இட ஒதுக்கீட்டின் அறம்
மு.சிவகுருநாதன்
இந்திய அரசியல் சட்டம் அனைவருக்குமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்க உறுதியேற்கிறது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதை ஏற்கிறது. அதனடிப்படையிலேயே இங்கு இட ஒதுக்கீடு அமலாகிறது.
சமத்துவத்தை நோக்கியப் பாதையில் பல்வேறு அசமத்துவங்களை இந்தச் சமூகம் எதிர்கொள்கிறது. இவற்றைச் சரிசெய்வதற்காகவே ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள்ளாக அசமத்துவச் சமூகங்களிடையே சமத்துவத்துவத்தை உண்டாக்கமுடியும் என அம்பேத்கர் போன்றோரின் கனவாக இருந்துள்ளது. ஆனால் நாளுக்குநாள் சாதியம் இறுகிப்போகும் நிலையில் இதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. சமூகங்களுக்கிடையேயான உரையாடல்களும் அதற்கான முன்னெடுப்புகளும் இன்னும் தொடங்கப்படவே இல்லை.
இட ஒதுக்கீட்டின் மூலம் அடித்தட்டுச் சமூகங்கள் மேலெழுந்துவிடக்கூடாது என ஆதிக்கச் சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டுச் செயல்படுகின்றன. இந்திய ஒன்றிய வலதுசாரி பாஜக அரசு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கொள்கை உடையது. எனவே அவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்டுகொள்வதில்லை. ஒன்றிய அரசுப்பணிகள் மற்றும் கல்வியில் தலித் மற்றும் இதர பிற்பட்டோர் இட ஒதுக்கீடுகளை முறையாகக் கண்காணிப்பதில்லை. இவை தொடர்பான பரிந்துரைகளுக்கும் செவி சாய்ப்பதில்லை. ஆனால் உயர்த்தப்பட்ட சாதியினருக்கு இட இதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வருகின்றனர்.
உயர்த்தப்பட்ட சாதியினரின் ஏழைகளுக்கு (Economically Weaker Section – EWS) 10% இதுக்கீட்டை 2019 ஜனவரி முதல் ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இம்மசோதாவிற்கு ஆதரவளித்தது சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளியானது. இத்தகைய ஏழைகளுக்கான வருமான உச்ச வரம்பு ரூபாய் எட்டு லட்சமாகும். இதிலிருந்தே உண்மை விளங்கும். இதர பிற்பட்டோரின் பொருளாதார (Creamy Layer) வரம்பை உயர்த்தபட்ட வகுப்பு ஏழைகளும் பெறுகின்றனர்.
உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என எல்லை விதித்தபிறகும் ஒன்றிய அரசின் ஒதுக்கீடு OBC 27%, SC 15%, ST 7.5%, EWS 10% என 59.5% ஆக உள்ளது. தமிழ்நாடு மாநில அரசில் BC 30% (BCM 3.5%), SC 18% (SCA 3%), ST 1%, MBC/DNC 20% என 69% ஆக உள்ளது. அடைப்புக்குறிக்குள் உள்ளவை உள் ஒதுக்கீடுகள்.)
நாம் 69% ஒதுக்கீட்டிற்குச் சட்டப்பாதுகாப்பைப் பெற்றுள்ளோம். இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வரம்பு நிர்ணயித்துள்ளது. எனவே ஒதுக்கீடு 49.5% ஆன நிலையில் ஒன்றிய அரசின் 10% ஒதுக்கீட்டால் 59.5% என்றநிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள்! அரசுத்துறை வேலைவாய்ப்புகள் குறுகிக்கொண்டுள்ள நிலையில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை வலுவடையும் முன்பே அரசு இட ஒதுக்கீடுகள் ஆட்டம் காணச் செய்யப்படுகின்றன.
தலித்தாக இருப்பதும் ஏழையாக இருப்பதும் ஒன்றல்ல. சாதிய ஒடுக்குமுறையும் சமூகப் புறக்கணிப்பும் ஏழைகள் எதிர்கொள்ளும் நிலை இல்லை. சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டிற்கு ஓர் அறம் உண்டு. இத்தகையச் செயல்பாடுகள் அந்த அறத்தைக் கேள்விக்குள்ளாக்குபவை.
இட ஒதுக்கீட்டு அறத்தை ஒன்றிய அரசு வேண்டுமென்றே சிதைக்க விரும்புகிறது. அதன்மூலம் ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கிறது. முந்தைய மாநில அரசும் தனது பங்கிற்கு இதே பணியைச் செய்தது. தமிழ்நாட்டில் முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த மிகவும் பிற்பட்டோரில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு இவ்வகையைச் சார்ந்தது.
இட ஒதுக்கீட்டுக்கான அறங்கள் உள் ஒதுக்கீட்டிற்கும் பொருந்துபவை. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், சச்சார் குழு பரிந்துரைகள் இஸ்லாமியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியிருப்பதை ஆதாரங்களுடன் விளக்கின. ஒன்றிய அரசுகள் இதனைக் கண்டுகொள்ளாதபோதிலும் தமிழக அரசு பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதைப்போல பட்டியலின வகுப்பில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடும் அளிக்கப்பட்டன. தங்களைப் பட்டியலின வகுப்பிலிருந்து மிகவும் பிற்பட்டோர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோருகின்ற புதிய தமிழகம் இந்த உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை. இருப்பினும் இந்த நடைமுறை சமூகநீதியின் பயனை உணர்த்தியுள்ளது. இத்தகைய நடைமுறைகளில் ஒன்றாகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் அளிக்கப்பட்ட 7.5% ஒதுக்கீட்டைப் பார்க்கலாம்.
எத்தகைய ஒதுக்கீடுகளாக இருப்பினும் அவை கீழிலிருந்து வரவேண்டும். கடைக்கோடியில் இருக்கும் மனிதர்களை சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்களை சுயமரியாதையுள்ள மனிதர்களாக வாழச்செய்வதே சமூக நீதியின் அறமாக வெளிப்படுகின்றன.
சீர்மரபினருக்கு (Denotified Communities) தனி ஒதுக்கீடு இல்லை. அவர்கள் மிகவும் பிற்பட்டோருக்கானப் பட்டியலில் வருகின்றனர். மேலும் இசை வேளாளர், மருத்துவர், வண்ணார், வாக்ரிகள் (நரிக்குறவர்கள் – இவர்களது மொழி வாக்ரிபோலி; அதனடிப்படையில் இவ்வாறு அழைப்பதே சரியானது.) போன்றோர் இருக்கின்றனர். எனவே மிகவும் பிற்பட்டோரில் உள் ஒதுக்கீடு என்று வரும்போது வாக்ரிகள், வண்ணார், மருத்துவர் என அடித்தட்டு நிலையிலிருக்கும் பிரிவுகளுக்கே வழங்கியிருக்க வேண்டும். வாக்ரிகள் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள போதிலும் தமிழ்நாட்டில் இவர்கள் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் போல கிடப்பில் போட்டுள்ளனர். இவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பங்கு கிடைப்பது அரிது. மேலும் வண்ணார், மருத்துவர் போன்ற பல்வேறு வகுப்பினர் மிகவும் பிற்பட்டோரில் அடித்தட்டில் உள்ளனர். இவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காது வாக்கு வங்கி அரசியலுக்காக ஒதுக்கீட்டுப் பலனைப் பெருமளவில் அனுபவிக்கும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் அறத்தைத் தகர்க்கும். சாதிவாரி கணக்கெடுப்பை உரிய முறையில் நடத்தி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்வது என்பது வேறு. அதுவரையில் ஒதுக்கீடுகளும் உள் ஒதுக்கீடுகளும் அடித்தட்டு வகுப்பாருக்கே வழங்கப்பட வேண்டும். அதுவே சமூக நீதி; இட இதுக்கீட்டின் அறம்.
(பேசும் புதிய சக்தி மாத இதழ் - ஆகஸ்ட் 2021 இல் வெளியான கட்டுரை.)
நன்றி: பேசும் புதிய சக்தி, திருவாரூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக