வியாழன், ஏப்ரல் 04, 2019

தயவுசெய்து குழந்தைகளிடம் வெறுப்பரசியலையும் பொய்மைகளையும் விதைக்காதீர்கள்!


தயவுசெய்து குழந்தைகளிடம் வெறுப்பரசியலையும் பொய்மைகளையும்  விதைக்காதீர்கள்!

 (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 09)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
மு.சிவகுருநாதன்


(ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் -  வரலாற்றுப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)




    “அண்மையில் இவற்றைத் (பாமியான் புத்தர் சிலைகள்) தாலிபான்கள் உடைத்து நொறுக்கினர்”. (பக்.112)  

   “நாளந்தா பல்கலைக் கழகம் பக்தியார் என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத்தரைமட்டம் ஆக்கப்பட்டது. நாளந்தா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்”. (பக்.127)

      மேற்கண்ட வரிகள் ‘பஞ்சஜன்யா’, ‘விஜயபாரதம்’ ஆகியவற்றில் வந்ததல்ல. தமிழக அரசின் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவ வரலாற்றுப் பாடத்தில் இருப்பவை இவை! 

    2001 இல் ஆப்கானிய தாலிபான் அரசு பாமியான் புத்தர் சிலைகளைக் குண்டு வைத்து தகர்த்தது. அண்மை என்பதற்கு கால வரையறை உண்டா? இது மோசமானச் செயலென உலகமே கண்டித்தது. பலகாலம் அமெரிக்க, ரஷ்யப் படைகள், தீவிரவாதிகள் என துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகள்  முற்றிலும் தகர்க்கப்பட்டன. இதுவும் யுனெஸ்கோவின் மரபுச்சின்னங்களுள் ஒன்றாக பாதுகாக்கப்பட்ட வந்தது. 

     நாளந்தா பல்கலைக் கழகம் இதற்கு முன்பும் பல்வேறு படையெடுப்புகளுக்கு உள்ளானது. படையெடுப்பாளர்கள் அவர்கள் எம்மதமாக இருப்பினும் இவ்வாறு சிதைக்கும் வேலைகளைச் செய்துள்ளனர். உள்நாட்டு மன்னர்கள் (இந்துக்கள்) செய்தால் அது பெருவெற்றி, இஸ்லாமிய மன்னர்கள் செய்தால் அதைமட்டும் பூதாகரமாக வரலாற்றில் எழுதி வெறுப்பரசியலை குழந்தைகளிடம் விதைப்பது சரியா? என சிந்திக்க வேண்டும்.

      1992 டிசம்பர் 06 இல் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சங் பரிவார் கும்பல் பாபர் மசூதியைக் ‘கரசேவை’ என்னும் பெயரில் இடித்துத் தரைமட்டமாக்கியதே! இவற்றைப் பாடநூல் எங்காவது குறிப்பிடுமா? “1992 டிசம்பர் 06 அன்று உத்திரப்பிரேதச மாநில அரசின் தடைகளை மீறி அத்வானி தலைமையில் திரண்ட சங் பரிவார் கும்பல் பாபர் மசூதியை ‘கரசேவை’ என்னும் பெயரில் இடித்துத் தரைமட்டமாக்கியது”, என்ற பாடநூல்கள் எழுதும் காலம் வருமா? 

   இஸ்லாமிய மன்னர்கள் இடித்த கோயில்களைப் பற்றிப் பேசும்போது இந்துமன்னர்கள் இடித்த பவுத்த விகாரைகள், சமணப் பள்ளிகள் பற்றியும் பேசவேண்டுமே! மேலும் சைவ, வைணவ மோதலும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய செய்திதானே! சமணர்களைக் கழுவேற்றியதை என்ன செய்வது? இவைகளை மட்டும் ஏன் மறைக்கிறோம்? வெறுப்பு கண்களை மறைக்கத்தானே செய்யும். எனவே உண்மைகள் மறைந்து, மறந்து விடுகின்றன. 

   “புஷ்யமித்திரர் பௌத்தர்களைத் துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன. சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்”. (பக்.111) என்று புஷ்யமித்திர சுங்கருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஏன் பிற மன்னர்களுக்குத் தரக்கூடாது? இதைப்போல அரேபிய, துருக்கிய, பாரசீக, ஆப்கன் பகுதிகளைச் சேர்ந்த மன்னர்களும் பிற மதங்களுக்குப் பல்வேறு உதவிகள் புரிந்தவர்கள் தானே! ஏனிந்த பாரபட்ச வெறுப்பரசியல்?                                                               
     சங்ககாலத்தின் இறுதியில் களப்பிரர்கள் பற்றி ஒரு பத்தி உள்ளது. அதில், “களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்குக் குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச்சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை”, (பக்.104) என்று சொல்லி, “களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்தரிக்கப்பட்டதைப் போன்று இருண்ட காலம் அல்ல”,  என்று முடித்துவிடுகிறார்கள்”. (பக்.104)

    பூலாங்குறிச்சி கல்வெட்டுகள், தமிழ் பிராமி எழுத்துகள், மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கையின் வரலாற்று நூல்கள் போன்றவை இங்கு எத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன? மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் ஆய்வுகள் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதா? ‘ஒன்றுமே இல்லை’, இருப்பினும் ‘இருண்ட காலம் அல்ல’, என்று சொல்வது எம்மாதிரியான அணுகல்முறை? களப்பிரர்கள் பற்றிய இதுவரையிலான ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் முடிவை மட்டும் சொல்வது நம்பகமற்றதாக இருக்குமல்லவா?    

   “ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்) தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர் அரும்பாடுபட்டு பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்”. (பக்.95) பிற பாடங்களில் சாதிப்பெயருக்கு கத்தரி வைப்பவர்கள் இங்கு ஏன் கண்டுகொள்ளவில்லை? 

    “சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் (சேரன் செங்குட்டுவன்) இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தார் எனத் தெரியவந்துள்ளது. பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார்”. (பக்.97) “‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாக”, கருதப்பட்டது சொல்லப்படுகிறது. கண்ணகி தவிர பிற பத்தினித் தெய்வங்கள் யார்? ‘கற்பு’ ஆண்களுக்கு ஏன் வலியுறுத்தப்படவில்லை. சமத்துவ சமூகம், பெண்களுக்கு உரிமைகள் இருந்தன என்று சொல்வது எங்ஙனம்? 

   “முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்”. (பக்.98) என்ன மாதிரியான வேள்விகள் நடத்தப்பட்டன, யாரைக்கொண்டு இவை நடந்தேறின,, எந்த வேதங்கள் அடிப்படையில் இவை நடத்தப்பட்டன? என்பனவற்றை ஏன் விளக்கமாகச் சொல்லவில்லை? அசுவமேத யாகம் போலவா? சங்ககால சமத்துவ சமூகம் என்று சொல்லிவிட்டு, வேதயாகங்கள் என்று குறிப்பிடுவது முரணாக உள்ளதே! 

  “வேளிர்கள் – வேளாளர் – பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமைப் பிரிவினர் ஆவர்”. (பக்.99) இன்றைய சமூகத்தில் வேளாளர் என்பது பிற்பட்ட ஒரு பிரிவினரையும் தாழ்த்தப்பட்ட பிரிவிலுள்ள (தேவேந்திரர்கள்) ஒருவரையும் குறிக்கிறது. இவர்களில் பாடநூல் யாரைச் சொல்கிறது? 

   “ நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரமாகும். அது ‘இறை’ என அழைக்கப்பட்டது”. (பக்.100) வரிக்கு ஏன் ‘இறை’ எனப் பெயரிடப்பட்டது? இறைவன் போன்ற அரசன் பெயரால் வசூலிக்கப்பட்டதால் காரணப்பெயராக இருக்க வாய்ப்புண்டு! ‘இறையிலி’ யும் உண்டே! அதை ஏன் மறைக்க வேண்டும்? 

  “உரிமையியல் (Civil) வழக்குகளில் பின்பற்றப்பட்ட வழிமுறையின்படி  நாகப்பாம்பு இருக்கும் ஒரு பானைக்குள் வாதி தனது கையை நுழைக்க வேண்டும். நாகம் அவரைத் தீண்டினால் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். பாம்பு அவரைத் தீண்டவில்லை எனில் அவர் குற்றமற்றவர்  எனக் கருதப்பட்டு விடுவிக்கப்படுவார். தண்டனைகள் எப்போதும் கடுமையாகவே இருந்தன. திருட்டு வழக்குகளில் மரணதண்டனை வழங்கப்பட்டது. தலையைச் சீவுதல், உடல் உறுப்புகளைத் துண்டித்தல், சித்திரவதை செய்வது, சிறையில் அடைப்பது, அபதாரம் விதிப்பது ஆகியவை குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகளாகும்”. (பக்.101) உரிமையியல் வழக்குகளில் பாம்புகளைத் தீண்டவிடுவதும் மரணதண்டனைக்கு நிகரானதுதானே! முட்டாள்தனமான இம்முறைகளை ‘குடவோலை’ மாதிரி விதந்தோத வேண்டுமா? ‘அபராதம்’  என்பது ‘அபதாரம்’ என்று திரிந்துள்ளதோ!

   திணை வகைப்பாட்டு அட்டவணையில் ‘பாலை’ வறண்ட நிலம் (பக்.101) என்றுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் ஒருமாதிரியாகச் சொல்வதற்குப் பதிலாக ஓர்மையைக் கடைபிடித்தால் நல்லது. 

“மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்”, (பக்.110) 

“கடைசி மௌரியப் பேரரசர் பிருகத்ரதர் அவருடைய படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்”. (பக்.118)  

   மேற்கண்ட இரு வரிகளில் கடைசி மௌரியப் பேரரசரின் பெயர் வேறுவிதமாகக் குறிப்பிடப்படுகிறது. 

   “புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர். சமஸ்கிருத மொழி படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது”. (பக்.111) 

  “குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம்”. (பக்.129)

   ‘புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும்’, வளர்த்த வைணவம் எப்போது தோன்றியிருக்க முடியும்? உண்மையில் சைவம், வைணவம் பிரிந்தது சுங்கர் காலமா? அல்லது குப்தர் காலமா? குழந்தைகள் இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வர்? 

‘பெண்களின் நிலை’, எனும் தலைப்பில்…

    “சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண்புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தைச் சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் ‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்”. (பக்.102) ‘பெண்களுக்குக் கட்டுப்பாடுகள்’ இல்லை, ஆனால் “‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கம்”, என்பதற்கு என்ன பொருள்? கட்டுப்பாடுகளில்லாமல் இந்த ‘ஒழுக்கச்’ சுமை பெண்கள் மீது ஏன் சுமத்தப்பட்டது என்பதை உணர, உணர்த்த வேண்டுமல்லவா! ‘களவு’ம் இருந்ததல்லவா!  

‘மத நம்பிக்கைகள் மற்றும் சமூகப்பிரிவுகள்’ எனும் தலைப்பில்…

    “மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன். சங்க காலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன், (விஷ்ணு), இந்திரன், வருணன், கொற்றவை ஆகியோராவர். நடுகல் வழிபாடும் வழக்கில் இருந்தது. பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன. வடபகுதிகளில் வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை. ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே”. (பக்.102) ‘வர்ணாசிரம முறை’ திராவிடத் தென்னாட்டின் தற்கால இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கோவா போன்ற பக்திகளுக்கு எப்போது வந்தது? 

   “அது (தொல்காப்பியம்) சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது”. (பக்.96) ‘இழிசனர்’ வழக்கைச் சுட்டும் தொல்காப்பியம் உயர்த்தப்பட்ட தரத்தை மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட தரத்தையும்தானெ சொல்கிறது!

   ‘குப்தர்கள் காலம் பொற்காலம்’ என்கிற வழக்கமான கற்பிதத்திலிருந்து விலகி பாடம் எழுதப்பட்டிருப்பது நல்ல முயற்சி. அதைப் பின்வரும் பத்திகள் உணர்த்துகின்றன. 

 “நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்”. (பக்.127)

“குப்தர்கள் காலத்தில் பல்வகைப்பட்ட அடிமைகள் இருந்ததாகச் சான்றுகள் உணர்த்துகின்றன”. (பக்.129)

“வேத மதமும் வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன. சமுத்திர குப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர். குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம். ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து வந்தது”,. (பக்.129) 

 “குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ண முறையில் அமைந்திருந்தது. அது தந்தைவழிச் சமூகமாக இருந்தது. ‘மனு’வின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அவற்றின்படி பெண்கள், தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருத்தல் வேண்டும். பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. …………………………………………………………………………………….. உடன்கட்டை (சதி) ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது”. (பக்.129)

   ‘மநு’ வின் சட்டங்களில் பெண்கள் தந்தை, கணவன், மூத்த மகன் ஆகிய ஆண்களுக்கு அடங்கியிருப்பது மட்டுமா? அதைத் தாண்டிய ‘மநு’வின் விதிகள் உண்டல்லவா! இதுதான் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது.  ‘வர்ண முறை’களை விளக்க வேண்டியதில்லையா? 

 “ஆரியப்பட்டர் தனது நூலான ‘சூரிய சித்தாந்தா’ வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார்”. (பக்.130) இவரை முதலாம் ஆரியப்பட்டர் என்று சொல்வதே பொருத்தம். இவர் எழுதிய நூல்கள் ஆரியப்பட்டீயம், ஆரிய சித்தாந்தம் ஆகியன. காலம் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டு (கி.பி. 476-550). ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் நூல் பழைய நூல்களுள் ஒன்றாக மேற்கோள் காட்டப்படுகிறது. இது ஆரியப்பட்டர் I  ஆல் எழுதப்பட்டதா? 

   “அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர்.  பக்தி மார்க்கத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வியக்கம் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது. சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டிபோட்டது. இதன் விளைவாக பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற்றன”. (பக்.144) தமிழ்ப் பக்தி வழிபாடு மட்டுமே பவுத்த, சமண சமயங்கள் தமிழிகத்தில் வீழ்ச்சியுறக் காரணமல்ல. அவைதீக மதங்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகள் கொஞ்சநஞ்சமா? வெறும் பாட்டுப்பாடி மக்களை ஈர்த்து அவைதீக மதங்களை வீழ்ச்சியுறச் செய்தனர் என்றால், 

“மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாய்அருள்
பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே”,  

    (மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களில் திருவாலவாய்ப்பண் -கவுசிகம் என்னும் தலைப்பில் 3ஆவது பாட்டு.)  போன்ற பாடல்களும் பக்தி இயக்க ‘அற’த்தை வெளிப்படுத்துகின்றன இல்லையா! சைவ அடியவரான  திருஞானசம்பந்தரே (நாயன்மார்) இவ்வாறு இருக்கும்போது சாமான்யச் சைவனின் நிலை எப்படியிருக்கும், என்று ஊகிக்க முடிகிறதல்லவா!

   
      பக்தி இயக்கம் மூலாம் பூசும் வேலையைச் செய்தது. தமிழுக்கு சமஸ்கிருதத்தைவிட முன்னுரிமை வழங்கியதாகச் சொல்வது எந்த அளவிற்கு சரி? பக்திப் பாடல்கள் இயற்றப்பட்டதாலேயே வழிபாட்டில் தமிழ் என்று ஒட்டுமொத்தமாக முடிவு கட்ட முடியாது.  இன்னும் கூட தமிழ் வழிபாட்டு மொழியாகவும் பெண்கள், சூத்திரர்கள் உள்ளிட்டோர் வழிபாட்டில் இடம் பெற இயலாது. நந்தனார் கதை நமக்குச் சொல்வதென்ன? அழிந்துபோன வேதமத்தை மீட்டுருவாக்க செய்யப்பட்ட ‘குயுக்தி’ வேலையே பக்தி இயக்கம். 

   “தமிழ் இலக்கியமும்  வளர்ச்சி பெற்றிருந்தது. நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும்”. (பக்.145)

    நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்களில் அப்பர், சம்மந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பாடல்களை இயற்றியவர்கள். இந்து மதத்தை ஒருங்கிணைப்பதற்குக் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடுகளும், அதன் மூலம் பெரும் உருவாக்கப்பட்ட புராணக்கதைகள் மூலம் பெருந்திரள் மக்களை இந்து மதம் தக்கவைத்த கதையும் இதில் உண்டு. நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை ஏன் சொல்லவில்லை? வைணவப்பிரிவின் 12 ஆழ்வார்களைப் போல நாயன்மார்கள் அனைவரும் பாடல் இயற்றும் திறன் பெற்றவர்கள் அல்லர். 

   “பெரும் பாறையொன்றின் சுவற்றில் பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை ஆகிய நுண்ணிய சிறபங்கள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் தலையிலிருந்து அருவியெனக் கொட்டும் கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்”. (பக்.143) என்று தொடர்ந்து இந்து சமயப் புராணக்கதைகளையே மகாபலிபுர சிற்பங்களுக்கு ஏற்றும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இவற்றில் உள்ள சமண சமயப் புராணங்களைன் தாக்கம் குறித்து ஆய்வுகள் செய்த ,மயிலை சீனி வேங்கடசாமியின் எழுத்துகளுக்கு நாம் முகம் கொடுப்பதில்லை. 
 
   மகேந்திரவர்மன் I, “மத்தவிலாசப் பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உள்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது”. (பக்.142) ஏனிந்த கோள் மூட்டும் போக்கு? உண்மை என்ன? அனைத்து மொழி இலக்கியத்தில் ‘அங்கதம்’ (Satire) உண்டு. அந்த வகையில் சமஸ்கிருத அங்கத நாடகமான   ‘மத்தவிலாசப் பிரகசனம்’ பவுத்தத்தை மட்டுமல்ல, சைவத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறது. இத்தகைய நையாண்டியாகிய ‘பகடி’ ஒன்றை இழிவுபடுத்துவதல்ல; விமர்சனம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். 

     முதலாம் மகேந்திர வர்மன்  சமண சமயத்திலிருந்து அப்பரால் சைவத்திற்கு மாற்றப்பட்டவர். பவுத்தம் (பவுத்த பிக்கு நாகசேனன்), சைவப்பிரிவான கபாலிகம் (சத்யசோமன், அவனது மனைவி தேவசோமா), மற்றொரு பிரிவான பாசுபதம் (பாசுபதன்) ஆகியோர் இந்நாடகக் கதாபாத்திரங்கள். உண்மையில் இந்நாடகம் பவுத்தத்தைவிட இரு சைவப் பிரிவுகளையும் கிண்டலுக்கு உள்ளாக்குகிறது.  இந்நாடகத்தில் சமரசம் செய்யவந்த பவுத்த பிக்கு தர்க்கத்தில் தோற்றுப் போகிறார்,  அவ்வளவுதான்! மகேந்திரவர்மன் I சமண சமயத்தில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட நாடகமா என்பது ஆய்வுக்குரியது. 

    ‘வாழ்க்கைத் திறன்கள்’ பகுதியில் (பக்.138) “செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள அருகேயுள்ள இஸ்ரோ (ISRO) மையத்திற்குச் சென்று வரவும்”, அதுவும் ஆறாம் வகுப்பிற்கு பெட்டிக்கடை, டீக்கடைக்கு போற மாதிரி இப்படி சொல்றாங்க? இந்தியாவில் ஶ்ரீஹரிகோட்டா, பெங்களூரு, அகமதாபாத்,  ஷில்லாங், மகேந்திரகிரி, திருவனந்தபுரம், ஹைதராபாத், ஹசன், சண்டிகர்,சித்தூர் போன்ற இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளன. இதில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி மட்டுமே தமிழகத்தில் உள்ளது. செயல்பாடு அளிப்பவர்கள் இதையெல்லாம் யோசிக்கவே மாட்டார்களா?

    “எடைக்கு எடை தங்கம் கொடுத்து வாங்கத் தகுதியானது என அறிவிக்கப்பட்ட”, செய்தி பதிவாகியுள்ளது. அன்று டாக்காவில் கைத்தறியால் நெய்யப்பட்ட மிக மெல்லிய மஸ்லின் (பக்.103) துணிவகைகள் ஐரோப்பிய விசைத்தறி சந்தைக்கே சவால் விட்டது. (பெயரைப் பார்க்கும்போது இது செயற்கை இழையோ என்ற அய்யத்தை கொடுக்கும்.) ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் மஸ்லின் இறக்குமதி தடை செய்யும் அளவிற்கு இதன் தரம் இருந்தது.

                         (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக