சனி, பிப்ரவரி 12, 2011

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின்  பங்கு    - மு. சிவகுருநாதன்
 

          ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மிக மந்தமான நடவடிக்கைகள் தற்போதுதான் சில கைதுகளை எட்டியிருக்கிறது.   இந்நிலையில் இஸ்ரோவின் 2 லட்சம் கோடி மெகா ஊழல் அம்பலமாயிருக்கிறது.  “நீ அவல் கொண்டு வா.  நான் உமி கொண்டு வருகிறேன்.  இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்போம்” என்று கிராமங்களில் வேடிக்கையாக சொல்வதுண்டு.  இது கூடப் பரவாயில்லை.  உமி கூட கொண்டு வராமல் அரசு (மக்கள்) அவலை தின்று தீர்ப்பதற்காகத்தான் ஆயிரக்கணக்கான புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.  இந்தியாவின் இயற்கை வளங்கள் வேதாந்தா, டாடா, ஜிண்டால், ரிலையன்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன.   2 ஜி அலைக்கற்றை என்ற நவீன அறிவியலின் மூலம் கிடைத்த இயற்கை வளத்தை இந்திய ஆளும் வர்க்கம் பல ஆண்டுகளாக களவாடி வந்துள்ளது.  இதைப் போலவே செயற்கைக்கோள் ஒளிபரப்பு போன்ற பல்வேறு தகவல் தொடர்பு வசதிகளைத் தரும் 4ஜி தொழில் நுட்பத்தின் எஸ் - பாண்ட் அலைக்கற்றையை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) தனது வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் (Antrix Corporation Ltd.) இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர் எம்.ஜி. சந்திரசேகர் தொடங்கிய தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு (Devas Multimedia Private Ltd) வாரி வழங்கியுள்ளது. 


            ஜனவரி 28, 2005இல் செய்து கொண்டு இந்த ஒப்பந்தத்தின் (ஒப்பந்த எண் :-  ANTX /203/DEVAS/2005 - நாள்: 28.01.2005 ) மூலம் அரசுக்கு ரூ. 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை தனது ஆய்வில் சொல்கிறது.


            இதற்கு விளக்கம் அளித்த இஸ்ரோ 2005இல் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இந்திய விண்வெளித் துறையின் ஆய்வில் இருப்பதாகவும், பொது நலன் கருதி தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று கூறியதுடன் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.   இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் இஸ்ரோ அலைக்கற்றைகளை விற்பதில்லை என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.


            எஸ் - பாண்ட் அலைக்கற்றையை ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கோ தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கோ ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.   எனவே அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்ற கேள்விக்கே இடமில்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.   ஒப்பந்தம் போட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் ஒன்றுமேயில்லை என இவர்கள் எப்படி மறுக்கிறார்கள் பாருங்கள்.  எப்போதும் போல் நமது பிரதமர் திருவாளர் பரிசுத்தம் மன்மோகன் சிங் தொடர்ந்து மெளனியாகவே இருக்கிறார்.  மத்திய அரசின் வானியல் பிரிவின் கட்டுப்பாட்டில்தான் இஸ்ரோ உள்ளது.  இத்துறை பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பொறுப்பிலுள்ளதை இங்கு சொல்லியாக வேண்டும்.


            2005இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரோ தனது வர்த்தகப் பிரிவான ஆண்டிரிக்ஸ்-இன் தொழிற் கூட்டாளியான தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திடம் ரு. 174 கோடியைப் பெற்றுக் கொண்டு அந்த நிறுவனப் பயன்பாட்டிற்காக ஜி சாட் 6 (G SAT), ஜி சாட் 6 ஏ (G SAT -6) என்ற இரு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்.   இதற்கு இஸ்ரோ ரூ. 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவிடும்.  இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை திறன் கொண்டவை.  இதில் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை தேவாஸ் பெற்றுக் கொண்டு 20 ஆண்டுகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும்.  இதற்கென தேவாஸ் ஆண்டுக்கு ரூ. 50 கோடி மட்டும் இஸ்ரோவுக்கு வழங்கும்.


            இவ்விரண்டு செயற்கைக்கோள்கள் செயல்படத் தொடங்கியவுடன் தேவாஸ் மல்டி மீடியா ரூ.2300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிறுவனம் இந்த அலைக்கற்றையை என்ன செய்யும்? யாருக்கு விற்கும்? இதனால் கிடைக்கும் இலாபம் என்ன?  அந்த லாபத்தில் இஸ்ரோவின் பங்கு என்ன என்பதைப் பற்றி ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லை.  ஆனால் இந்த உரிமத்தை தேவாஸ் அரசின் முன் அனுமதியின்றி 60 நாட்கள் முன்பு வெறும் தகவல் மட்டும்  சொல்லிவிட்டு யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம்.  இது எப்படி இருக்கு?


            பெங்களூரில் உள்ள தேவாஸ் நிறுவனம் இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலாளர் எம். ஜி. சந்திரசேகரால் 2004 இல் தொடங்கப்பட்டு உடன் 2005இல் இவ்வொப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் செய்வதற்காகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.   இதன் பின்னணியில் இருப்போர், பிநாமிகள் பற்றிய விவரங்கள் இனிமேல் தான் வெளியாக வேண்டும்.


            அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74% நேரடி அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனத்திற்கு தற்போது இணையதள சேவை அளிப்பதற்கான உரிமம் மட்டுமே உள்ளது.   செயற்கைக் கோள் மூலமான புவிமிசை கைப்பேசி தகவல் தொடர்பு சேவை எனப்படும் GSM க்கு இனிமேல்தான் உரிமம் பெற வேண்டும்.   பொதுச் சொத்தான அலைக்கற்றையை அரசு, அதிகாரிகளுடன் கூட்டுச் சதி செய்து கொள்ளையடித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற ஒப்பந்தம் மூலம் எப்போது வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையை உண்டாக்க இஸ்ரோவின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள், பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்துள்ளனர். 


            2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் என்று CAG அறிக்கை சொல்லியது.   2 ஜி அலைவரிசை 4.4 மெகாஹெர்ட்ஸ்தான்.  50 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன் கொண்ட 3 ஜி ஏலம் அண்மையில் விடப்பட்டது.  இதன் மூலம் அரசுக்கு ரூ. 67, 000 கோடி கிடைத்தது.   இதில் அரசு நிறுவனங்களான BSNL , MTNL   போன்றவை 20 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தலா ரூ. 12847 கோடி கட்டிப் பெற்றது.   ஆனால் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வெறும் 1000 கோடிக்கு அதுவும் 20 ஆண்டுகளில்  ஆண்டுதோறும் ரூ. 50 கோடி மட்டும் கொடுப்பதாக 2005இல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்.   இதிலிருந்து அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கணக்கு பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.  இதற்கு  CAG அறிக்கை கூட தேவையில்லை.


            2 ஜி-யில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றார்கள்.  வேறு வழியின்றி 3 ஜி-யை ஏலம் விட்டார்கள்.  எஸ்-பாண்ட் அலைக்கற்றையை ரகசியமாக தேவாஸ் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.  வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அரிய அறிவியல் பயன்பாடு இதில் மட்டும் இருப்பதைக் கண்டுபிடித்து வழங்கியிருக்கிறார்களாம்.


            பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, வானியல் குழுமம் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தனியார்  நலனுக்காக மக்கள் பணத்தில் ஏன் இரு செயற்கைக் கோள்கள் ஏவப்பட வேண்டும் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை தலைமை பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை எழுப்பியுள்ளது.


            இந்த முறைகேடான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் இந்நாள் அலுவலர்கள், பிரதமர் மற்றும் இதற்கு தொடர்பான துறை அதிகாரிகள் போன்ற பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


            ஆ. ராசாவைப் போல இஸ்ரோவின் முன்னாள் இந்நாள் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.   பிரதமரும் உடனடியாக பதவி விலகி அனைத்து விசாரணைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.    தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கமான பல்லவியைப் பாடுகிறார்கள்.    ஆ. ராசாவைப் போல இன்னொடு பலிகடாவைத் தேடுகிறார்கள் போலும்.


            இந்திய ராணுவத்தில் சவப் பெட்டி வாங்குதல் தொடங்கி ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்குதலில் பெரும் ஊழல் நடைபெறுகிறது.   ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும் பல ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பிருந்தது.   இது தொடர்பாக ராணுவத்தில் விசாரணை நடைபெறுவதால் வேறு எந்த விசாரணைக்கும் ராணுவத்தினர் உட்படத் தேவையில்லை என தலைமைத் தளபதி கூறினார்.   இதைப் பற்றி யாரும் கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது.  இஸ்ரோவின் செயல்பாடுகளும் ராணுவத்தின் செயலைப் போன்று யாருடைய வினாக்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இங்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். 


            இஸ்ரோவின் நடவடிக்கைகள் குறிப்பாக சந்திராயன் உள்ளிட்ட மக்கள் பணத்தை வீணாக்கும் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்பதில்லை.   பல ஆண்டு காலம் செயல்பட பல நூறு கோடிகள் செலவழித்து அனுப்பப்பட்ட சந்திரான் - 1 கலம் 312 நாட்கள் மட்டுமே செயல்புரிந்து தோல்வியில் முடிந்து போனது.   ஆனால் மாதவன் நாயர் இதை ஒத்துக் கொள்ளவில்லை.   சந்திராயன் -1-ன் பணிகளில் 95% பூர்த்தியடைந்துவிட்டதாக கதையளந்தனர்.  வெறும் 300 நாட்களில் எப்படி முடிந்தது என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. 


            சந்திராயன் -2 திட்டத்தை உடன் தொடங்கவும் அதற்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்யவும் பொய்யான தகவல்களையும் புள்ளி விவரங்களையும் அளிக்க இஸ்ரோ என்றுமே தயங்கியதில்லை.   இந்தியா வல்லரசாதல், அறிவியல் தொழிற்நுட்பம், செயற்கைக் கோள் வழி தகவல் தொடர்பு வசதிகள் என்றெல்லாம் கூறி ராணுவத்தைப் போன்று வினாக்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இஸ்ரோவை வளர்த்தெடுத்ததன் விளைவுதான் இந்த பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் ஒப்பந்தம்.


            “இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவே இல்லையே, பிறகெப்படி இழப்பு ஏற்படும்?” என்று சொல்பவர்கள் CAG அறிக்கை மூலம் இப்பிரச்சினை வெளியே வராவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?  2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிப்பட்ட பிறகாவது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கலாம்.  ஆனால் எதுவும்  செய்யாமல் நடப்பது நடக்கட்டும் என்று இருந்த மன்மோகன் சிங் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த முதற் குற்றவாளியாகிறார்.   அவர் உடனடியாக பதவி விலகி நேர்மையான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும்.


ஒரு பின்குறிப்பு:-

             அரசு வழக்கம்போல இஸ்ரோ அலைக்கற்றை ஊழலை விசாரிக்க இரு நபர் குழுவை அமைத்திருக்கிறது.   முன்னாள் அமைச்சரவைச் செயலரும் இன்றைய திட்டக் குழு உறுப்பினருமான பி.கே. சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விண்வெளி ஆணைய உறுப்பினரும் வானியல் நிபுணருமான ரோதம் நரசிம்மாவும் இடம் பெற்றுள்ளனர். 


            “திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல” என்பதற்கு உதாரணமாக ஊழல் வழக்கொன்று நிலுவையிலிருக்கும் பி.ஜே. தாமஸ்-ஐ மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்தனர்.  இந்த ஊழலில்  திருடனையே போலீஸாக ஆக்கி திருட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. 


            இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆண்டிரிக்ஸ்-தேவாஸ் இடையே செய்து கொள்ளப்பட்ட அந்த மோசடி ஒப்பந்தத்தை டிசம்பர் 01, 2005இல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது.   அப்போது அமைச்சரவைச் செயலராக இருந்தவர்தான் இந்த பி.கே. சதுர்வேதி.  ஆண்டிரிக்ஸ் - தேவாஸ் இடையேயான ஒப்பந்தம் ஏன், எப்படி ஏற்பட்டது என சதுர்வேதி நன்கு அறிந்திருப்பார்.   எனவே அவர் விசாரிப்பதுதான் நல்லது என்கிறார் காங்கிரஸின் அம்பிகா சோனி.   இது எப்படி இருக்கு?  சதுர்வேதியும் தம்மால் வெளிப்படையான அறிக்கையை தர முடியும் என்கிறார்.  திருடன் / கொலைகாரன் அந்தத் திருட்டை / கொலையை எவ்வாறு செய்தான் என்று நடித்துக் காட்டச் சொல்வதுண்டு.   ஆனால் அவனையே விசாரணை அதிகாரியாக நியமிக்கும் நிலை இதுவரை இல்லை என்றாலும் இனி நடந்தாலும் வியப்படைய வேண்டியதில்லை.


            இந்த முறைகேட்டில் இஸ்ரோ (ISRO), விண்வெளி ஆணையம் (DoS), பிரதமர் அலுவலகம், அமைச்சரவை போன்ற பல்வேறு அமைப்புகளும் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட தனிநபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களே விசாரணை செய்து அறிக்கைத் தருவது என்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாகும்.  2 ஜி அலைக்கற்றை ஊழலில் எப்படி JPC விசாரணையை மறுத்தார்களோ அதைப் போல பிரதமர் அமைத்திருக்கும் இவ்விசாரணைக் குழு மூலம் பிரதமருக்கு இம்முறைகேட்டிலும் தொடர்பிருக்கும் என்ற அய்யத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக