வியாழன், மார்ச் 24, 2011

ஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரிக்கை



ஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம்
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரிக்கை


மதுரை, மார்ச்.24-

மதுரை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பொய் வழக்கு

மதுரை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதியன்று மாட்டுத்தலை வீசியதாக கூறப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும் 15 முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து போலீசாருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாட்டுத்தலை வீசப்பட்ட சம்பவம் குறித்து மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்க பேராசிரியர் மார்க்ஸ், வக்கீல் ரஜினி, சிவகுருநாதன், பழனிச்சாமி, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வக்கீல்கள் அப்பாஸ், ஜஹாங்கீர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அவர்களின் பரிந்துரையை அரசுக்கும் அனுப்பி உள்ளனர். இது குறித்து பேராசிரியர் மார்க்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் காஜிமார் தெரு பள்ளிவாசலில் பன்றி மாமிசம் வீசப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டுள்ளது. ஆனால் மதக்கலவரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

விடுதலை செய்ய...

எனவே பள்ளிவாசல் இழிவுபடுத்தப்பட்ட வழக்கு மறுவிசாரணை செய்யப்பட வேண்டும். அப்பாவி கிருஷ்ணனை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். அதேபோல, ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட வேண்டும்.

கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 8 முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.




நன்றி:- தின தந்தி- மதுரை 24.03.2011

ஞாயிறு, மார்ச் 06, 2011

ஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.

ஆதித்யா - ஆருஷி  கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.
- மு. சிவகுருநாதன்
 




          நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் கொலை செய்த வழக்கில் பூவரசிக்கு சென்னை கூடுதல் செ­ன்ஸ் நீதிமன்ற நீதிபதி சேதுமாதவன், சிறுவன் ஆதித்யாவைக் கடத்தியதற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 50000/- அபராதமும் கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனை, ரூ.50000/- அபராதமும் விதித்து இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையில் ரூ. 90000/-ஐ சிறுவனின் தாயார் ஆனந்தலெட்சுமிக்கு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளார்.   இத்தீர்ப்பை எதிர்த்து பூவரசி சார்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக வழக்குரைஞர் ஆனந்தகுமார் கூறியுள்ளார்.   விசாரணை சரிவர நடைபெறவில்லை என்றும் சி.பி.அய். அல்லது சி.பி.சி.அய்.டி. விசாரிக்க வேண்டும் என்றும் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அக்பர் அலி இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


            உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் தம்பதியின் 14 வயது பெண் குழந்தை ஆருஷி, அவர்களது வீட்டு வேலைக்காரர் நேப்பாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் பஞ்சாடே ஆகிய இருவரும் மர்மமான முறையில் 2008 மே 16இல் கொலை செய்யப்பட்டனர்.  மாநில சி.அய்.டி. விசாரணையிலிருந்து இவ்வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றப்பட்டு, இரண்டரை ஆண்டாகியும் எவ்வித துப்பும் துலங்காத நிலையில் டிசம்பர் 29, 2010இல் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துக் கொள்வதாக சி.பி.அய். மனு செய்ய அதை நீதிமன்றமே ஏற்க மறுத்துள்ளது.  மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.அய்.க்கு உத்தரவிட்டுள்ளார்.   தற்போது ஆருஷியின் பெற்றோருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை), 201 (சாட்சியங்களை அழித்தல்), 34 (சில காரியத்திற்காக சிலருக்கு எதிராக முறையிடுவது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


            இவ்விரண்டு வழக்குகளிலும் நிரம்ப வேறுபாடுகள் உண்டெனினும் ஒரு சில ஒற்றுமையான அம்சங்களும் உண்டு.   இரண்டிலும் கொலை செய்யப்பட்டது குழந்தைகள்.  இக்கொலைகளுக்குப் பெற்றோர் உடந்தையாகவோ அல்லது காரணமாகவோ இருந்துள்ளனர்.   இவை மேல்தட்டு வர்க்கத்தில் நடைபெற்ற கொலைகள்.  இந்த வழக்குகளின் விசாரணை, கைதுகள், தீர்ப்பு இவற்றை ஊடகங்கள், பொதுமக்கள் எதிர்கொண்ட விதம் பற்றி ஆயிரக்கணக்கான கேள்விகள் எழும்புகின்றன. 

 
            2008 மே 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் காலை 6 மணிக்கும் இடையில் ஆருஷியும் ஹேமராஜும் கொலை செய்யப்படுகிறார்கள்.  இருவரையும் கனமான கட்டை கொண்டு தாக்கியதோடு கழுத்தையும் கூரிய கத்தி கொண்டு அறுத்திருக்கிறார்கள்.   ஆருஷியின் உடல் கைப்பற்றப்பட்ட பிறகு பூட்டியிருந்த மாடிப்பகுதியை யாரும் திறக்க முயற்சிக்கவில்லை.   தடவியல் சோதனைகள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக அவ்வீட்டை பூட்டி   சீலிடவுமில்லை.  எனவே அந்த வீட்டிலிருக்கும் சாட்சியங்கள் முழுவதுமாக அழிக்கப்படுகின்றன. மறுநாள் மே 17 ஆம் தேதிதான் ஹேம்ராஜுவின் உடல் மாடியிலிருந்து கைப்பற்றப்படுகிறது.   இது ஏன் நடந்தது என்று யாரும் விளக்கம் சொல்ல முடியாத புதிராக உள்ளது.


            டாக்டர் ராஜேஷ் தல்வாரே இவ்விரு கொலைகளையும் செய்திருப்பதாக கைதானதும் அக்குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென்பதால் விடுவிக்கப்படுகிறார்.   ஆருஷியின் வீட்டுப் பணியாளர்கள் ராஜ்குமார், கிருஷ்ணா, விஜய் மண்டல் போன்றோரும் கைதாகி விசாரிக்கப்பட்டு நிரபராதிகள் என்பதால் விடுதலை செய்யப்படுகிறார்கள்.


            ஆருஷியின் பிரதேசப் பரிசோதனை அறிக்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என்கிறது.  ஆனால் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், சி.பி.அய். விசாரணையில் ஆருஷியின் பெண்ணுறுப்பு வழக்கத்திற்கு மாறாக விரிவடைந்து, கருப்பையின் வாய்ப்பகுதியை காணக் கூடிய வகையிலும் இருந்ததாகக் கூறுகிறார்.   வேறிடத்தில் கொலை செய்து படுக்கையில் கொண்டு வந்து கிடந்திருப்பது ஆதாரங்களிலிருந்து தெளிவாகிறது.   ஹேம்ராஜுவையும் கீழே கொலை செய்து உடலை ஒரு விரிப்பில் போட்டு மாடிக்கு இழுத்துச்சென்று பூட்டியிருக்கிறார்கள். 


            இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் தல்வாரின்  வீட்டில் மது அருந்திவிட்டு பின்னர் வெளியே பூட்டிவிட்டு சென்றதாகச் சொல்கிறார்கள்.     அந்த வீட்டின் வேறொரு அறையிலிருந்த தல்வார் தம்பதிக்குத் தெரியாமல் இந்த கொலைகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.  அவர்கள் செய்திருக்க வேண்டும் அல்லது உடந்தையாக இருந்திருக்க வேண்டும்.


            வேலைக்காரன் ஹேம்ராஜ்தான் இக்கொலையைச் செய்திருக்கிறாரன் என்று கூறிய தல்வார் தம்பதியினர், அவனைத் தேட நேப்பாளம் செல்வதற்கு ரூ. 25000/- பணமளிக்க முன்வந்தனர்.  வீட்டிற்கு வந்த தடயவியல் வல்லுநர்கள் மாடிக்குச் செல்லும் பூட்டப்பட்ட கதவிலிருக்கும் ரத்தக்கறையைப் பார்த்து மேலே செல்வதற்கு சாவியைக் கேட்டும் அவர்கள் தரவேயில்லை.   போலீசும் உடைத்த சோதனையிடவில்லை.   எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச தடயங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதை மாநில போலீஸ் வேடிக்கை பார்த்திருக்கிறது.


            பிரேதப் பரிசோதனை அறிக்கை எழுதப்படுவதற்கு முன்னதாக ராஜேஷ் தல்வாரின் சகோதரர் தினேஷ் தல்வாருக்கும் குடும்ப நண்பர் டாக்டர் சுஷில் செளத்ரிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே.கே. கெளதமுக்கும் இடையே பலமுறை தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.  இந்த கே.கே. கெளதம்தான் காவல்துறையை அழைத்து பூட்டை உடைத்து பத்திரிகையாளர்களுக்கு சுவராசியமான கண்டுபிடிப்பு நிகழப்போவதாக கூறுகிறார்.  அதன் பிறகு ஹேம்ராஜுவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.


                        ஆருஷி கொலை பற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் இருநபர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   அவர்கள் நொய்டாவிலுள்ள ராஜேஷ் தல்வாரின் இல்லத்தில் விசாரணை நடத்தச் சென்ற போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் 5 முறை போனில் தொடர்பு கொண்டு “விசாரணை நடத்தாமல் உடன் திரும்புங்கள்” என்று உத்தரவிட்டதாக மகளிர் ஆணைய  முன்னாள் உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ் கூறியுள்ளார்.  குழு அமைக்கப்படவில்லை, விசாரணை நடைபெறவில்லை என்று முதலில் பொய் சொன்ன கிரிஜா வியாஸ் சி.பி.அய். விசாரணை நடத்தப் போவதால் இக்குழுவின் அறிக்கையை வெளியிடவில்லை என்று மழுப்பினார். 


            மொத்தத்தில் ஆருஷி கொலை வழக்கில் மாநில காவல்துறை; தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட மத்திய, மாநில அதிகார வர்க்கம் ராஜேஷ் தல்வார் தம்பதிகளைக் காப்பாற்றவும் உண்மை மற்றும் தடயங்களை மூடி மறைக்கவும் பெரும் முயற்சி செய்துள்ளது உறுதியாகிறது.


            சி.பி.அய். வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.அய். வழக்குரைஞர் ஆர்.கே. சைனி சொன்ன போது காசியாபாத் நீதிமன்ற நீதிபதி பிரித்திசிங் வழக்கு தொடர்பான இணைப்புத் தகவல்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.   இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டிய அவசியமென்ன என தல்வார் தரப்பு வினவியது.   அதற்கு சி.பி.அய். வழக்குரைஞர் நாமனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர் என்றார்.   உங்களைப் பற்றி பின்னால் பேசும் பேச்சுக்களிலிருந்து நீங்கள் தப்ப முடியாது என்று சி.பி.அய். அதிகாரிகளைப் பார்த்து நுபுர் தல்வார் கூறியதாகவும் செய்தி வெளியானது.  எல்லாம் ஒரே புதிர் மயமாக உள்ளது.


            ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடைபெற்ற சில மணிநேரங்களில் அனைத்துத் தடயங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களை மட்டும் வைத்துக் கொண்டு வழக்காட முடியும் என்று தோன்றவில்லை.  மேல்தட்டு வர்க்கத்தில் நிகழ்த்தப்பட்ட இக்கொலை வழக்கு அவர்களாலேயே கேள்விக்குறியாகி நிற்கிறது.தற்போது தல்வார் தம்பதிகளுக்கு கைது ஆணை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


            அடுத்து ஆதித்யா கொலை வழக்கிற்கு வருவோம்.   கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியாக பணிபுரிபவர்.   வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள கம்பராஜபுரத்தைச் சேர்ந்த பூவரசி (26) எம்.எஸ்.சி. பட்டதாரி.  ஜெயக்குமார் பூவரசியை காதலிப்பதாகச் சொல்லியும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி பலமுறை உறவு கொண்டு இருமுறை கருக்கலைப்பு செய்யவும் காரணமாக உள்ளார்.   பின்னர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது சாதியைச் சேர்ந்த ஆனந்தலெட்சுமியைக் காதலித்து (!?) திருமணம் செய்து கொள்கிறார்.  தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பூவரசியை வேலையை விட்டு துரத்தவும் செய்கிறார்.  பின்னர் ஏதோ சமாதானமாகி அவருக்கு மதுரையில் வேலை ஏற்பாடு செய்கிறார்.   ஜெயக்குமார் ஆனந்த லெட்சுமியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் பூவரசியுடன் பாலியல் உறவை தொடர்ந்தே வந்துள்ளார்.   இது தெரிந்தோ அல்லது தெரியாமலோ தனது மனைவி குழந்தைகளுடன் பூவரசியை நெருக்கமாக பழகுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளார்.


            ஒரு கட்டத்தில் பூவரசி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த, ஜெயக்குமார் மறுத்து தொடர்ந்து பாலியல் உறவை மட்டும் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய, ஜெயக்குமாரை பழிவாங்க நினைத்த பூவரசிக்கு 4 வயது சிறுவன் ஆதித்யாவை கொலை செய்வது கூட அவர்கள் குடும்பப் பழக்கம் மூலம் எளிதாகிவிடுகிறது.


            நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதித்யாவின் சடலம் இருந்த பை கைப்பற்றப்பட்டது.  பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா இயங்காததால் அந்தப் பையை அங்கு வைத்தவர் யாரென்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.    ஒரு வழியாக ஆதித்யாவின் உடல் அடையாளம் காணப்பட்டு, பூவரசி கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.


            இக்கொலை வழக்கு குறித்து விலாவாரியாக எழுதாத இதழ்களும் பேசாத தொலைக்காட்சி ஊடகங்களும் இல்லை எனலாம்.  பூவரசியை காமுகி, வேசி, கொலைகாரி என்றெல்லாம் முடிந்தவரையில் திட்டித் தீர்த்தன.   ஆனால் ஜெயக்குமார் மற்றும் அவர் வைத்திருந்த கள்ள உறவு பற்றி இந்த ஆண் மைய ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை.


            இந்த கொலை வழக்கில் A1 பூவரசி என்றால் A2 ஜெயக்குமார் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.   இங்கு சட்டம் கூட ஆண்களுக்கானதாகவே இருக்கிறது.   எனவேதான் ஜெயக்குமார்கள் எவ்வித தண்டனையிலிருந்தும் தப்பிக்க முடிகிறது. 


            இவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகளாக ஜெயக்குமார், ஆனந்தலெட்சுமி, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் சங்கர்குமார், ஹவுஸ் கீப்பிங் பணியாளர் சந்திரா, டாக்டர் செந்தில்குமார், விடுதிக் காப்பாளர் சகாயமேரி, இரவுக் காப்பாளர் ஸ்டாலின் போஸ், விடுதியில் தங்கியிருந்த மற்றொரு பெண் ஆகிய 8 பேர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.  கொலைக்கு காரணமானவரும் சாட்சியாக மாறிவிடும் அதிசயம் நடந்தேறியது.   முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஜெயக்குமார் உத்தமராக மட்டுமல்லாது அரசுத் தரப்பு சாட்சியாகவும் மாறிவிடுகிற நிலைதான் இவ்வழக்கின் மிகப்பெரிய அவலம்.


            மூன்றே மாதத்தில் இந்த கொலை இந்த கொலை வழக்கை முடித்து குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை பெற்றுத் தந்துள்ள அரசு வழக்குரைஞர் பெருமை பொங்க தொலைக்காட்சியில் பேசுகிறார்.   மேல்முறையீட்டிலும் கூட பூவரசிக்கு தண்டனை உறுதி செய்யப்படலாம்.  கொலையாளிக்குத் தண்டனை வழங்க வேண்டியதுதான்.  ஆனால் ஜெயக்குமாருக்கு யார் தண்டனை வழங்குவது?  வழக்கு பதிந்த தமிழக காவல்துறையும் தண்டனை வழங்கிய நீதிமன்றமும் இதைக் கண்டு கொள்ளவில்லை.   குழந்தையை இழந்ததுதான் தண்டனையென்று நினைத்து சமாதானமடைய முடியாது.  இழப்பின் வலி ஜெயக்குமாரை விட ஆனந்தலெட்சுமியைத் தான் அதிகம் பாதித்திருக்கும்.


            ஜெயக்குமாருக்கு சட்டத்தைவிட உரிய தண்டனை கொடுக்கத் தகுதியானவர் ஆனந்தலெட்சுமி மட்டுமே.   ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஜெயக்குமார் இன்னொரு ஆதித்யாவைப் பெற்றுக் கொள்ள தயாராகி விட்டார்.   ஆதித்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்று கருவுற்றது உறுதி செய்யப்பட்டது.  அவருக்கு கடவுள் அருள் மட்டுமல்ல; miracle-ம் கூட.  (விஜய் டி.வி. பேட்டி).   இனி வருங்காலங்களில் பூவரசிக்குப் பதிலாக அவருக்கு வேறொரு பெண் கூட கிடைக்கக்கூடும்.  அப்படி கிடைத்தால் அதுவும் கூட கடவுளின் வரமாக இருக்கும்.


            பூவரசி ஒரு முறை தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அது முடியாமல் போகவே தனது குழந்தையை க் கொன்று விட்டதாகவும் ஆனந்த லெட்சுமி கூறுகிறார்.   அப்படியிருக்க குடும்பம் முழுவதும் பூவரசியுடன் நெருக்கமாக இருந்த காரணந்தான் யாருக்கும் விளங்கவில்லை.   பூவரசியுடனான தனது கணவனின் உறவை அத்துடன் மட்டும் முடித்துக் கொள்ளாமல் வீடு, குழந்தைகள் வரை அனுமதித்தது யார் குற்றம்? அடுத்த குழந்தையைப் பெற வாய்ப்பிருப்பதால் ஆனந்த லெட்சுமி ஜெயக்குமாரை மன்னிக்கலாம்.   சட்டம் ஏன் மன்னிக்க வேண்டும்?


            தீர்ப்புக்குப் பிறகு பூவரசி தான் ஆதித்யாவைக் கொலை செய்யவில்லை என்றும் ஜெயக்குமாரின் பிசினஸ் பார்ட்னரான ராஜேஷ் கும்பல்தான் ஆதித்யாவைக் கடத்திக் கொலை செய்ததாகச் சொல்கிறார்.   அவர் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு இது முரணாக உள்ளது.   இது வழக்கை திசை திருப்பச் சொல்லும் பொய்யாகக் கூட இருக்கலாம்.   ஜெயக்குமார்தான் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள இந்தக் குழந்தையை கொலை செய்யச் சொன்னார் என்றும் சொல்ல வாய்ப்பிருந்தும் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை?   அவர் இன்னும் ஜெயக்குமாரை கண்மூடித்தனமாக காதலிக்கிறாரோ என்னவோ!


            இந்த வழக்கை எதிர்கொண்ட ஊடகங்கள் பூவரசியை மட்டும் தனியாகப் பிரித்து திட்டுவதோடு மட்டும் நின்று கொண்டன.   மேலும் சமூகம் எதிர்கொண்ட முறை மிகவும் கேவலமானது.  பூவரசியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போதெல்லாம் செருப்பு, விளக்குமாறுடன் பெருங்கூட்டம் காத்திருந்தது.  சென்னை புழல் சிறையிலும் சக கைதிகளின் தாக்குதல்களை பூவரசி எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  கூட்டம் அதிகமாக திரண்ட காரணத்தால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத காவல்துறையினர் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சாந்தினியின் வீட்டில் இரவு ஆஜர் செய்ய வேண்டி வந்தது.
       

            ஒரு உயிரைக் கொலை செய்வது கொடூரமானது.  குழந்தைகளைக் கொலை செய்வது மிகக் கொடூரமானது என்று சொல்லும் சமூக மனச்சாட்சி வரவேற்கப்பட வேண்டியதுதான்.   ஏதேனும் ஒரு கொலை செய்த சிறைக் கைதிகள் கூட பூவரசிக்கு எதிராக நின்றது வியப்பான ஒன்று.  இந்த சமூக கூட்டு மனச்சாட்சி ஏன் ஜெயக்குமாருக்கு எதிராக செருப்பு, துடைப்பத்துடன் திரளவில்லை எனும் போது நமக்கு இவற்றின் மீது அய்யம் எழுகிறது.  ஊடகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட இந்த போலியானதொரு சமூக அக்கறை முற்றிலும்  ஆண்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று.  இதுவே சமூகத்தின் பொதுப்புத்தியில் (common sense) தீவிரமாக பதிக்கப்பட்டுள்ளது. கோவை மோகன்ராஜ் என்கவுன்டரைக் கொண்டாடும் சமூகம் / அரசுகள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்வதில்லை.


            நிறைய கள்ள உறவுக் கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.   ஒரு பெண்ணின் கள்ளக்காதலன் அவளுடைய குழந்தையைக் கொன்ற நிகழ்வுகள் கூட உண்டு.  அப்படி நடந்திருந்தால் அக் குழந்தையின் தாயும் கைது செய்யப்படுவாள். தங்களது கள்ள உறவுக்கு இடைஞ்சலாக இருந்த இக்குழந்தையை இருவரும் திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கலாக்கி இருவரையும் காவல்துறை சிறையில் தள்ளியிருக்கும்.


            இளம் டென்னிஸ் வீராங்கனை ருசிகா மானபங்கப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வெறும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் அரியானா மாநில டி.ஜி.பி. ரத்தோர் இவ்வழக்கு விசாரணைக்காக பன்ச்குலா செ­ன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்த போது (பிப்ரவரி 2010) உத்தவ் சர்மா என்ற இளைஞர் ரத்தோரின் முகத்தில் மூன்று முறை குத்தி  காயமேற்படுத்தினார்.  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த உத்தவ் சர்மா, சண்டிகர் தேசிய வடிவமைப்புக் கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்தவர் என்ற செய்தியும் வெளியானது.


            இதே உத்தவ் சர்மா ஜனவரி 2011-ல் ராஜேஷ் தல்வார் தில்லி சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வந்த போது இரும்பு லீவரால் தலையில் பலமாக தாக்கினார்.   அப்போது இவர் ஒரு மனநோயாளி என்றும் ஊடகத்தின் கவனத்தைக் கவர்வதற்காக இத்தகைய பணிகளில் ஈடுபடுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   பூவரசிக்கு எதிராக இங்கு கிளம்பும் சமூக மனச்சாட்சியையும் மன நோய்க் கூறாக ஊடகத்தின் கவனத்தைக் கவரும் நிகழ்வாகவும் ஏன் கணிக்கத் தவறுகிறோம்?   அல்லது இங்கு ஏதேனும் ஒரு உத்தவ் சர்மாக்கள் ஜெயக்குமாருக்கு எதிரான தாக்குதலில் ஏன் ஈடுபடவில்லை?


            மக்களின் பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டுள்ள இத்தகைய எண்ணங்கள் சமூகத்தில் ஜெயக்குமார்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன.   மேலும் இவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது சமூகத்தில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.  அத்துடன் நீதியில் படிந்த கரு நிழலாக தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

சனி, மார்ச் 05, 2011

யாருக்கும் சொரணை இல்லை!

யாருக்கும் சொரணை இல்லை!     -மு.சிவகுருநாதன் 


        நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற மூவர் பெஞ்ச் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இது மிகவும் வரவேற்கபடவேண்டிய தீர்ப்பு.

       தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்ற அரசியலமைப்பு உயர் பதவி நியமனம் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவால் முடிவு செய்யபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் -ன்  எதிர்ப்பை மீறி இந்த நியமனம் செய்யப்படுகிறது. பி.ஜே. தாமஸின் நியமனத்திற்கு காரணமாக இருந்த மன்மோகன்சிங், ப,சிதம்பரம் ஆகியோர் என்ன சொல்ல போகிறார்கள்? இதை விட பெரிய கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் இப்போது மட்டும் பதவி விலகிவிட போவதில்லை.

     பி.ஜே.தாமஸ் தேர்வு செய்யப்பட்டது அமைப்பின் நடைமுறை தோல்விதானே தவிர பிரதமர் உள்ளிட்ட குழுவின் தவறல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சப்பைக்கட்டு கட்ட தொடங்கிவிட்டார். (இன்னொரு கபில் சிபல்?)

      உச்சநீதிமன்ற  நீதிபதிகள் தங்களது 71 பக்கத்தீர்ப்பில் இந்த நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கவோ தலையிடவோ முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை மறுத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை  நிலைநாட்டி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தை அடிக்கடி மிரட்டும் பிரதமர் இதற்கு பின்னாலும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஒரு மிரட்டல் அறிக்கை வெளியிடக்கூடும். அரசின் கொள்கையே ஊழலாக இருக்கும்போது பாவம் உச்சநீதிமன்றம் மட்டும் என்ன செய்து விட முடியும்!

        பாமாயில் இறக்குமதி ஊழல்  வழக்கு அப்போது உணவுத்துறை செயலராக இருந்த பி.ஜே.தாமஸ் மீது 1991 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொடர்புத் துறை செயலராக இருந்தபோது, 2 ஜி அலைக்கற்றை ஊழல்  பற்றி விசாரிக்க தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்று கூறியவர்.(கபில் சிபலுக்கு பதிலாக இவரையே தகவல் தொடர்பு அமைச்சராக கூட ஆக்கிருக்கலாம் மன்மோகன்சிங்கிற்கு இன்னொரு வழக்குரைஞர் கிடைத்திருப்பார்!)

     இந்த மாதிரியான பின்னணியுடைய பி.ஜே.தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராக செப்டம்பர் 03 ,2010 இல் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் குழு நியமனம் செய்கிறது. இவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தது இக்குழுவிற்கு தெரியவில்லை என்று கைவிரிக்கிறார்கள் . மன்மோகன்சிங்கும், ப, சிதம்பரமும்    அன்றாடச் செய்திதாள்கள் கூட படிப்பதில்லை என்று இதன் மூலம் ஒத்துக்கொள்கிறார்களா! (திருடன் கையில் சாவி என்று எனது முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.)

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின்  பங்கு 

      இந்த சர்ச்சை எழுந்த பிறகு பதவி விலக மாட்டேன் என்று தீவிரமாக மறுத்து வந்த பி.ஜே .தாமஸ் ஒரு கட்டத்தில் பதவி விலக முன்வந்ததாகவும் ஆனால் அரசு வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.இவர்கள் அனைவரும் இவ்வளவு திமிராக இருந்ததற்கு காரணம் பி.ஜே. தாமஸை பதவி நீக்குவதென்றால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுத் தீர்மானம் (impeachment) கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும். அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால்  இது நடைபெற வாய்ப்பு இல்லை.அரசே நீக்குவதாக இருந்தால் குடியரசுத் தலைவர் மூலம் ஆணையிட வேண்டும். மேலும் இத்தீர்ப்பு உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்ற போலியான வாதத்தின் மூலம் இறுமாந்திருந்தவர்களை  அடித்து நொறுக்கி விட்டது.
       பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள  இந்த அரசு நீதிமன்றங்கள் இவ்வாறு சொல்வதெல்லாம் அடிக்கடி நிகழ்வதுதான் என்று வழியத் தொடங்கியிருக்கிறார்கள்  .2 ஜி அலைக்கற்றை  ஊழல் விசாரணையை சி.பி.அய்.விரைவு படுத்தியிருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளே காரணம்.

       இத்தீர்ப்பு வெளியான பிறகும் பி.ஜே .தாமஸ் பதவி விலகவில்லை. தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினால் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பணியிடம் தற்போது காலியாக உள்ளதென சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி   கூறியுள்ளார். நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டபடியால் இனி பதவிவிலகல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. ஊழல் செய்யும், உடந்தையாக  இருக்கும், சட்டங்களை மீறும், நீதிமன்றங்களை அவமதிக்கும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், கபில் சிபல்  போன்ற அரசியல்வதிகளுக்கும் பி.ஜே.தாமஸ், சித்தார்த் பெஹுரா, லில்லி போன்ற அதிகாரிகளுக்கும் சொரணை இல்லை என்பதே உண்மை. குடிமக்கள்தான் சொரணையுடன்   எதிர்வினையாற்ற வேண்டும்.

ஒரு பின் குறிப்பு:-

           பி.ஜே.தாமஸ் நியமனத்திற்கு  தாம் பொறுப்பேற்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.பொறுப்பேற்பது என்றால் என்ன? உடன் பதவி விலகாமல் பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியாது,அமைச்சர்களை முடிவு செய்வது என் கையில் இல்லை, தனது துறையின் கீழ் வரும் இஸ்ரோவின் S -பாண்ட்   ஒப்பந்தம் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவரும்  பிரதமர் இதற்கு மட்டும் பொறுப்பேற்பதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கக்கூடும். சில மாநிலங்களில் தேர்தல்கள் வருகிறதல்லவா! 2 ஜி அலைக்கற்றை ஊழல்,ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்,காமன்வெல்த் போட்டிகள் ஊழல்,இஸ்ரோவின் S -பாண்ட் ஊழல் ஆகியவற்றுக்கும் பொறுப்பேற்றுகொண்டாலும் வியப்படைய ஒன்றுமில்லை.ஆனால் பதவி விலக மட்டும் சொல்லாதீர்கள்! அதிகாரம் முழுக்க சோனியாவிடமிருக்க இந்த பதவியை விட்டு விலகினால் என்ன விலகாவிட்டால் என்ன என்று கூட மன்மோகன் நினைக்கிறார் போலும்!

செவ்வாய், மார்ச் 01, 2011

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?

- மு. சிவகுருநாதன்


          தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்வழிக் கல்வி (ABL), படைப்பாற்றல் கல்வி (ALM) போன்ற கற்பித்தல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது.  மேலும் இவ்வாண்டு முதல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்களும் வெளியிடப்பட்டுள்ளன.  இவற்றைச் சிலர் பாவ்லோ ஃப்ரெய்ரே அறிமுகப்படுத்திய மாற்றுக் கல்விக்கு இணையாக வைத்து பாராட்டுகின்றனர்.  சிலர் மாற்றுக் கல்வியை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்றும் கூறுகின்றனர். 

            1921-ல் பிரேசிலில் பிறந்த பாவ்லோ ஃப்ரெய்ரே வயது வந்தோர் கல்விக்கான டாக்டர் பட்டம் பெற்றவர்.  பிரேசில் அரசில் எழுத்தறிவு இயக்கத்தின் தலைவராகி (1963) 20000 பண்பாட்டுக் குழுக்கள் மூலம் 20 இலட்சம் பேரை சமூக விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அஞ்சிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 

            அமெரிக்காவிற்கும் கடவுளுக்கும் எதிரானவராக குற்றஞ்சாட்டப்பட்ட  ஃப்ரெய்ரே 70 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பொலிவியாவில் தஞ்சமடைகிறார்.  அங்கும் ஆட்சி கவிழ்க்கப்படவே அவர் சிலிக்கு ஓட நேரிட்டது.

            1965 சிலி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவரை சிலி அரசு வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஈடுபடுத்தியது.  கல்விக் கோட்பாடு நூற்களை இக்காலக் கட்டத்தில்தான் அவர் எழுதினார்.  1973 இல் சிலியில் அலெண்டேவின் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு ராணுவ அரசிற்கு வேண்டப்படாதவராக மாறிய பிறகு, பெரு, அங்கோலா, மொசாம்பிக், தான்சானியா, கினியாபிசா போன்ற லத்தின் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கல்விப் பணி செய்கிறார். 

             1969 ஹார்வார்டு கல்வியியல் பள்ளியில் கவுரவ விரிவுரையாளராகவும் பின்னர் ஜெனிவாவில் இயங்கும் சர்வதேச திருச்சபை அமைப்புக்களின் கல்வி ஆலோசகராகவும் நியமிக்கப்படுகிறார்.  1979 தம் சொந்த நாடான பிரேசிலுக்குத் திரும்பும் இவர் 1991ல் பாவ்லோ  ஃப்ரெய்ரே நிறுவனம் தொடங்கி பணியாற்றி 1997இல் மரணமடைகிறார்.

             சமூகத்தின் ஆதிக்க சக்தியினர் உருவாக்கிய பாடத்திட்டம் மற்றும் பாடநூற்கள் ஆசிரியர் சேகரித்த தகவல்களை அனைத்தையும் அறிவைத் தருதல் என்ற பெயரில் மாணவர்களிடம் திணிப்பதே இன்றைய கல்வி முறையாகும்.   ஆசிரியரின் விரிவுரைகளை கேட்டு அதை மறு உற்பத்தி செய்யும் இம்முறையை வங்கி முறைக் கல்வி என்கிறார்கள்.  மாணவர்கள் கேட்கின்றவர்களாக மட்டும் இருப்பதால் விமர்சனக் கண்ணோட்டமின்றி சமூகத்தில் நிலவும் அவலங்களை கண்டும் காணாததும் போல் இருக்கின்றனர். 

             ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் ஒரு கூட்டத்தை மட்டும் உருவாக்காமல், ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை நோக்கிய கல்வியின் மூலம் அவர்களின் விடுதலையை சாத்தியப்படும் கல்வி முறையை   ஃப்ரெய்ரே செயல்படுத்தினார்.  அதிகாரம் இல்லாத உரையாடல்கள் மூலம் வறுமை, எழுத்தறிவின்மை, பொருளாதார, சமூக ஆதிக்கங்களின் பிடியில் இருக்கும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வதற்குண்டான கல்வி முறையை அவர் பரிந்துரைத்தார்.

             பாவ்லோ  ஃப்ரெய்ரேவின் மாற்றுக் கல்வி அரசியல், கருத்தியல், பயிற்று முறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதோடு அநீதிகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு பொங்கியெழும் மனப்பான்மையை கல்வி உண்டாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

             கல்வியில் உள்ளடக்கம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கற்பனையான ஒன்றின் மீது அமைக்கப்படக் கூடாது.  பாடத்திட்டம் ஒரு நிபுணர்குழுவின் நிபுணத்துவத்தால் மட்டுமே அமையக்கூடாது.  உலகம், உலகில் வாழும் மனிதர் மட்டுமே இக்கல்வியின் கருப்பொருளாக அமைய முடியும் என்பது  ஃப்ரெய்ரேவின் கருத்து.

            நமது பாடத்திட்டமும் புதிய பாடநூற்களும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என மீண்டும் மீண்டும் சொல்லவும் வேண்டுமா?  யாருக்கும் தெரியாமல் வல்லுநர் குழுவால் ரகசியமாக தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்,  அதைப் போலவே நிபுணர் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாடங்கள் என குழந்தைகளையும் சமூகத்தையும் உலகையும் கவனத்தில் கொள்ளாத பாடநூற்களைத் தானே நாம் பெற்றிருக்கிறோம்!.

            மாற்றுக் கல்வியின் உள்ளடக்கத்தில் அரசியல், கருத்தியல் ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன.   அரசின் கொள்கைத் திட்டங்கள்,  தனிநபர் துதிபாடல், அறிவை மழுங்கடித்தல், வரலாற்றைத் திரித்தல் என்ற ஆளும் கட்சி அரசியலுக்கு பாடநூற்கள் மட்டுமல்ல வருங்கால தலைமுறையும் பலியாகின்றன.  தமிழ், திராவிடம் என்று சொல்லிக் கொண்டு இந்துத்துவ கருத்தியலுக்கு இணங்கவே பாடங்கள் உள்ளன.

            விவாதத்திற்கும் உரையாடலுக்கும் சாத்தியமில்லாத அல்லது அதை மறுக்கிற பாடங்களின் மூலம் மாற்றுக் கல்வி சாத்தியமில்லை.   அதிகாரம் செயல்படுமிடத்தில் உரையாடல் செயல்பட வாய்ப்பில்லை.  ஆசிரியர்களின் அதிகாரங்கள் பயிற்சியால் பலமிழந்து போவதாகவேக் கொள்வோம்.  பாடத்திட்டம் மற்றும் பாடநூற்களின் அதிகாரத்தை என்ன செய்வது?   இவை வங்கி முறைக் கல்வியை விட்டு இன்னும் தாண்டவில்லை.  பிரச்சினைகள் மையமான பாடம்,  சமூகத்தோடு தொடர்புடைய சூழல் இவை எதுவும் குழந்தைகளுடன் நெருக்கம் கொள்ளவும் சமூகத்தின் மீது ஈடுபாடு கொள்ளவும் பாடநூற்கள் வாய்ப்பு தரவில்லை.

            சமூகத்தில் கல்வி அமைப்பு எப்படி இருக்கம் வேண்டும், அதன் உள்ளடக்கமும் நோக்கமும் எப்படியிருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பதை அதிகார வர்க்கமே நிர்ணயம் செய்கிறது.  நமது பாடநூற்களையும் மேல்மட்டத்திலுள்ள அதிகார அமைப்பு முடிவு செய்கிறது.  அதை  எப்படி ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியாக, பாடத்திட்டமாக, பாடநூலாக இருக்க முடியும்? வட்டார அளவிலான வேறுபாடுகளை இவை கண்டு கொள்வதில்லை. 

            இந்திய, தமிழ்ச் சூழலில் பாடநூற்கள் தரமாகவும் அதிகார வர்க்கத் தலையீடு இல்லாமலும் சுயேட்சையான அமைப்பு ஒன்று, கற்கும் குழந்தைகளிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தயாரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.  அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.  தமிழ் சினிமாக்களில் பெரியவர்களின் பேச்சை குழந்தைகளும் ஆண்களின் பேச்சை பெண்களும் பேசுவார்கள்.   ஒரு ஆண் தன்னிலை என்ன நினைக்கிறானோ அதை பெண்கள் மற்றும் குழந்தைகளின் வழி பேச வைக்கும் நிலை தான் இங்குள்ளது.  அதைப் போலவே குழந்தைகளுக்கு இதுதான் வேண்டுமென பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.

             அடுத்து பயிற்று முறை, செயல் வழிக் கல்வியில் பாடப்புத்தகம் மற்றும் அட்டைகளில் உள்ளதைத் தானே வாந்தியயடுக்க வேண்டியுள்ளது.  புதிதாக, இயல்பாக, சொந்தமாக குழந்தைகள் என்ன செய்ய போகின்றன?  இப்படித்தான், இந்த ஏணிப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற போது கூடவே ஒரு அதிகாரமும் பிறக்கிறதுதானே!.  முதல் நான்கு வகுப்புகளுக்குள்ள செயல் வழிக் கற்றல் முறையாவது பரவாயில்லை.  ஓரளவிற்கு குழந்தைகளை மையப்படுத்துவதாக உள்ளது.

            ஆனால் 6, 7, 8 வகுப்புகளுக்கான ‘படைப்பாற்றல் கல்வி’ என்பதே மோசடியான ஒன்றாகும்.  கட்டமைக்கப்பட்டுள்ள பாடநூலிலுள்ள பாடத்தை எந்தவிதமான விமர்சனமுமின்றி மனவரைபடம் வரைந்து பாடக்கருத்தை மனத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.  இதில் எங்கிருந்து வந்தது படைப்பாற்றல்?  வல்லுநர் குழு முடிவு செய்த பாடத்தை (வங்கி முறைக் கல்வி), தகவல்களை, அறிவை விரிவுரை முறையை மட்டும் பயன்படுத்தாமல் வேறு வகையில் மனப்பாடம் செய்ய வைப்பது எப்படி மாற்றுக் கல்வியாக இருக்க முடியும்?

            நமது மதிப்பீடு மற்றும் தேர்வு முறைகள் எப்படியிருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.  மனப்பாடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கும் தேர்வு முறையை நாம் மாற்றாமல் வைத்துக் கொண்டு எப்படி ஆனந்தக் கூத்தாடுவது?  கல்வியை அளவிட தற்போதைய தேர்வு முறை ஒரு கருவியே அல்ல.  தேர்வு முறையைக் கைவிடாமலும் அதற்கேற்ற பாடங்களையும் தயாரித்து வைத்துக் கொண்டு கற்பித்தல் முறையில் மட்டும் மாற்றத்தைக் கொணர்ந்து விட்டால் புரட்சி நடந்து விடும் என்று கனவு காணுவது அபாயகரமானது.

உதவியவை:


01. மாற்றுக் கல்வி :- பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன? 

     - அ. மார்க்ஸ் - புலம் வெளியீடு

02. மூன்றாம் உலகில் குரல் - பவுலோ பிரையரின் விடுதலைக் கல்வி       சிந்தனைகள்        - மக்கள் கண்காணிப்பக வெளியீடு

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

- மு. சிவகுருநாதன்

(‘அம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்’ என்ற அ. மார்க்ஸ்-இன் குறுநூல் குறித்த பார்வை)


          தமிழகத்தில் தந்தை பெரியாருக்குக் கிடைக்காத நல்வாய்ப்பாய் அண்ணல் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் 37 தொகுதிகளாக பல்லாயிரம் பக்கங்கள் மலிவு விலையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் தனஞ்செய கீரின் நூல் மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  அவர் சவார்க்கர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பதால் அதிலுள்ள போதாமைகளை இட்டு நிரப்ப தற்போது தமிழில் வழி நூல் இல்லை.

            சி.பி. கேர்மோட் என்பவர் அம்பேத்கர் வாழ்க்கையை மிக விரிவாக 14 தொகுதிகளில் வெளியிட்டுள்ளார்.   அவை இனிமேல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழுக்கு வரவேண்டும்.  கெய்ல் ஓம்வேத், கிறிஸ்டோப் ஜேப்ரிலோ போன்ற அம்பேத்கரிய ஆய்வாளர்கள் எழுதியுள்ள நூற்கள் மற்றும் வேறு சில கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு அ. மார்க்ஸ் தனது வழக்கமான மொழியில் ‘தீராநதி’ இதழில் எழுதிய 3 கட்டுரைகளின் தொகுப்பாக இக்குறுநூல் அமைந்துள்ளது.

             அம்பேத்கர் வாழ்வினூடாக, “கட்டமைக்கப்படும் சில அரசியல் சொல்லாடல்கள் ரொம்பவும் இறுக்கமாகவும் தட்டையாகவும் போய்விடக் கூடிய வாய்ப்புண்டு.  வரலாறு குறித்த தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்கு இத்தகைய தட்டைப் பார்வை வழிவகுக்கும்.  இந்தப் புரிதலின் அடிப்படையிலான இன்றை நமது வழிமுறைகளிலுங்கூட சில தவறுகளுக்கு அது இட்டுச் செல்லக்கூடும்.” என்று சொல்லும் அ. மார்க்ஸ் இங்கு காந்திக்கும் அம்பேத்கருக்குமிடையே கட்டமைக்கப்பட்டுள்ள பகைமுரண் இன்று வரை தொடர வாய்ப்பில்லை என்கிறார்.

            மேலவளவு முருகேசன் வீடு நினைவிடம், தலித் குடியிருப்புகள் உள்ள பகுதி காந்தி நகர் என்று அழைக்கப்பட்டு தற்போது வழக்கறிஞர் பொ. இரத்தினத்தால் அம்பேத்கர் நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைச் சுட்டுவதுடன், அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்தில் காந்தியின் படம் இடம் பெற்றதையும் குற்றால அருவிகளில் தலித்கள் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதால் காந்தியும் குளிக்காமல் சென்று விட்ட நிகழ்வையும் குறிப்பிடுகிறார் அ. மார்க்ஸ்.
            மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஒட்டி அமைக்கப்பட்ட சவுத்பாரோ ஆணையத்தில் தலித்களின் பிரதிநிதியாக தன்னை அழைக்கவில்லையென்றாலும் தாமாகவே கலந்து கொண்ட அம்பேத்கர் தனி வாக்காளர் தொகுதி என்ற கருத்தை முன் வைக்கிறார்.    காந்தி சிறையில் நடத்திய  உண்ணாநோன்பு, பின்னர் ஏற்பட்ட புனா ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் தனி வாக்காளர் தொகுதியை காந்தி முறியடித்தார்.   காந்தி ஜனநாயகப் பெரும்பான்மையை இந்துப் பெரும்பான்மையாக கருதியதன் விளைவுதான், இன்றளவும் வகுப்புக்கலவரங்களில் தலித்துகளையும் பழங்குடியினரையும் இந்துக்களாக உணர வைத்து முஸ்லீம்களுக்கு எதிராக நிறுத்தும் பணியை இந்துத்துவ அமைப்புகளுக்கு எளிதாக்கியதை அ. மார்க்ஸ் விளக்குகிறார்.

             காந்தி வருணாஸ்ரமத்தையும் இந்துத்துவத்தையும் சரிவர புரிந்து கொள்ளத் தவறினார்.  அவர் தன் வாழ்நாளில் கட்டிக் காக்க நினைத்த இந்து மதமே அவரைப் பழிவாங்கியது என்பதையும் இதன் பின்னால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

            1918 வாக்கில் மதமாற்றமென்பது அம்பேத்கரின் கொள்கையாக இருந்திருக்கவில்லை.  1920களில் அம்பேத்கர் “பஹிஷ்கரிக் ஹிதகரிணி சபா” (ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கம்) தொடங்கியபோது அவரிடம் ‘சமஸ்கிருதமயமாதல்’ எண்ணங்கள் குடி கொண்டிருந்ததையும் இந்து மதம் தீண்டாமை முதலிய கொடுமைகளை உதறி எறிந்து, இந்து மதம் தன்னை தூய்மை செய்து கொள்ள வேண்டும்.  இந்து மதம் தானாக அதைச் செய்யாது.  எனவே தலித்கள் அதை நோக்கிப் போராட வேண்டும் என்ற வகையில் சமகால சீர்திருத்தவாதிகளிடமிருந்து அம்பேத்கர் வேறுபட்ட நின்ற புள்ளிகளையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

            1935 வாக்கில் தலித்துகளுக்கு தனி வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கை வீழ்த்தப்பட்டதன் பின்னணியில்தான் அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு வெளியேறுதல் என்ற முடிவை எடுக்கிறார்.  அப்போதும் கூட பவுத்தம் அவரது தெரிவாக இருக்கவில்லை.   இஸ்லாம், கிருஸ்தவம், சீக்கியம் ஆகியனவே அம்பேத்கரின் விருப்பத்தேர்வாக இருந்தது.  சாதியத்திற்குப் பலியாகியிருந்த சீக்கியமும் கிருஸ்தவமும் தலித்களை ஏற்க அஞ்சிய நிலையில் இஸ்லாம் மட்டுமே அம்பேத்கரை வரவேற்றது என்ற உண்மைச் சொல்லும் அ. மார்க்ஸ், ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் அல்லது கிருஸ்தவத்திற்கு மாறினால் அவர்கள் தேசியத்தன்மையை இழப்பர் என்றும் குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு மாறினால் முஸ்லீம்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி முஸ்லீம் ஆதிக்க ஆபத்து உண்மையாகிவிடும் என்று அம்பேத்கர் திறந்த மடலில் குறிப்பிட்டதையும் நினைவு கூர்கிறார்.

            இறுதியாக அம்பேத்கர் ஆழ்ந்த முன் யோசனைகள் மற்றும் நடைமுறையில் கண்ட உண்மைகள் வாயிலாகவே அவர் பவுத்தத்திற்கு செல்கிற முடிவை எடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.

            இந்து மதத்தில் இருந்து கொண்டு உரிமைகளுக்கான போரடிப் பின்னர் வெளியேறுதல் என்ற நிலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்திலிருந்து சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட்ட நிலை, மீண்டும் பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் பங்கேற்று தோல்வியுற்ற நிலை, அரசியல் சட்ட அவையில் தனித்துவமான பங்களிப்பு செய்தல்,  நேரு அமைச்சரவையிலிருந்து விலகி ‘பட்டியல் சாதி’ என்ற குறுகிய அடையாளத்திலிருந்து குடியரசுக் கட்சி என்ற விரிவான அடையாளத்தை நோக்கி நகர்தல் என அம்பேத்கர் வாழ்வில் கவனம் குவிக்க வேண்டிய சில அம்சங்களாக அ. மார்க்ஸ் கவனப்படுத்துகிறார்.

            அம்பேத்கர் - ரமாபாய் திருமணம், தொடர்ந்து பிறந்த 4 குழந்தைகள், அக்குழந்தைகளின் திடீர் மரணங்கள், அதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட அம்பேத்கர், ஃபானியுடனான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, இறுதிக் காலத்தில் டாக்டர் சாரதா கபீருடன்  ஏற்பட்ட பழக்கம், அவரைத் திருமணம் செய்து கொண்டது போன்ற அம்பேத்கர் வாழ்வு நிகழ்வுகளை அக்காலச் சூழல் மற்றும் அம்பேத்கரின் எழுத்துக்களுடன் இணைத்து தெளிவாக விளக்குகிறார்.  இவற்றை ஜெயமோகன் அருண்ஷோரி துணையுடன் முன் வைக்கும் அவதூறுகளுடன் இணைத்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

             அரசியல் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமையேற்ற அம்பேத்கர் கல்வி போன்றவற்றை அடிப்படை உரிமையாக்கப் போரடி முடியாத காரணத்தால் வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்தார்.  அடிப்படை உரிமைகளுக்கு உள்ள சட்ட அங்கீகாரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இல்லை.  எனவேதான் சாதித் தொழில்கள், மதுவிலக்கு, பசுப் பராமரிப்பு, எல்லா மதத்தினருக்கு பொது சிவில் சட்டம் போன்ற கோரிக்கைகள் வழிகாட்டும் நெறிமுறைகளில் கொண்டு போய் முடக்க அம்பேத்கர் காரணமாக இருந்ததை அ. மா. குறிப்பிடுகிறார்.

             நடைமுறையில் கிராமங்கள் என்பவை சாதி இந்துக்களின் ஆதிக்கத்திலுள்ளவை என்பதால் காந்தியின் கிராம ராஜ்யம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலனையும் தராது என்றுணர்ந்த அம்பேத்கர், இதை அரசியல் சட்டத்தின் முதல் பிரிவாக்க மறுத்து 31-ம் பிரிவாக ஏற்றுக் கொண்டதன் பின்னணியைப் புலப்படுத்துகிறார்.

             ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சேவை மதமாற்றம் தொடர்பான பிரச்சினையில் அம்பேத்கர் சந்திக்கிறார்.  இதன் மூலம் மதமாற்ற முடிவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம். அக்கால சமூக,அரசியல் சூழலைக்கொண்டே இப்பிரச்சினையை அணுகவேண்டியுள்ளது. அம்பேத்கருக்கு மார்க்சியம், இஸ்லாம் பற்றிய விமர்சனப் பார்வை கூட உண்டு.

            தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைதல், சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தல் போன்றவற்றை சந்தர்ப்பவாதமாக பார்க்க வாய்ப்பில்லை.   தலித்கள், முஸ்லீம்கள் போன்றோர் தேர்தல் முறையில் பங்கு பெறும்போது தமது சுயத்தைக் காப்பாற்றுவதோடு, தனது ஆதரவுத் தொகுதியை விரிவாக்க வேண்டிய நெருக்கடிக்கும் உள்ளாக நேரிடுகிறது என்பதையும் இது அம்பேத்கருக்கு மட்டுமல்ல இன்றைய தலித் தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதையும் இறுதியாக தெளிவுபடுத்துகிறார். 

                        முன்பு அ.மா. பெரியாரை பின் நவீனத்துவப் பார்வையில் அணுகி
பெரியார்? என்ற குறுநூல் மூலம் பெரியார் ஆய்வில் புது அணுகுமுறையை இணைத்தார்.   அந்த வகையில் இந்நூலும் அம்பேத்கர் பற்றியும் அவரை அணுக வேண்டிய முறை பற்றிய நாம் அறியாத பல புதிய கோணங்களையும் வெளிகளையும் திறந்து விடுகிறார். 


அம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் 
- அ. மார்க்ஸ்

பக். 48, விலை ரூ. 25.

 வெளியீடு:

            புலம்,
            332 / 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
            திருவல்லிக்கேணி,
            சென்னை - 600 005.
            செல் : 9840603499,
            மின்னஞ்சல் : pulam2008@gmail.com