செவ்வாய், ஏப்ரல் 02, 2019

கல்வியில் எதுவும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப் பொருள்களே!


கல்வியில் எதுவும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப்  பொருள்களே!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

மு.சிவகுருநாதன்

  
(APTITUDE TEST 2018 – 19  மற்றும் 9, +1 வகுப்புகளில் வடிகட்டல் பற்றிய  ஒரு குறிப்பு.)  
          ஒருங்கிணைந்த கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு APTITUDE TEST 2018 – 19  நடத்தப்பட்டது. (நல்லவேளை, ‘அந்தச் சொல்’ இல்லை! சமக்ரா சிக்‌ஷா – Samagra Shiksha தான்!) APTITUDE TEST ஐ மொழிபெயர்ப்பதில் என்ன சிக்கலோ! அப்படியே போட்டுவிட்டனர். உளச்சோதனை, உளப்பாங்குச் சோதனை, இயல்பறிச் சோதனை  என்பதுபோன்ற மொழியாக்கங்களை யோசிக்கலாம். இம்மாதிரியான உளச்சோதனைகள் மூலம் மாணவர்களின் மனப்பாங்கு, மனவெழுச்சிகளை போன்றவற்றை உணர்ந்து அதன் மூலம் கற்றலை மேம்படுத்த உதவுமெனில் நல்லதே. ஆனால் அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

     “இது தேர்வல்ல… ஒரு சுயபரிசோதனையே, உங்களின் தகுதிகளை உள்ளறிந்து பண்பாற்றல்களை மேம்படுத்தும் பயிற்சி எனலாம். உங்களது கல்வித்திறன் ஆர்வம் மற்றும் மனவெழுச்சி குறித்து அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும். மேலும் படிக்கும் திறனை மேம்படுத்திக் கொண்டு எப்போதும் செயல்படும் நபராக மாற்றியமைக்கும் சில கேள்விகள் இப்பரிசோதனையில் முக்கிய அளவீடுகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது”, என்று வினாத்தாள் முகப்பில் குறிப்பிடப்படுகிறது. 

   ஒருமுறை தொன்மைப் பாதுகாப்பு மன்றக்கூட்டத்தில் பேசவந்த ஒரு ஆசிரியர் நிலவரைபடங்கள் குறிப்பதெப்படி என ஆலோசனைகள் தந்தார். நம்மவர்கள் எதையும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப்பொருளாக மாற்றுவதில் வல்லவர்கள்! இங்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த உளப்பாங்குச் சோதனையை அடைவுத்தேர்வாக மாற்ற  முயல்வது ஏன்? 70 வினாக்கள் கொண்ட இந்த உளச்சோதனையின் இடையிடையே பாடவினாக்கள் புகுத்தப்பட்டுள்ளன. அறிவியலில் 9 வினாக்கள், கணிதத்தில் 12, சமூக அறிவியலில் 12 வினாக்கள் என 33 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. பிறவற்றை நடத்தை (17 வினாக்கள்), கலை (5 வினாக்கள்), ஆர்வம் (15 வினாக்கள்) என வகைப்படுத்தியுள்ளனர். இரண்டையும் இணைப்பதற்கு புதிய விளக்கங்கள் ஏதேனும் சொல்லக்கூடும். இங்கு திட்டங்கள் அனைத்தும் எங்கோ திட்டமிடப்பட்டு இங்கு செயல்படுத்தப்படுபவை. 70 மதிப்பெண்களில் 33 வினாக்கள் பாட அடைவையும் 37 வினாக்கள் மாணவரது உளப்பாங்கையும் சோதிக்கின்றன. இதற்கு எப்படி APTITUDE TEST என்று பெயரிடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. உளச்சோதனை அல்லது அடைவுத்தேர்வு இவற்றில் எதைத் தனியே நடத்துவது மாணவர்களுக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்தார்களோ தெரியவில்லை; சொன்னால்தான் உண்டு.

       (அ) ஆம்     (ஆ) சில நேரங்களில்   (இ) இல்லை என்பது பெரும்பாலான உளச்சோதனை வினாக்களுக்கான பதில். அதுவே “பாம்பு எந்த உறுப்பு மூலம் வாசனையை நுகர்கிறது?”, என்ற 42 வது அடைவு  வினாவிற்கும் விடைக்குறிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலவழியில் “Through which part the snake smells?”,
(a) Ear (b) Nose (c) Tongue  என்ற விடைக்குறிப்புகள் உள்ளன. 


   12 வது வினா “காகிதத்தை முதல்முதலில் கண்டறிந்த நாடு”, என்று இருக்கிறது. விடை (அ) ஜப்பான்     (ஆ) சீனா   (இ) இந்தியா. இரண்டாவதாகக் கண்டறிந்த நாடு எதுவாக இருக்கும்? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆங்கில வழியில் “Which country invented paper?”, என்றுதான் கேட்கப்படுகிறது. 


  “பாலின் தன்மை எத்தகையது?”, என்ற 29 வது வினாவிற்குரிய விடைகள் (அ) திடம்     (ஆ) திரவம்   (இ) கூழ்மம். பாலின் தன்மையா அல்லது நிலையா? இரண்டும் ஒன்றா? “Which is nature of milk?”, என்று ஆங்கில வழி கேட்கிறது? கூழ்மம் – பால்மம் வேறுபாடுகள் உண்டா? 


   “Which is the secretariat system of our body?”, (வினா எண்:14) தமிழ் வழியில் “நரம்பு மண்டலத்தின் தலைமை நிலையமாக இருப்பது?”, என்றாகிறது. இதைப் போன்றதொரு அடைவுத் தேர்வில் ‘தென்னிந்திய உணவுப்பயிர்களைக் குறிப்பிடும் வினாவிற்கு ‘அரிசி’ என்ற விடையளிக்கப்பட்டிருந்தது. ‘Rice’ என்பதே இவ்வாறு அரிசியானது. ‘நீட்’ தேர்வானாலும் உள்ளூர் தேர்வானாலும் நமது மொழிபெயர்ப்பின் நிலை இதுதான்! 


   இம்மாதிரியான தேர்வுகள் வெறும் கண்துடைப்பாகப் போய்விடும் அவலங்கள் நீடிக்கிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளிலிருந்து குழந்தைகள் தற்காலிகமாகக் காப்பாற்றப் பட்டுள்ளனர். அவர்கள் தலையின் மீது கத்தி  இன்னும் தொங்கிக்கொண்டுள்ளது. 9 ஆம் வகுப்பில் பெரும் வடிகட்டல் நடக்கிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாது அரசுப்பள்ளிகளிலும் இது நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எளிமையாக இல்லாத நிலை, நூற்றுக்கு நூறு தேர்ச்சிக்கான கல்வி அலுவலர்களின் நெருக்கடி போன்ற பல காரணங்கள் இதற்குண்டு. 


     புதிய பாடநூல் சுமை, +1 பொதுத்தேர்வு போன்ற காரணங்களுடன் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் மூளைச்சலவை (எ.கா.: ஐ.டி.ஐ. படிப்புகளை நோக்கி ஆற்றுப்படுத்துதல்.), குழந்தைத் திருமணங்கள், குடும்பங்களின் வறிய நிலை, மடிக்கணினி, மிதிவண்டி போன்றவற்றைப் பெற்றால் போதும் என்கிற சில மாணவர்களின் மனநிலை போன்ற பல்வேறு காரணங்கள் 9 மற்றும் 11 வகுப்பைவிட்டு மாணவர்களைப் பள்ளியைவிட்டு துரத்துகின்றன. 


   இதற்குக் கல்வித்துறையும் பள்ளிகளும் காரணமாக இருப்பதை மாற்றும் நடவடிக்கைகளை இத்தகையத் தேர்வுகள் மூலமாவது எடுக்கவில்லையென்றால் ஒருபலனும் விளையப் போவதில்லை. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எளிமையாக்குதல், +1 தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் தேர்வெழுத இருக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கூறி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குதல், தேர்ச்சிப் பெற வாய்ப்பின்மையைக் காரணமாகக் காட்டி  9 மற்றும் +1 வகுப்புகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுத்தல், நூற்றுக்கு நூறு தேர்ச்சி மிரட்டல்களை நிறுத்த கல்வி அலுவலர்களுக்கு உரிய   பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குதல் போன்ற பலகட்டச் செயல்பாடுகள் இன்றைய நிலையில் மிகவும் அவசியமானத் தேவைகளாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக