புதன், நவம்பர் 10, 2010

நவீன ராஜராஜ சோழனாக ஏங்கும் மு.கருணாநிதி

நவீன ராஜராஜ சோழனாக ஏங்கும் மு.கருணாநிதி
                                                                                                                      -மு .சிவகுருநாதன்

                  

   கோவை செம்மொழி மாநாட்டு ஆரவாரங்களுக்குப் பிறகு தஞ்சாவூரில் பெரியகோயில்   ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடி மகிழ்ந்துஇருக்கிறது தமிழக அரசு.விழாவின்போது தஞ்சை எங்கும் தோரணங்கள்;அதில் பெரியகோயில் -ராஜராஜன்;பழைய தலைமைச் செயலகம் -மு.கருணாநிதி என படங்கள் மின்னின .புதிய தலைமைச் செயலகத்தை ஏன் போடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.ரொம்பவும் நியாயமான கேள்வி?தமிழ்நாட்டின் அவலம் இதுதான்.                                                        


                   எது  எப்படி இருப்பினும் இந்த மாதிரியான அபத்தக் கூத்துகளுக்கு மத்தியில் சோழ மன்னன் ராஜராஜனைப்போல தமிழக மன்னனாக மு.கருணாநிதியை அவரது உடன்பிறப்புகளும் இறுமாந்து ஏற்றுக்கொள்கின்றனர் .      இம்மாநாட்டில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு;அதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அயோத்தி தீர்ப்பை நேரடியாக விமர்சனம் செய்யாமல் கிண்டல் தொனியில் பேசியது போன்றவை    ராஜராஜசோழனாக மாற எத்தனிக்கும் அவரது மனப்போக்கை பிரதிபலிக்கிறது.

                முதல்வர் தஞ்சை மாநாட்டு நிறைவுரையில்  செம்மை நெல் என்றொரு நெல் ரகத்தை அறிமுகம் செய்வதாகவும் அதற்கு ராஜராஜன்-1000 என்று பெயர் சூட்டியும் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது IR-20  என்றொரு நெல் ரகம் உண்டு.அதைப்போல   RR-1000   (சுருக்கமாக இப்படிச்சொல்லியே நமக்கு பழகிவிடும்.) மற்றொரு நெல் ரகம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல.அது ஒரு சாகுபடி முறை.


                       ஆனால் இன்று வரை இந்த தவறுதலான அறிவிப்பிற்கு உரிய விளக்கம் அரசு தரப்பில் இல்லை.
ஆனால் சாலையோரமெங்கும் உடன் விளம்பரப் பலகைகள் வைத்தாயிற்று. தமிழக மன்னர் சொல்லிய சொல்லை மாற்றக் கூடாதல்லவா? எனவே ராஜராஜன் -1000 முறையில் நெல் சாகுபடி செய்வீர்! (படம் காண்க ) என்று ராஜராஜன் -1000 நெல் என்பதை பெரிய எழுத்திலும் முறையில் என்பதை மிகச் சிறிய எழுத்திலும் எழுதி விளம்பரம் செய்ய வேண்டிய அவலம் தமிழக வேளாண்துறை அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது .

மன்னராச்சே! சொன்னது சொன்னதுதான்! மாற்ற முடியுமா என்ன?    

                    தஞ்சை மாநாட்டுப்பணிகள்  தொடங்கப்பட்டதிலிருந்தே முதலாம் ராஜராஜன் சமாதி பற்றி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும், ராஜராஜன் சிலையை பெரிய கோயில் உள்ளே நிறுவவேண்டும் என தமிழ் தேசியர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் முதல்வர் பேச்சில் செம்மை நெல் @ ராஜராஜன் -1000 நெல் தவிர எந்த அறிவிப்பும் இல்லை. 


                   கருணாநிதியால் நிறுவப்பட்ட ராஜராஜன் சிலையை பெரிய கோவில் உள்ளே வைக்க இந்திய தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கதுதான். ராஜராஜன் சிலை என்ன, கருணாநிதி, இளவரசர்கள், இளவரசிகள் சிலைகளைக் கூட நிறுவிக்கொள்வதில் எமக்கெல்லாம் எவ்வித மறுப்பும் இல்லை.
                    

                                    பெரும் போராட்டத்திற்குப் பிறகு உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றி விட்டோம்  என்று பீற்றிக்கொள்ளும் இவ்வரசு (உத்தப்புரத்தில் அந்தப் பாதையை தலித்கள் இன்னும் பயன்படுத்த முடியாதது வேறுகதை.)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நுழைந்த வடக்கு வாசல் தீண்டாமைக் கதவை திறக்க செய்தது என்ன? 

                தமிழக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் இராம.பெரியகருப்பன் "ஆகம விதிகளை மீற முடியாது என்கிறார். என்ன மசுரு ஆகம விதிகள் என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும். 


           நீதிமன்ற ஆணையின் மூலம் கோயில் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகும் தீண்டாமை இழிநிலை தொடர்கிறது. ராஜராஜன் சிலையை உள்ளே வைப்பதோடு நந்தன் வாசலையும் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும்.


                              அயோத்தி நிலம் குறித்த அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பு செப். 30 ,2010  வெளியானது. அத்தீர்ப்பு இந்து மத நம்பிக்கைகள், புராணங்கள் போலியான தொல்லியல் ஆய்வு மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது நாடெங்கும் பெருத்த சர்ச்சையை எழுப்பிருப்பதோடு நடுநிலையாளர்களின் கண்டனத்திருக்கும் ஆளாகியிருக்கிறது. 


                                   இத்தீர்ப்பை நேரடி விமர்சனம் செய்ய விரும்பாத மு.கருணாநிதி, "பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜன் சமாதி நினைவுத்தூண் போன்றவற்றை காணமுடியவில்லையே ", என்ற ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினர்.


                                     தமிழ்ப்பெருமை ,சோழப்பெருமை, ராஜராஜனாக தன்னையே புனைவுருவாக்கம்  செய்தல், ராஜராஜனின் நவீன அவதாரமாக அடையாளப்படுத்திக்கொள்ளல், குடவோலை முறை என்ற திருவுளசீட்டு முறையை ஜனநாயக முறையாக கற்பிதம் செய்தல் போன்ற பல்வேறு சொல்லாடல்களை உருவாக்கி அந்த நிழலில் தன்னை இருத்திக் கொள்வதற்கு மு.கருணாநிதி பெருமுயற்சி செய்கிறார். 

             இந்த மாதிரியான கேளிக்கைகள் தனிநபர் துதிபாடல்கள் நிரம்ப உள்ள தமிழ்ச் சமூகததில் இத்தகைய செயல்பாட்டிற்கு பெருத்த வரவேற்ப்பு  கிடைக்கக்கூடும். எதிர்ப்பு வெகு சொற்ப அளவில் இருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் அறிவுத்தளத்தில் நமது மதிப்பீடுகள் வீழ்ச்சியடைவதை அவதானிக்க முடியும். 

        
              ராஜராஜனால் பணியமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான தேவரடியார்கள், பல நூறு ஆண்டுகள் தொடர்ந்த அந்தப் பாரம்பரியம்,அதில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள், ராஜாஜிகள், சத்தியமுர்த்திகள் போன்றோரை நேர்நின்று எதிர்த்த முத்துலட்சுமி ரெட்டியின் செயல்பாடுகள் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு எதிராக, இன்று மு.கருணாநிதி வைதீகத்துடன் சேர்ந்து செய்கின்ற சித்து வேலைகள், சதிராட்டத்தை பரதமுனிவரின் நாட்டியமாக மாற்றத்  துடிக்கிற பத்மா சுப்ரமணியன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம்  போன்றவற்றை வருங்காலம் மன்னிக்காது.



கொசுறு :

001.கி.பி. 1972 இல் மு.கருணாநிதி ராஜராஜனுக்கு சிலை வடித்தார்.
002.கி.பி.1985 இல்  எம்.ஜி. ராமச்சந்திரன் ராஜராஜனின் 1000 வது சதய விழா               கொண்டாடினார்.
003.கி.பி.1995 இல்  ஜெ.ஜெயலலிதா உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில்  நடத்தினர்.
004.கி.பி.2010 இல்  மு.கருணாநிதி பெரிய கோயில் 1000 வது ஆண்டுவிழா எடுத்தார்.


                       இனி வரக்கூடிய ஜெயலலிதாக்கள், இளவரசர்கள், இளவரசிகள் கொண்டாட என்ன செய்வது என்று வருந்தாமலிருக்க சில உருப்படியான யோசனைகள்.

001.கி.பி.2012 இல் முதலாம் ராஜேந்திரன் முடிசூடிய 1000 வது ஆண்டு விழா.
002.கி.பி.2014 இல் முதலாம் ராஜராஜன் முக்தி அடைந்த 1000 வது  ஆண்டு விழா.
003.கி.பி.2022 இல் கங்கைகொண்டசோழபுரம்  நிர்மாணிக்கப்பட்ட1000 வது  ஆண்டு விழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக