யாருடைய கட்டுப்பாட்டில் மெட்ரிக். பள்ளிகள்?
மு.சிவகுருநாதன்
பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் (2021-2022) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெறுகின்றன.
“மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமிழ்நாடு பொதுக்கல்வி வாரியப் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தினைப் பின்பற்றிக் கல்வி கற்பிக்கும் தனியார் சுயநிதிப் பள்ளிகளாகும்.” (பக்.44) மேலும் இதில் 5 குறிக்கோள்களும் இடம்பெறுகின்றன. அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம், குழந்தைகள் பாதுகாப்பு, தகுதியான ஆசிரியர்கள் நியமனம், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 அமலாக்கம், சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல் என்பதாக இவை உள்ளன. பாடத்திட்டம் பற்றி ஏதுமில்லை. எனவேதான் பள்ளிக்கல்வித்துறை இவற்றைக் கண்டுகொள்ள மறுக்கிறதா?
தமிழகத்தின் சமச்சீர்கல்வி முறை (2010-2011) அமல் செய்யப்பட்டபோது பாடநூல்கள், சீருடை, தேர்வுகள், விடுமுறைகள் போன்றவற்றில் ஒரே பொதுத்தன்மை கடைபிடிக்கப்பட்டது. அவை படிப்படியாக மறைந்து அண்மைக் காலங்களில் புதிய நிலைமை உருவாகியுள்ளது. சில பள்ளிகள் மட்டுமே அரசின் விதிகளைப் பின்பற்றுகின்றன. அரசு நிர்ணயிக்கும் கட்டணங்கள் உள்ளிட்ட பல அரசு உத்தரவுகள் செல்லாக் காசுகள்தான்.
இருமொழிக்கொள்கை கடைபிடிக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் மெட்ரிக். பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப்படுகிறது. பெரும்பாலும் 9 ஆம் வகுப்பு அவரை இதே நிலைதான். தமிழகத்தின் கலைத்திட்டம் – பாடத்திட்டத்தில் இந்தி எப்படி நுழைந்தது? இதற்கான பாடவேளைகள் எப்படி உருவாகின்றன? எந்தப் பாடவேளைகளை இவை விழுங்குகின்றன?
சிபிஎஸ்இ கல்விவாரியம் தனியார் பாடநூல்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லிக் கொள்கிறது. ஆனால் அவர்கள் NCERT பாடநூல்களைத் தவிர்த்து XSEED, MADHUBON போன்ற தனியார் பாடநூல்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காக SCERT 1 முதல் 7 ஆம் வகுப்பு முடிய தமிழ்ப் பாடநூல்களை பருவமுறை அல்லாமல் முழுமையாக அச்சிட்டு வெளியிடுகிறது. சில பள்ளிகள் இதைத் தவிர்த்து MADHUBON என்ற போலித் தமிழ்ப்பாடநூல்களைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்கள் பாடு. அந்தத் தனியார் தமிழ்ப் பாடநூல்கள் மோசமான தரத்திலிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மெட்ரிக். பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளைப் போன்று இந்தி மற்றும் தனியார் பாடநூல்களைப் பயன்படுத்தாமலிருக்கின்றன. இவற்றை யார் கண்காணிப்பது? பல்லாண்டுகளாக இந்த மோசடி நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து புத்தகங்களை வாங்கிவிட்டால் போதுமா? அவற்றை ஓரங்கட்டிவிட்டுத் தனியார் பாடநூல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை தரமற்றவை என்பதோடு குழந்தைகளுக்குக் கூடுதல் சுமையையும் தருகின்றன.
அவர்கள் அரசுப்பள்ளிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டி, வசூல் வேட்டை நடத்தவும் இத்தகைய செயல்களைச் செய்கின்றனர். அரசுப்பாடநூல்களை வாங்கி அப்படியே வைத்துவிட்டு பிறபாடநூல்களை பயன்படுத்துகின்றனர். கல்வி அலுவலர்கள் இவற்றை ஆய்வுகள் செய்வதில்லை.
பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகளுக்கு மட்டுமே தமிழக அரசின் பாடநூல் பயன்படுகிறது. அரசே இதைக் கண்டுகொள்ளாத போது பெற்றோர்களும் இதுகுறித்த அக்கறையின்றி உள்ளனர். தனியார் பாடநூல்கள் உயர்வானது என்கிற எண்ணம் அவர்களுள் விதைக்கப்பட்டுள்ளது. அரசின் போட்டித்தேர்வுகளுக்கு அரசுப்பாடநூல்களே அடிப்படை என்பதால் இக்குழந்தைகளுக்கு பாதிப்புகள் தொடர்கின்றன.
இந்தி போன்ற வேற்று மொழிகளைக் கற்றுக் கொள்வதில் எந்தத்தடையும் இங்கில்லை. ஆனால் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருமொழிக் கொள்கை உள்ளபோது, அதை மீறி பிற பாடங்கள் மற்றும் பாட இணைச்செயல்பாடுகளுக்கான பாடவேளைக் களவாடி இந்தி மொழிப்பாடம் கற்பிக்கப்படுவது உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அனைத்து சுயநிதிப் பள்ளிகளிலும் அரசின் பாடநூல்கள் பயன்படுத்தப்படுவதையும் அவற்றில் தேர்வுகள் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
சமச்சீர் பாடத்திட்டம் வந்துவிட்டபிறகு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று சொல்வது பொருளற்றது; அபத்தமானது கூட. எனவே இப்பள்ளிகளை சுயநிதிப் பள்ளிகள் என்று உடனே பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தின் பெயரையும் கூட மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி, பொதுப் பாடத்திட்டம் என்பதில் பொருள் இல்லாமற் போய்விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக