செவ்வாய், நவம்பர் 09, 2010

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்                      -மு.சிவகுருநாதன் 
(அ.மார்க்ஸ்-ன்   "மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சத்தியமே"    என்ற குறு நூல்  குறித்த விமர்சனம் )             முக்கியத்துவம் வாய்ந்த சமகால நிகழ்வுகள் குறித்த தமது பார்வைகளை உடனே முன்வைக்க என்றுமே அ.மார்க்ஸ் தயங்கியதில்லை . அந்த வகையில் "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு " குறித்த இக்குறுநூல்  "பயணி " பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  

             நாடு விடுதலை அடைந்து  63 ஆண்டுகள் ஆன பிறகும் கூட சாதிய கட்டுமானம் மிகவும் வலுவடைந்து இறுக்கமான ஒன்றாக மாறியுள்ளது . "ஜாதி ஒன்றும் தேசிய அவலம் அல்ல " (பிரிய சாகல் - இந்தியா டுடே : மே, 26, 2010) என்றெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு இந்துத்துவ பிற்போக்கு சக்திகள் கூறிக் கொண்டிருக்கிற நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பு எதிர்ப்பிற்குப் பின்னாலுள்ள அரசியலை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது . அந்த வேலையை இந்நூல் செய்கிறது .


             1872 இல் ஹண்டரால்   முதல் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது . 1881 ரிப்பன் பிரபுவின் காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை இறுக்கமாக நெறிப்படுத்தப்பட்டது . அதிலிருந்து  1941 தவிர 10  ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.1931 இல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது . விடுதலைக்குப் பின்னர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை .

          2001 கணக்கெடுப்பில் 39  விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன . 2011 கணக்கெடுப்பில் சுமார் 50  தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன . மதம், மொழி போன்ற கேள்விகளுடன் சாதி உட்பிரிவு பற்றி மற்றொரு வினாவும் கேட்கப்படுவதை "சாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்வதே அபத்தம் "என்பதை அ.மார்க்ஸ் விளக்குகிறார்(பக்.16 ).

        சாதி என்ற வகையினத்தை ஒரு அலகாக சேர்ப்பதற்கு அரசு சிரமப்படத் தேவையில்லை.அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, வாக்குரிமை அளிப்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்ற வேலையில் இடம் பெயர்ந்த இந்தியர்களை கணக்கெடுப்பில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தையும் (பக். 34 ) வெளிப்படுத்துகிறார்.தற்போது கணக்கெடுக்கும்போது 45 நாள்களில் இங்கு இருப்போர் குறித்த விவரங்கள் மட்டுமே பதியப்படுகிறது .

       சாதியுணர்வு அதிகமாகும் ;சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றெல்லாம்  சாதிவாரி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பளர்கள் முன்வைக்கும் வாதங்களில் எவ்வித நேர்மையும் இல்லை.தலித்களில் உள்ஒதுக்கீடு போன்ற அம்சங்கள் நடைமுறைக்கு வரும்போது பிற வகுப்புகளிடமும் இத்தகைய கோரிக்கைகள் எழ வாய்ப்பு உள்ளது.அத்தகைய சூழலில்   சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் உணரப்படுகிறது.

         தமிழ் தேசிய இயக்கங்கள் சில சாதியைக் கேட்டால் தமிழன் என்று சொல் என பிரச்சாரம் செய்து வருகின்றன.மேலும் சில சாதி அமைப்புகள் பொதுப் பெயரில் தங்களது சாதிப் பெயரை பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றன.அதிலுள்ள உள்பிரிவுகள் எம்.பி.சி.,பி.சி.,போன்றவற்றில் இருக்கக்கூடும்.அந்த சாதி சங்கத் தலைவர்கள் அரசியல் பேரம் பேச மட்டுமே இது உதவியாக இருக்கும்.இது போன்ற சிக்கல்கள் இருப்பினும் சாதி வாரி கணக்கீட்டை மறுப்பது எவ்வகையிலும்  நியாயமாகாது.

         இக்கணக்கெடுப்பில் சாதி பற்றிய விவரந்தான் கேட்கப்படுமே தவிர அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமிருக்காது.
சாதிவாரி கணக்கெடுப்பில் எதிர்கொள்ளும் குளறுபடிகள், சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி அதற்கு தகுந்த விளக்கங்களுடன் சாதிவாரி கணக்கெடுப்பின் நியாயப்பாட்டை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்: 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சத்தியமே -
அ.மார்க்ஸ் 
பயணி வெளியீடு  
விலை:25  
முதற்பதிப்பு:2010  
216/332 -திருவெல்லிக்கேணி  நெடுஞ்சாலை , 
திருவெல்லிக்கேணி, 
சென்னை-600005  
செல்: 9445724576 
payanibooks@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக