உடல் நலிவிலும் கொள்கை – வாசிப்பில்
கரைந்தவர்
மு.சிவகுருநாதன்
(நேற்று ஏப்ரல் 09, 2019, காலமான
தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் அவர்களுக்கு அஞ்சலிப் பதிவு.)
அ.மார்க்ஸ் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயர்,
அவரது மன்னைக் கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட போராட்ட இயக்கத்தில் இரு ராஜேந்திரன்களுக்கு முதன்மை இடமுண்டு. ஒருவர்
திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன், மற்றொருவர் மறைந்த ஆசிரியர் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன். அ.மார்க்ஸின் பல பதிவுகளில் தொடர்ந்து இவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
தோழர்
நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் நக்சல்பாரிகளின் ஆதரவாளராக இருந்தவர். கவிஞர் இன்குலாப்பை
ஆதர்சக் கவிஞராக வரிந்துகொண்டவர். அவரது திருமணம் இன்குலாப் தலைமையில்தான் நடந்தது.
இன்குலாப் ஓரளவு உடல்நலத்துடன் இருக்கும்போது அவரை மன்னை அழைத்துவந்து தோழருக்கு விழா
எடுப்பது பற்றிக்கூட அ.மார்க்சிடம் ஒருமுறை பேசியிருக்கிறோம். ஆனால் இது செயலுக்கு
வரவில்லை. இன்குலாப்பை விட மிக நீண்டகாலம் நோயுடன் போராடியவர் தோழர் உ.ராஜேந்திரன்.
அவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரின் போராட்டத்தைச் சொற்களால் விவரிக்க இயலுமா!
தோழரை இன்குலாப் தலைமையில் மணமுடித்த மலர்விழியும்
பள்ளி ஆசிரியர். அவரது உழைப்பும் ஊதியமும் தோழரின் நோய்களில் கரைந்தது. சிறுநீரகங்கள்
பழுது, தனது இணையரின் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; ஒரு கட்டத்தில் அதுவும்
செயலிழக்க வாரம் ஒரு முறை, வாரம் இருமுறை என தஞ்சாவூர் சென்று டயாலிஸ் செய்ய வேண்டிய
கட்டாயம், இறுதிக்கட்டத்தில் வீட்டிலேயே டயாலிஸ், உதவிக்காக சென்னையிலிருந்த மகன் உடனிருக்க
வேண்டிய நிலைமை என முப்பதாண்டுகளுக்கு மேலாக இக்குடும்பம் எதிர்கொண்ட போராட்டங்கள்
சொற்களில் வடிக்க இயலாதவை.
இறுதிக்காலத்தில் அவர் கேட்கும் திறனை இழந்தார்.
சிலேட்டில் எழுதிப் பேச வேண்டிய நிலையும், உரக்கப் பேசி உடல்நலம் மேலும் கெடுவதைக்
காணச் சகியாது அவரை சந்திக்காமல் தவிர்த்த தருணங்கள் உண்டு. முகநூல் பதிவுகளைப் படித்து
அவற்றிற்கு பின்னுட்டங்களை இடுவதை இறுதிவரைத் தொடர்ந்தார். இதுவும் வாசிப்பும் அவரை
உடல் வாதைகளிலிருந்து கொஞ்சமும் விடுவித்திருக்க முடியாது. இருப்பினும் நோயை மறக்க,
மீள இதைப் பயன்படுத்தினார்.
பேச்சு,
வாசிப்பு, இயக்கம், எழுத்து எனப் பரவலாகியிருக்க வேண்டிய அவரது வாழ்வை நோய் முடக்கிப்
போட்டது. இருப்பின் வாசிப்பை இறுதிவரை விடவில்லை.
நக்சல்பாரி ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து தமிழ் தேசியச் சாய்விற்கு உள்பட்டு, தனது இறுதிக்காலத்தில்
காந்தீயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக மாறியிருந்தார்.
காந்தியின் நூல்கள், ஜே.சி.குமரப்பாவின் என
அவரது இறுதி வாசிப்புகள் இருந்தன. முகநூல் சுயவிவரப் படமாக “டிராக்டர் சாணி
போடுமா?”, எனக்கேட்ட, ‘பைஜாமா’ விற்கு 8 முழம் வேண்டுமே என 4 முழ வேட்டியில் ‘தோத்திஜாமா’ வடிவமைத்த ஜே.சி.குமரப்பாவின் படமே இருந்தது.
ஒருமுறை முகநூல் வழியே ‘இயல்வாகை’ வெளியிட்ட
ஜே.சி.குமரப்பாவின் ‘நிலைத்தப் பொருளாதாரம்’
நூலை வாங்கிவரச் சொன்னார். அந்நூலைக் கொடுக்கச் சென்றபோது, தாங்கமுடியாத நோய்ச் செலவீனங்களுக்கு
மத்தியில் வர்த்தமானர் பதிப்பகம் வெளியிட்ட காந்தியின் 20 தொகுதிகளை வீட்டிற்குத் தெரியாமல்
வாங்கிவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தார். அவை அவரது படுக்கைக்கு வெகு அருகில் வைக்கப்பட்டிருந்த
ஒரு மரப்பீரோவில் அடுக்கப்பட்டிருந்தது.
மா.லே. இயக்கவாதி, தமிழ் தேசியர், காந்தியர்
என்று காலமாற்றங்களினுடாக தனது வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்ட தோழருக்கு, இவைகள்
ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல என்பதை காலமும் வாசிப்பும் அவருக்கு உணர்த்தியிருக்கக்கூடும். சிந்தாந்தப் பிடிப்பு, வாசிப்பு, உழைப்பு, போராட்டங்கள்
என்பதாக அவரது காலம் காற்றில் கரைந்திருக்கிறது.
நேற்று
அ.மார்க்சின் முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு, மதியம் மன்னார்குடி கிளம்பினேன். மன்னை
நெடுவாக்கோட்டை காமராஜர் நகர் இல்லத்தில் கிடத்தப்பட்டிருந்தார் தோழர் உ.ராஜேந்திரன்.
கைகளை நீட்டி, தலையை ஆட்டி உரக்கப் பேசும் அவரது உடல் அசைவற்றுக் கிடந்தது சூழல் நெஞ்சைக்
கனக்கச் செய்தது. உறவினர்களும் தோழர்களும் இறுதியஞ்சலி செலுத்தக் கூடியிருந்தனர். அவர்
எப்போதும்போல உடல் வாதைகளைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருப்பார்; இப்போது பேசாமல்
அசைவற்றுப் படுத்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக