திங்கள், ஜூன் 06, 2016

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை 


 (இந்தப் புத்தகச் சந்தையில்உயிர்மைவெளியீடாக வெளி வரும் எனதுபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலில் இணைக்கப்பட்டுள்ள இனிய நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை - .மார்க்ஸ்)





 “பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை முகப்பாகக் கொண்டு ‘தீராநதி’ மாத இதழில் ஜன. 2007 முதல் டிச. 2011 முடிய அறுபது மாதங்கள் பத்தியாக வெளியான பேரா. அ.மார்க்ஸ் –ன் ஆக்கங்கள் மிகத் தாமதமாக நூல்வடிவம் பெறுகின்றன. 

     பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துகளுக்கு முன்னுரை எழுதும் தகுதி எனக்குத் துளியும் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இருப்பினும் 1990 களின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் கருத்தரங்கில் தொடங்கி இன்று வரைத் தொடரும் தோழமை உணர்வினுடாக ஓர் வாசகப் பார்வையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    அன்று நிறப்பிரிகையில் வெளியான கட்டுரைகள் இன்று குமுதம் நிறுவன இதழான ‘தீராநதி’யில் வெளியாகக் கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் தமிழ் இதழியல் உலகில் ஏற்பட்டுள்ளன. அரசியலற்ற ஓர் நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பலகாலமாக எடுத்திருந்த நிலையில் 'நிறப்பிரிகை' நுண் அரசியல் களங்களை விவாதப் பொருளாக்கியது. இதில் அ.மார்க்ஸ் – ன் பங்கு பணி அளப்பரியது.



   தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ் அளவிற்கு கடும் விமர்சனங்களுக்கு ஆளான சமகால அறிவுஜீவி யாருமில்லை.. இந்தத் தொகுப்பின் குறுக்கு வெட்டாகப் பார்த்தால்கூட அவர் தொடாமல் விட்ட பிரச்சினைகள் மிகக் குறைவு. சமகால தமிழ்ச் சிந்தனையாளர்களில்  இது அரிது. கிராம்சியின் 'உயிர்ப்புமிகு அறிவுஜீவி' (Organic Intellectual) எனும் கருத்தாக்கத்திற்கு தமிழ்ச்சூழலில் மிகவும் பொருத்தமான ஆளுமை அ.மார்க்ஸ். அ.மார்க்ஸால்  இது சாத்தியமாகியுள்ளது எங்களைப் போன்ற நண்பர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. 

   புத்தர், காந்தி, அம்பேத்கர், பெரியார், தாகூர், ஸ்பாடிஸ்டா, பரமசிவ அய்யர் என எங்கும் அறத்தைத் தேடி அலையும் மனித உரிமைப் போராளியாகவே அ.மார்க்ஸ் இந்நூல் முழுவதும் காட்சியளிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதி செத்த உலகில் அறத்தைத் தேடி தன்னந்தனியனாய் நெடுந்தூரம் பயணிக்கிறார். 

   தமிழகத்தில் சொல்லப்படும் எந்தக் கருத்தும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்கிற இரு பார்வைகள் வழியே பயணிப்பதால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் படும் இடர்பாடுகளை சொல்லி மாளாது. இருப்பினும் எது குறித்தும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தனது கருத்துக்களோடு அனைவரையும் கடந்து செல்கிறார். 

    இத்தொகுப்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து அதிக எண்ணிகையிலான கட்டுரைகள் இருக்கின்றன. இந்தப் பார்வைகள் அவருக்கு நிறைய  எதிர்ப்புக்களை உருவாக்கித் தந்தன. அதற்காக தனது அறம் சார் நிலைப்பாட்டில் அவர் எள்ளளவும் உறுதி குலைவதில்லை. ஈழப்பிரச்சினை தமிழ்த் தேசியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், பெற்ற படிப்பினைகள், அரசியல் தீர்வு, கச்சத்தீவு, மீனவர் பிரச்சினைகள், அகதிகள் வாழ்வு குறித்தான கரிசனங்கள் என்பதாக அ.மார்க்ஸிடம் விரிவு கொள்கின்றன. 

  கச்சத்தீவு, அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்களில் தேசியம் கடந்த ஒருவகை ஆளுகை முறை பற்றி யோசிக்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: "இன்றையத் தேவை போரல்ல; சமாதானம், சமாதானம் மட்டுமே. பேச்சுவார்த்தைகள் மூலமே எல்லைகள்  வரையறுக்கப்பட வேண்டும். வரையறுத்தல் என்பதைவிட வரையறை நீக்கம் (delimit) செய்தல், நெகிழ்ச்சியாக்கப்படுதல், ஒருங்கிணைக்கப்படுதல் (integrate) வேண்டும். முன்பொரு முறை நான் இந்தப் பத்தியில் எழுதியது போல தேசியம் கடந்த ஆளுகை முறை (Non-Nationalistic mode of Governance) குறித்தெல்லாம் நாம் யோசிக்கவேண்டும். குறைந்தபட்சம் எல்லைப் பிரச்சினைகளிலாவது இந்தப் பார்வைகள் தேவை.”



    விலகி நிற்றல், தன்னிலை அழிப்பு, பன்முகப்பார்வை குறித்த அவதானிப்புகள், மற்றமை சார்ந்த கரிசனங்கள், அறவியல் நிலைப்பாடு, பெருங்கதையாடல் தகர்ப்பு, ஒற்றைத்தீர்வுகளில் முடங்காமல் பன்மைத் தீர்வுகளைப் பரிந்துரைத்தல், தேசபக்தி எனும் மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை, எங்கும் உரையாடலுக்கான சாத்தியப்பாடு, வைதீக எதிர்ப்பு என்பதான தன்மைகள் இத்தொகுப்பு முழுதும் இழையோடுவதைக் காணலாம். 

    அரபுலக எழுச்சி, ஈழப்பிரச்சினை, பாகிஸ்தானுடனான உறவு என எந்தச் சிக்கலுக்கும் “தொடர்ந்த உரையாடலுக்கான சாத்தியமும், பன்மைத்துவம் தக்கவைக்கபடுதலுமே முக்கியம்” என வலியுறுத்துகிறார்.  ஈழச்சிக்கலுக்கு அடுத்தபடியாக காந்தி குறித்த இவரது பார்வைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. 

   நீதி செத்த உலகில் அறத்தைப் பேச இவருக்குக் கிடைத்த பெரு வாய்ப்பு காந்திதான். பெரியார், அம்பேத்கரைப் போற்றும் இவர், பெருகி வரும் வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள காந்தியின் உதவியை நாடுகிறார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எல்லாவற்றையும் அரசு-அதிகார கண்ணோட்டத்திலிருந்து சிந்திக்காமல் அரசுக்கு எதிராகவும் அரசுக்கு அப்பாலும் எனகிற நிலையிலிருந்து அணுக முயலும் அ.மார்க்ஸ் காந்தியைக்  கண்டடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காந்தியைக் கடுமையாக விமர்சித்த பெரியார்தான் இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னவரும் கூட என்பதை மறந்துவிட இயலுமா?? 




     காந்தி வலியுறுத்தியது அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive)  ஓர் தேசியம். தேசியம் என்பதை ஓர் அரசியல் வகையினமாக அன்றி கலாச்சாரமாக அவர் பார்க்கவில்லை. சுயாட்சி என்ற கருத்துடன் அரசற்ற நிலையை (anarchy) விரும்பியவர் காந்தி. காந்தியின் சிந்தனைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் அடிநாதமாக ஒன்றிணைக்கும் இழை இருப்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். கடும் நோய்வாய்பட்டபோது ஊசிகளைத் தவிர்த்த காந்தி ரயில் பயணங்களை மறுத்ததில்லை என்று சொல்லும் மார்க்ஸ் நவீன தொழில்நுட்பங்களுக்கு அவரை ஒரு வறட்டுத்தனமான  எதிரியாகக் கட்டமைக்க முடியாது என்றும் சொல்கிறார். 

   டால்ஸ்டாய் போன்ற உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் முதல் ஈன்ஸ்டின் உள்ளிட்ட அறிஞர்கள் வரை தேசபக்தியை ஏன் வெறுத்தார்கள் என கேள்விகேட்டு அதற்கான விடையும் தேடுகிறார். தேசபக்தி உணர்வு இயற்கையானதல்ல. அது அறிவுக்குப் புறம்பானது; ஆபத்தானது. மானுடத்தை நேசிப்பவர்கள் தேசபக்தியை வெறுக்கத்தானே முடியும்?

  பெரியாரிடமிருந்து அண்ணா வேறுபடும் புள்ளிகளை மிக நுணுக்கமாக சுட்டுகிறார். இதன் பொருள் அண்ணாவை நிராகரிக்கிறார் என்பதல்ல. அ.மார்க்ஸை விமர்சிப்பவர்கள் இவ்வாறான எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுகின்றனர். “அடையாள அரசியல், அடையாளத்தைப் பேணுவதன் ஊடாக எல்லாவற்றையும் உள்ளடக்குவதாகவும் இருக்கவேண்டும். காந்தி, பெரியார், அண்ணா என்றொரு நல்ல பாரம்பரியம் நமக்கு இந்தவகையில் உண்டு” என்று அவர் சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும். 

  இந்நூலில் உள்ள அம்பேத்கர் குறித்த மூன்று கட்டுரைகள் அம்பேத்கர் குறித்து இதுவரை யாரும் தொடாத புதிய பரிமாணங்களை எட்டுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்த 'டாக்டர் அம்பேத்கரின் போர்க்குரல்' எனும் குறுநூல் அவரின் அரசியல் பார்வைகளைத் துல்லியப்படுத்தியது என்றால் இந்நூலிலுள்ள கட்டுரைகள் அம்பேத்கர் என்னும் சிந்தனையாளரின் இதயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது.



  அ.மார்க்ஸ் எழுத்தில் ஓர் பிடித்த விடயம் என்னவெனில்  எந்த சிக்கலான கோட்பாடுகளைச் சொல்லும்போதும் அதற்கு எளிய உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் நிகழ்த்திவிடுவார். அதைபோல சமயம் பார்த்து குறைகளை நேருக்குநேர் சுட்டும் பண்பு  அநாயசமானது. 

     விக்ரமாதித்யன் மணிவிழாவிற்கு கூடிய எழுத்தாளர்களைப் பட்டியலிட்டு விக்ரமாதித்யன் என்ன கனிமொழியா இல்லை தமிழச்சியா? இத்தனை எழுத்தாளர்கள் குவிந்திருந்ததே பெரிய விஷயமில்லையா? என்று கேட்பார். கூடவே விக்ரமாதித்யன் மீதான விமர்சனமும் சட்டென்று வரும். “ஒருபக்கம் அப்பட்டமான சைவப் பிள்ளைமார்த்தனம்; மறுபக்கம் அசாத்தியமான கலகக் குணம், முழுசான அதுதானே விக்ரமாதித்யன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர் ஒழுங்கான சைவப்பிள்ளையும் கிடையாது, கலகக்காரனும் இல்லை” என்று கருத்துரைப்பார். தமிழ் அறிவுலகில் இவ்வாறு வெளிப்படையாகப் பேசும் ஆளுமைகள் அரிது.

     மன்மோகன் சிங் மீதான விமர்சனத்துடன் கூடவே அவரது மகளும் அமெரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளருமான அம்ரித்சிங்கை பாராட்டுகிறார். கனிமொழியின் அணு ஒப்பந்ததிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். இங்கு பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன் சிறைப்பட நேர்ந்ததை  வருத்தத்துடன் பதிவு செய்கிறார். புலவர் கலியபெருமாள் அவரது மனைவி, மகன்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது இரு மகள்களுக்கு அடைக்கலம் கொடுத்து தனது பள்ளியில் சேர்த்தக் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாளின் மனைவியின் சகோதரி அனந்தநாயகி அம்மையார் பற்றி இப்பத்தியில் எழுதி மு.கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார். அப்பாவி பெண்மணியை சிறைவைக்கக் காரணமாக இருந்தவர் தனது மகள் சிறைப்பட்டதற்குப் புலம்பும்போது ஒரு உயிர்ப்பு மிகு அறிவுஜீவி எப்படி மவுனமாக இருக்கமுடியும்?

    நிறப்பிரிகை காலத்தில் விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த கவனத்தை ஈர்த்த அ.மார்க்ஸ் இன்றும் தனது ஆய்வுத்தேடலை பல்வேறு புதிய களங்களில் தொடந்த வண்ணம் உள்ளார். சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’, ‘இணைப்புண்ட வரலாறுகள்’ போன்ற புதிய பார்வைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். 

  ஆங்கில நூற்கள் குறித்து மட்டுமின்றி. செயல்வழிக் கற்றல் பற்றி பேரா. கல்யாணி வெளியிட்ட குறு வெளியீடுகள் குறித்தும் தனது பதிவை மேற்கொள்கிறார். கோட்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் பாலை நிலவன் கதைகள், யவனிகா ஶ்ரீராம் கவிதைகள், 'வாத்தியார்', 'மறுபக்கம்' ஆகிய நாவல்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். தமிழ் எழுத்துலகில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட 'வாத்தியார்' நூலைத் தேடி எடுத்து அடையாளம் காட்டிய அவர் விமர்சிக்க வேண்டியவற்றைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார். 

   மிலன் குந்தேரா முன்வைக்கும் வரலாற்றுணர்வு கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் அரிது என்கிறார். தாகூர், டால்ஸ்டாய் போன்று தமிழ் எழுத்தாளர்கள் அறவியல் நிலை எடுக்கும் வரை இங்கு காத்திரமான படைப்புகள் தோன்ற வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார். 

   தேசத்திலிருந்து வரலாற்றை விடுவிக்கவேண்டிய தேவை பற்றி வலியுறுத்துகிறார். புனைவுகள் வழியே தமிழ், இந்திய வரலாறு கட்டமைக்கப்படுவதில் உள்ள ஆபத்தையும், தொல்லியல் தோண்டிகள் இதற்கு உறுதுணையாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். 

  சோழப்பெருமை பேசும் தமிழ்தேசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று வெளிப்படையாக நிலப்பிரபுத்துவப் பெருமைகளைப் முன்னிறுத்தத் துணிந்துள்ளதைச் சுட்டி, இதன் பின்னாலுள்ள பாசிச அம்சங்களை தோலுரிக்கிறார். யாரும் செய்ய மறுக்கும் இப்பணிகளைச் செய்ய இன்றைய தமிழ்ச்சூழலில் மார்க்ஸை விட்டால் யாருமில்லை. வரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை  பரமசிவ அய்யரின் ‘Ramayana and Lanka’ என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத் தக்கது.. 

  தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, “சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட.” என்று சொல்லிவிட்டு, “பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை” என்றும் சொல்கிறார். 

  ‘விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல்” என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.


 ஆகஸ்ட் 20, 2015                         மு.சிவகுருநாதன்                                         
 திருவாரூர்.


(உயிர்மை வெளியீடாக வரவிருக்கிற அ.மார்க்ஸ் –ன் ‘பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்’, என்ற ‘தீராநதி’ கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை. அ.மார்க்ஸின் முகநூல் பக்கத்திலிருந்து…)


நன்றி: அ.மார்க்ஸ்

வெள்ளி, மே 20, 2016

ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!


ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!



(மூத்வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இங்கு பதிவிடப்டுகிது.)
 

 வழக்கறிஞர் பொ.இரத்தினம்
அமைப்பாளர்,
பகத்சிங் மக்கள் சங்கம்.
தொடர்புக்கு: 9443458118



‘அறிவை ஆயுதமாக்குவோம்!”

“நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”, 

- மானிதர்  அம்பேத்கர்




    1979 இல் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மேற்கு வங்க அரசின் காவல்துறை மரிச்சாபி என்ற தீவில் கடும் உழைப்பால் வளப்படுத்தி வாழ்ந்த தலித் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வேட்டையாடியதில்  சுமார் 14 ஆயிரம் தலித் மக்கள் அழிக்கப்பட்டனர். இக் கொடூர நிகழ்வைப் பற்றி செய்திகள்  வராமல் மத்திய, மாநில அரசுகள் இருட்டடிப்பு செய்தது. மரிச்சாபி கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் பங்களாதேஷை ஒட்டிய சுந்தரவனக்காட்டுப்பகுதி ஆகும். 

   நாம சூத்திரர்கள் (தலித்) என்ற பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் ராஸ் மாலிக் (Raas Malick) இரண்டாண்டுகள் அப்பகுதிகளில் கள ஆய்வு செய்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வை மேற்கொண்டார். இதன் மூலம் இக்கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. 

   ‘தலித் முரசில்’ வெளிவந்த இது தொடர்பான கட்டுரைகளை ‘கருப்புப்பிரதிகள்’ நீலகண்டன் தொகுத்து வெளியிட்டார். இதை மக்களிடம் கொண்டு செல்லும் தேவை இருக்கிறது. அதை பகத்சிங் மக்கள் சங்கம் செய்ய இருக்கிறது. அரசியல்வாதிகளின் அக்கிரமங்களையும் போலி கம்யூனிஸ்ட்களையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

   இக்கொடிய நிகழ்விற்கு  இவ்வாண்டு ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்த அனைத்து தரப்பிற்கும் பகத்சிங் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 


    இது தொடர்பாக குடியரசுத்தலைவர், பிரதமர், உச்சநீதி மன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள், மாநில முதல்வர்கள்  உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதப்பட உள்ளது.

  இக்கொடுமை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள பகத்சிங் மக்கள் சங்கம் விரும்புகிறது. ஆனால் அதற்கான உதவிகள் கிடைப்பது இங்கு அரிதாக இருக்கிறது. 

  உலகம் உருண்டை என்ற சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோவை சிறையில் அடைத்துக் கொன்றதற்கு கத்தோலிக்க கிருத்தவ மதத்தலைவர் போப் 400 ஆண்டுகளுக்குப் பிறகு உலக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களை அழித்தொழித்த கொடுஞ்செயலுக்கு அந்நாட்டின் பிரதமர் மன்னிப்பு கோரினார். மேற்குவங்கத்தில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கு அம்மாநில முன்னால்  முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மன்னிப்பு கேட்ட (20.12.2013) நிகழ்வும் நடந்தது. 

  ஆனால் மரிச்சாபி கொடுமை நடந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் மறைப்பு வேலைகள் தொடர்கின்றன. இதற்கு அனைத்து இயக்கங்கள், கட்சிகள் உறுதுணையாக இருப்பது வேதனைக்குரியது. எனவே இதற்கு அழுத்தம் கொடுத்து ஓர் இயக்கமாக முன்னெடுப்போம். இதை தோழமை சக்திகள் பலரை இணைத்துச் செயல்படுத்துவோம். 

  சி.என். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது கீழத்தஞ்சை (நாகப்பட்டினம்)  கீழவெண்மணியில் (25.12.1968) குழந்தைகள் உள்பட 44 தலித்கள் ஓர் குடிசையில் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணம் வெறும் கூலி உயர்வு மட்டுமல்ல; தலித்கள் செங்கொடி இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சங்கமாக அணிதிரள்வதை பொறுக்காத ஆதிக்கசாதி வெறியர்கள் கோபாலகிருஷ்ண நாயுடும் அவனது கூட்டாளிகளும் இக்கொடூரத்தை நடத்தினர். 

      இங்கு பெரியாரும் காந்தியாரைப்போலவே 44 தலித் மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டதை வெறும் கூலிப்போராட்டமாகப் பார்த்தார். 

    காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளை விடுதலை செய்ததன் மூலம்  உயர்நீதிமன்றமும் நீதிபதிகளும் சாதியத்தை நிறுவி தலைகுப்புற கவிழ்ந்தன. 

   எங்கும் துரோகம். இக்கொலைக்குற்றவாளி  கோபாலகிருஷ்ண நாயுடுவை 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14.12.1980 இல் நக்சல்பாரித் தோழர்கள் வெட்டிக்கொன்று பழி தீர்த்தனர். சி.பி.எம். ஏதும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்து நின்றது. இப்போது சாதியுணர்வு வளர்ந்து போலிக் கம்யூனிஸ்ட் கும்பலாகிவிட்டது. 

    பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கும் வாரிசுகளுக்கும் அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் தலித்களுக்கு எதிரான ஆதிக்க சாதி கட்சிகளாக மாறிவிட்டன.

    பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அரசியல் சட்டப்படியான நிவாரணம் அளிக்கவேண்டியது கடமையாகிறது. 31.10.1984 இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ்காரர்களால் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டனர். அப்போது குடியரசுத் தலைவரான கியானி ஜெயில்சிங்கால் இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. உடனடியாக ஜெயில் சிங்கால் பிரதமராக்கப்பட்ட ராஜூவ் காந்தி பின்னாளில், “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது சிறு செடி, கொடிகள் அழியத்தான் செய்யும்”,  என்று திமிர்த்தனம் பேசினார்.  தற்போது மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் மோடியால் திட்டமிடப்பட்ட இஸ்லாமியருக்கு எதிரான குஜராத் வன்முறை?

   இந்த நரேந்திர மோடி 2002 இல் குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடிய வன்கொடுமைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்க்கான முஸ்லீம்கள் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்துத்துவ வெறியர்கள் நீதிமன்றம், மக்கள் மன்றம் எதுவாலும் இன்னும் தண்டிக்கப்படவில்லை.  இம்மக்களுக்கு உரிய நிவாரணம் இன்னும் கிடைத்தபாடில்லை.

   1991 இல் காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்காரப்பா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடத்திய ‘பந்த்’ –ல் கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடிய வன்முறை வெறியாட்டம் நடந்தது. 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். கோடிக்கணக்கில் சொத்துகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டன. பின்னாளில் பா.ஜ.க. வில் சேர்ந்த இந்த பங்காரப்பாவை இந்தக் கலவரங்களில் நரேந்திர மோடியின் முன்னோடி என்றுகூட சொல்லலாம். 

    நீதிதி வி.ஆர்.கிருஷ்ணய்ரால் உருவாக்கப்பட் இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய னித உரிமைகள் விசாணை டுவம் மிழ்நாடு, கர்நாமாநிங்ளில் பாதிக்கப்பட்மக்ளிடம் விரிவாவிசாணை த்தி அறிக்கைளித்து. "த்திய அசு செல்டாத அசாமுங்கிப் போயிருந்து. இதே நிலை நீடித்தால், மக்கள் ங்கள் உரிமைளைப் பாதுகாத்துக்கொள்தாங்ளாவே ழிமுறைளை உருவாக்கிக் கொள்வார்கள்", என்று இந்டுவம் சுட்டிக்காட்டிது.   இதன் ரிந்துரைகள்  மல்டுத்தப்வில்லை.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு இழப்பீடு ஏதுமில்லை. உச்நீதிமன்த்தால் அமைக்கப்பட் காவிரி இழப்பீட்டு ஆணையம் சிருக்கு மட்டுமே இழப்பீடு ங்கி உத்விட்து.

   இதைப்போல் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயுக்கசிவு, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில்  ராணுவமும் அரசும் நிகழ்த்திய வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், பச்சை வேட்டை என்ற பெயரில் பழங்குடியினர் மீதான போர், நாடெங்கும் அன்றாடம் நிகழ்த்தப்படும் தலித், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆகிய எவற்றிற்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை; எவரும் மன்னிப்பு கோரவில்லை. 

    இத்துடன் இன்னொன்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். பக்த்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்களுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டபோது காந்தியார் மிகப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார். காந்தி முயற்சித்திருந்தால் ஆங்கிலேயர்களிடம் வேண்டுகோள் விடுத்து இவர்களது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்விஷயத்தில் காந்தியார் ஒரே அடியாக கைவிரித்து விட்டார்.

   இவ்விவகாரத்தில் காந்தியாரின் பொறுப்பற்ற தன்மையையும், பகத்சிங்கை மத அடையாளத்துடன் சித்தரிக்கும் புரட்டையும் வெளிப்படுத்த பகத்சிங் மக்கள் சங்கம் முன்முயற்சி எடுக்கிறது. 

   பகத்சிங்கின் உண்மை வரலாற்றை அறிந்துகொள்ளவும் ஆய்வு செய்யவும் பகத்சிங் மக்கள் சங்கத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுடன் இரு வழக்கறிஞர்கள் இம்மாத இறுதியில் பஞ்சாப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். 

    கஸ்ட் 14 இல் இந்தியா முழுதும் தில் அக்றை காட்டும் அனைரையும் ஒருங்கிணைத்து அஞ்லி செலுத்துவோம். 
 

நாம் தொடர்ந்து இப்பாதையில் இயங்குவோம்; 
தோழமை சக்திகளை ஒருங்கிணைப்போம். 

நன்றி: வழக்கறிஞர் பொ.இரத்தினம்

புதன், மே 18, 2016

பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்



பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்

                                        - மு.சிவகுருநாதன்

 
குறுவெளியீடு - முன்னட்டை

     ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பெருமைப்பட்டுக் கொள்ளும் பத்தரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் சீரழிவு மிகவும் அபாயகரமானதாகும். பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் போக்கு மிக அதிகமாக நடைபெறுவது ஜனநாயகத்திற்கும் அடைப்படை உரிமைகளுக்கும் குந்தகம் செய்யும் நிகழ்வாகும்.

    ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா  ஜெயலலிதா தரப்பு மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வால் மிரட்டப்பட்டதை தன்னுடைய சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காக மனித உரிமைப் போராளியும் மூத்த வழக்கறிஞருமான பொ.இரத்தினம் அவர்கள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

    இது தொடர்பாக வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பான விவரங்களைத் திரட்டியதுடன், அவற்றை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தனித்தனியே குறுவெளியீடுகளாக வெளியிட்டு பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்தித்தார். (ஜெயலலிதா தரப்பினர் கோயில்களில் காணிக்கை செலுத்துவதால் தீர்ப்புகள் சாதகமாக கிடைக்கின்றனவா? – ஊழல் அரசியலை வேரறுப்போம் – ஆச்சார்யா ஆதரவு இயக்கம் – ஜூன் 2014 வெளியீடு) 

குறுவெளியீடு - பின்னட்டை


     இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்படாத நிலையில் வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பி.வி.ஆச்சாரியா ஆகியோருக்கு எதிராகவும் அவதூறுச் செய்தி சில தமிழ் நாளிதழ்களில் வெளியானது. (26.04.2016 இல் தினகரன், தினத்தந்தி; 27.04.2016 இல் ‘தி இந்து’ – தமிழ்) 

   இச்செய்தி முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான பொய்ச்செய்தி மட்டுமல்ல; பணத்திற்கு வெளியிட்ட செய்தியாகும் (Paid News). இது குறித்து உரிய விசாரணை சி.பி.அய். மூலம் நடத்தப்படவேண்டும் என்று வழக்கறிஞர் பொ.இரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கு நாளை (19.05.2016) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 

    69 வயதில் காலில் வலியுடன் தனி மனிதராக நீதிக்கானப் போராட்டத்தில் ஒவ்வொரு நீதிமன்றங்களாக படியேறிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் இரத்தினம் அவர்களின் தளராத உழைப்பிற்கு பாராட்டுக்களையும் நன்றியை தெரிவிக்க வேண்டிய தமிழ் ஊடகங்கள் அவர் மீது அவதூறு செய்யும்  Paid News - களை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. இதில் ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக தமிழக மக்களை ஏமாற்றும் மு.கருணாநிதியின் குடும்ப நாளிதழான தினகரனும் அடக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘இந்து’ ராம் இதற்கு இதுவரை எந்த வருத்தம், மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. 

     இந்நிலையில் இன்றைய (18.05.2016) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பி.வி.ஆச்சாரியா ஆகியோர் படங்களுடன் ‘ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்’ – இரா.வினோத்  என்ற பெயரில் ஓர் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியை கீழேத் தருகிறேன்.

     “இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாதுகாப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத்துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

     அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடையூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என முறையிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக்கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது.

   இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில், ‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.

    தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக‌ நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌” 

      என்று அச்செய்தி நீள்கிறது. இதில் “வழக்கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது”, என்ற ஓர் வரியும் வருகிறது. இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்ட அதே ‘தி இந்து’ தனது முகத்தை எங்கே மறைத்துக்கொண்டு யாரோ வெளியிட்டதுபோல் கதையளக்கிறது.

    “தினகரன், தினத்தந்தி போன்ற நாலம்தர இதழ்கள் இவ்வாறு தொடர்ந்து செய்பவையே. மிக நீண்ட பாரம்பரியம் ‘இந்து’ம் இவ்வாறு செய்வது அதிர்ச்சியளிப்பதாக”, வழக்கறிஞர் இரத்தினம் அவர்களிடம் பேசும்போது தெரிவித்தார். 

    தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளில் எவ்வித பலனையும் எதிர்பாராமல் வழக்காடி அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டுள்ள வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் தற்போது பகத்சிங் மக்கள் சங்கம் மூலம் சமூகப்பணியாற்றி வருகிறார். அவரது தன்னலமற்ற  பணிகளை அவதூறு செய்யும் ஊடகக் கும்பல்களைக் கண்டிப்போம். அவரது பணிகளுக்கு என்றும் துணை நிற்போம்.