ஞாயிறு, நவம்பர் 14, 2010

பெயர் /விளம்பரப் பலகைகளில் தமிழ்

பெயர் /விளம்பரப் பலகைகளில் தமிழ்.
                                                                                        -மு.சிவகுருநாதன்.                                                                       





சென்னை மாநகராட்சியில்  விளம்பரபலகை மற்றும் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு ஆங்கங்கே தமிழ் எழுத்துக்களைக் காணமுடிகிறது.சில தனித்தமிழ் மொழியாக்கங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்   இதுவரையில் தமிழில் எழுதப்படாத பல பன்னாட்டு நிறுவனகளின் பெயரைத் தமிழில் காணும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நிறைய      நிறுவனங்களின்   பெயரைப்  நிறுவனங்களின் பார்க்கும்போது எப்படி உச்சரிப்பது என்பதுகூட தெரிகிறது. 

வலிந்து திணிக்கப்பட்ட சில தமிழ்ப் பெயர்கள் நகைப்பிற்கிடமாக உள்ளதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலப்போக்கில் பயன்பாட்டில் புதிய சொல்லாக்கங்கள் புழக்கத்தில் வருவதற்கு இது வழிவகுக்கும். இந்த நடவடிக்கையை எடுத்துள்ள மேயர் மா.சுப்ரமணியனின் செயல் பாராட்டுக்குரியது.இச்செயல்பாடு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் எல்லாவற்றிலும் நடைமுறைக்கு வரவேண்டும்.

மத்திய அரசின் துறைகளில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெறவேண்டும் என்ற கொள்கை பல நேரங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் மைல்கற்கள் தமிழில் இல்லை என்பது அடிக்கடி பேசும் விஷயமாக உள்ளது. மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழி, இந்தி,ஆங்கிலம் ஆகிய மூன்றும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மரபு.ஆனால் பல நேரங்களில் இம்முறை பின்பற்றப்படுவதேயில்லை. இவை குறித்து மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அதற்க்குச் செல்லும் இரு வழிகளில் ஒன்றில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் பெயர்ப்பலகையும்   மற்றொரு வழியில் தமிழில் மட்டும் ஒரு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது.உள்ளேயும் தனித்தனியேதான் பெயர்ப்பலகைகள் வைத்திருக்கிறார்கள்.  (படம் காண்க.)



ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் தமிழையும் இடம் பெறச் செய்வதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை? பொருளாதாரச்சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. தமிழ் மற்ற இரு மொழிகளுடன் இடம் பெறுவதை வேண்டுமென்றே தவிர்க்க நினைப்பது புரிகிறது.

தமிழ்   அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழ் தவிர இதர மொழி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு.நாம் தமிழ் தவிர இதர மொழிகளில் எழுதவேண்டாம் என்று சொல்லவில்லை. 

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை உரிய முக்கியத்துவம் அளித்து எழுத வேண்டியது அவசியம். மாநில அரசு இது குறித்து மத்திய அரசு அலுவலங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். "தமிழ் வாழ்க " என்று தமிழகமெங்கும் பல்லாயிரம் யூனிட் மின்சாரத்தை வீணாக்குவதைவிட  இது பயனுள்ள வேலையாகும்.    மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பிராந்திய மொழிகளை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக