சனி, நவம்பர் 13, 2010

யூனிகோடு கன்சார்ட்டியம் (UNICODE CONSORTIUM) அல்லது கனிமொழி தமிழறிஞராகவும் அரவிந்தன் கணினித்தமிழ் வல்லுனராகவும் மாறிய கதை.

யூனிகோடு  கன்சார்ட்டியம் (UNICODE CONSORTIUM) அல்லது கனிமொழி தமிறிஞராகவும் அரவிந்தன் கணினித்தமிழ்  வல்லுனராகவும் மாறிய  கதை.                                                                                                                                                                                                              -மு.சிவகுருநாதன்  

வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை யூனிகோடு கன்சார்ட்டியம் 
(UNICODE CONSORTIUM) என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சேர்ப்பது  தொடர்பான முடிவை தமிழறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக 07.11.2010 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியானது.
  
இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதிஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர் கூட்டிய கூட்டத்தில், நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் கா.பொன்முடி , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி , எழுத்தாளர் து. ரவிக்குமார்(வி.சி) எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் (!?) கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும்  அச்செய்தி சொன்னது.
ஒரு முன் கதை சுருக்கம்:


 உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும்கொண்டு  உருவாக்கப்பட்ட யூனிகோடு  (Unicode)  என்ற  ஒருங்குறி முறை ஒரு கணினி எழுத்து குறியீட்டு முறை எனலாம் . தமிழ் யூனிகோடை  செம்மொழி மாநாட்டின் போதுதான்   தமிழக அரசு அங்கீகரித்து   முறையான அறிவிப்பை வெளியிட்டது.வெவ்வேறு எழுத்துருக்களை பயன்படுத்தும் நிலை  மாறி, யூனிகோடு எழுத்துருவின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த முறையைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த 'யூனிகோடு கன்சார்ட்டியம்' (unicode consortium ) என்ற அமைப்பு செயல்படுகிறது.இந்த 'யூனிகோடு கன்சார்ட்டியம்' (unicode consortium )  என்பது பன்னாட்டு நிறுவனம்.இதில் தனி நபர்கள் மற்றும் அரசுகள் அங்கத்தினராக இருக்கின்றனர்.

இந்நிறுவனத்தில் வாக்குரிமை பெற்ற உறுப்பினராக   இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  உள்ளது.இந்த முறையில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.  தமிழ் எழுத்துக்களுக்கு யூனிகோடில் 128 இடங்கள்தான்  கிடைத்துள்ளது.  அந்தஇடங்களைக்கொண்டு  247    தமிழ் எழுத்துகளையும் ஒருங்குறிக்குள்  (unicode  ) கணினி வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.  

புழக்கத்தில் இருக்கும் ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகளும்  தமிழ் எழுத்துகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்  247   தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ்க்  கணினி வல்லுநர்கள் "யூனிகோடு கன்சார்ட்டியம்"  (unicode consortium )அமைப்பிடம் தொடர்ந்து  வேண்டுகோள் விடுத்து  வருகிறார்கள்.

2010 ஜூலை 10ஆம் நாள், ஸ்ரீ ரமண சர்மா என்ற நபர் ஒரு பரிந்துரையை "யூனிகோடு கன்சார்ட்டியம்" (unicode consortium ) அமைப்பிடமும் இந்திய அரசிடமும்   சமர்ப்பித்துள்ளார். அதில்   26 கிரந்த எழுத்துகளைச் நீட்சித்தமிழ் 
(EXTENDED TAMIL ) என்ற பெயரில்  சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இது
மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கும்  அனுப்பப்பட்டது .  


தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையிலானஇந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  2010   செப்டம்பர் 6-ம் நாள் கிரந்த மற்றும்   புலவர்கள் 14 பேர்க் கொண்டு  நடத்தப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக  ஒருங்குறி ஆணையத்துக்கு(unicode consortium ) இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ளது.


அக்கூட்டத்தில் கலந்துகொண்ட  14 பேர்களில்  ஒருவரான  ஸ்ரீ ரமண சர்மா காஞ்சி சங்கரமடத்தைச்  சேர்ந்தவர்.ஆ.ராசா தலைமையிலானஇந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  என்ன மாதிரியான முடிவை அனுப்பியுள்ளது என்று தெரியவில்லை.


 03.11.2010 இல்  கூடிய தமிழறிர்கள் ,  "ஒருங்குறி (unicode ) எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமஸ்கிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்". எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் .


03.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 அறிஞர்கள்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்களாம் .17 அறிஞர்கள்  யார் என்ற விவரம் தெரியவில்லை.


அவர்கள் புதிதாகச் சேர்க்க விரும்பும்  கிரந்த ஒருங்குறி(unicode  ) எழுத்துப் பட்டியலில் "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய ஐந்து தமிழ்  எழுத்துகளைச் சேர்ப்பதனால் ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய தகுந்த கால அவகாசம் வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை. 


04.11.2010 அன்று மாலை பேராசிரியர் ஆனந்தகிருட்டிணன் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டு முதல்வர் தமிழுக்காக   தீபாவளி கூட கொண்டாடாமல்  இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட  தமிழ் அறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் நிரம்பிய மேற்படி கூட்டம் நடந்ததாக அறிகிறோம்.


 நவ.06   இல் "யூனிகோடு கன்சார்ட்டியம்" (unicode consortium ) அமைப்பு  யூனிகோடில் தமிழுக்கான  கூடுதல்  இடம் குறித்த முடிவை  வரும்    பிப்ரவரி 26  (2011) க்கு    தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நமக்கு நிறைய அய்யங்கள் எழுகின்றன.


மூன்று மாத காலமாக இப்பிரச்சினை குறித்து தி.மு.க. வின் மத்திய அமைச்சர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஸ்ரீரமண  சர்மா  உள்ளிட்ட 14 அறிஞர்கள் (?!) அளித்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது? ஸ்ரீரமண சர்மாவில்  கோரிக்கை வழி மொழியப்பட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை 

.யூனிகோடு (unicode) என்ற ஒழுங்குரியமைப்பில் தமிழுக்கு அதிக இடங்களைப் பெற்றுத்தர ஆ.ராசாவின் தகவல் தொழில் தொடர்புத்துறை இதுவரை ஏன் முயலவில்லை? இந்தியாவில் பயன்படுத்தப்படுகிற 22  மொழிகளைத் தவிர கிரந்தம், சமஸ்கிருதம் உள்ளிட்ட வழக்கில் இல்லாத    மொழிகளுக்கு ஒருங்குறியில் (unicode  ) இடமளிக்க முயலும் போது தமிழுக்கான இடத்தை அதிகரிக்கக் கேட்பதில் என்ன தவறு?

தமிழோடு கிரந்தம் நெருங்கிய தொடர்புடையது.இந்நிலையில் இது பற்றி விவாதிக்க அழைக்கப்பட்ட 14 பேரில் ஏன் தமிழறிஞர்கள் இல்லை? இது ஆ.ராசாவுக்கு தெரியமா? தெரியாதா? தெரியாதென்றால்   அவருக்கு எதற்கு அமைச்சர் பதவி?

ஒரு பக்கம் தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டுள்ள தனித்தமிழ்வாதிகள் ஏற்கனவே தமிழில் ஏற்கப்பட்டுள்ள ஜந்து கிரந்த எழுத்துக்களை ஏற்க மறுத்து வருகின்றனர். இது நியாயமற்றது. மாறி வரும் சூழலுக்குத் தகுந்த வகையில் மொழியில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. தனித்தமிழ்வாதிகளை பாசிச மனநிலையையும் தூய்மைவாதத்தையும் நாம் ஏற்க முடியாது.

ஆனால் தமிழுக்கான ஒருங்குறி (unicode) இடம் போதாத நிலையில் தமிழ் எழுத்துக்களை கிரந்த எழுத்துருவுடன் இணைப்பதையும், அதற்கான இடத்தை தமிழிலிருந்து அளிப்பதை எதிர்ப்பது நியாயமானதே. யூனிகோடு கன்சர்ட்டியத்திற்கு (unicode consortium ) உரிய பரிந்துரைகள் செய்ய வேண்டிய ஆ.ராசாவின் துறை சில மொழி விரோதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிருப்பதாகத் தோன்றுகிறது.

மத்திய அரசின் நிலைதான் இப்படியென்றால்      மாநில அரசின் களம் தாழ்ந்த செயல்பாடு வருத்தத்தை அளிக்கிறது.. யூனிகோடு கன்சர்ட்டியம் (unicode consortium )முடிவெடுக்க சில நாட்கள் இருக்கும்  முன்பு பலரது வேண்டுகோளால் விழித்துக் கொண்ட தமிழக அரசு உரிய துறை வல்லுனர்களையும் தமிழ் மற்றும் பிறமொழி அறிஞர்களையும் கொண்டு வெளிப்படையான விவாதம் செய்யாமல் ஏதோ ஒரு ரகசியக் கூட்டம் போட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவு முதல்வர் தலைமையில் கூடிய ஒரு அறிஞர் (?!) குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவது என்ற நிலையுடன் முடிந்திருக்கிறது.

தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து  கொண்டவர்கள் பற்றிய விவரம் இல்லை. முதல்வர் தலைமையில் கலந்து கொண்ட அறிஞர்களில் வைரமுத்து, கனிமொழி, து.ரவிக்குமார், கனிமொழியின் கணவர் அரவிந்தன் (சிங்கப்பூர் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒரு உயர்மட்ட அறிஞர் குழு அமைக்கப்போவதாகவும் அறிவிப்பு உள்ளது. அதிலும் மேற்கண்டவர்கள் இடம் பெற வாய்ப்பு மிக அதிகம்.

மேற்கண்ட நபர்கள் தமிழுக்கும், கணினி தொழில் நுட்பத்திற்கும் ஆற்றிய பங்கு பணிகள் என்ன? இவர்களைத் தமிழறிஞர்கள் என்றும் கணினித்தமிழ்  தொழில் நுட்பவல்லுனர்கள் என்று அரசு நற்சான்று வழங்கக் காரணம் என்ன? தமிழ் தொடர்பான கணினி நுட்பத்திற்கும் தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கும் பணியாற்றுகின்ற அறிஞர்கள் தமிழகத்தில் அல்லது அயலகத்தில் இல்லையா? ஏன் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள  அரசு மறுக்கிறது?      உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தஞ்சை பெரிய கோவில் -1000  வது ஆண்டு விழா  மற்றும் தமிழ், வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், கலை போன்ற எந்தத் துறையாயினும் அமைக்கப்படுகின்ற குழுக்களில் இவர்களுடைய பெயர் இல்லாமல் இருப்பதில்லை. 

முதல்வருக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என்ற ஒரே தகுதியை  விட இவர்களுக்கு வேறு எந்தத் தகுதியும்  குறிப்பிட்ட பிரிவில் இல்லை என்பதே உண்மை. இவர்களை அறிஞர்கள், வல்லுநர்கள் என்று அழைப்பதையாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வெற்று    ஆரவாரக் கூச்சல்கள் மூலம் தமிழ்ப் பெருமை பேசி வருகின்ற தி.மு.க. மற்றும் இதர திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழையும் அதன் அறிவுலகத்தையும் மிகவும் துச்சமாக மதித்து இலக்கியம், வரலாறு போன்றவற்றில் புனைவுகளை உருவாக்கி போலியான அறிவு ஜீவி கும்பலை உலவ விடுவதை கண்டிக்காமல் இருக்க முடியாது.         
1 கருத்து:

thiru சொன்னது…

அன்புள்ள திரு சிவகுருநாதன்,
<>என இப்பொழுது சிலர் புறப்பட்டு மொழிச்சிதைவிற்குக் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். நீங்களும் அதில் சேர வேண்டுமா? நாம் பயன்படுத்தும் உணவு, பிற பொருள்களில் தூய்மையை வேண்டும் நாம், கலப்படமற்ற தன்மையை வேண்டும் நாம் மொழியில் மட்டும் கலப்படம் இருக்க வேண்டும்
என்று சொல்வது எந்த வகையில் முறையாகும். தமிழ் மொழி அயல் எழுத்துகளாலும் அயற் சொற்களாலும்தானே சிதைவுற்றுத் தான் வழங்கிய பரப்பில் புது மொழி உருவாகித் தன் பரப்பைச் சுருக்கிக் கொண்ட துயரம் நிகழ்ந்துள்ளது. உணவுப் பொருள் கலப்படமில்லாமல் தரப்பட வேண்டும் என்றால் பாசிச மனநிலை என்று சொல்வீரகளா? எனவே, நன்கு ஆய்ந்து மொழிக் கலப்பால் தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளை உணர்ந்து நீங்கள் பிற மொழியும் பிற மொழி எழுத்துகளும் தமிழில் கலப்பதைத் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துரையிடுக