சிவில் உரிமை இயக்கங்களின் அறவியல் முகம்
-மு.சிவகுருநாதன்
(டாக்டர் கே.பாலகோபால் :வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால் -தொகுப்பும் ,மொழியாக்கமும் :அ.மார்க்ஸ் -நூல் குறித்தான பார்வை )
"இந்தியாவில் மனித உரிமை இயக்கத்தைப் பொறுத்தவரை பாலகோபால் "வாராது வந்த மாமணி" .ஒரு சகாப்தம் ,இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தைக் கனக்கச் செய்துவிட்டு ,அவர் மறைந்துவிட்டார் . தன்னைப்பற்றி ஒரு கணமேனும் நினைத்திருந்தால் ,அவர் தன் உடலையும் உயிரையும் இப்படி அலட்சியம் செய்திருக்கமாட்டார்."
"என்னைவிட அவர் 12 வயது இளையவர் , எனினும் நான் என்னை அவருடைய கால் தூசாகவே கருதி வந்திருக்கிறேன் . அத்தகைய அறவியல் , மனித நேய ஆளுமையை இனி என் வாழ்நாளில் ஒரு போதும் சந்திக்கப்போவதில்லை."
-எஸ்.வி.ஆர்., உயிரெழுத்து, நவம்பர் 2009
"காந்தியைப்போல வன்முறையற்ற வழிமுறையை (அஹிம்சை) இந்தியச் சிந்தனை மரபிலிருந்து (குறிப்பாக சமணம் ) வரித்து அதற்கொரு ஆன்மிகப் பரிமாணத்தையும் பாலகோபால் அளிக்கவில்லை . காந்தி ஒரு கற்பனாவாதி ( utopian ) . ஆயுதங்களற்ற இராணுவம் , சிறைச்சாலைகள் அற்ற நாடு , தண்டனை வழங்காத நீதிமன்றங்கள் பற்றியெல்லாம் கனவு கண்டவர் . இந்தக் கனவுகளையெல்லாம் அடியாழத்தில் புதைத்துக்கொண்டு எதார்த்த அரசியல் தளத்தில் இயங்கியவர் , பாலகோபால் எதார்த்தத்தின் சிக்கல்களை முழுமையாகப் புரிந்துகொண்டு அத்துடன் ஒரு அறப்பரிமாணத்தை இணைக்க முயன்றவர் . அந்த வகையில் அவர் காந்தியைவிடக் கூடுதலான ஒரு எதார்த்தவாதி".
-அ.மார்க்ஸ்,தீராநதி, நவம்பர் 2009
எஸ்.வி.ஆர்., அ.மார்க்ஸ் ஆகிய இரு மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கருத்துக்கள் பாலகோபாலின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.
இந்நூலில் பாலகோபாலின் ஒரு கட்டுரை மற்றும் நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலகோபால் குறித்த நினைவுகளையும் வாழ்க்கை குறிப்பையும் அ.மா. தந்துள்ளார்.
ஆந்திராவில் APCLC - ல் செயல்பட்டு கருத்து முரண்பாட்டால் அதிலிருந்து விலகி, பின்னர் HRF ஐ 1998 ல் தொடங்குகிறார். 1989 -ல் ஆந்திர காவல் துறையால் கூலிப்படை "பிரஜா பந்து " வால் கடத்தப்பட்டு 3 நாட்கள் பிணையில் இருக்கிறார். அச்செய்தியை பத்திரிகைகள் அதிகம் எழுதிய போது கிராமங்களில் இதைவிட பெரிய மனித உரிமை மீறல்கள் தினந்தோறும் நடைபெறுகின்றன.அதில் கவனம் செலுத்துமாறு வேண்டியது அவரது தன்னலமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
மக்கள் இயக்கங்களின் பயனற்ற தன்மை,வறட்டுத்தனமான பார்வை போன்றவற்றை விமர்சனம் செய்து சிவில் உரிமை குறித்த அறவியல் அணுகுமுறையை கையாண்டவர். பெரிய அளவில் மக்கள் பங்கேற்க அமைதி வழி அணி திரட்டலை பரிந்துரைத்து அதன் சாதகங்களை பட்டியலிடும் போது அவரது போராட்ட வடிவங்கள் தூலமாகத் தெரிகின்றன.
"உடனடியான பொருளாதார மற்றும் சமூகக் குறிக்கோள் இல்லாத எந்த ஒரு இயக்கமும் விரிந்த மக்கள் இயக்கமாக மாறமுடியாது." என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். அரை குறையான ஜனநாயகம் நிலவும் நாட்டில் உடனடி பொருளாதரக் கோரிக்கைகள் வெகுசனத் தன்மை அடைய வேண்டுமானால், சிவில் உரிமை இயக்கங்கள் உழைக்கும் வர்க்கத்தில் பிறந்து அறிவுஜீவிகளாக மாறியுள்ள புதிய இளந்தலைமுறையை ஈர்க்க வேண்டும் என்கிறார்.
சிவில் உரிமை இயக்கங்கள் தலித்களை ஈர்ப்பதில் வெற்றி பெற்ற அளவிற்குப் பெண்களை ஈர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்று ஒத்துக்கொள்கிறார். ஒடுக்கு முறைகள் அதிகரிக்கும் போது புதியவர்கள் சிவில் உரிமை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படலாம் என்று நம்பிக்கை வைக்கிறார்.
தனது உடல்நிலையைக் கூட சரியாக கவனத்தில் கொள்ளாத பாலகோபாலின் பணிகள் மிகவும் அரிதானது. முன்னுரையில் அ.மா. குறிப்பிட்டுள்ளது போல் அவரது படைப்புக்கள் தமிழில் வெளிவர வேண்டும். மனித உரிமைப் பணி செய்வோர்க்கு அது அரிச்சுவடியாக அமையக் கூடும். பாலகோபாலை அறிமுகம் செய்வதில் இச்சிறு நூல் முழுமை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48
வெளியீடு :
மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR),
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை – 600020.
செல்: 9444120582.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR),
179'அ".மகாத்மா வீதி(மாடி) ,
புதுச்சேரி.-605001.
9894054640
peoples_rights@hotmail.com நூல் தயாரிப்பு /விற்பனை :
புலம்.
216/332 -திருவெல்லிக்கேணி நெடுஞ்சாலை ,
திருவெல்லிக்கேணி,
சென்னை-600005
செல் :9840603499
மின்னஞ்சல் :pulam2008@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக