புதன், ஆகஸ்ட் 13, 2025

08. ஔரங்கசீப் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

08. ஔரங்கசீப் கதைகள்

மு.சிவகுருநாதன்

 


 

        முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார்.  ஆலம்கீர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும்  பட்டத்தை சூட்டிக் கொண்டார். இவர் தம் தாத்தா ஜஹாங்கீரைப்போல கலைகளின்மீது  ஆர்வம் கொண்டவராகவோ தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டங்கொண்டவராகவோ இல்லை. தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை. இந்துக்களின்  மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார்.  இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்”, என்று தமிழ்நாட்டரசின் பாடநூல் தெரிவிக்கிறது. பன்னெடுங்காலமாக இப்படியான சித்திரம் மக்களின் மனங்களில்  ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை நிலவரம். 

       ஔரங்கசீப்பின் படத்தை எனது மாணவர்களிடம் காட்டினால் அவர்களை கையை உயர்த்திகொண்டு அப்படத்தை குத்த வருவார்கள் என ஒரு ஆசிரியர் பெருமை பொங்க குறிப்பிட்டார். வெறுப்பு அரசியல் எப்படியெல்லாம் விதைக்கப்படுகிறது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும்.  புதுதில்லியில் ஔரங்கசீப் மார்க் அப்துல்காலம் மார்க்ஆகவும் ஔரங்காபாத் (மகாராஷ்டிரா) சத்ரபதி சம்பாஜிநகர் ஆகவும் மாறியதன் பின்னணியை இந்த வெறுப்பரசியலுடன் விளங்கிக் கொள்ளவேண்டும். இன்று குல்தாபாத்தில் (மகாராஷ்டிரா) இருக்கும் ஔரங்கசீப்பின் எளிய கல்லறையின் மீது வெறுப்பின் வன்மம் நிலைகொண்டுள்ளது.

   ஒளரங்கசீப் சமயப் பற்றுமிக்க ஒரு பேரரசராவார். இவர் சன்னிமுஸ்லீம் பிரிவைச் சார்ந்தவர். இஸ்லாமின் புனித நூலான குரானைதவறாமல் தினந்தோறும் படித்து வந்தார். சன்னி பிரிவு அல்லாதவர்களை முற்றிலும் வெறுத்தார். முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஜிசியாமற்றும் புனிதப் பயண வரியினைவிதித்தார். இந்துக்களை அரசப் பதவியிலிருந்து அகற்றினார்.என்று தமிழ்நாட்டரசின் முந்தைய பாடநூலும் சொல்கிறது. இவ்வாறு வழிவழியாக வெறுப்பரசியலில் விதை தூவப்படுகிறது.

    முகலாய அரசர்களில் ஔரங்கசீப் மட்டும் சமயப்பற்றுடையவர் என்று சொல்வது ரொம்ப அபத்தம். குரானை நாள்தோறும் படிப்பதுகூட மதவெறிச்செயலாகக் கட்டமைக்கப்படுவது அநியாயம். மன்னர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் அல்ல. தனது ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் இவர்கள். தனக்கு எதிராக யாரும் செயல்படும்போது அவர்களை பதவி நீக்கம் செய்ததை இந்து மத எதிர்ப்பு என்று சொல்லமுடியாது. தனது சகோதரர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்ததை இஸ்லாம் எதிர்ப்பு என்று சொல்லிவிட முடியாது அல்லவா!

   இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட ஜிசியாவரி அக்பருக்கு முன்னதாக நடைமுறையில் இருந்த ஒன்று. அக்பர் இவ்வரியை நீக்கினார். இவர் மீண்டும் கொண்டுவந்தார். இந்த வரி இந்துக் கோயில்களை பராமரிப்பதற்காக என்று சொல்லித்தான் வசூலிக்கப்பட்டது. இவ்வரி விதிப்பிலிருந்து பிராமணர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமியர்கள் மீது விதிக்கப்பட்ட சக்காத்என்ற வரிபற்றி யாரும் பேசுவதில்லை. இந்து மன்னர்கள் கூட யூதர்களிடம் ஜெசியாவரியை விதித்ததாக ஓர் குறிப்பும் உள்ளது.

   பொதுவாக எந்த மதத்தைச் சேர்ந்த மன்னரோ மக்களைப் பற்றி பெரும்பாலும் கவலை கொண்டதில்லை. இந்து மன்னர்கள் சாமான்ய மக்களுக்கு அளித்த வரிக்கொடுமைகள் பற்றி யாரும் வாய்திறப்பதில்லை. குறிப்பாக சோழர் கால பொற்கால  ஆட்சியிலும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சியிலும் விதிக்கப்பட்ட வரிகள் ஏராளம். மக்கள் அனுபவித்த  கொடுமைகள் எண்ணிலடங்காதவை.

   சோழர்களின் பொற்காலஆட்சியில் 400க்கும் மேற்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்கள் இருந்ததை கல்வெட்டு ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன. விதிக்கப்பட்ட வரிகளைப் பார்க்கும்போது அம்மக்கள் பட்டிருக்கும் கொடுமைகளைக் கற்பனை செய்து பார்ப்பதுகூட அரிது.  ஊதியமில்லாத வேலைகளைக் குறிக்கும் வெட்டி வேலைகளுக்குக்கூட வரி விதிக்கப்பட்டது. (எ.கா. வண்ணாரப் பாறை  - வண்ணார் பயன்படுத்திய பாறைக்கு வரி) சில வரி விலக்குகளும் உண்டு. ஊர் நத்தம், கோயில்கள், ஏரிகள், ஊருக்குள் ஓடும் வாய்க்கால்கள், பறைச்சேரி, கம்மாளச் சேரி, சுடுகாடு ஆகியவற்றுக்கு வரிகள் கிடையாது என கே.கே.பிள்ளை குறிப்பிடுவார். இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிகள் கிடையாது. இதில் பிரம்மதேயங்களும் அடக்கம்.

       திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டுப் பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமை மறுக்கப்பட்டது. இங்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தலை இறை’ (தலை வரி) விதிக்கப்பட்டது. ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் முலைகளுக்கு வரி, வளைந்த கைப்பிடிக் குடைக்கு வரி, தாலி வரி என்று பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாது இஸ்லாமிய அரசர்கள் மீது காழ்ப்பை உமிழும் நிலை மாறவேண்டும். இன்றைய மக்களாட்சி அரசுகள் கூட சாதாரண மக்களுக்கு வரிச்சுமையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளையும் தருகின்றன. இதைத்தான் மன்னர்கள் வேறுவடிவில் செய்துள்ளனர்.

     வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்கு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் ஔரங்கசீப்தான்”, என்று தி இந்துநேர்காணல் ஒன்றில் (அக். 19, 2015) மதங்கள் தொடர்பான ஆய்வாளர் ஆட்ரே டிரஷ்கே (Audrey Truschke) குறிப்பிடுகிறார். மேலும் அவரது ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதம் முக்கியத்துவம் இழந்தது தற்செயல் மற்றும் அரசியல் காரணங்களால் ஆனது அன்றி மதமோ கலாச்சாரமோ காரணமில்லை என்றும் விளக்குகிறார். முகலாயர் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம், பிராமணர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பற்றியும் ஆட்ரே டிரஷ்கே தனது நேர்காணலில் பதிவு செய்கிறார்.

      இவர் எழுதிய  ‘Aurangzeb: The Man and the Myth’   என்று நூல் ஔரங்கசீப்பை மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது.  இவர் எழுதிய முந்தைய நூலான ‘Culture of Encounters: Sanskrit at The Mughal Court’ என்ற நூலில், “ஔரங்கசீப் காலத்தில் நடந்த இந்தி மொழி வளர்ச்சி சமஸ்கிருதப் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்தது”, என்கிறார். இதில் 1560-1660 காலகட்டத்தில் முகலாய நீதிமன்றங்களில் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் போன்றோர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழி மட்டுமின்றி, சமஸ்கிருத கலாச்சாரமும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்ததைப் புலப்படுத்துகிறார்.

        ஔரங்கசீப்பைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை நீக்கி, வரலாற்றுப்போக்கில் அவரது அனைத்து சிக்கலான தன்மையையும் வெளிக்கொணர்வது வரலாற்றெழுதியதியலில் முதன்மையான ஒன்றாகும். சமகாலத் தரநிலைகளின்படி ஔரங்கசீப்பை மதிப்பிடாமல் அவரையும் வரலாற்றையும்  ஒருசேர மீட்டெடுப்பதே இவரது ஆய்வு  நோக்கமாக உள்ளது. வரலாற்றின் போக்கில் கேள்விக்குரிய காலத்தின் சூழல் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 'காலம் மற்றும் இடக் கோட்பாடு' என்ற வரலாற்றுக் கோட்பாடு வழியே  இவை  அணுகப்பட்டுள்ளன.

      கோயில் இடிப்பு, மதமாற்றம், இந்துக்களை கொல்வது, ஜிசியா வரியை அமல்படுத்துவது மற்றும் இசையைத் தடை செய்வது போன்றவற்றுக்கான சான்றுகள் உள்ளன என்பதை டிரஷ்கே ஒப்புக்கொண்டாலும், ஆனால் அவை ஔரங்கசீப் இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்க வெறித்தனமாக இருந்தார் என்கிற கருதுகோளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்கிறார். எனவே இங்கு பகுத்தறிவு, பொருத்தமான வரலாற்று அணுகுமுறை மற்றும் பிற தொடர்புடைய வரலாற்று விவரங்களை இணைப்பது போன்றவையும் வரலாற்றெழுதியலில் முதன்மைக் கூறாகின்றன.

       ஔரங்கசீப் ஒரு பக்தியுள்ள முஸ்லிம் (ஷன்னி) என்பதை டிரஷ்கே ஒப்புக்கொள்கிறார். ஆனால் இஸ்லாம் ஒரு நிரந்தர அரசுக் கொள்கையாக மாறவில்லை என்று உறுதிப்படுத்துகிறார். இசை மீதான தடை நீதிமன்றத்திற்கு மட்டுமே இருந்தது, அதே நேரத்தில் இசை இளவரசர்கள், இளவரசிகள் மற்றும் முகலாய பிரபுக்களின் ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது. இந்திய வரலாற்றின் முந்தைய 500 ஆண்டுகளை விட, ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் பல ஆசிரியர்கள் இசை குறித்த இந்தோ-பாரசீக ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்கினர்”, என்று கேத்தரின் ஸ்கோஃபீல்ட் தமது ஆய்வில் வெளிப்படுத்துகிறார்.

       ஔரங்கசீப்புக்கும் (21 பேர்) அவரது சகோதரர் தாரா ஷிகோவாவுக்கும் (24 பேர்) இடையிலான வாரிசுரிமைப் போரில், ஏறத்தாழ சம எண்ணிக்கையிலான உயர் பதவியில் உள்ள இந்து பிரபுக்கள் இரு தரப்பையும் ஆதரித்தனர். அக்பர் உட்பட முந்தைய அனைத்து முகலாய மன்னர்களையும் விட ஔரங்கசீப் தனது பிரபுக்கள் பட்டியலில் அதிகமான இந்துக்களை இணைத்துக் கொண்டிருந்தார். அக்பரின் அரசில் 22.5% இருந்த இந்துப் பிரபுக்கள் ஔரங்கசீப் அரசில் 31.6% ஆக உயர்ந்தனர். எனவே ஔரங்கசீப்பை இந்து-விரோதி என்று கட்டமைப்பது  ஏற்றுக்கொள்ள இயலாதது.

    ஔரங்கசீப் தனது அரசவையிலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும் அனைத்து இந்துக்களையும் ஷியாக்களையும் வெளியேற்றவில்லை என்பதை  அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்கின்றனர். முகலாய வரலாற்றில் அவரது ஆட்சியில் பிரபுக்களில் இந்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததும் சுட்டப்படுகிறது.  சில கோயில்களை இடிக்க உத்தரவிட்டபோதும், மற்ற கோயில்கள் மற்றும் மடங்கள் மற்றும் பிராமணர்களுக்கு நிலங்களையும் பணத்தையும் வழங்கினார் என்பதும் வரலாற்று நூல்களில் பதிவாகிறது.

      Princes and Painters in Mughal Delhi 1707-1857 என்ற நூலை வில்லியம் டேல்ரிம்பிள் (William Dalrymple)  யுத்திகா சர்மா (Yuthika Sharma) ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நூலில், ஔரங்கசீப் தேவைகளுக்கேற்ப இந்து நிறுவனங்களுக்கும் புரவலராகச் செயல்பட்டிருக்கிறார் என்றும் ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்ததில்லை, அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்படவில்லை, என்றும் முன்னர் சித்தரிக்கப்பட்டதைப் போல அவர் கொடூரமானவராக இல்லைஎன்கிறார்.

     ஔரங்கசீப்புக்குக் கலைகள் என்றாலே பிடிக்காது, கலைகளை வெறுத்தவர் என்றெல்லாம் கூறப்படுவதற்கு மாறாக, ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் வரையப்பட்ட சில ஓவியங்களைப் பார்க்கும்போது, அவர் தனது தர்பாரில் இருந்தவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது தெரியவருகிறது. ஔரங்கசீப் சிறந்த  வீணை வாசிப்பார் என்று எவருக்குமே தெரியாத தகவலும் டேல்ரிம்பிள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஔரங்கசீப்பின் அரசவையில் 'மன்சப்' ஆக இருந்த ஃபக்கீருல்லா இந்திய இசையைப் பற்றி ராக் தர்பண்என்ற நூலை எழுதியிருக்கிறார் எனும் தகவலும் உள்ளது.

       Punjab: A History From Aurangzeb To Mountbatten என்ற நூலில் ராஜ்மோகன் காந்தி ஔரங்கசீப்பின் அரசியல் நிர்வாகச் சிறப்பையும் மனிதாபிமானம் மிக்க அவருடைய மறுபக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஔரங்கசீப்பின் நீண்ட ஆட்சிக் காலத்தில் பேரரசின் பரப்பளவும் அதிகரித்து வந்தது. திபெத்தின் சிறுபகுதி, காஷ்மீருக்கு வடக்கே உள்ள பகுதி, டாக்காவுக்கும் கிழக்கே உள்ள பகுதி, சிட்டகாங், கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகியவை அவருடைய பரந்த பேரரசின் அங்கமாயின”, என்கிறார் ராஜ்மோகன் காந்தி.

       ஔரங்கசீப், தாரா ஷிகோவா இருவரையுமே வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய சார்புக்கு ஏற்பத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஔரங்கசீப் மதப்பற்று மிக்க குறுகிய எண்ணம் கொண்டவர், ஷிகோவோ அறிவுஜீவி, வேதாந்தி, சூஃபி என்றும்,  தாரா ஷிகோவா அரியணை ஏறியிருந்தால், இந்தியா அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய சமரச சன்மார்க்கமாகத் திகழ்ந்திருக்கும் என்றும் கூறுவார்கள். உண்மை நிலவரம் வேறு; கல்விப்புலங்களைத் தவிர, வேறு எந்த இடத்திலும் இதை எளிதாகக் கூறிவிட முடியாது. இந்து - முஸ்லிம், இந்தியர் - பாகிஸ்தானியர் என்று வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையிலிருந்து சற்றே விலகிவிட்டனர். ஔரங்கசீப் பொல்லாதவர், தாரா ஷிகோவா நல்லவர் என்று ஷிப்லி நோமானி, இஷ்டியாக் உசைன் குரைய்ஷி, ஜாடுநாத் சர்க்கார், ஈஸ்வரி பிரசாத் உள்ளிட்ட பலர், இப்படித் தவறான கண்ணோட்டம் தோன்றுமாறு  எழுதிவிட்டனர், என்று விமர்சிக்கிறார் பேரா. சையது அலி நதீம் ரெசாவி.

   உண்மையில் ரெசாவி சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்கள் வேறு திசைவழியை நமக்குக் காட்டுகின்றன. பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள பகுதியில் அவர்களை முற்றாக ஒதுக்கிவிட்டு எப்படி அரசாட்சி நடத்தமுடியும் என்பதைச் சற்று யோசிக்க வேண்டும். நிர்வாகத்திலும் ராணுவத்திலும் இந்துக்களின் பங்கு மிகுதியாக இருந்தது. ராஜபுத்திரர்களின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் ஔரங்கசீப் பதவிக்கு வருவதற்கே இந்துக்களையும் ராஜபுத்திரர்களையும் நாடி, அவர்களுடைய உதவியோடும் ஆதரவோடும்தான் சண்டையில் வெற்றிபெற்று பதவிக்கு வருகிறார். தன்னுடைய தந்தை ஔரங்கசீப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ரத்தோட்கள் (ராஜபுத்திரர்கள்) உடன் சேர்ந்துகொண்ட இளவரசர் அக்பர் எழுதிய கடிதம் இதனைத் தெரிவிக்கிறது.

      மக்கள் கடவுளின் படைப்புகள், மன்னன் கடவுளின் நிழல் போன்றவன் என்று கூறும் ஔரங்கசீப், “மன்னர்கள் கடவுளின் தர்பாரைத் தாங்கி நிற்கும் தூண் போன்றவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டால் கடவுளின் செங்கோலே தாழ்ந்துவிடும்என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். இஸ்லாமா அல்லது சாவா தீர்மானித்துக்கொள்ளுங்கள்என்று கூறி ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர் என்று ஔரங்கசீப் பற்றிப் பேசப்படுவதையும் இந்தக் கடித வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

       தாரா ஷிகோவா போர் நிபுணராக  பேசப்பட்டவர்; ஆனால், எங்கும் தளபதியாக இருந்ததில்லை. நிர்வாகியாகவோ, படைத் தலைவராகவோ பணியாற்றிய அனுபவமும் கிடையாது. ராஜா ஜெய் சிங் என்ற பிரபுவைத் 'தக்காணத்துக் குரங்கு', என்று அழைத்து, அவருடைய பகையைப் பெற்றார். ராஜா ஜெய் சிங், ஜஸ்வந்த் சிங், ரகு ராம், ராமராஜ் சிங், ராவ் தளபத் புந்தேலா போன்றோர் ஔரங்கசீப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியுள்ளனர். சம்பல் நதியைக் கடந்து சாமுகட் சண்டையில் ஔரங்கசீப் வெற்றி பெறக் காரணமாக இருந்த படகைக் கொடுத்து உதவியவர் தளபத் புந்தேலா. சில வரலாற்றாசிரியர்கள் எழுதியபடி அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றால், இவ்வளவு  ராஜபுத்திரர்கள் அவருக்கு உதவியிருக்க வாய்ப்பில்லைஎன்றும் சொல்கிறார் பேரா. ரெசாவி.

   ஔரங்கசீப் மதத்தையும் அரசியலையும் கலந்தது உண்மைதான். சில சமூகத்தினரைப் பாரபட்சமாக அவர் நடத்தினார். ஜிசியா வரியை விதித்தார் எனினும் மதம் மாற்றுபவராக அவர் செயல்பட வில்லை. பல்வேறு போர்களுக்குப் பிறகு அரசின் கருவூலம் காலியான பிறகு, ஆட்சிக்கு வந்து 21 ஆண்டுகள் கழித்து, இந்துக்கள் மீது ஜிசியா வரி விதித்தார். சிவாஜி தன்னுடைய நாட்டை விரிவுபடுத்துவதற்காகப் போரிட்டதைப் போலத்தான் ஔரங்கசீப்பும் போரிட்டார். இது அனைத்து மன்னர்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

      ஆட்சியாளர்களை அவருடைய மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் ஆராய்வது வரலாற்றில்  தவறான முடிவுகளுக்கு இட்டுச்  செல்லும்.  அக்பருக்குப் பிறகு ஆண்ட ஔரங்கசீப் மட்டுமே ராஜா ரகுராஜ் என்ற இந்துவைத் தன்னுடைய திவானாக வைத்துக்கொண்டார். மன்சப்என்ற உயர் பதவிகள் ராஜபுத்திரர்களுக்கே அதிகம் வழங்கினார். முக்கியமான மாகாணங்களின் ஆளுநர்களாக இந்துக்களையே நியமித்தார். பிருந்தாவன் ஆவணங்களை ஆராய்ந்தால், அக்பரைவிட அதிக கோயில் மானியங்களை அளித்தவர் ஔரங்கசீப் என்று இர்ஃபான் ஹபீப், தாராபாத் முகர்ஜி கண்டறிந்ததைப் போல நாமும் காண முடியும்என்றும்  ரெசாவி குறிப்பிடுகிறார்.

       எந்த அரசர்களையும் அவர்களது காலச்சூழல்,  இடம் போன்றவற்றைக் கொண்டே மதிப்பிட வேண்டும். இன்றைய சூழல், நவீன அரசுருவாக்கம், மக்களாட்சிக் கோட்பாடுகள் ஆகியவற்றின் சட்டகத்திற்குள் அவர்களை அடைக்க முயற்சி செய்யக்கூடாது. இது அசோகர், ராஜராஜன், ஔரங்கசீப், சிவாஜி போன்ற எவருக்கும் பொருந்தும். மேலும் புறவயமானப் பார்வையைத் தவிர்த்து பல்வேறு முன்முடிவுகளுடன் இவர்களை அணுகுவது வெறுப்பரசியலுக்கு வழிகோலுவதுடன் வரலாற்றுக்கு பேரிழப்பாக அமையும் என்பதில் அய்யமில்லை.

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

-          

நன்றி: பொம்மி சிறுவர் மாத இதழ் ஆகஸ்ட் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக