தமிழக வரலாற்றில் வரலாற்று ஆசிரியர்களால் ‘இருண்ட காலம்’ என்று வருணிக்கப்படும் காலப் பகுதி களப்பிரர்கள் (கி.பி.250 - கி.பி.600) ஆண்ட, தமிழகத்தில் சமண, பவுத்த சமயங்கள் அரச மதங்களாக கோலோச்சிய காலப்பகுதியாகும். பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் புறக்கணிப்புக்கு உள்ளான இக்காலப் பகுதி பற்றிய ஆய்வை நிகழ்த்தி வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவர் சமணமும் தமிழும் என்ற தனது நூலில் தீபங்குடி பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இதுவும் (தீபங்குடி) பழைய சமண ஊர். இங்கிருந்த சயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப்பத்து’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத்தீபங்குடியில் இப்போதும் சமணர்கள் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது”.
(எழுதப்பட்ட ஆண்டு 1954).
திருவாரூர் - கும்பகோணம் சாலையில் அரசவனங்காட்டிற்கு அருகில் தீபங்குடி என்னும் சிற்றூர் உள்ளது. இது குடவாசல் வட்டத்தைச் சேர்ந்தது.
சமணத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு:
சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாந்த மதம், ஸியாத்வாத மதம் என்னும் பல்வேறு பெயர்களும் உண்டு. சமணம் என்பது துறவு நிலையைக் குறிக்கும். சமணக் கடவுளுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு. தீர்த்தங்கரர்களுக்கு ஜீனர் (புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்) என்ற பட்டப் பெயர் வழங்கப்படுகிறது. நிகண்டர் என்பது சமணக் கடவுளின் பற்றற்ற தன்மையைக் குறிக்கும். சமணம் மட்டுமே ஏகாந்தவாதத்தை மறுத்து அநேகாந்தவாதத்தை (ஸியாத்வாதம்) வலியுறுத்திய மதம்.
பிறவிச் சக்கரம் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம், அதன்மேல் மூன்று புள்ளிகள் (மும்மணி: நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்) அதன்மேலே பிறை போன்ற கோடும் அக்கோட்டின் மேல் ஒற்றைப் புள்ளியும் (வினை நீங்கி மோட்சம் அடைதல்) சமணர்களின் தத்துவக்குறியாகும்.
இஸ்லாமியர்களின் இறைத் தூதராக நபிகள் போற்றப்படுவது போல் சமணக் கொள்கைகளை பரப்பச் செய்தவர்கள் தீர்த்தங்கரர்கள் என்றழைக்கப்பட்டனர். முதலாவது தீர்த்தங்கரர் விருஷப தேவர் எனப்படும் ஆதிபகவன் (தீபநாயக சுவாமி). இவருடைய பள்ளிதான் தீபங்குடியில் உள்ளது. இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றி இருப்பதாக சமணர்கள் நம்புகின்றனர். 24வது தீர்ததங்கரராக இருந்தவர் வர்த்தமான மகாவீரர் ஆவார்.
தீர்த்தங்கரர்களின் பெயர்ப் பட்டியல்:
01. விருஷப தேவர் (ஆதி பகவன்)
02. அஜித நாதர்
03. சம்பவ நாதர்
04. அபி நந்தனார்
05. சுமதி நாதர்
06. பதும நாபர்
07. சுபார்சவ நாதர்
08. சந்திரப் பிரபர்
09. புஷ்ப தந்தர் (சுவாதி நாதர்)
10. சீதள நாதர் (சித்தி பட்டாரகர்)
11. சீறியாம்ச நாதர்
12. வாச புஜ்யர்
13. விமல நாதர்
14. அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்)
15. தரும நாதர்
16. சாந்தி நாதர்
17. குந்து நாதர்
18. அர நாதர்
19. மல்லி நாதர்
20. முனி சுவர்த்தர்
21. நமி நாதர் (நமி பட்டாரகர்)
22. நேமி நாதர் (அரிஷ்ட நேமி)
23. பார்சுவ நாதர்
24. வர்த்தமான மகாவீரர்.
23-வது தீர்த்தங்கரரான பார்சுவ நாதர் கி.மு. 817 முதல் 717 வரையில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர். அவர் வீடுபேறடைந்து 118 ஆண்டுகளுக்குப் பிறகு 24-வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் 72 ஆண்டு காலம் வாழ்ந்தவர். பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரும் (கி.மு. 563 - கி.மு.483) ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மற்கலியும் இவரது சம காலத்தவர்கள். மற்கலி மகாவீரருடன் சேர்ந்து இருந்து, பின்னர் கருத்து மாறுபட்டு ஆசிவக மதத்தை ஏற்படுத்தினார். இவர்கள் இருவரையும் விட வயதில் மூத்தவர் மகாவீரர். சமண மதமும் இரண்டு மதங்களையும் விட காலத்தால் முற்பட்டது.
சமண சமயத் தீர்த்தங்கரர்கள் ஒவ்வொருவரும் காளை, யானை, குதிரை, வாலில்லா குரங்கு போன்ற இனச் சின்னங்களுடன் (totemic emblem ) தொடர்புப்படுத்தப்படுகிறார்கள். தொன்மைக்கால கருத்துகள், சமய அறநெறிச் சாரங்கள் ஆகியவற்றின் கலவையாக சமணம் இருப்பதாக தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கணிக்கிறார்.
பவுத்தம் பல்வேறு பிரிவாக பிரிந்தது போல் சமணத்திலும் சுவேதாம்பரர், திகம்பரர், ஸ்தானகவாசிகள் போன்ற பிரிவுகள் ஏற்பட்டன. சுவேதாம்பரர் வெண்ணிற ஆடைகளை அணிபவர்கள். திகம்பரர் (திக்+அம்பரம் = திகம்பரம்) என்றால் திசைகளை ஆடையாக உடுத்துபவர் என்று பொருள். இவர்கள் ஆடைகளை உடுத்தாத நிர்வாணிகள்; அமணர் என்றும் அழைக்கப்படுவர். ஸ்தானகவாசிகள் உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர்கள். இவர்கள் தமது பள்ளியில் சமண ஆகமங்களை வைத்து வணங்கக் கூடியவர்கள்.
பெண்கள் தாழ்ந்த, இழிந்த பிறவிகள்; பாவம் செய்தவர்கள் பெண்ணாகப் பிறக்கிறார்கள் என்பது சமண மத நம்பிக்கை. பெண்ணாகப் பிறந்தவர்கள் மோட்சம் (வீடுபேறு) அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஆனால் சுவேதாம்பரர்கள் பெண்களும் துறவு பூண்டு வீடுபேறு அடையலாம் என்று கூறுகின்றார். திகம்பரர்கள் இதை மறுத்து பெண் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் மோட்சம் என்பதை வலியுறுத்துகின்றனர்.
அகிம்சையை தீவிரமாக வலியுறுத்திய சமணம் துறவறத்தில் ஈடுபடும் துறவிகளுக்கு 28 வகையான ஒழுக்கங்களை தீவிரமாக கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இவையனைத்தும் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளக் கூடியவை ஆகும். முனிவர்களது ஒழுக்கங்கள் 28-ஐ மூல குணங்கள் என்பார்கள். அவை: மாவிரதங்கள் ஐந்து, சமிதி ஐந்து, ஐம்பொறி அடக்கம் ஐந்து, ஆவஸ்யகம் ஆறு, லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையிற் படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆகியவனவாகும். நமது ரத்த சுழற்சியை முடக்கி நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் யோகாசனங்கள் சமண முனிவர்களால் உருவாக்கப்பட்டவை.
சைவக் கடவுள் சடைமுடி உடையவன்; எனவே சடையன் என்று கூட அழைக்கப்பட்டான். முதல் தீர்த்தங்கரரான ஆதி நாதர் (ரிஷப தீர்த்தங்கரர்) தவிர எஞ்சிய தீர்த்தங்கரர்கள் சடை முடியற்றவர்கள். இவர்களது உருவங்களும் அவ்வாறே காணப்படுகின்றன. காரணம் சமணத் துறவொழுக்கத்தில் லோசம் என்ற தலைமயிர் வளர வளர கைகளால் பிய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இந்திரன் வேண்டுகோளை ஏற்று ஆதிபகவன் தலை மயிரை பிய்த்துக் கொள்ளாமல் பாதியில் நிறுத்தி சடை முடியுடன் இருந்ததாக புராணக் கதை ஒன்றுண்டு.
தீபங்குடியில் வாழ்ந்த (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பரணிக்கோர் செயங்கொண்டார் என பாராட்டப்பட்ட கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார், பிற்காலச் சோழன் முதலாம் குலோத்துங்கனின் அரசவைப் புலவர். சோழனது கலிங்க வெற்றியையும், வீர தீரத்தையும் சைவப் புகழையும் பரணியாகப் பாடியவர். செயங்கொண்டார் சமணர் என்று மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதினாலும் பரணி பாடிய போது சமணராக இல்லாமல் சைவராக மாறியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.
கலிங்கப் போரில் தோல்வி கண்ட கலிங்கப் படை வீரர்கள் புதரில் சிக்குண்டு பாதித் தலைமயிர் பிய்ந்து போன நிலையில் மீதியையும் தாங்களாகவே பிய்த்துக் கொண்டு நாங்கள் கலிங்க வீரர்கள் இல்லை; அமணர்கள் என்று பொய் சொல்லி சோழப் படைகளிடமிருந்து தப்புவதாக கலிங்கத்துப் பரணியில் பின்வரும் பாடல் வழி நமக்கு தெரிய வரும் போது அன்றும் இன்றும் போரின் விளைவுகள் நம் மனத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.
“வரைக் கலிங்கர் தமைச்சேர மாசையயற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும்வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கரெல்லாம்
அமணரெனப் பிழைத்தாரும் அநேகராங்கே!”
- கலிங்கத்துப் பரணிப் பாடல்.
உண்ணாநோன்பு இருந்து உயிர் துறத்தல் சமணப் பழக்கமாகும். இதற்கு வடக்கிருத்தல் (சல்லேகனை) என்று பெயர். தாங்க முடியாத மனவேதனை தரும் இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு உடைய காலத்தில் சல்லேகனை (வடக்கிருத்தல்) செய்து உயிர்விடுதல் சமணர் மரபு. தீர்த்தங்கரர்கள் வீடு பேறடைந்த வடதிசையை புண்ணிய திசையாக அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பத்திரபாகு, கவுந்தியடிகள் போன்ற சமயப் பெரியோர் மட்டுமல்லாது, கபிலர், சேரமான் பெருஞ்சேரலாதன், கோப்பெருஞ்சோழன் உடன் பிசிராந்தையார் மற்றும் பொத்தியார் போன்றோர் வடக்கிருந்து உயிர் துறந்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன. சமணக் கொள்கை அக்காலத்தில் பெற்ற செல்வாக்கை இது எடுத்துக்காட்டுகிறது. அகிம்சை, ஊன் உண்ணாமை போன்ற சமணக் கொள்கைகளை சமணத்தை அழித்து இந்து மதம் ஏற்றுக் கொண்டது வியப்பான ஒன்றாகும். தீபாவளிப் பண்டிகை சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகையாகும்.
தீபம் + ஆவலி = தீபாவலி ( தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை). மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்ததால் விடியற்காலையில் நீராடிப் பின்னர் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடுவது வழக்கமானது. சமணம் வீழ்ந்த பிறகு இந்துக்களாக மாறிய சமணர்கள் தொடர்ந்து கொண்டாடிய இப்பண்டிகைக்கு இந்துக்கள் பிற்காலத்தில் நரகாசுரன் கதையைப் புனைந்து கொண்டனர் என்பது தெளிவாகிறது. சிவராத்திரியையும் சமணர் கொண்டாடுகின்றனர். திருக்கயிலாய மலையில் ஆதிபகவன் வீடு பேறடைந்தது மாசி சிவராத்திரி ஆகும்.
பல்வேறு இறுக்கமான கொள்கைகளையுடைய சமணம் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்படைய காரணம் உண்டு. வைதீக இந்து மதம் நால் வருணக் கோட்பாட்டின் மூலம் உயர்வு - தாழ்வு கற்பித்தது. மேலும் உழவுத்தொழிலை இழிவானதாக்கி அதில் ஈடுபடுவோரை ஒதுக்கி வைத்தது. மாறாக, சமணம் பிறப்பால் உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க் கொலை செய்யும் தொழில்களைத் தவிர்த்த பயிர்த் தொழில் போன்ற பிற தொழில்களைப் போற்றியது.
அதனால் பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமணத்தைப் பின்பற்றினர். சமணத் துறவிகள் ஊர் ஊராகச் சென்று தம் சமயத்தை போதிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். சமண முனிவர் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர். இதுவும் தமிழகத்தில் சமணம் பரவக் காரணமாக அமைந்தது.
பவுத்தமும், சமணமும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்தனர். கொலை மற்றும் புலால் உண்ணுதலை அறவே தவிர்த்தனர். மக்களிடையே உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை. ஆனாலும் இந்த இரண்டு மதங்களும் தங்களுக்குள்ளாக சண்டையிட்டு வந்தன. இவை மட்டுமல்லாது ஆசீவகம், ஆருகதம் (சமணம்), வைதீகம், பவுத்தம் ஆகிய நான்கும் ஒன்றையயான்று பகைத்து வந்தன. இந்த சமயப் போர்கள் பண்டைக் காலம் தொட்டு நடைபெற்றன. இந்த வட நாட்டு மதங்கள் குறிப்பாக சமணம், பவுத்தம் தென்னாடு வந்த பிறகும் இவற்றிற்கிடையேயான போர் நின்றபாடில்லை.
பண்டைக்காலத்தில் தமிழர்கள் ‘திராவிட’ (தமிழ்) மதத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள். முருகன், கொற்றவை, சிவன், திருமால் போன்ற தெய்வ வழிபாட்டை திராவிட (தமிழ்) மதமென மயிலை.சீனி.வேங்கடசாமி வரையறுக்கிறார். வைதீகப் பிராமணர்களின் உயிர்ப் பலியிடுதலுக்கு நிகராக திராவிட சமயத்தாரும் முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழிகளைப் பலியிட்டனர். அன்றைய வைதீக மதம் சைவம், வைணமாக பிளவுபடவும் இல்லை.
இந்த நிலையில் இங்கு வந்த பவுத்தமும் சமணமும் மக்களிடையே பேராதரவு பெற்ற நிலையில் களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் அரச மதமாகவும் இருந்தபடியால் சிறப்பான வளர்ச்சிப் பெற்றது. களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு பவுத்த, சமண சமயங்களும் வீழ்ச்சியுறத் தொடங்கின.
கி.பி. 7, 8, 9ஆம் நூற்றாண்டுகளில் வைதீக மதப் பிரிவான சைவமும் வைணவமும் தழைத்தோங்க பக்தி இலக்கிய காலகட்டம் பெரும்பங்கு வகித்தது. இக்கால கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான சமயப் போர்களின் விளைவாக பவுத்தமும் சமணமும் தமிழகத்திலிருந்து முற்றிலும் மறையும் நிலையை அடைந்தது.
சமணம் vs பவுத்தம்; இந்து vs பவுத்தம்; இந்து vs சமணம் ஆகிய மும்முனைப் போராக அன்றைய சமயப் போர் இருந்தது. வைதீக இந்து மதப் பிரிவான சைவமும் வைணவமும் இணைந்து சமண, பவுத்தத்தை எதிர்த்து நின்றது. அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் கூட தங்களுக்குள்ளாக போரிடக்கூடிய சூழல் அக்கால கட்டத்தில் இருந்தது. சமணம் வேதங்களை முற்றிலுமாக மறுத்தது. பவுத்தம் அவ்வாறு இல்லை.
கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் கொல்லுதல் என்பதாக சமணத்திற்கெதிரான போரில் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. சமணர், சாக்கியர் தலையை அறுப்பது பற்றி தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடல் பேசுகிறது.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) சமணர்களைக் கழுவேற்றிய செய்தியை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.
காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது. அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோழ நாட்டில் சீர்காழி பழையாறையில் நடைபெற்ற சைவ - சமணப் போரில் யானைகளைக் கொண்டு சமணர்களை மிதித்துக் கொன்றதாக வரலாறு.
திருவாரூரில் நடந்த சைவ - சமண கலகம் பற்றி பெரியபுராணப் பாடல் வழியே அறிய முடிகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகள் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்கு மிகுந்திருந்தது. கமலாலயம் எனப்படும் திருக்குளம் மிகச் சிறியதாகவும் அதனைச் சுற்றி நான்கு பக்கமும் சமணர்களின் சொத்துக்கள், பள்ளிகள், பாழிகள், மடங்கள் நிறைந்திருந்தன. குளத்தைப் பெரிதாக்க தண்டியடிகள் விரும்புகிறார். வழக்கம் போலவே சிவபெருமான் அரசன் கனவில் வந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்த சமணர்களை ஓடத் துரத்திய பிறகு சமணப் பள்ளிகள், மடங்கள், பாழிகள் ஆகியவற்றை இடித்து குளத்தை விரிவுப்படுத்திய செய்தியை கீழ்க்கண்ட பெரியபுராணப் பாடல் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.
“அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர்தம்
சொன்ன வண்ண மேஅவரை ஓடத் தொடர்ந்து துரந்தற்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அடிபடிந்தான்”.
சைவ - வைணவர்கள் பல்வேறு புனை கதைகளை உருவாக்கி அவற்றை சமணர்கள் மீது போட்டு பழி சுமத்தினார்கள். “போம்பழியயல்லாம் அமணர் தலையோடே”, என்ற பழமொழி இதற்குத் தகுந்த உதாரணமாகும்.
மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ளது யானைமலை. இம்மலை பார்ப்பதற்கு யானை படுத்திருப்பது போல் தோன்றுவதால் அப்பெயர் பெற்றிருக்கலாம். இங்குள்ள குகைகள் சமணர் வாழ்ந்த இடமாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் இங்கு காணப்படுகின்றன. இவைகள் போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து காணப்படுகிறது.
இங்குள்ள சமணர்கள் அழித்தும், விரட்டியும் வைணவர்கள் நரசிங்கப்பெருமாள் கோயில் அமைத்தனர். அத்துடன் சமணர்கள் மதுரையை அழிக்க மந்திரத்தால் யானையை உண்டாக்கி அனுப்பியதாகவும் அந்த யானையை நரசிங்கப்பெருமாள் (விஷ்ணு) அம்பெய்து கொன்றவுடன் அது கல்லாக சமைந்து போனது என்று புராணக் கதை செய்தனர்.
இன்று இந்த யானை மலையை, தஞ்சை மாவட்ட பெருந்தச்சர் அவையத்தின் ஸ்தபதி அ.அரசு என்பவரின் குடவரைக் கோயில் மற்றும் சிற்ப நகரம் அமைக்கும் செயல் திட்டத்தை ஆராய டிசம்பர் 2009-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. அப்பகுதி மக்கள் திரண்டு போராடியதையடுத்து பிப்ரவரி 2010-ல் அரசு வெளியிட்ட அரசாணைப்படி சிற்ப நகர முடிவை கைவிடுவதாக அறிவித்தது.
இந்த யானை மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் காணப்படுவதோடு வடமொழி, கிரந்த மற்றும் தமிழ் வட்டெழுத்துக்களும் காணப்படுகின்றன. சமணர்கள் வாழ்ந்த குகைகள், படுக்கைகள், ஓவியங்கள், சிற்பங்கள் என பலவற்றை இங்கு காண முடியும். மகாவீரர், பார்சுவநாதர் போன்றோருடைய புடைப்புச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு நரசிங்கப் பெருமாள் கோயில் கி.பி.77-ல் உருவாக்கப்பட்டது. இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் யானை மலை சரியான பராமரிப்பு இன்றி கல்குவாரிகள் மூலம் உடைப்பு வேலைகளும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. எஞ்சியிருக்கும் யானை மலையின் மிச்சமும் பெருந்தச்சர் அவையத்தின் கோரிக்கை மூலம் தகர்ந்து போகவிருந்தது, இப்பொழுது மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வேறு வடிவில் இத்தகைய கோரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது. சிற்ப நகரத்திற்கு செலவு ரூ. 1500 கோடி. அதன் மூலம் கிடைக்கும் கிரானைட் கற்கள் மூலம் ரூ.5000 கோடி வரை வருமான கிடைக்கும் என்பதே இதற்குக் காரணமாகும். அன்று சமணர்களுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு எற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இன்றும் இருக்கிறது.
சோழர் தலைநகரான உறையூர் (திருச்சி) மணற்புயலால் அழிந்து போக சமணர்களின் மந்திரசக்தியால் அழிந்ததாக கதை சொல்லப்பட்டது. சோழன் மீது கோபங்கொண்ட சிவன் மண்மழை பெய்வித்ததாக பிற்காலத்தில் மற்றொரு கதையும் புனையப்பட்டது. உறையூர் மணற் புயலால் அழிந்தது உண்மை. அப்பழி சமணர் மீது வைப்பதன் காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இம்மாதிரியான சமயப் போர்களின் விளைவாக சமணர்கள் உயிருக்கு பயந்து சைவ - வைணவ சமயத்தில் இணைந்தனர். கூடவே தமது சமயக் கொள்கைகள், பழக்கவழக்கங்களை இந்து சமயத்தில் புகுத்தினர். ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு போன்ற பழக்கங்கள் இவ்வாறாகவே வைதீக இந்து மதத்தை வந்தடைந்தன.
நீலகேசி, சீவகசிந்தாமணி, திருக்கலம்பகம், திருக்குறள் போன்றவை சமண சமய நூல்களாகும். திருக்குறளில் வரும் ஆதி பகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற சொற்கள் சமண மதம் சார்ந்தவை. முதலாவது தீர்த்தங்கரர் விருபதேவரின் மற்றொரு பெயரே ஆதி பகவன் என்பதாகும். அன்று பாடலிபுரம் என்றழைக்கப்பட்ட திருப்பாதிரிப்புலியூர் சமண மடத்தின் தலைவராய் இருந்த ஆச்சார்ய சிரீ குந்த குந்தர் எழுதிய நூல் திருக்குறள் என சமண சித்தாந்தம் சொல்கிறது. தமிழக ஓவியர் வேணுகோபால் சர்மா என்பவர் வரைந்த ஒரு ஓவியத்தைத் திருத்தங்கள் செய்து திருவள்ளுவர் உருவம் அரசால்அறிவிக்கப்பட்டது நமக்கெல்லாம் தெரியும்தானே! மணக்குடவர், காலிங்கர் போன்ற உரையாசிரியர்கள் தவிர பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள் அனைவரும் திருக்குறளுக்கு சைவ உரையே எழுதி வந்துள்ளனர்.
இனி தீபங்குடி சமணப்பள்ளிக்கு வருவோம். பல்வேறு வகையான சமயப் போர்களுக்கிடையே இப்பள்ளி நிலைத்திருப்பது வியப்பாக உள்ளது. நாம் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்ல முடியும்.
இன்று இக்கோயில் சமணப் பள்ளி என்று அழைக்கப்படுவதில்லை. தீபநாயகசுவாமி திருக்கோயில் என்றே சொல்லப்படுகிறது. இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில்தான் தற்போது உள்ளது. எண்கள் கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் உள்ளது.
இக்கோயில் பார்ப்பதற்கு சைவ, வைணவக் கோயில்களைப் போலவே உள்ளது. இங்கு நடைபெறும் அர்ச்சனை, அபிஷேகம், பூசை போன்றவை சைவ, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போலவே உள்ளது. சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு அர்ச்சகராகப் பணியாற்றும் திரு.பார்சுவநாதன் அபிஷேக முறையில் மாற்றம் இருப்பதாகத் தெரிவித்தார். சைவ - வைணவக் கோயில்களைப் போல எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுவதில்லை என்றும் தண்ணீர், பால், சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் இருக்கும் என்றும் தெரிவித்தார். அட்சய திருதியை, ஆடிவெள்ளி, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் சொன்னார்.
இவர்கள் திகம்பரச் சமணர் (ஆடையில்லாதவர்) ஆதலால் அருகக் கடவுள் உருவங்கள் ஆடையின்றியும் சாஸ்தா, இயக்கி போன்ற பரிவாரத் தெய்வ உருவங்கள் ஆடையுடனும் அமைக்கப்பட்டுள்ளன. சமணக் கடவுளரின் உருவங்கள் அமர்ந்த அல்லது நின்ற வண்ணமே அமைக்கப்படுகின்றன. பவுத்த, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போன்ற படுத்த வண்ணம் அமைந்த பள்ளிகொண்ட காட்சிகளை சிற்பமாக அமைக்கும் வழக்கம் சமணத்தில் இல்லை.
தீபங்குடி கோயிலுக்கு முன்னால் ஒரு மடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சமண முனிவர்கள் தங்கிய மடமாகவும் அல்லது அன்னசத்திரமாகவும் இருந்திருக்க வேண்டும்.
மார்வாடிகள் என்று அழைக்கப்டும் வடநாட்டுச் சமணர்கள் வியாபாரிகளாக செல்வச் செழிப்புடன் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள சமணர்கள் மிகுந்த ஏழைகளாகவே உள்ளனர். இங்குள்ள 10 குடும்பங்களும் மிகச் சாதாரணமாக உள்ளன. இவர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்வதோடு அவர்களைப் போலவே பூணூலும் அணிகிறார்கள். சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்கிறார்கள். புலால் உண்ணுவதில்லை. இரவில் உண்ணாமல் சூரியன் மறைவதற்கு முன்பாக உண்ணுகின்றனர்.
சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இவர்களுக்கு பிற்பட்ட வகுப்பாருக்கு உள்ள சலுகைகள் கிடைப்பதில்லை. முற்பட்ட வகுப்பு என்றே சாதிச் சான்று தமிழக அரசால் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கோயில் அர்ச்சகருக்கு வெகு சொற்ப ஊதியமே கிடைக்கிறது. ஆனால் இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
பழமையான இக்கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை. இப்போது இருக்கும் கல்வெட்டுக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு 27.07.1990ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது வைக்கப்பட்டதுதான். பழங்கால கல்வெட்டுக்கள் எதையும் உள்ளே காணமுடிவதில்லை. காரணம் குடமுழுக்கு, திருப்பணி என்ற பெயர்களில் புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் மீது வண்ணம் பூசுவதும், கல்வெட்டுக்களை அதன் தொன்மையைப் பற்றி ஏதுமறியாமல் உடைத்தெறிவதையும் வழக்கமாக உள்ள நாட்டில் ஆதாரங்களை தேடுவது கடினமான பணியாகும். பழந்தமிழ் ஓலைச் சுவடிகளின் பெருமை புரியாமல் வெந்நீர் போடுவதற்குப் பயன்படுத்தியதைப் போலத்தான் இதுவும்.
கோயிலின் அமைப்பு, நிலை ஆகியவற்றைப் பார்க்கும்போது அதன் தொன்மை நமக்குப் புலப்படுகிறது. இதனுடைய காலத்தைச் சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கோயிலின் தொன்மை, அங்கு இன்னும் வாழ்கின்ற சமணர்கள் ஆகியவற்றைக் கொண்டு நோக்கும்போது களப்பிரர் காலத்தைச் (கி.பி.250-கி.பி.600) சேர்ந்ததாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது.
இப்பள்ளி சமயப் போர்களில் அழிந்து போகாமல் எஞ்சியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வைதீக மதங்களான சைவம் மற்றும் வைணவத்துடன் ஒத்துப்போகும் மனநிலை காலப்போக்கில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. சமணராக இருந்து சைவராக மாறிப் போன ஜெயங்கொண்டார் போன்ற இவ்வூர் பெரியவர்கள் களப்பிரர்களுக்குப் பின்னால் வந்த அரசர்களிடமும் சைவ, வைணவ மதங்களிடமும் ஓர் இணக்கமான உறவைப் பேணியிருக்கவும் கூடும் என்று நம்ப வரலாற்றில் இடமிருக்கிறது.
துணை நின்ற நூல்கள்:
01. சமணமும் தமிழும் - பூம்புகார் பதிப்பகம்
02. பெளத்தமும் தமிழும் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
03. களப்பிரர் காலத் தமிழகம் - (அ.மார்க்ஸ் அவர்களின் நீண்ட பின்னுரையுடன்) விடியல் பதிப்பகம்
(மேற்கண்ட மூன்று நூல்களும் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டவை)
04. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில்: வெ. கிருஷ்ணமூர்த்தி
05. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில்: கண. முத்தையா
06. பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி
தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
07. மாயையும் எதார்த்தமும் - டி.டி.கோசாம்பி
தமிழில்: வி.என்.ராகவன்
08. சொல்வதால் வாழ்கிறேன் - அ. மார்க்ஸ்