செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

என்று மாறும் இந்நிலை?

 என்று மாறும் இந்நிலை?

 

மு.சிவகுருநாதன்

 

      


           ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி என்பது புதிதல்ல. ஏற்கனவே  இவை இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன. தற்போது EMISக்கு முதன்மை தந்து ஆன்லைனில் 5 நாள்கள்  நடத்தப்படுகிறது. 

 

       கல்வித் துறையில் சாதிமுறைக்கு இணையான படிநிலை அமைப்பு  (Hierarchy) செயல்படுவது மிக மோசமானது. முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்பதாக இந்த கல்வி வருணமுறை உள்ளது. 

 

     இவர்களை ஒன்றாக இணைத்துப் பயிற்சி நடத்துவதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. தனித்தனியாகத்தான் பயிற்சி நடத்துவது என்கிற கல்வி ‘மநு’தர்மம் மோசமானது.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு இணைவழிப் பயிற்சி என்று பெருமிதம் கொள்வது மட்டும் போதாது.  அதற்குரிய அடிப்படை வசதிகள் வேண்டும்.

 

       70,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே சமயத்தில் பயிற்சி நடத்த சர்வர் மற்றும் இணைய வேகம் போதுமானதாக இல்லை. மாணவர்களுக்கான மதிப்பீடுகளைச் செய்யவும் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்த அனுபவங்களிலிருந்து  நாம் இன்னும் பாடம் கற்கவில்லை.

 

       நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்பதால் எண்ணிக்கை கூடுகிறது. அதற்கேற்ற சர்வர், இணைய வேகம் இல்லை. முதுகலை ஆசிரியர்களுடன் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் நாம் முன்பே சொன்னதுபோல கல்வி வருணமுறை அதற்கு இடந்தரவில்லை, என்ன செய்வது?

 

       சென்ற வாரங்களில் +2 தனித்தேர்வுப் பணிகளில் இருந்த சில முதுகலை ஆசிரியர்கள் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுடன் பயிற்சியில் பங்கு பெறுகின்றனர். ஆனால் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைய  இடங்களும் (கணினிகள்)  காலியிருந்தும் பட்டதாரி ஆசிரியர்களை அவ்விடங்களில் அனுமதிக்கவில்லை.  அதைத்தான்  வருண வேறுபாடு என்று சொல்ல வேண்டியுள்ளது!

 

      இப்பயிற்சியின் கருத்தாளர் சென்ற பயிற்சிகளைப் போலல்லாமல் இம்முறை (23/08/2021) கலந்துகொள்பவர்களில்  பலர் இதுவரை மவுசையோ, கம்யூட்டரையோ  தொடாதவர்கள்  என மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டேயிருந்தார். இதற்கான காரணம் என்ன?

 

      கணினி ஆசிரியர்கள், மாவட்டக் கருத்தாளர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஆகியோர் இதுவரை பயிற்சியில் கலந்துகொண்ட நிலையில் தற்போது நடுநிலை/உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் பயிற்சி பெறும்போது இவர்களில் பெரும்பாலானவர்கள் மவுசைத் தொடாதவர்கள் என்று சொல்லும் மனநிலை சாதிமுறையைப் போன்றதுதான். Hi Tech Lab. வசதிகள் இல்லாத ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மவுசைத் தொடாதவர்கள் என்பதா? அடுத்த கட்டமான இடைநிலை ஆசிரியர்களை நோக்கி எத்தகையச் சொற்கள் பாயும் என்பது அச்சமாக உள்ளது.   

 

     பள்ளிகளில் வசதிகள் இருப்பதாலோ, முதுகலை ஆசிரியராக இருந்தாலோ அவர்களுக்கு இயற்கையாகவே கணினி அறிவு சாத்தியப்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையை கல்வி அடிப்படைவாதமாகவே கருத வேண்டும். அறிவியலிலும் இம்மாதிரியான அடிப்படைவாதங்கள் உண்டு. அவை கல்விக்கோ அல்லது அறிவியலுக்கோ வளம் சேர்ப்பவை அல்ல, மாறாக ஊறு செய்பவை.  

     

     கணினித்திறன் பயிற்சிகளில் தமிழில் தட்டச்சு செய்வது இன்றியமையாத ஒன்று. இன்றுள்ள தொழிற்நுட்ப வசதிகளில் முறையான தட்டச்சுப் பயிற்சி பெறாத எவரும் தமிழில் தட்டச்சு செய்ய கட்டற்ற மென்பொருள்கள் உள்ளன. பேச்சை எழுத்துருவாக்கும் (voice typing) வசதிகள் திறன்பேசிகளில் உண்டு.

 

     முறையான தட்டச்சுப் பயிற்சி பெறாதவர்கள் கணினியில் தட்டச்சு செய்ய ஒலியன் (phonetic) முறையே உகந்தது. இதற்கு நிறைய கட்டற்ற மென்பொருள்கள் உண்டு (எ.கா. இ கலப்பை – e kalappai) ஆனால் பள்ளிக்கூட கணினிகளில் உள்ளீடு செய்யப்பட்ட மென்பொருளும் எழுத்துருக்களும் தட்டச்சு செய்வதற்கு எளிமையாக இல்லை. மிகவும் எளிமையான இப்பணியை மேலும் சிக்கலாக்குகின்றன. புதிதாகக் கற்றுக்கொள்பவர்களை அச்சப்படுத்தித் தூரப்படுத்துகிறது. இம்மாதிரியான வசதிகள் பயன்படுத்துவோரின் துணைவனாக (user friendly) இருக்க வேண்டும். ஆனால் இங்கு தலைவலியை உண்டு பண்ணுகிறது.

 

      கல்வி என்பது நம்முள் படிந்துள்ள கசடுகளை வெளியேற்றவும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளவுமான ஓர் ஏற்பாடாகும். அதன் நோக்கங்களுக்கேற்ப கல்விச் செயல்பாடுகள் அமைவது நலம். ஆசிரியர்களை தடுப்புக்காவலில் வைப்பதைப் போன்றே ஆன்லைன் பயிற்சிகளையும் வழமைபோல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வர் மற்றும் இணைய இணைப்பிற்கான காத்திருத்தலில் பயிற்சிகள் முடிந்துவிடுகின்றன. இந்நிலை மாறும் என்று காத்திருப்போம்!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக