புதன், மே 07, 2025

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் சீர்திருத்தம்

 

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் சீர்திருத்தம்

 

மு.சிவகுருநாதன்


 

       இந்தியத் தேர்தல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. உடனே குடவோலை முறை என்று கற்பனையில்  மிதக்க வேண்டாம். அது தேர்தல் முறை அல்ல; ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினருக்கான திருவுளச்சீட்டு முறையாகும். நாம் சொல்லவருவது நூற்றாண்டைக் கடந்த இந்தியத் தேர்தல்களின் வரலாற்றைத்தான்.

      பிரிட்டிஷ் இந்தியாவில் நிர்வாகத்தில் இந்தியர்களுக்குப் பங்கு வழங்க, மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் மூலம் உருவான 1919 இந்திய அரசுச் சட்டத்தின்படி, இந்தியாவில் மாகாண சபை அமைக்கப்பட்டது. அதன்படி பிரிட்டிஷ் இந்தியாவில் முதல்முதலாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டது.

      ஆண்டு வேளாண் வருவாய் ரூ.750, ரூ.1,000 வருமான வரி கட்டியிருத்தல்,  ஒரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், ஒரு இந்திய மாகாண சட்டமன்றங்களில் உறுப்பினர், பிரிட்டிஷ் வழங்கும் விருது அல்லது கௌரவப் பட்டம் பெற்றவர் போன்ற தகுதியுடைய ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது; பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.

      1917இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவினரிடம் பெண் ஆர்வலர்கள் குழு வாக்குரிமை குறித்த கோரிக்கைகளை அளித்தது. ஆனால் இவை கண்டுகொள்ளப்படவில்லை. இவ்வாண்டில்தான் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்திய மகளிர் சங்கம் (WIA) உருவானது. இவர்கள் வாக்குரிமைக் கோரிக்கையை காங்கிரசுக்கும் பிரிட்டிஷ்  அரசுக்கும் கொண்டு சென்றனர். கவிக்குயில் சரோஜினி நாயுடு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் பெண்கள் வாக்குரிமைக்கான தீர்மானங்களைக் கொண்டுவந்தார். 

     1918இல் பிரிட்டனில் சொத்து வைத்திருக்கும் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமையை வழங்கியபோதும் காலனிய நாட்டு குடிமக்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என அறிவித்தது. இக்குழு பெண்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளிட்ட எதையும் வழங்காமல் இந்திய அரசுச் சட்டம், 1919இன்படி  பெண்கள் வாக்களிப்பது குறித்து முடிவு செய்ய மாகாண சபைகளுக்கு அனுமதி தந்தது. 1921இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் மாகாணமாக சென்னை சிறப்பு பெற்றது. பின்னர்  பம்பாய் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.

        பின்னர், இந்திய அரசு சட்டம், 1935இன்படி இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு, நிதி போன்ற முக்கிய துறைகள் தவிர பிற பொறுப்புகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சட்டத்தின் கீழ் 1937இல் மத்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் முதல் தேர்தல் நடந்தது. அன்றைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. கீழவையில் 215 உறுப்பினர்களும், மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லீம்கள், தலித்துகள்., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய தனி இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.  இருப்பினும் மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. முந்தைய தகுதி நிலைகள் தொடர்ந்தன.

            இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்ட நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைகளை 1951இல் இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வகுத்தளித்தது. இதன்படி 1951 மற்றும் 1952இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச்சட்டம் காலச்சூழலுக்கேற்ப பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. 1986இல் கொண்டுவரப்பட்டச் சட்டத்திருத்தம் மூலம் வாக்களிக்கும் வயது 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது.

       1961 ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு 49-O யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பதிவு செய்ய 17-A விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரலாம் என்று சொன்னது.  நடைமுறையில் சில சிக்கல்களும் இதில் இருந்தன. குறிப்பிட்ட வாக்காளர் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். மின்னணு வாக்குப்பதிவுக் கருவியின் பயன்பாட்டுக்குப் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2013இல் சத்தீஸ்கர், மிசோரம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் சோதனை அடிப்படையிலும், 2014 பொதுத்தேர்தலில் NOTA பொத்தன் கூடுதலாக இறுதியில் இணைக்கப்பட்டது. ஆனால் இதன் எண்ணிக்கைக்கு எவ்வித முக்கியத்துவம் இல்லாமற் போய்விட்டது.

           1989இல் தேர்தல் முறைகேடுகளைக் கண்காணிக்க, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், ரஜினி கோத்தாரி போன்றோர் ‘Independent Initiative’ ‘என்ற அமைப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் அழுத்தம் கொடுத்தனர். இதன் மூலம் தேர்தலில் ஜனநாயக நெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலை உருவானது. ஊடகங்கள், சான்றோர்கள் தொடர்ந்து இத்தகைய பரப்புரைகளையும் அழுத்தங்களையும் அளிப்பதன் வாயிலாக தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். பொதுநல வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள் மூலமே சில சீர்திருத்தங்கள் வேகம் பெற்றுள்ளன. இருப்பினும் உண்மையான தேர்தல் சீர்திருத்தமான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை நோக்கி நாம் நகரவில்லை.

                தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.  தார்க்குண்டே குழு அறிக்கை (1975), கோஸ்வாமி குழு அறிக்கை (1990), தேர்தல் ஆணையப் பரிந்துரைகள் (1998), இந்திரஜித் குப்தா குழு அறிக்கை (1998) போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜனநாயகத்திற்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் ஜெய்பிரகாஷ் நாராயண் தேர்தல் சீர்திருத்தங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். வி.எம். தார்குண்டே, எம்.ஆர். மசாய் மற்றும் பலர் இடம்பெற்ற ஜே.பி. குழு/தார்குண்டே குழு என்றழைக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை 1975இல் வெளியானது. தேர்தல் ஆணையத்தை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றுதல், வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தல், விகிதாச்சார பிரநிதித்துவ தேர்தல் முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சியை தன்னாட்சி பெற்ற அமைப்பின் கட்டுப்பாட்டில்  கொண்டு வருதல், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் குழுக்களை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தன.

         ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கையின்படி, தேசிய முன்னணி அரசு கோஸ்வாமி குழுவை (1990) அமைத்தது. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், மோசடி செய்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றைத் தடுக்கும் சட்ட நடவடிக்கைகள்தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்துதல், இடைத்தேர்தல்களுக்கான கால வரையறை, சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வைப்புத்தொகையை அதிகரித்தல், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்தல் என்பது போன்ற பரிந்துரைகளை இக்குழு முன்வைத்தது.  

    தேர்தல்களுக்கான மாநில நிதியுதவி குழுவின் (1998) தலைவரான இந்திரஜித் குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட எட்டுபேர் கொண்ட குழுவின் அறிக்கை 1999இல் அளிக்கப்பட்டது. இதில், மாநில நிதியுதவி பொருளாக இருத்தல், கட்சிகளின் நிதிச் சுமையின் ஒரு பகுதியை மாநிலமே ஏற்றல், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அச்சிடும் பொருள்கள், மின்னணு ஊடக அனுமதி, வாகனங்கள் மற்றும் எரிபொருள் வழங்குதல், நன்கொடைகளை காசோலை/வரைவோலையாகப் பெறுதல், நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடுதல், அரசியல் கட்சிகள் செலவுக்கணக்குகளை தாக்கல் செய்வதை கட்டாயமாக்கல், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டிருந்தன. தேர்தல் செலவை அரசே ஏற்றல் சாமான்ய வேட்பாளர்களுக்கு உகந்ததாக இருப்பினும் கோடிகளைச் செலவிடுவோரைக் கட்டுப்படுத்தும் வசதிகள் அமைப்பில் இல்லை.

       கடந்த காலங்களில் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்யவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையம் மூன்று பேர் அடங்கியதாக சீரமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெற்றார். மோடி அரசு இந்நிலையை மாற்றி சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. பொறுப்பான பதவியில் தங்களது பொம்மைகளை உள்நுழைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தை மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தைச் சீரழிப்பதாக அமைபவை.

      இந்தியா முழுமையும் மின்னணு வாக்குப்பதிவு (EVM) எந்திரங்களைக் கொண்டே தேர்தல்கள் நடைபெற்று வருகின்றது. இக்கருவியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடமுடியும் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிருபித்துள்ளனர்.   ஆளும்வர்க்கம் இக்குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுப்பதில்லை. வாக்காளர் தமது வாக்குப்பதிவை உறுதி செய்துகொள்வதற்காக அச்சிடும் கருவி ஒன்றை (VVPAT) தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் இவற்றை எண்ணும்போது கருவியில் பதிவான வாக்கிற்கும் துண்டுச் சீட்டுகளுக்கு வேறுபாடுகள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. அச்சாகும் அனைத்துத் துண்டுச்சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால்  நிராகரிக்கப்பட்டே வருகிறது.

     தேர்தல் தொடர்பான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடன் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலமான 5 ஆண்டுகளைத் தாண்டியும் வழக்கை இழுத்தடிப்பது நியாயமான நடைமுறையாக இருக்க முடியாதுவேட்பாளர்கள் சொத்து மதிப்புகளையும் வேட்புமனுவில் குறிப்பிடுவதுடன் கல்வி விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றவழக்கில் தண்டனை பெற்ற விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டியது 2003இல்  கட்டாயமானது.  வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை செய்ய  சட்டம் உள்ளது. பல்வேறு கட்ட தேர்தல் முடியும்வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை  வெளியிட 2009 முதல் தடை விதிக்கப்பட்டன.

          ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட தற்போதைய நடைமுறைகள் இடமளிக்கின்றன. இரண்டிலும் வெற்றி பெறுபவர் ஒன்றில் பதவி விலகும்போது இடைத்தேர்தலும் தேவையற்ற செலவீனங்களும் ஏற்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதியாக உள்ளவர்கள் பதவி விலகி சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த நிலை இல்லை. அவர்கள் ஒரு பதவியில் இருந்துகொண்டே மற்றொரு பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இதுவும் தடுக்கப்பட வேண்டும்.

           இப்போதிருக்கும் நடைமுறையில் இவைகளைத் தடுக்க தனியே சட்டம் கொண்டுவர வேண்டும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறினால் இவற்றிற்கான தேவையே எழாது. இம்முறையில் நிறைய நன்மைகள் உண்டு. தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு, கூட்டணியமைத்துப் போட்டியிடுதல் என்ற பேச்சிற்கே இடமில்லை. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே நிற்கும். கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கும் முறை இருக்கும். ஒவ்வொரு கட்சியும் தனக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைப் பெறும்.

          தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க பல புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்றனர். இவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகாது. இந்தியாவில் நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர்களில் பாதிக்கு மேல் வாக்களித்துத் தேர்வு செய்யப்படுவர்கள் எங்காவது ஒருசிலர் மட்டுமே இருப்பர். தேர்ந்தெடுக்கப்படும் பிறர் அனைவரும் பாதிக்கு மேல் உள்ள வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இப்போதைய நமது தேர்தல் முறையின் கேடுகளுள் முதன்மையானது இது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற பாசிச நடைமுறை இங்கு தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்படுகிறது. உண்மையான தேர்தல் சீர்திருத்தம் என்பது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் உள்ளது. இந்தியா போன்ற பிரிட்டன் காலனிய நாடுகள் ஒரு சிலவற்றில் மட்டுமே இந்த பழைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சுமார் 100 நாடுகளில்  விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை நோக்கி நகர்ந்துவிட்டன.

      ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் வருகின்றபோதும் விகிதாச்சார முறையிலான தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி ஒருசிலராவது பேசும் நிலை இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் கட்சிகள் ஆளுங்கட்சியாக மாறியதும் இக்கோரிக்கையை மறந்துபோவது  முரண்நகை. இடதுசாரிகள் போன்ற உண்மையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்பும் சக்திகள் மட்டுமே இக்கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

      1930ஆம் ஆண்டுவாக்கில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் சரியானது என்ற கருத்தை ஜவகர்லால் நேரு முன்வைத்தார். இதன்மூலமே பதிவு செய்யப்படும் வாக்குகளுக்கும் மதிப்பும் அனைத்து சமூகங்களுக்கு  உரிய பிரதிநிதித்துவமும் கிடைக்கும் என்றார். 1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பரிந்துரை செய்தது. 2003 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எம்.பனத்வாலா இம்முறையை வலியுறுத்தி தனிநபர் மசோதாவைக்  கொண்டு வந்தார். 1999ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென பரிந்துரை செய்து ஒன்றிய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.

          2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 36.56% வாக்குகள் ஆளும் பா...வுக்குக் கிடைத்தது. இதன் மறுதலை 63.44% வாக்குகள் பா.ஜ.க.வுக்கு எதிரானவை என்பது பொருளாகிறது. இந்திய மக்கள் தொகை அல்லது தகுதியுடைய வாக்காளர் எண்ணிக்கை என எப்படிப் பார்த்தாலும் மிகக்குறைவான விழுக்காடு வாக்குகளைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இன்றைய தேர்தல்முறை வழிவகுக்கிறது.  

     பதிவான வாக்குகளில் அந்த வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட, அவர் பெறாத வாக்குகளே அதிகமாக உள்ளது.  பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாத ஒரு வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாகவும்  பிறருக்குக் கிடைத்த வாக்குகள் மதிப்பற்றவையாக மாறிவிடுகின்றன. அனைத்து வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்று இங்கு நிறைவேறுவதில்லை.  

           விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பது கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில்  வாக்களிக்கும் முறையாகும். கூட்டணிகள் இல்லை; ஒவ்வொரு கட்சியும் தங்களது தனித்த வாக்கு விழுக்காட்டைப் பெறும். இதன்படி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஒன்றிரண்டு கட்சிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, ஒற்றையதிகார, வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான அறுதிப் பெரும்பான்மை எனும் போலி ஜனநாயகம் முடிவுக்கு வரும். கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் வலுவான எதிர்க்கட்சி அமையும். இப்போதைய தேர்தல்கள் மூலம் நடைமுறைக்கு வருவது ஒருவகையில்  போலியான  ஜனநாயகமே;  விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

          தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க வேண்டியதில்லை என்றாலும் ஒவ்வொரு கட்சியும் தங்களது முன்னுரிமை வேட்பாளர் பட்டியலை மக்கள் முன் வைக்கலாம்.  இம்முறையில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் ஏதோ ஓரிடத்தில் பிரதிபலிக்கிறது. தனித்தொகுதி, பெண்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு முறை எப்போதும் போல் தொடரும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளுக்கு அவசியமில்லை. இம்முறையில் தேர்தலுக்குப்பின் தங்களது பலத்திற்கேற்ப கூட்டணி அரசுகள் அமையும் வாய்ப்புகள் மிகுதி.

      இப்போதுள்ள நடைமுறையில் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துத் தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் போட்டியிடும் கட்சிகளின் வாக்கு விழுக்காட்டைத் துல்லியமாக அளவிட இயலாது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்து வாக்களிக்கும் போது அக்கட்சியின் உண்மையான ஆதரவுநிலை தெரியவரும். இந்த வாக்கு விழுக்காட்டிற்கேற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்கள் பகிர்வு செய்யப்படும். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குரிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுக் கொள்ளலாம். அவற்றில் அவர்கள் முன்னுரிமைகளைப் பின்பற்றலாம். பட்டியலின, பெண்கள் இடஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியிருக்கும்.

       ஒருவரின் இறப்பு, விலகல்தகுதிநீக்கம் என எந்தக் காரணங்களாலும் இடம் காலியாகும்போது அக்கட்சியால் புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார். இடைத்தேர்தல் நடத்த வேண்டிய தேவையிருக்காது. தேர்தலுக்குப் பின்புதான் கூட்டணிகள் உருவாகும். ஒரு கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை என்றால்  பெரும்பாலும் ஆட்சியில் பங்கு பெறும் கூட்டணி அரசாக அமையும் வாய்ப்புகளே அதிகம். தங்களது வாக்கு விழுக்காட்டிற்கேற்ப  ஓவ்வொரு கட்சி அல்லது அமைப்பும் தங்கள் வலிமையை நிலைநிறுத்தவே விரும்பும். 

        இம்முறையில் சற்று வலுவான எதிர்க்கட்சிகள் அமையும். இப்போதிருக்கும் முறையிலேயே தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2006, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வலிமையான எதிர்க்கட்சிகள் அமைந்தன. ஆனால் இது எப்போதும் நடக்கும் என்று உறுதியளிக்க இயலாது. 2016இல் 74 இடங்களைப் பெற்ற தி.மு.க.வும் 2021இல் 78 இடங்களைப் பெற்ற அ.இ.அ.தி.மு.க.வும் வலுவான எதிர்க்கட்சிகளாக அமர்ந்தன. (2021இல் அ.இ.அ.தி.மு.க. உள்கட்சி மோதல்களால் எதிர்க்கட்சியாக குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடியாதது தனிக்கதை. இதன் பின்னணியில் பா... உள்ளது. அ.இ.அ.தி.மு.க.வை கூட்டணியில் இணைக்கவும் அல்லது கட்சியை அழித்து இரண்டாவது இடத்தைக் கைப்பற்றவும் பா.ஜ.க. அதிகார வலிமையோடு முயற்சி செய்கிறது.)

         ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி இன்றியமையாதது.  சில நேரங்களில் வலிமையான எண்ணிக்கை இருந்தாலும்கூட அவர்களின் வாக்கு விழுக்காட்டிற்கு ஏற்ற இடப்பகிர்வு இல்லாத சூழல் உள்ளது. 2016இல் 40.77% வாக்குகள் பெற்ற அ.இ.அ.தி.மு.க.  134 இடங்களைப் பெற்றது. 31.63% வாக்குகள் பெற்ற தி.மு.க. 89 இடங்களைப் பெற்றது. விகிதாச்சார முறை என்றால் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 95 இடங்களும் தி.மு.க.வுக்கு 74 இடங்களும் கிடைத்திருக்கும். (இவர்கள் தற்போதைய முறையில்  பெற்ற வாக்குகளில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அடங்கும். இருப்பினும் இவற்றைத் தோராயமான கணக்கீடாகக் கொள்ளலாம்.) 

    2021 சட்டமன்றத் தேர்தலில் 37.7% வாக்குகள் பெற்ற தி.மு.க. 133 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அ.இ.அ.தி.மு.க. 33.29% வாக்குகளையும் 66 இடங்களையும் பெற்றிருந்தது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையெனில் தி.மு.க. 88 இடங்களையும் அ.இ.அ.தி.மு.க. 78 இடங்களையும் பெற்றிருக்க வேண்டும். எனவே தி.மு.க. தனித்து ஆட்சியமைத்திருக்க முடியாது; கூட்டணி அரசே அமைந்திருக்கும். இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6.6% வாக்குகள் பெற்றதால் 15 இடங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும். எனவே கூட்டணி அமைக்காமல் போட்டியிடுபவர்களுக்கு இப்போதைய முறையில் இடமே கிடைக்காது. 

     2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 36.56% பெற்று 240 இடங்களையும் காங்கிரஸ் 11.19% பெற்று 99 இடங்களைப் பெற்றது. விகிதாச்சார முறை எனில் பா.ஜ.க. 199 இடங்களும் காங்கிரஸ் 115  இடங்களும் உறுதி செய்யப்பட்டிருக்கும். இதே தேர்தலில் தமிழ்நாட்டில் 1.82% வாக்குகளைப் பெற்ற தி.மு.க. 22 இடங்களைப் பெற்றபோதிலும் 1.39% வாக்குகள் பெற்ற அ.இ.அ.தி.மு.க.விற்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. தி.மு.. பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் கூட்டணி பலம் தெரிகிறது. தனிப்பட்ட கட்சியின் வாக்குகள் இங்கு பிரதிபளிப்பதில்லை.

      இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில்  கூட்டணி அளவில் எடுத்துக்கொண்டால் தி.மு.க. அங்கம் வகித்த இந்தியா கூட்டணி பெற்ற வாக்கு விழுக்காடு 53.15%; பெற்ற இடங்கள் 39. அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 30.56% வாக்குகள் பெற்றும் ஓரிடம்கூட பெற இயலவில்லை. 3.89% பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும் 3.66% பெற்ற NDA கூட்டணிக்கும் பிரதிநிதித்துவம் இல்லை.  இதையே விகிதாச்சார முறை கொண்டு கணக்கிட்டால் இந்தியா கூட்டணி 21, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 12, நாம் தமிழர் கட்சிNDA ஆகிய இரண்டுக்கும் சேர்த்து மூன்று இடங்கள் எனப் பகிர்வு  இருக்கும்.  முந்தைய 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் UPA கூட்டணி 32.76% வாக்குகள் பெற்று 38 இடங்களையும்   NDA கூட்டணி 18.48% வாக்குகள் பெற்று ஓரிடத்தை மட்டும் பெற்றது. விகிதாச்சார முறை என்றால் UPA 13 இடங்களையும் NDA 7 இடங்களையும் பெற்றிருக்க வேண்டும். 

     நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் முதன்மை எதிர்க்கட்சி தகுதிபெற  மொத்த இடங்களில் 10% இடங்களைப் பெறவேண்டும் என்ற விதியிருப்பதால் 2014, 2019 ஆகிய இரு பொதுத்தேர்தல்களுக்குப் பின் அமைந்த நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சிக்கு உரிய தகுதி தரப்படவில்லை. 2014இல் 19.4% வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 44 இடங்களையும் 2019இல் 19.49% வாக்குகளுடன்   காங்கிரஸ் 52 இடங்களை  மட்டுமே பெற்றது. இப்போதைய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நடக்கும் மோசடியாகவே இதைக் கருத முடியும்.

     2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 44.75% வாக்குகள் பெற்று 96 இடங்களைப் பெற்றது. அ.இ.அதி.மு.க. 39.91% வாக்குகளைப் பெற்று 69 இடங்களைத் தக்கவைத்தது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளித்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை "மைனாரிட்டி தி.மு.க." என்று முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 5 ஆண்டுகாலமும் அழைத்தார். இது ஒருவகையில் நமது அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரானது. இன்று அவ்வாறு சொல்ல முடியுமா என்பது கேள்விக்குரியது. அப்படிப் பார்த்தால் 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் அமைந்த நரேந்திர மோடியின் அரசை அவ்வாறுதான் அழைக்க வேண்டியிருக்கும். ஆனால் ஜனநாயக மாண்புகளை மதிப்பவர்கள் அவ்வாறு செய்வதில்லை. 

    மக்களால் விரும்பப்படும் ஒருவரை கட்சிகள் உறுப்பினராக நியமனம் செய்யாமல் போகலாம். மாநிலங்களவை, மேல்சபை போன்று மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்கள் கொல்லைப்புறமாக உள்நுழைய இது வாய்ப்பாக அமையலாம். தனிநபர்கள் சுயேச்சையாக களமிறஙகுவது கேள்விக்குறியாகும். மிகச்சிறிய அமைப்புகள், கட்சிகள் பலனடைவது சிரமம்.  மக்களின் ஆதரவிற்கேற்ப இந்நிலை படிப்படியாக மாறும். 

     இன்றைய ஜனநாயக முறையின்  சிக்கல்களுக்கு எல்லாம் விகிதாச்சார முறையை சர்வரோக நிவாரணியாகக் கொள்ள வேண்டியதில்லை. இப்போதிருக்கும் நடைமுறைகளில் இருக்கும் குளறுபடிகளை இம்முறை ஓரளவு சரிசெய்யும் என்று நம்பலாம். பல்வேறு நாடுகளில் செயல்படும் விகிதாச்சார முறைகளை ஆய்வு செய்து நமக்கேற்ற முறையை கண்டடைந்து, அவற்றைச் சீர்திருத்தி உரியவழிகளில் அமல் செய்வது இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

நன்றி: பேசும் புதியசக்தி  – மாத இதழ் மே 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக