புதன், மே 11, 2011

தமிழகத் தேர்தல் களம் : சில சிந்தனைகள்

தமிழகத் தேர்தல் களம் :  சில சிந்தனைகள்
 

- மு. சிவகுருநாதன்






      கிரிக்கெட் சூதாட்டங்களுக்கு இணையாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேரங்களை முடிவு செய்து களத்தில் இறங்கி வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றன.  நீரா ராடியா போன்ற அரசியல் தரகர்களும், இந்தியப் பெருமுதலாளிகளும் பிரதமரின் அதிகார எல்லைக்குட்பட்ட அமைச்சர்கள் நியமனம், துறை ஒதுக்கீடு போன்றவற்றை எடுத்துக் கொண்டதைப் போல கூட்டணி பேரங்களை நடத்தி முடிக்க பெருமுதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள்.

      அதிகாரங்களைத் தொடர்ந்து சுவைக்க விரும்பும் கட்சியில் இரண்டில் ஒன்று என ஏதேனும் ஒரு கூட்டணியில் அடைக்கலம் புகுந்திருக்கின்றன.  இவர்கள் வெளிப்படையாகச் சொல்லும் தகவல்களுக்கு திரை மறைவில் என்ன வகையான பேரங்கள் நடைபெற்றது என்பதும், எவ்வளவு கைமாறியது என்பதும் தேர்தல் ஆணையத்தால் கூட கண்டுபிடிக்க முடியாத விஷயங்களாகத் தான் இருக்கும்.

      இந்த அதிகாரத்தை நோக்கிய காய் நகர்த்தலில் மூன்றாவது அணி அல்லது மாற்று அணி என்பதே இல்லாமற் போய்விட்டது.  நிறைய தொகுதியில் போட்டியிடும் காரணத்தால் பா.ஜ.க மூன்றாவது அணிக்கான உரிமையைக் கோர முடியாது.  ஏனெனில் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு எவ்வித செல்வாக்கும் இல்லை.  2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 8.38ரூ வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. இந்த முறையும் அதே சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்று அதீத நம்பிக்கை கொள்ள வேண்டியதுமில்லை.  தனித்து நின்ற ஒரே காரணத்திற்காக கட்சி சாராத வாக்காளர்கள் இம்முறையும் தே.மு.தி.கவிற்கு வாக்களிப்பார்கள் என சொல்ல முடியாது.
     
      தேர்தலுக்கு முந்தைய - பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல வெளியாகியிருக்கின்றன.  அவற்றில் பெரும்பாலானவை அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகவே அமைந்திருக்கின்றன.  எப்போதும் போலவே ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான அலையொன்று உருவாகியிருப்பதை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.  2ஜி அலைக்கற்றை ஊழல் செய்திகள் கிராமப்புறங்கள் வரை சென்றடைந்திருக்கிறது.  இவ்வூழல் இத்தேர்தலை பாதிப்பை நிகழ்த்துமா என்ற கேள்வியை விட விலைவாசி உயர்வு போன்று அடித்தட்டு மக்கள் பாதிப்படையக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

       இப்பொழுது தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருப்பதை காரணம் காட்டி அதற்கென, தனி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.  மேலும், இது ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமென்றும் சிலர் கணிக்கின்றனர்.  வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. வீடு தோறும் ‘பூத் சிலிப்’ வழங்கியது, ஜனவரி 25 -ஐ வாக்காளர் தினமாக அறிவித்து வாக்களிக்க பிரச்சாரம் செய்தது போன்ற பல காரணங்கள் உண்டு.  இறந்தவர்களை உடன் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது, வெளிநாட்டில் குடியிருப்போருக்கு இரட்டைக் குடியுரிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஓராண்டு காலத்தில் கூலி வேலைக்கு வெளியூர் / வெளிநாடு சென்றாலும் கூட அவர்களது பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது.  இதுவும் வாக்குப்பதிவு சதவீத அதிகரிப்புக்கு ஒரு காரணம்.  எனவே, வாக்குப்பதிவு சதவீத அதிகரிப்பு ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருக்குமென கூறிவிட வாய்ப்பில்லை.
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பதைப் போலத்தான் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வதும்.  மத்தியில் பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை நிலைப்பாடுகளில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.  அதைப் போல தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு வேறுபாட்டைக் கூட காட்ட முடியாது.  ஆனால் பல ஒற்றுமைகளை மட்டுமே இனம் காண முடியும்.

     70 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பழுத்த அரசியல்வாதியாக அறியப்படும் மு. கருணாநிதி, ஜெயலலிதா மட்டும் ஊழல் செய்யவில்லையா?  முறைகேடுகளில் ஈடுபடவில்லையா?  வாய்தா வாங்கி வழக்குகளை இழுத்தடிக்கவில்லையா?  என்றெல்லாம் எதிர்க்கேள்விகளை அடுக்குகிறார்.  ஊழலுக்கும், முறைகேட்டிற்கும், சட்டமீறலுக்கும்
மு. கருணாநிதிக்கு ஜெ. ஜெயலலிதாவே அளவுகோலாக மாறியிருப்பது யாருக்கும் அவமானமாகப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி ஒரு ஊழலோ, முறைகேடோ அம்பலமாகிறபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு பா.ஜ.க. தலைமையிலான தேசிய முன்னணி அரசிலும் இவ்வாறு இருந்ததாக கைகாட்டுகிறது.  அதைப் போல இங்கு தி.மு.க அரசு அ.இ.அ.தி.மு.க அரசில் இதே நடைமுறைதான் பின்பற்றப் பட்டதாக சொல்லி அதற்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள்.  இதெல்லாம் பார்க்கும்போது 5 ஆண்களுக்கொருமுறை ஏன் தேர்தல், ஆட்சி மாற்றம் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

       மே 13 அன்று வெளியாகவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எவ்வித பலனும் விளைந்திடப் போவதில்லை.  ஆட்சியதிகாரம் மாறுமே தவிர கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை.  அரசின் சாராய விற்பனை ‘டாஸ்மார்க்’ தொடரும், மணற்கொள்ளை தொடரும், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டங்கள் தொடரும், தனியார் கல்விக்கொள்ளை தொடரும், ஊழல் - முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் தொடரும்.  சுற்றுச் சூழலை மாசுபடுத்தி விவசாய நிலங்களை அழித்து உள்ளூர் - வெளியூர் பெரு முதலாளிகளுக்கு தமிழகத்தைத் தாரை வார்க்கும் பணி தடையேதுமின்றி தொடரும்.

         இங்கு மு. கருணாநிதிக்கும், ஜெ. ஜெயலலிதாவிற்கிடையே ஊழல் செய்வதில் யார் பெரியவர் என்ற போட்டியே நடைபெறுகிறது.  அந்தப் போட்டியில் தற்போது மு. கருணாநிதி வெற்றி பெற்றிருக்கிறார்.  வருங்காலத்தில் இந்த வெற்றியை ஜெ. ஜெயலலிதா முறியடிக்கக் கூடும்.  அதற்கான வயதும், வாய்ப்பும் அவருக்கு உள்ளது.  ஊழலுக்கு தான்தான் ‘அத்தாரிட்டி’ என்று சொல்லாமல் சொல்லி மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இன்றி மக்கள் வரிப்பணம் வெறுமனே பாழாக்கப்படுகிறது.  ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலர் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகியிருப்பது குறித்து யாரும் வியப்போ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை.

      நாளை ஜெயலலிதா, “என்மீது ஊழல் வழக்கு போட்ட நீ மட்டும் ஒழுங்கா?” , என்று எதிர்க்கேள்வி கேட்டு கருணாநிதி மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்து தனி நீதிமன்றங்கள் கூட அமைத்து விசாரிக்கக் கூடும்.  அவ்வழக்குகளும் பல்லாண்டுகள் இழுத்தடிக்கப்படும்.  முடிவில் எந்தப் பயனுமின்றி மக்கள் பணம் விரயமாக்கப்படுவது மட்டுமே நடக்கும்.  இவர்களில் பலர் விரைவில் ஜெயலலிதாவின் தலைமையில் இணையப் போவதை நாம் விரைவில் பார்த்து மகிழ இருக்கிறோம்.  நாம் 5 ஆண்டுகளுக்கொருமுறை இந்த மாதிரியான கேவலக் கூத்துக்களைப் பார்த்துப் பார்த்து மிகவும் பழகிப் போய்விட்டோம்!

        எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் அதிகளவு பணம் விளையாடியதை நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் மூலம் கண்டுகளித்தோம்.  சில ஆயிரம் கோடிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டாலும் பல ஆயிரம் கோடிகள் மிக எளிதாக வாக்காளர்களைச் சென்றடைந்துவிட்டன.  இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும்.  ஆனால் வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையத்தால் கூட எதுவும் செய்ய முடியாமற் போனது குறித்து நடுநிலையாளர்கள் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.  ஆளுங் கட்சியான தி.மு.க திருமங்கலம் இடைத்தேர்தல் ‘பார்முலா’ வை 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது.  இத்தேர்தலில் தி.மு.க கூட்டணி வென்றால் அவ்வெற்றி திருமங்கலம் ‘பார்முலா’ விற்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருத வேண்டியிருக்கும்.  அதன் பிறகு இங்கு ஜனநாயகம் என்று பேசுவதெல்லாம் கேலிக் கூத்தாகவே இருக்கும்.  இங்கு ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் ஒரே பார்முலாவைப் பயன்படுத்தியது தான் ஜனநாயக கேலிக் கூத்தின் உச்சக்கட்டம்.

       அடித்தட்டு, நடுத்தட்டு என்று வர்க்க பேதமின்றி வாக்குக்கு பணம் பெறும் கலையை நன்றாக கற்றிருக்கிறார்கள்.  பணத்தை வாங்க மறுக்கும் தன்மானம் நடுத்தட்டை விட ஒப்பீட்டளவில் அடித்தட்டிற்கே அதிகம் என்பதை இங்கு கூறியாக வேண்டும்.  வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வெற்றுக் கூச்சலிடுவது நடுத்தரவர்க்க மனோபாவமின்றி வேறில்லை.

          தேர்தல் ஆணையம் எவ்வளவுக் கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் தி.மு.கவின் பிரச்சார ‘பீரங்கியான’ வடிவேலு போன்ற காமெடியன்களின் ஆபாசப்பரப்புரைகளை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை.  இந்த அசிங்கங்கள் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்பட்டது மிகுந்த கண்டத்திற்குரியது.  திராவிடப் பாரம்பரியம் பேசும் தி.மு.கவின் முன்னணித்தலைவர்கள் அனைவரும் அதாவது மு. கருணாநிதியின் குடும்பத்தினர் ஊழல் மற்றும் பல்வேறு புகார்களில் சிக்கியிருக்க, தி.மு.க தலைமை காமெடி நடிகர் வடிவேலுவிடம் சரணடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  சென்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க பிரச்சார பீரங்கியான சிம்ரன் இப்பொழுது எங்கே போனாரென்று தெரியவில்லை.  அடுத்த தேர்தலில் சிம்ரனைப் போன்று வடிவேலுவும் காணாமற் போயிருப்பார்.  இவர்களுக்கு சினிமா வாய்ப்பில்லாதபோது இது பணம் கொட்டும் மற்றொரு ‘கால்ஷீட்’ அவ்வளவுதான் !

       வடிவேலு தன்னுடைய பிரச்சாரத்தில் ஜெயலலிதாவைப் பற்றிய எந்த விமர்சனமும் இல்லாததன்  காரணம் அடுத்த தேர்தலில் ஜெயலலிதா ‘நடிக்கக்’ கூப்பிட்டால் என்ன செய்வதென்ற முன்யோசனைதான்.  விஜயகாந்தை திட்டுவதற்காக அதுவும் குடிகாரன் என்று திட்டுவதற்காக களமிறக்கப்பட்டவர்தான் வடிவேலு.  விஜயகாந்த் போன்ற எண்ணற்ற குடிகாரர்களை நம்பித்தானே தி.மு.க அரசு ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது.  தமிழக அரசின் ஒட்டுமொத்த வருமானமே இந்தக் குடிகாரர்களை நம்பித்தான் இருப்பது வடிவேலுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம்?  ஆனால் கருணாநிதிக்கு நன்கு தெரியுமே!  ‘டாஸ்மாக்’ வருமானத்தை நம்பித்தானே இந்த இரண்டு கூட்டணிகளும் இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றன.

         ஏனிந்த இலவசத் திட்டங்கள்?  தேச பாதுகாப்பு, தேசபக்தி என்றெல்லாம் சொல்லி இராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது அதில் கிடைக்கும் ‘கமிஷன்’ தொகையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.  அதைப்போலவே இலவச மிதிவண்டி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்ற திட்டங்கள் வரும்போது கிடைக்கும் ‘கமிஷன்’ தொகை ஆளும் வர்க்கத்திற்கு நிரந்தர வருமானத்திற்கு வழிவகுப்பதோடு இலவச டி.வி. மூலம் தன் குடும்ப கேபிள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் வளர்ச்சி மற்றும் நிரந்தர வருவாய் போன்ற பிற வசதிகளும் ஏற்படுகின்றன.  இதன் காரணமாகவே உருப்படாத டி.வி மற்றும் சைக்கிள்கள் இலவசம் என்றபெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையிட குறுக்குவழியை நம் ஆட்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அதனால் இப்போது மிக்சி, கிரைண்டர், ஃபேன், மடிக்கணினி என்று இலவசங்களைப் பட்டியலிட முடிகிறது.  இதன் மூலம் அவர்களுக்கு பல கோடி கமிஷனாகக் கிடைக்கப் போகிறது.

       ஆளுங்கட்சியின் ஊடகப்பலம் (சன் மற்றும் கலைஞர் குழுமத் தொலைக்காட்சிகள்) மூலமாக அனைத்து நிகழ்ச்சிகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மறைமுக பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியவில்லை.  ‘மானாட, மயிலாட ....’ என்ற ஆபாசக் கூத்திலும் கூட தேர்தல் விளம்பரமே செய்யப்பட்டது.  மேலும், விஜயகாந்த் அடித்தார், திட்டினார் என்று ‘கிராபிக்ஸ்’ செய்து வெளியிட்ட காட்சிகள் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதைக்கூட ஆளுங்கட்சி உணர்ந்ததாகத் தெரியவில்லை.

          ஒருமுறை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சவுக்கடி கொடுப்பேன் என்றார்.  அதை யாரும் எதிர்க்கவில்லை.  மக்களின் பொதுப்புத்தி இவற்றிற்கு ஆதரவாகவே செயல்படுவதை பொதுமக்களின் உளவியலைக் கொண்டு அறிய முடியும்.  இதுகூட விஜயக்காந்திற்கு கூடுதல் ஆதரவு ஏற்பட வழிவகுக்கலாம்.  ஆனால், தே.மு.தி.க என்பது பல்வேறு கட்சிகளிலிருந்து கழித்துவிடப்பட்ட கழிசடைகளின் கூடாரம் என்பதை பொதுமக்கள் எளிதில் உணரப்போவதில்லை.

            தேர்தல் அறிக்கை என்பது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள், பணிகள் நிறைவேற்றுவோம் என்பதை பட்டியலிட வேண்டுமே தவிர வாக்காளர்கள் பிச்சைக்காரர்களாகவும் தங்களை ஏதோ எஜமானர்களாகவும் நினைத்துக் கொண்டு இந்த இலவசங்களைப் பட்டியலிடுகிறார்கள்.  இது உண்மையாக கண்டித்து அகற்றப்பட வேண்டிய ஒன்று.  தேர்தல் ஆணையம் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

         மிக மோசமாக இருந்த மாநிலங்களாகக் கருதப்பட்ட பீகார் போன்றவை நல்ல பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்க தமிழ்நாட்டை மிககேவலமான ஒரு நிலைக்கு நமது ஆட்சியாளர்கள் தள்ளியிருக்கிறார்கள்.  தமிழர்கள் தம் பெருமையாக பீற்றிக் கொள்ளும் பலவற்றுள் ஊழல், வாக்குப்பணம், சினிமா மோகம் போன்ற பல்வேறு புதிய கண்ணிகளும் இணைந்துள்ளன.  உலக அரங்கில் கூட தமிழ்ப்பெருமை பேச இதுவும் பேருதவி புரியும் !  நமது அண்டை மாநிலமான கேரளாவில் தேர்தல் சூழல் இவ்வளவு சீரழிவை எட்டாதது நமது பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது !

       பிரவின்குமார், அமுதா போன்ற மாநிலத் தேர்தல் அதிகாரிகளாலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், திருச்சி கோட்டாட்சியர் சங்கீதா போன்ற ஒருசில நேர்மையான தேர்தல் அலுவலர்களாலும் ஒரு மாநிலம் முழுவதும் நேர்மையான தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியமில்லை.  ஆளுங்கட்சிக்கு விசுவாசம் காட்டக்கூடிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையைக் கொண்டே தேர்தல் ஆணையம் தனது பணிகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது.  இருசக்கர வாகனங்களில் செல்வோர் பேண்ட் ஷிப்பைத் தவிர அனைத்து ஷிப்களையும் திறந்து காட்டிக் கொடிருக்க ஆளுங்கட்சி கொடியேற்றிய வாகனங்கள் அனைத்தும் எவ்வித சோதனையுமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டதை நேரிலேயே காண முடிந்தது.  காவல்துறை தமிழகமெங்கும் உரிய முறையில் சோதனை நடத்தியிருந்தால் பல ஆயிரம் கோடிகளைக் கைப்பற்றியிருக்க முடியும்.  அது நடக்கவில்லை.

        தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் மு. கருணாநிதி, ப. சிதம்பரம் வகையறாக்கள் ஆளும் கட்சிகளின் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றையும் அவர்கள் செய்யும் தேர்தல் தில்லுமுல்லுகளையும் பற்றி வாய்திறப்பதில்லை.  இவையெல்லாம் இல்லாவிட்டால் ப. சிதம்பரம் போன்றோர் பதவியில் அமர்ந்திருக்க முடியுமா என்ன?

      இப்பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் சர்வரோக நிவாரணி என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட ஓரளவிற்கு பலனளிப்பது விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.  இதில் கூட்டணி பேரங்களுக்கு வழியில்லை.  ஒவ்வொரு கட்சியும் அல்லது அமைப்பும் தனித்தனியே தேர்தலை சந்திக்கும்.  அவை மாநிலம் முழுவதும் பெறும் வாக்கு சதவீதத்தைக் கொண்டு அந்தக் கட்சியே உறுப்பினர்களை நியமனம் செய்து கொள்ளும்.  பிறகு வேண்டுமானால் கூட்டணி சேர்ந்து கொள்ளட்டும்.  இடைத்தேர்தலும் தேவையில்லை.  ஒரு உறுப்பினர் இறந்துபோனால் வேறொரு உறுப்பினர் அந்தக் கட்சியால் நியமனம் செய்யப்படுவார்.  எனவே, திருமங்கலம் பார்முலாக்களுக்கு வேலையில்லாமற் போய்விடும்.

        ஆளுநர் ஆட்சியின் கீழ் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என்று கூட பரிந்துரை சொல்லப்படுகிறது.  மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் என்ற முன்னாள் அரசியல்வாதிகள் ஊழல்களின் இந்நாள் அரசியல்வாதிகளையே விஞ்சி விடுகின்றனர்.  எனவே இந்த ஆளுநர் பதவிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

         மாநில அரசின் ஆட்சிக்காலம் முடிந்தவுடன் அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் நிர்வாகத்தை தன் கையில் வைத்துக் கொண்டு ஒரு மாத காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய அரசை அமைக்க வழிகோல வேண்டும்.  தேர்தல் பரப்புரைக்கு 10 நாட்கள் போதுமானது.  இந்த நாளில் மிக எளிமையான பரப்புரை நடத்த உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படும் போது எதிர்ப்பேச்சு பேசவாய்ப்பில்லாமல் போகும்.

           இந்த பரப்புரையில் வேறு மாநில அமைச்சர்களோ, அல்லது மத்திய அமைச்சர்களோ பிரதமர் உள்ளிட்ட எவரும் பங்கேற்ற அனுமதியில்லை.  அப்படி அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்கள் தத்தமது பதவிகளை விட்டு விலகி பரப்புரையில் ஈடுபடலாம்.  தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் பழைய பதவிக்கு வாய்ப்பிருந்தால் மட்டுமே திரும்ப முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

        இந்த நிலை இருந்தால் ‘நான் முதலமைச்சரா, தேர்தல் ஆணையம் முதலமைச்சரா? என்று எனக்கே அய்யம் வருகிறது என மு. கருணாநிதி புலம்ப வேண்டிய அவசியமிருக்காது.  மத்திய அமைச்சரான எனக்கு போதிய பாதுகாப்பு இல்லை என மு.க. அழகிரி பயப்பட வேண்டிய தேவையும் இல்லை.  பிரதமர் மன்மோகன்சிங் வருகைக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஒரு மாநகரில் குவிக்க வேண்டிய தேவையும் இருக்காது.  முதலமைச்சர் மு. கருணாநிதி போட்டியிடும் தொகுதி என்பதால் அவரின் வருகைக்காக தலைமைச் செயலகத்தை திருவாரூருக்கு இடம்மாற்ற வேண்டியதும் இல்லை.  ஆளும் கட்சி அமைச்சர்கள் மந்திரிகளாகவும், வேட்பாளர்களாகவும் ஒரே சமயத்தில் இரட்டை வேடம் போட வேண்டிய நிலையும் இல்லை.  இது நடக்குமா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை.  லோக்பால் மசோதாவிற்கு நாடே திரண்டு நின்று மத்திய அரசை பணிய வைத்து கீழே இறங்க வைக்கும் போது இம்மாதிரியான வேலைகளும் எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

         மத்தியத் தேர்தலிலும் இதே நடைமுறையை அமல் செய்யலாம்.  ஆளுநர் பதவியைப் போல அதிகாரமில்லாத பொம்மை குடியரசுத்தலைவர் பதவி தூக்கி எறியப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் இணைந்து தேர்தல் கால நிர்வாகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அமைதியான தேர்தலை கடத்தி முடிக்கலாம்.  ஒரு மாத காலத்திற்கு பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் போன்ற பதவிகளில் ஆட்கள் இல்லையென்றால் ஒன்றும் குடி முழுகிவிடப் போவதில்லை.

       49-ஒ-விற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தனி பொத்தான் வைத்தல் போன்ற வேறு சில தேர்தல் சீர்திருத்தங்களையும் இத்துடன் இணைத்து அமுல் செய்ய வேண்டும்.  மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாக தேர்தல் நடத்தும்போது உச்சபட்ச முறைகேடுகள் நடக்கும் தமிழகத்தில் மட்டும் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அனைத்து கட்சிகளின் கோரிக்கை அய்யத்திற்கிடமானது.  பள்ளித்தேர்வு நடைபெறுவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் ஒரே கட்டத் தேர்தல் என்ற கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்த்தது சரியாகப்படவில்லை.  அதிகளவு பாதுகாப்பு வசதிகள் செய்யமுடியாமற் போவதால் நிறைய முறைகேடுகள் நடைபெற ஏதுவாக அமைந்து விடுகின்றன.  வாக்குப்பதிவை வீடியோ எடுப்பது மட்டும் இதற்கு தீர்வாகாது.  தமிழகத் தேர்தலையும் பல கட்டங்களாகப் பிரித்து நடத்துவது குறித்தும் தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக