வெள்ளி, மே 09, 2025

தமிழ் சூஃபி இசைப் பாணர்: இசைமுரசு நாகூர் ஹனிபா

 

தமிழ் சூஃபி இசைப் பாணர்: இசைமுரசு நாகூர் ஹனிபா

 

மு.சிவகுருநாதன்

 


 

         நாகூர் ஹனிபா எனும் இஸ்மாயில் முகம்மது ஹனிபா 1925  டிசம்பர் 25இல் ராமநாதபுரம்            மாவட்டம், வெளிப்பட்டினத்தில் முகம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் குடும்பம் பூர்வீக ஊரான நாகூர் திரும்பியது. 1935இல் இவரது தந்தையார் முகம்மது இஸ்மாயில் கோலாம்பூரில் ரயில்வே பணிக்குச் சென்றார். சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடுள்ள இவருக்கு தாருல் இஸ்லாம், சைபுல் இஸ்லாம் போன்ற இஸ்லாமிய இதழ்களையும் சுயமரியாதை இயக்ககுடி அரசுஇதழையும் வாங்கி அனுப்பும் முன்பு அவற்றை முழுமையாகப் படிக்கும் பழக்கத்தை நாகூர் ஹனிபா கொண்டிருந்தார். இதன் வாயிலாக திராவிட இயக்கத்தின் ஆதரவாளராக மாறினார்.

         நாகூர் ஹனிபா இளம் வயதிலேயே கௌதியா சபையினருடன் சேர்ந்து பக்கத்து ஊர்களில் திருமண விழாக்களில் பாடத் தொடங்கிவிட்டதால் ஏழாம் வகுப்பைத் தாண்டி படிப்பைத் தொடர இயலாத நிலையில், இவற்றிலிருந்து திசை திருப்பும் பொருட்டு  ஹனிபாவின் சிறிய தந்தையார் திருவாரூர் அபுபக்கர் ராவுத்தர் வைத்திருக்கும்  பலசரக்குக் கடைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கும் பாடல்கள் பாடுவதைத் தொடர்ந்தார்.

        அன்றைய நாள்களில் திருவாரூர் ஓடம்போக்கி  ஆற்று மணல்வெளியில் நடக்கும் சிறு கூட்டங்களில் தொடங்கிய அவரது இசைப்பயணம் திராவிட இயக்க மேடைகள் தோறும் ஒலித்து உலகமெங்கும் பரவியது. அன்று நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கக் கூட்டங்களை சிங்கராயர், ரெங்கராஜ், ராமன், மு.கருணாநிதி போன்றோர் ஏற்பாடு செய்தனர், இவர்களுடன் இணைந்தார் நாகூர் ஹனிபா. ஹனிபாவின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கும். மு.கருணாநிதி அரைக்கால் சட்டையுடன் இக்கூட்டங்களுக்கு தலைமையேற்ற காலம் அது. இளம் வயதிலேயே இந்தி எதிர்ப்புப் போரில் ராஜாஜிக்குக் கருப்புக்கொடி காட்டிய ஹனிபா சிறுவன் என்பதால் வலுக்கட்டாயமாக விடுவிக்கப்பட்டார். 1949இல் தி.மு.க. உதயமானபோது அக்கட்சியில் இணைந்து பரப்புரைப் பாடகராய் இறுதிவரை பணியாற்றினார்.

          1950களில் கலைஞர் மு.கருணாநிதி  ஹனி என்றால் தேன்; பா என்றால் பாட்டு; ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது. ஹனிபா என்று பெயர் வைத்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொன்னார். 1955இல் சென்னை வானொலி நிலையம் ஆகாஷ் வாணி என்று மாறியபோது கி..பெ.விசுவநாதம் வானொலியில் பேசுவதில்லை என்று அறிவித்தார். இசைமுரசும் இனி வானொலியில் பாடமாட்டேன் என்றார். அறிஞர் அண்ணா கலைஞர்களின் பணி பாதிக்கப்படும் என்பதால் போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்திருந்தார். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் நாகூர் ஹனிபா பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

         1956 மே 17-20 இல் தி.மு..வின் இரண்டாவது மாநில மாநாடு கூடியது. இம்மாநாட்டில்தான் தி.மு.. தேர்தலில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. திருவாவடுதுறை டி.என்.ராஜரெத்தினம் அவர்களின் நாதசுரத்துடன் அம்மாநாடு தொடங்கியது. அடுத்து  இசைமுரசு பாடினார். அதை ரசித்துக் கேட்ட நாதசுர மேதை, இவர் பாடினால் உங்கள் இயக்கம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்று கலைஞரிடம் கூறினார். திராவிட இயக்க மாநாடுகள் அனைத்தும் இவருடைய இசைக் கச்சேரியுடன் தொடங்கும்; மக்களை ஈர்க்க இவரது காந்தக்குரல் பெரிதும் பயன்பட்டது.

      1957இல் நாகப்பட்டினம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பெரியாரின் அன்பு இவருக்கு இருந்தாலும் அந்தத் தேர்தலில் பச்சைத் தமிழர் காமராஜருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார் பெரியார். காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கம் (24852) வென்றார். கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் (13847) இரண்டாம் இடத்திலும் ஹனிபா 6527 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும் வந்தார். இதன் பின்னர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலில் (2002) போட்டியிட்டுத் தோற்றார். தன்னுடைய குரல் வளத்தால் லட்சக்கணக்காணவர்களை கொள்ளைகொண்ட இசைமுரசு தேர்தல் அரசியலில் பின்தங்கியது ஒரு முரண்நகையாகும். இவர் வக்ஃப் போர்டு தலைவராகவும் இருந்தார்.  ஹனிபா எனும் அரபிச் சொல்லுக்கு நேர்மை என்று பொருள். தாம் வாழ்நாளில் எங்கும் எதிலும் நேர்மையை மார்க்கமாக கடைப்பிடித்து ஒழுகியவர் இசைமுரசு ஹனிபா.


 

           நாம் (1953), அம்மையப்பன் (1954), குலேபாகாவலி (1955), பாவமன்னிப்பு (1961), தர்மசீலன் (1993), ராமன் அப்துல்லா (1997), என்றென்றும் காதல் (1999), காமராசு (2002) போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ‘பாவ மன்னிப்பு’ (1965) படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய எல்லோரும் கொண்டாடுவோம்”, ‘செம்பருத்திபடத்தில் நட்ட நடுக் கடல் மீது நான் பாடும் பாட்டு”, ‘தர்மசீலன்படத்தில் எங்குமுள்ள அல்லா பேர சொல்லு நல்லா”, ‘ராமன் அப்துல்லாபடத்தில், “உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்போன்ற தமிழ் திரையிசைப் பாடல்கள் பெரிதும் பாராட்டப்பட்டவை.

        திரைப்படங்களில் நாகூர் ஹனீபாவின் பங்களிப்பு குறைவாக இருந்தற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஹனிபா என்ற பெயரை மாற்ற வலியுறுத்திய  அன்றைய தமிழ்த் திரையிலகில் இருந்த இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையையும் ஒரு காரணமாக அமைந்தது. 1945 ஆம் ஆண்டு நாகூரில் மாணவர் சங்கம் நடத்திய விழாவில் தமிழறிஞர் சண்முக தேசிகர் இவருக்கு இசைமுரசுபட்டத்தை வழங்கினார். 1989இல் கலைஞர் மு.கருணாநிதி இசைமாமணி விருதளித்துச் சிறப்பித்தார். 2002இல் கத்தார் தலைநகர் தோகா தமிழ்ச் சங்கம் எழில் இசைவேந்தர்என்றம் பட்டமளித்தது.

       இசை முரசுநாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரைச் சிறப்பிக்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியில் அவர் இல்லம் இருக்கும் தைக்கால் தெருவிற்கு இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா தெருஎன்றும், சில்லடி கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு  இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்காஎன்று  பெயர் சூட்டி தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

         இசைமுரசு பாடிய சிறப்புமிக்க பாடல்கள் கவிஞர் அபிவை டி.எம்.எம். தாஜுத்தீன்,  கவிஞர் ஆபிதீன், கவிஞர் நாகூர் சலீம், கவிஞர் கா. அப்துல் கபூர் போன்றோர் இயற்றியவை. இப்பாடல்களில் வெற்றியில் கவிஞர்களுக்கும் பங்குண்டு. கவிமுரசின் தேன்குரல் இவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. காயல் ஷேக் முகம்மது, முகவை சீனி முகம்மது, புதுக்கோட்டை இ.எம். பாஷா, இ.எம். ஜக்கரியா, தேரழந்தூர் தாஜூத்தீன், அடவங்குடி அப்துல்ரகுமான் போன்ற பலர் இஸ்லாமிய மார்க்கத் தேனிசைப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

      இந்திய மற்றும் தமிழ் இசைக்கு இஸ்லாமியர்கள் பாரிய பங்களிப்பை நல்கி வந்துள்ளனர். பாணர், சித்தர் மரபுகள், சூஃபி இசை வடிவத்தின் தொடர்ச்சியை இதில் காணலாம்.  தமிழிசையின் கூறுகளைக் கொண்டே கர்நாடக இசை கட்டமைக்கப்பட்ட வரலாற்றை நாமறிவோம். வாய்ப்பாட்டு, மெல்லிசை, பக்தியிசை போன்ற அமைப்பில் தக்கலை பீரப்பா, குணங்குடி மஸ்தான், நாவலர் குலாம் காதிரு, செய்கு தம்பி பாவலர்  போன்றோரின் பாடல்கள் உருவாகிப் புகழ் பெற்றன. 

       சூஃபி இசைப் பாடல்கள் இஸ்லாத்தை மையங்கொண்டவை எனினும்  அதன் தாக்கம் அன்பையும்  மதம் கடந்த பக்தி அனுபவத்தையும் சமத்துவத்தையும் வழங்கக்கூடியவை. கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றின் கலவையாலும்  சூஃபி இயக்கத் தொடர்ச்சியாகவும் இங்கு தமிழ் இஸ்லாமிய இசை மரபு உருக்கொள்கிறது. இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி  சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவம் போன்றவை உள்ளீடாக அமைந்தன. இசைமணி யூசுப், உசைன் பாகவதர், வாஹித், காரைக்கால் தாவூத் போன்ற பலர்  பலர் கர்நாடக இசையை முறையாகக் கற்று இஸ்லாமிய பக்தி இயக்க இசையை உருவாக்கினர்.

       நாகூர் ஹனீபா முறைப்படி கர்நாடக இசையைப் பயின்றவரில்லை. நாகூர் தர்கா எஸ்.எம்.ஏ. காதிரிடமிருந்து கர்நாடக இசை குறித்த குறிப்புகளைப் பின்னாளில் கற்றுக்கொண்டார். சுயமரியாதை, மற்றும் திராவிட இயக்க அரசியல் தாக்கத்தால் பொதுவெளிக்கு வந்த இவரது குரல் பலரது பாராட்டைப் பெற்றது.

       தந்தை பெரியார், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், சர் ஏ.ட்டி.பன்னீர்செல்வம், அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, கலைஞர் மு.கருணாநிதி,  பேரா..அன்பழகன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களுடன் நேரில் பழகியும் தனது பாட்டுத்திறத்தால் அவர்களின் அன்பைப் பெற்றவராகவும் இசைமுரசு திகழ்ந்தார். கலைஞர் கருணாநிதியுடனான இளமைக்கால நட்பு இறுதிமூச்சு வரை தொடர்ந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் இவரது நண்பர் எனினும், அவர் திமுகவிலிருந்து பிரிந்த பின்னர், தன்னோடு வரச்சொல்லி அழைத்தபோது, எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி என்றுகூறி மறுத்தார். சர் ஏ.ட்டி.பன்னீர்செல்வம் அவர்களை திருவாரூர் விற்குடி ரயில் நிலையத்தில் வழியனுப்பிய நாகூர் ஹனிபா, அவர் விமான விபத்தில் மரணமடைய (1940) அஞ்சலிக் கீதமிசைத்தார். 

       நாகூர் ஹனிபா பெரியாரை நாகூருக்கு அழைத்து நடத்திய கூட்டங்களில் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த, பெரியார். அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லைஎன்று சொன்னதையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது ஹனிபாவை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்ந்தும் ஒரு ரூபாய் பரிசு கொடுத்த செய்திகளையும்  நேர்காணல் ஒன்றில்  நாகூர் ஹனிபா குறிப்பிட்டுள்ளார். திராவிட இயக்கப் பற்றாளரும் பெரியார் மீது ஈடுபாடு கொண்ட கவிஞர் ஆபிதீன் எழுதிய பேரறிவாளர் அவர் பெரியார்என்ற பெரியாரின் புகழ்பாடும் பாடலையும் பாடியுள்ளார்.

           1955 இல் இவர் பாடிய அழைக்கிறார் அண்ணாஎன்ற பாடலைப் பதிவு செய்ய HMV நிறுவனம் தொடக்கத்தில் முரண்டு பிடித்தாலும் இந்த இசைத்தட்டு அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. இப்பாடலைப் போன்றுஓடிவருகிறான் உதயசூரியன்”, “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவேபோன்ற பாடல்கள் கட்சி அமைப்பிலும் வெகுமக்களிடமும்  செலுத்திய இசைத்தாக்கம் அளப்பரியது.

         நாகூர் ஹனீபாவின் இஸ்லாமியப் பாடல்கள் மதம் என்ற எல்லையைத் தாண்டி அனைவரிடமும் சென்றவை. “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லைஎன்ற பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. “மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லா”, “உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரான்”, “பாத்திமா வாழ்ந்த கதை”, “கண்கள் குளம் ஆகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே”, “அருள் மழை பொழிவாய் ரஹுமானே”, “லாயில்லா ஹா இல்லல்லா ஹூ”, “தீன்குலப்பெண்ணு எங்கள் திருமறைக் கண்ணுபோன்ற இவரது பாடல்கள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.

       இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக செழித்திருந்த தமிழின் இசை களவாடப்பட்டு கர்நாடக இசையாக உருவெடுக்கிறது. மொழியும் இசையும் மதத்தோடு இணைக்கப்பட்டன. சமஸ்கிருதம் தேவபாஷையாகவும் தமிழ் நீசபாஷையாகவும் மாற்றப்பட்டதைப் போல தமிழ்ப்பாடல்கள் இசைக்கக் கூடாது என ஒதுக்கப்பட்டன. சமஸ்கிருதம், தெலுங்கில் பாடுவது உயர்வானதாக கற்பிதம் செய்யப்பட்டது. தமிழ் மொழியும் தமிழிசையும் தீண்டாமைக்கு உள்ளானது. தமிழ்நாட்டில் தமிழில் பாட இயக்கம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ராஜா அண்ணாமலைச் செட்டியார் 1941இல் தமிழிசை மாநாடு நடத்துகிறார்.

        இந்தப் பின்னணியில் திராவிட இயக்கம் முத்தமிழையும் தமது பரப்புரை வாகனமாக்கியது. திராவிட எழுத்துகள் பரவலாயின; ஊரெங்கும் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாடகத்தின் தொடர்ச்சியாக திரைப்படத்தை ஆக்கப்பூர்வமான கருவியாக திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. திரையிசை வெகுமக்கள் இசையாக மலர்ந்தது. சபாக்கள், கச்சேரிகளில் தமிழை ஒதுக்கியவர்களை தமிழக மக்கள் ஓரங்கட்டினர்.

          வைதீகப் புரட்டுகளை எதிர்கொண்ட திராவிட இயக்கம் பவுத்தம், இஸ்லாம் போன்ற சமத்துவ மார்க்கங்களை ஆரத்தழுவி வரவேற்றது. “இன இழிவு நீங்க இஸ்லாம் நன்மருந்து”, என்று பெரியார் பேசினார், எழுதினார். இசைமுரசு நாகூர் ஹனிபா திராவிட இயக்கத்தையும் இஸ்லாம் மார்க்கத்தையும் இரு கண்களாகப் போற்றினர். இவ்விரண்டு கொள்கைகளுக்கும் பெரிய  இணைப்பை ஏற்படுத்தினார். திராவிட இயக்கத்தில் இதற்கான வாய்ப்புகள் இருந்தன. அரசியல் காரணங்களுக்காக இவரது இசை சரியான தகுதியிடத்தைப் பெறாமல் போனாலும், தமிழ்ப் பாணர், சித்தர், சூஃபி மரபின் பிரதிநிதியாக என்றும் நிலைத்திருப்பார்.

 

நன்றி: தி சிராங்கூன் டைம்ஸ் - மார்ச் 2025

(நாகூர் ஹனிபா நூற்றாண்டுச் சிறப்பிதழ் - இதழ்108 )

வியாழன், மே 08, 2025

05. பிருதிவிராஜ் சௌஹான் - சம்யுக்தா கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

05. பிருதிவிராஜ் சௌஹான் - சம்யுக்தா கதைகள்

மு.சிவகுருநாதன்


 

          எப்போதும் வரலாற்றைவிட புனைவுகளுக்கு மிகைமதிப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு. வரலாற்றைத் திரிக்கவும் வெறுப்பரசியலைப் பரப்புவும்கூட இத்தகைய புனைவுகள் பயன்படுகின்றன.  அம்பிகாவதிஅமராவதி, ரோமியோஜூலியட் கதை வரிசையில் இடம்பெறக் கூடியது பிருதிவிராஜ் சௌஹான் - சம்யுக்தா கதை ஆகும். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பரவலான மக்களைச் சென்றடைந்தன. இதன்மூலம் புனைவிற்கு மதிப்புக் கூட்டப்பட்டது. கல்கியின் கதைகளையும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களை நாம் இவ்வாறே அணுக வேண்டும்.

      பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் ‘‘பிருதிவிராஜ ராசோ’’ எனும்  பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். காவியம் கூறும்  கதை பின்வருமாறு: கன்னோஜின்  அரசனுடைய மகளுக்குத் திருமணம்  செய்ய வேண்டும். அவள் தனது  கணவனைத் தேர்வு செய்வதற்கெனச்  சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிருதிவிராஜனிடம்  காதல் வயப்பட்டிருந்த இளவரசி  அவரையே மணந்துகொள்ள விரும்பினாள். ஆனால் பிருதிவிராஜ்  அவள் தந்தையின் எதிரியாவார்.  பிருதிவிராஜை அவமானப்படுத்தும்  நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை.  மேலும் பிருதிவிராஜ் சௌகானைப்  போன்று ஒரு சிலை செய்து  தனது அரச சபையின் வாயிலில்  வாயிற்காப்போனைப் போல நிறுத்தி  வைத்தார். கூடியிருந்தோரெல்லாம்  அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு  மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். சற்று  தொலைவில் மறைந்திருந்த  பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில்  தப்பினார். பின்னர் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்”, என்று இலக்கியப் புனைவுகளை வரலாறாக நமது பாடநூல்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றன.

       கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.12 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கம் வரை வட இந்தியப் பகுதிகளை ஆண்ட சிறிய குழுக்கள் ராஜபுத்திரர்கள் எனப்பட்ட சிற்றரசுகளாகும். ராமாயண, மகாபாரத இதிகாச அடிப்படையில் தங்களை தங்களை சூரிய, சந்திர, அக்னி குலம்  என்று கற்பிதம் செய்துகொண்டனர். இவற்றில்  உயர்வு தாழ்வுகளையும் கட்டமைத்து வழக்கம்போல பிராமண சமூகத்திற்கு சேவை செய்யும் மனுதர்மவாதிகளாகவே இவர்கள் அரசாண்டனர். ஜேம்ஸ் டோட் (James Tod) எனும் ஆய்வாளர் 36 குலங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவர்களில் கூர்ஜர பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள் போன்ற அக்னி குல பிரிவுகள் சிறப்புத்தகுதி கொண்டவையாகப் போற்றப்படுகின்றனர். சில குறிப்பிட்ட உயர்த்தப்பட்ட சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் வீரதீரக் கதைகள் மூலமும் போர்வெற்றிகள் மூலமும் புகழப்படுகின்றனர். இவர்களது போர்வெற்றிகளுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் படையணிகள் செயல்பட்டதை வரலாற்றில் மறுக்க இயலாது.

         குறைவான மக்கள் தொகை கொண்ட ராஜபுத்திரர்களுக்கு பெரும்படை எவ்வாறு சாத்தியமாயிற்று என்கிற கேள்வி எழுவது இயல்பானது. ராஜபுத்திரர்கள் அல்லாத ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் (Kuvarna) இவர்களது படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் இவர்கள் பிராமணர்களுக்கு சலுகைகள் அளித்தும் வருண அமைப்பைக் கட்டிக் காத்தனர் என்பதும் உண்மையே. இவர்களது வெற்றிகள் வெறும் இனக்குழு வீரதீரத்தால் மட்டும் பெற்றதல்ல; இவற்றுக்குப் பின்னால் பெரும் அடித்தட்டு மக்களின் உழைப்பும் தியாகங்களும் இருந்தன.

       இவர்களுடைய வீரதீரக்கதைகளுக்குப் பின்னால் சண்டை மற்றும் போர்வெறி காரணமாக அமைந்திருப்பதை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றார். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் அளவிடற்கரியவை. குலப்பெருமை பேசிய இக்கூட்டம் தங்களுக்குள் எவ்வித ஒற்றுமையையும் பேணவில்லை. இறுதிக்காலத்தில் ஏற்பட்ட ஒருங்கிணைப்பும் தோல்வியில் முடிந்தது. தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்கள் மீது அக்கறை துளியுமற்று வருண தர்மத்தை நிலைநாட்டுவதையும் சதி (உடன்கட்டை ஏற்றுதல்) போன்ற கொடிய பழக்கவழக்கங்களைப் போற்றுபவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.   

    பதினொன்று மற்றும் பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கூட ஒட்டு மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, ராஜபுத்திரர்கள் ஒன்றும் மிக அதிகமாக இருக்கவில்லை. ராஜபுத்திரர்கள் போரை ஒரு விளையாட்டுப் போட்டி போலக் கருதினார்கள். இதற்காகவும் மற்றும் நிலத்திற்காகவும் கால்நடைகளுக்காகவும் நடத்திய போராட்டம் பல்வேறு ராஜபுத்திர அரசுகளுக்கிடையே தொடர்ச்சியான போர்களுக்கு இட்டுச் சென்றது. தசராத் திருவிழாவைக் கொண்டாடி முடித்த கையோடு அண்மை நாட்டின் எல்லை மீது படை எடுப்பவரே இலட்சிய முறையான ஆட்சியாளராகக் கருதப்பட்டார். இக்கொள்கையால் கிராம மற்றும் நகர மக்கள் அனைவருமே துன்பப்பட்டனர்”. (பக்.86, மத்திய கால இந்திய வரலாறு) என்று சதீஷ் சந்திரா எழுதுகிறார்.

       ஜெயச்சந்திர மன்னரின் மகள் சன்யோகிதா (Sanyogita) என்ற சம்யுக்தாவின் மீது கொண்ட காதலால் அவளைச் சிறை எடுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படும் கர்ணபரம்பரைக் கதை பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கவிஞர் சந்த்பர்தாயினால் (Chand Bardai) ஒரு காதல் கதையாக, வெகுகாலத்துக்கு பின்னால் எழுதப்பட்டதால், கவிஞர் சரியற்ற பல நிகழ்ச்சிகளை உட்படுத்தி எழுதியுள்ளார். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே, நீண்ட காலப் பகை பாக்கியிருந்ததால், ஜெயச்சந்திரர் தள்ளி நின்றது ஒன்றும் வியப்பில்லை”. (பக். 92, மத்திய கால இந்திய வரலாறு) இக்கதை பிருதிவிராஜ் செளகானை திருவுருவாக மாற்றப் புனையப்பட்ட கற்பனைக் கதையாகும். இதற்கு இடையூறாக இருக்கும் தோல்விக்குப் பிந்தைய அவரது நிலை, வரலாற்றின் பக்கங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுவதிலிருந்து உணரலாம்.   

        ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட பல்வேறு இந்துப் பிரிவினரும் தில்லி சுல்தானிய அரசிலும் பின்னால் வந்த முகலாய அரசில் பங்கேற்று இணைந்தே செயல்பட்டனர் என்பதே வரலாற்று உண்மை. இஸ்லாமிய அரசுகளின் பின்னணியிலும் இவர்கள் இருந்தனர் என்பதே உண்மை.  ரக்ஷா பந்தன்நிகழ்வுகளுக்குப் பின்னால் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இதை ராஜபுத்திரர்களுக்கு மட்டும் உரிய பண்பாட்டு மரபாகக் கருதமுடியும் என்பதில் சிக்கல் உள்ளது. போருக்குச் செல்லும் சகோதரன் திரும்பி வருவதற்குக் கட்டப்படும் கயிறு ராக்கிஎன்றும் சொல்லப்படுகிறது. அன்றைய அவர்களது போர்க் களத்திற்கு ராஜபுத்திரர்கள் மட்டுமே சென்றதாகவோ அவர்கள் மட்டும் படைப்பிரிவுகளில் இருந்ததாகவும் கூறமுடியாது.

         இறுதிக்காலத்தில் ராஜபுத்திரர்கள் பிருதிவிராஜ் செளகான்  தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி இணைந்தனர். அவர்களால் 1191இல் தில்லிக்கு  அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடிக்க முடிந்தது.  இப்போர் முதலாம் தரெய்ன் போர் எனப்படுகிறது. இத்தோல்விக்குப் பிறகு பெரும்படையைத்  திரட்டி, பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்த முகமது கோரி, தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் பிருதிவிராஜ் சௌகானுக்கு   தூதனுப்பினார். அதனை மறுத்த  பிருதிவிராஜ் போரில் இறங்கினார். பல  இந்து ராஜபுத்திரக் குறுநில  அரசர்களும்  அவர் பின்னால்  திரண்டனர். இருப்பினும் சிலர் பழைய பகையால் ஒதுங்கியிருந்தனர்.  1192இல்  நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில்  பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத்  தோற்கடித்த முகமது கோரி அவரைச் சிறைப்படுத்தினார்.

        இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அதுவரையில் கட்டமைத்திருந்த வீரதீரக்  கற்பனைகளுக்குப் பெரும் பின்னடைவு உண்டானது. இந்தியாவில் புதிதாக உருவான  இஸ்லாமிய அரசின் கீழ்  அவர்களது மேலாதிக்கத்தை ஏற்றுச் செயல்படவேண்டிய நிலைக்கு பிருதிவிராஜ் சௌகான் தள்ளப்பட்டார். இத்தோல்விக்குப் பிறகு போரில் வென்ற முகமது கோரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களது மேலாதிக்கத்தை ஏற்று, சிலகாலம் ஆஜ்மீரை பிரிதிவிராஜ் ஆண்டார். பின்னாளில் சதிக் குற்றஞ்சாட்டி கொன்றதையும் சதீஷ் சந்திராவின் கீழ்க்கண்ட வரிகள் வெளிப்படுத்துகின்றன.

     இரண்டாம் தரெய்ன் போரில்  இந்திய வீரர்கள் ஏராளமாக உயிர்விட்டனர். பிரிதிவிராஜர் தப்பினாலும் சரஸ்வதிக்கு அருகே (Sirasa) பிடிக்கப்பட்டார். துருக்கிப் படைகள். ஹன்சி (Hansi) சரஸ்வதி மற்றும் சமனா (Samana) கோட்டைகளைக் கைப்பற்றின. அடுத்து அவர்கள் ஆஜ்மீரைத் தாக்கிக் கைப்பற்றினர். இறுதியில் பிரிதிவிராஜர் ஆஜ்மீரைச் சில காலம் ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதை அக்காலத்தில் வெளியிடப் பட்ட நாணயங்களில் ஆண்டு என்ன என்பதைக் காட்டுவதோடு, ஒரு பக்கத்தில் பிரிதிவிராஜ தேவா’ (Prithivirajadeva) என்றும், மறுபக்கத்தில் ஶ்ரீ முகமது சாம் (Sri Muhammad Sam) என்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (பக். 93, மத்திய கால இந்திய வரலாறு)

      சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள், சோமநாதபுரம்: கதையும் வரலாறும் போன்ற ரொமிலா தாப்பரின் நூல்கள் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த விரிவான ஆய்வை நமக்குத் தருகின்றன. அந்நியப் படையெடுப்பு குறித்த தெளிவான சூழலையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும்  சதீஷ் சந்திராவின் மத்திய கால இந்திய வரலாறு மிகவும் குறிப்பிடந்தகுந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. மத்திய கால வரலாற்றை புதிய ஆதாரங்கள் மற்றும் நடுநிலைக் கண்ணோட்டத்துடன் அணுகும் ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான புதிய ஆய்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் முகம் கொடுக்காமல்   சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு வரலாறு எழுதுவதும் இதன்மூலமாக போலிப் பெருமிதங்களைக் கட்டமைப்பதும் குழந்தைகளின் இளம் உள்ளங்களில் வெறுப்பை விதைப்பதும்  அபாயகரமானதாகும்.

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மே 2025