திங்கள், ஏப்ரல் 29, 2019

தேர்தல் இடிப்புக்குள்ளான தோழர் பி.எஸ்.ஆர். சிலை


தேர்தல் இடிப்புக்குள்ளான தோழர் பி.எஸ்.ஆர். சிலை


மு.சிவகுருநாதன்
 

      சில கெட்ட நேரங்களில் நல்ல காரியங்களும் நடந்துவிடுகின்றன. ஆனால் இதன் மூலம் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் பண்புகளும் உருவாக்கப் படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களுக்கு பல தலைவர்களது பெயர்கள் வைக்கப்பட்டபோது எந்தச் சலனமும் இல்லை. சுந்தரலிங்கனார் பெயர் வைத்தபோது சிக்கல் உருவாக்கப்பட்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்ட கதை நமக்குத் தெரியுந்தானே!
     நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சாலையோரக் கொடிமரங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வகையில் நல்ல செய்திதான். இருப்பினும் இத்துடன் தோழர் பி.சீனிவாசராவின் (பி.எஸ்.ஆர்.) சிலையொன்று இடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திரு.வி.க. சிலை தப்பியுள்ளது. இவற்றுள் எது அனுமதி பெற்றது, எது பெறாதது என்கிற விவரம் தெரியவில்லை.      இன்னும் ஆயிரக்கணக்கான உண்டியல்கள் தப்பித்து அப்படியே இருக்கின்றன. பி.எஸ்.ஆர். சிலை அருகிலேயே ஓர் உண்டியல் உள்ளது. சிலையை மட்டுமே இடித்துள்ளனர். இந்த சாலையோரக் கோயில்கள் பல வாகன ஓட்டிகள் அப்படியே நிறுத்திச் சென்றுவிடுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடக்கின்றன. நான் முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்த, திருநெய்ப்பேர் அரசு மேனிலைப்பள்ளிச் சுவரில்    வரையப்பட்ட அம்பேத்கர், காமராஜர் ஓவியங்கள் தப்பித்தன. இவை காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. 

சிலை உடைப்பிற்கு முன்பு...


    திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் மணலிக்கும் ஆலத்தம்பாடிக்கும் இடையே கரும்பியூர் தோட்டம் என்கிற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் தோழர் பி.எஸ்.ஆர். அவர்களின் சிறிய மார்பளவு சிலை ஒன்று சிறிய பீடத்தின் மீது பல்லாண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையும் பீடமும்தன் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. தியாகி பி.சீனிவாசராவ் மணிமண்டபம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது. இந்தச் சிலையை எடுத்து வந்து அம்மண்டபத்திலாவது வைத்திருக்கலாம், அல்லது முன்னறிவிப்பு கொடுத்து சிலையைப் பாதிப்பின்றி நீக்க  உரிய அவகாசம் கொடுத்திருக்கலாம்.      கீழத்தஞ்சை மாவட்ட தலித் மக்களின் நேசத்திற்குரிய விடுதலைப் போராட்ட வீரர் ஒருவருடைய சிலை இவ்வாறு இடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தேர்தல் முடிந்த பின்னும் இன்றுவரை அப்படியே இருப்பது மனத்தை என்னமோ செய்கிறது. யாரோ மனம் பதைத்த ஒருவர் சிலையை மட்டும் பார்வையில் படுமாறு திருப்பி வைத்திருக்கிறார், அவ்வளவுதான் நடந்துள்ளது!  சிவப்பைப் பார்த்தால் அதிகார வர்க்கம் மிரளும். இதுதான் நேரம் என்று உடனடியாக சிலையை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். 

   ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இருந்த பகுதிகள் இது. ஒருங்கிணைந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கீழத்தஞ்சையில் வளர்த்த பெருமைக்குள்ளான பி.எஸ்.ஆர். அவர்களின் சிலை உடைப்பிற்கு இடதுசாரிகளின் எதிர்வினை என்னவென்று தெரியவில்லை. தேர்தல் முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காத்திருக்க வேண்டும் போலும்!  

    தி.மு.க. கூட்டணியில் நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம். செல்வராஜ் இத்தொகுதியின் வேட்பாளர். 1989 முதல் 30 ஆண்டுகளாக ஒரே வேட்பாளரை நம்பிக் களம் இறங்குவது எவ்வளவு சரியானது என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். 

    தேர்தல் பரப்புரையின்போது திருவாரூரில் சீமான் பரப்புரையில் ஈடுபட்டதைக் கண்ட சி.பி.அய். வேட்பாளர் எம். செல்வராஜ் சீமானின் உரை முழுதும் கேட்க அமர்ந்திருந்ததும், பின்னர் மேடையேறி பொன்னாடை அணிவித்து, சீமானின் பேச்சுக்கு நான் ரசிகன் என்று சொன்ன கூத்துகளும் அரங்கேறியது; ஊடகங்களில் வெளியானது.  

    சீமானுடன் தனிப்பட்ட முறையில் நட்பிலிருப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அவரது பேச்சுக்களை நான் மிகவும் ரசிப்பேன் என்று ஒரு கம்யூனிஸ்ட் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. பாசிசம் கக்கும் பேச்சை வெறுமனே ரசிக்கும் ஒருவர் உண்மையில் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியுமா என்ற அய்யம் எழுவது இயற்கை. மக்களின் இறுதி நம்பிக்கையாகிய இடதுசாரிகளும் இவ்வாறு புரிதலற்றுச் செயல்படும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். கொள்கைகள் குறித்த கவலைகள் இல்லாதபோது பி.எஸ்.ஆர். சிலை இடிப்புப் பற்றிய கவலைகள் எப்படி ஏற்படும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக