ஞாயிறு, மே 29, 2011

சமச்சீர்க்கல்வி ஒத்திவைப்பை அரசு கைவிட வேண்டும் கல்வியாளர்கள் கோரிக்கை


சமச்சீர்க்கல்வி ஒத்திவைப்பை அரசு கைவிட வேண்டும்

                                கல்வியாளர்கள் கோரிக்கை

                                                                                                                                                             
சென்னை,                                                       
மே 24, 2011

     ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

     கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

    கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

    பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

    முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.

     சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

      சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

      பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

    தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

      முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

   பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

      தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

      கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

     முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

      நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

     கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1. பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,
     
தொடர்பு: 
அ. மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, சென்னை- 6000 020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக