக எழுதப்பட்ட குறுநூல் ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ ஆகும்.
ஜே.ஷாஜஹான் இந்நூலில் உள்ள கடிதங்களின் சாரத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தலைப்பில் ‘எங்களை
ஏன் டீச்சர்/சார் பெயிலாக்கினீங்க?’ என்று சாரையும் சேர்த்திருக்கலாம். மிஸ் என்று
வருமிடங்களில் மிஸ்/சார் என்றும் சொல்லியிருக்கலாம். சடங்குகள், பாடத்திட்டங்கள்
ஆகியவற்றை உருவாக்கும் ஆண்கள் அவற்றை நடைமுறைப்படுத்த பெண்களை பயன்படுத்துவது
உலகில் வழக்கமான ஒன்றுதானே.
இத்தாலியின் மலைப்பகுதியில் உள்ள 20 வீடுகள் கொண்ட சிறிய குடியிருப்புப்
பகுதி பார்பியானா ஆகும். இங்குள்ள ஓர் சிறிய தேவாலயத்திற்கு 1954 –ல் வந்த பாதர்
மிலானி உருவாக்கிய பள்ளியே இது. 11 முதல் 13 வயதுள்ள பத்து மாணவர்களைக் கொண்டு உருவான
இப்பள்ளி பின்னர் 20 மாணவர்களுடன் செயல்பட்டது. மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கும் தாம்
அறிந்த ஒன்றைப் பிறருக்கும் என கூடிக்கற்கும் முறை இங்கு பின்பற்றப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள் மிகச் சாதாரண நடையில் எழுதிய வீரியமிக்க கடிதங்களே இவை.
பின்னுரையில் ஜே.ஷாஜஹான் குறிப்பிடுவதுபோல, இக்கடிதங்கள் ஆசிரியர்களுக்கு
எழுதப்பட்டதாக இருந்தாலும் பெற்றோர்கள், கல்வியில் அக்கறை உள்ளோர் அனைவரையும் நோக்கிப்
பேசுகிறது. ‘அற அச்சம்’ பயமுறுத்தும் என்பது முழு உண்மை. “கல்வியில் தோல்விக்கு
இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணர்வது பெரும் புரட்சிதான்”, என்கிறார் டாக்டர்
ஆர்.ராமானுஜம்.
இத்தாலியின்
ஒரு சிறிய பகுதி மாணவர்களின் உள்ளக் குமுறலான இது இந்தியச் சூழலுக்கும் அப்படியேப்
பொருந்திப் போவது அவலம். இந்தியாவில் கல்வி தொடர்பான நூறாண்டு கோரிக்கை
தற்போதுதான் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு மட்டும் நிறைவேறியுள்ளது. இதுவும்
முழுமையாக நடைபெறவில்லை. 0 – 6, 14 – 18 ஆகிய வயதுக் குழந்தைகளைப் பற்றிய எந்த
கரிசனமும் இந்த அரசுக்கு இல்லை.
இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 –ன் படி ஒன்று முதல் எட்டு வகுப்பு முடிய உள்ள
மாணவர்கள் பெயிலாக்கப் படுவதில்லை. தனியார் பள்ளிகளும் அரசு உதவி பெறும்
பள்ளிகளும் பெயிலாக்காமல் மாணவர்களைத் தந்திரமாக வெளியேற்றுகின்றன. மாற்றுச்
சான்றிதழ் (Tranfer Certificate) கொடுப்பதுதான் இந்து உத்தி. இது அரசுக்கோ
கல்வித்துறைக்கோ தெரியாததல்ல.
மேலும்
ஒன்பதாம் வகுப்பில் முப்பருவம் மற்றும் CCE மதிப்பீட்டு முறை இருந்தாலும் இங்கு
வடிகட்டச் சட்டப்படித் தடையில்லை. பத்தாம் வகுப்புப் பொதுதேர்விற்காகவும் ஒன்பதாம்
வகுப்பில் பெயிலாக்கும் நடைமுறை இன்றும் நீடிப்பது அநியாயம். இதையே 9 மற்றும் 11
ஆம் வகுப்புகளில் மாணவர்களை தந்திரமாக வெளியேற்றும் உத்தியை தனியாரைப் பின்பற்றி
அரசுப்பள்ளிகளும் செய்வதுதான் உச்சபட்ச கொடுமை.
அரசுப்
பொதுத்தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து குறுக்கு
வழிகளையும் தனியார் பள்ளிகளைப் பின்பற்றும் போக்கு இன்றைய சூழலில்
அதிகரித்துள்ளது. இதைக் கண்காணிக்க வேண்டிய அரசும் கல்வித்துறையும் வேடிக்கைப்
பார்க்கிறது.
அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதால் கல்வியின்
தரம் கெட்டுவிட்டதாக ஓர் கும்பல் எப்போதும் ஒப்பாரி வைக்கும். இந்தக் கும்பலில்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. வும் இணைந்திருப்பத இன்றைய யதார்த்தம். எட்டாம் வகுப்பு
வரையில் மாணவர்களை பெயிலாக்குவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால்
கூட வியப்படைய ஏதுமில்லை. 10, 12 வகுப்புகளுக்கான் அரசுப் பொதுத்தேர்வுகளை ரத்து
செய்தல், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பருவ முறையில் தேர்வுகள் நடத்துதல், 9,
11 வகுப்புப் பாடங்கள் தவிர்க்கப்படுவதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள்
வலுப்பெற்று வரும் வேளையில் மத்திய அரசின் இந்தப் பேச்சு நமது பணிகளை இன்னும் அதிகமாக்கும்.
பல
ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த நூல் என்றாலும் இதன் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில்லை.
“பள்ளிக்கூடம் மாட்டுச் சாணத்தைவிடச் சிறந்தது”, என்று 36 மாடுகளைப் பராமரிக்க வேண்டிய
சுமையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கும்
லூசியின் மனநிலையே இங்குள்ள குழந்தைகளுக்கும் இருக்கிறது.
உங்கள் பள்ளியில்
கெட்டிக்கார மாணவனுக்கு நீங்கள் தரும் அக்கறையை பார்பியானா பள்ளி பின்தங்கிய மாணவனுக்குத்
தருகிறது. ஒரு பகுதி புரியும் வரை மற்ற மாணவர்கள் அடுத்த பகுதிக்குச்
செல்லமுடியாது. பார்பியானா பள்ளியில் மாணவர்களே ஆசிரியர்களாக செயல்பட்டுக்
கல்வியைத் தொடர்கிறார்கள்.
கூட்டாகக்
கற்பது சிறந்த அரசியல்; தனியாகக் கற்பது சுயநலம், என்ற சமூகப் புரிதல்
அவர்களிடமுள்ளது. நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு
ஆரோக்கியமானவர்களைச் சேர்த்துகொள்ளும் மருத்துவமனையாக பள்ளி செயல்படலாமா? என்று
அவர்கள் கேட்கும் கேள்வி நிச்சயமாக நமது மனச்சாட்சியை உலுக்கும்.
நாம்
விரும்பும் ஒன்றை மாணவர்களைக் கொண்டு தயாரிக்கும் வேலையைத்தானே பள்ளிகளும்
பாடத்திட்டங்களும் செய்துகொண்டுள்ளன. மாணவர்களது விருப்பத்திற்கு இங்கு துளியேனும்
இடமுண்டா? இலக்கணத்தையும் பிழைகளையும் பொருள்படுத்தாமல் அந்நிய மொழியொன்றையும்
தாய்மொழியையும் இவர்கள் கற்றிருக்கின்றனர். இங்கு மாணவர்களின் பேச்சு மொழிக்கு
அதாவது வட்டார மொழியைக் கொச்சை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டு, அவர்களுக்குத்
தொடர்பில்லாத பண்டித மொழியில் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அவர்கள்
விரும்பினால் மேலே படித்துப் பண்டிதனாகட்டும். தொடக்க வகுப்புக்களில் இந்த பண்டிதத்
தமிழை எப்போது அகற்றி மாணவர்களைக் காப்பாற்றப் போகிறோம்?
ரஷ்யப்
புரட்சி, பாசிசம், போர் எதிப்பு, ஆப்பிரிக்க – ஆசிய நாடுகளின் விடுதலை என எனது
பாட்டனும் தகப்பனும் அனுபவித்த வரலாற்றை எத்தனைக் காலம் நாங்கள் படிப்பது? என்கிற
கேள்வி மிக முக்கியமானது. சமகால வரலாற்றை சொல்லாத, செய்தித்தாள்களை வாசிக்கவிடாத
கல்வியின் பயன் என்ன?
தேர்வுகள், மதிப்பீடுகள், அறிக்கைகள் போன்றவற்றை வேலை நிறுத்தங்களில்
புறக்கணிக்கலாம். பள்ளி வகுப்பு நேரங்களில் வேலை நிறுத்தம் செய்யாமல் இருப்பது
மக்களின் நன்மதிப்பைப் பெறும் என்று மாணவர்கள் எழுதுகின்றனர். இன்று சமூகத்திடமிருந்து
அந்நியப்பட்டிருக்கும் நமது ஆசிரிய சமூகத்திற்கு இது மிகவும் ஆக்கப்பூர்வமான
யோசனையாகும்.
புதிய
கல்விக் கொள்கைகள், பாடத்திட்டங்கள், குழந்தைகள் உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகிய
யாவும் இங்குகூட குழந்தைகளின் பங்கேற்பு இல்லாமலேயே நடக்கின்றன. பாடத்திட்டம், பாடநூல்களின்
குழந்தைகளின் விருப்பத்தை என்றாவது நாம் அனுமதித்திருக்கிறோமா? குழந்தைகளுக்கு
அதிகாரத்தில் பங்கில்லாத வரையில் அரசு/ஆசிரியர்களின் அதிகாரம் கோலோச்சவே செய்யும்.
அதிகாரத்தில்
ஏழைகள் பங்கேற்றால்தான் கல்வியும் அவர்களுடையதாகும். பழைய நிலைமைகளை
நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வராது. இது எவ்வளவு நியாயமான வரிகள்!
மேதைகள் என்று கனவு கண்பவர்களுக்கு
குழந்தைகள் எடுக்கும் பாடமிது.
தேர்வுகள்
மரணதண்டனையைப் போல கொடூரமானது. இந்தக் கொடுமைகளை பாதிக்கப்பட்டவர்கள் அதாவது
பெயிலாக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்துவதுதானே பொருத்தமாக இருக்கமுடியும். இன்று (ஜனவரி
11, 2016) தமிழகத்தில் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு நாள். இந்தத் தேர்வுகளை
முழுமையாக ரத்து செய்ய வாய்ப்பிருந்தும் நமது அரசும் கல்வித்துறையும் ஏதோ
மாணவர்களுக்கு சலுகைப் பிச்சைக் காட்டுவதாக எண்ணிக்கொண்டு தேர்வுகளை மிகவும் பின்தள்ளி
நடத்துகின்றன. CCE முறை 1 முதல் 9 வகுப்புகள் முடிய இருந்தும் 60 மதிப்பெண்ணுக்கான
தேர்வுகள் என்றபோதிலும் 10 ஆம் வகுப்பைப்போல 2:45 நிமிடங்கள் தேர்வை நடத்துவது
எவ்வளவு பெரிய வன்முறை?
+1, +2
வகுப்புகளில் இரண்டு ஆண்டுகள் படிப்பை ஓராண்டாக மாற்றி 1200 மதிப்பெண்ணுக்கான தேர்வை ஓராண்டில் நடத்துவதே மிகப்பெரிய மோசடி.
இதைச்செய்வது அரசு என்பது ரொம்பவும் அராஜகம். 150, 200 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம்
என்பதே அபத்தம்; 100 மதிபெண்ணுக்கு 2:30 மணி எனும்போது. இந்தகைய மோசடிகளையும்
அபத்தங்களையும் பெற்றோர்களை விட நன்கறிந்தவர்கள் ஆசிரியர்களே. இவற்றைப்
பெற்றோர்களிடமும் பொதுமக்களிடமும் எடுத்துக் கூறி போராட வேண்டிய ஆசிரியர்கள்
மற்றும் இயக்கங்களின் பணி. காட்ஸ் ஒப்பந்தம் பற்றியெல்லாம் பேசுவோர், சிந்திப்போர்
எண்ணிக்கை எவ்வளவு தேறும்? ஆனால் இங்கு நடப்பதென்ன? இந்த சூழலை மாற்ற முயன்றால்
அதுவே இம்மாதிரியான எழுத்துகளுக்கு உண்மையான வெற்றியாகும்.
எங்களை ஏன் டீச்சர்
பெயிலாக்கினீங்க? (‘Letter to A Teacher’ என்ற நூல் அறிமுகம்)
தமிழில்: ஜே. ஷாஜஹான்
ஓவியங்கள்: ஶ்ரீரசா
5 –வது பதிப்பு: ஆகஸ்ட் 2010
பக்கம்: 64
விலை: ரூ. 40
வெளியீடு:
வாசல்,
40 - D/3, ,முதல் தெரு,
வசந்தம் நகர்,
மதுரை – 625003.
செல்: 9842102133
இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக