வியாழன், மே 26, 2011

கிருமாம்பாக்கம் தேர்தல் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை

கிருமாம்பாக்கம் தேர்தல் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                      புதுச்சேரி,

                                                                                                                      ஏப்ரல் 22, 2011.            புதுச்சேரி நகரத்திலிருந்து கடலூர் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள கிருமாம்பாக்கம் கிராமம் ஏம்பலம் (ரிசர்வ்) தொகுதியில் உள்ளது.  இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அமைச்சர் திரு. கந்தசாமி காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் முன்னாள் அமைச்சர் திரு. ராஜவேல் அ.இ. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் நடந்துள்ள தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.   இக்கிராமத்தில் தேர்தல் முடிந்த ஏப்ரல் 13 இரவிலும் ஏப்ரல் 14 காலையிலும் நடந்த கலவரத்தில் சுமார் 23 + 5 = 28 வீடுகள் தாக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சில வீடுகளில் நகைகள், பணம் முதலியன கொள்ளையிடவும்பட்டுள்ளன.  கடும் அச்சமும், கலவரச் சூழலும் தொடர்ந்து அங்கு நிலவுகிறது.            அது தொடர்பான உண்மைகளை அறிய தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.            1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

            2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

            3. இர. அபிமன்னன், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,(PUCL), புதுச்சேரி

            4. இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி

            5. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), கடலூர்

          

            இக்குழுவினர் நேற்று (21.04.2011) மதியம் கிருமாம்பாக்கம் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட இரு தரப்புகளையும் சேர்ந்த 28 வீடுகளையும் பார்வையிட்டது.  இவ்வீடுகளைச் சேர்ந்த மக்களில் அங்கிருந்த எல்லோரையும் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டது.  சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் நேரில் பார்த்து மதிப்பிட்டது.  பின்னர் இரு வேட்பாளர்களையும் நேரிலும், புதுச்சேரி ஊரக (Rural) காவல்துறை கண்காணிப்பாளர்
திரு. தெய்வசிகாமணியைத் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசியது.பின்னணி:            இன்றைய ஏம்பலம் தொகுதி சீரமைப்பிற்கு முந்தைய பாகூர் ரிசர்வ் தொகுதி என்பன கலவரச் சாத்தியமுள்ள பகுதியாக (Sensitive Constituency) 1985 முதல் இருந்து வந்துள்ளது.  1985ல் ஜனதா கட்சியின் ச.ம.உ. திரு.உத்திரவேல் (ராஜவேலின் சகோதரர்) எதிர்த் தரப்பினரால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.  தொடர்ந்து மேலும் இரு கொலைகள் நடந்துள்ளன.  இறுதியாக நடந்த கொலையில் சுப்பிரமணி என்பவர் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கில் அமைச்சர் கந்தசாமியின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 17 பேர் தண்டிக்கப்பட்டுள்னர்.  நால்வர் சிறையிலும் 13 பேர் பிணையிலும் (Bail) உள்ளனர்.            ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்கு பிரச்சினை இருந்துள்ளது.  இம்முறை (2011) தேர்தல் அறிவிக்கப்பட்டு மேற்படி இரு வேட்பாளர்களும் களம் இறங்கியது தொடங்கி மீண்டும் பரஸ்பரம் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.  சென்ற ஏப்ரல் 3 அன்று வேட்பாளர் ராஜவேலுவின் வீடு புகுந்து அவரது அண்ணன் பழனிவேலின் மகள் சத்யாவைக் கத்தியைக் காட்டி இருவர் மிரட்டியுள்ளனர்.  இது தொடர்பாக அய்யப்பன் (த/பெ. ஏழுமலை), அய்யப்பதாஸ் (த/பெ. சிவதாசன்) இருவர் மீது ராஜவேலு புகார் அளித்துள்ளார்.  அதே போல வேட்பாளர் கந்தசாமி காரில் வந்து கொண்டிருந்த போது கரிக்கலாம்பாக்கத்தில் அவரது காரை எதிரணியினர் மறித்துத் தாக்க முற்பட்டதாகவும், எனினும் தான் புகார் அளிக்கவில்லை எனவும் கந்தசாமி எங்களிடம் கூறினார்.            இந்நிலையில் தேர்தல் முடிந்து ஏப்ரல் 13 இரவு கடைசி நேரத்தில் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சிறிய தள்ளுமுள்ளின் தொடர்ச்சியாக இரு தரப்பினரது வீடுகளிலும் கல் வீசி சிறிய அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  கந்தசாமியின் ஆதரவாளரான சர்க்கரை கிராமணி என்பவரின் காம்பவுண்ட் விளக்கு இரண்டும் கண்ணாடி ஜன்னலும் கல்வீச்சில் உடைந்துள்ளன.  ராஜவேலுவின் ஆதரவாளர்களான துரைசாமி நாயுடு, நாராயணசாமி, ரங்கநாதன், சுதாகர், குணசேகர் முதலானோரின் வீடுகளில் சிறிய அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  ரங்கநாதனின் மனைவி பொற்சிலை ஓடிச் சென்று பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தன்வந்திரியிடம் அழுது, உடனே வந்து காப்பாற்றும்படி வேண்டியுள்ளார்.  அவர் “நீ ராஜவேல் பார்ட்டியா? கந்தசாமி பார்ட்டியா?” எனக் கேட்ட ராஜவேல் ஆதரவாளர் எனத் தெரிந்தவுடன் பிரம்பால் அடித்துள்ளார்.  இன்றும் அவருக்கு காயமுள்ளதை நாங்கள் பார்த்தோம்.            இப்படியான பிரச்சினை ஏற்பட்டும் கூட காவல்துறையினர் உரிய சிரத்தை காட்டாததோடு காவலுக்கு இருந்தவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.            அடுத்த நாள் (ஏப்ரல் 14) காலையில் அமைச்சரும் வேட்பாளருமான கந்தசாமி தனது ஆதரவாளர்கள் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ சர்க்கரை கிராமணியின் வீட்டிற்கு வந்துள்ளார்.  சுமார் 100 பேர் அடங்கிய ஒரு ஊர்வலம் போல அவர் வந்ததாக ஊர் மக்கள் பலரும் குறிப்பிட்டனர்.  எனினும் கந்தசாமியின் வீடு தாக்கப்பட்டதை விசாரிக்கவே வந்ததாகவும், தனியேதான் வந்ததாகவும் கேள்விப்பட்டு சில ஆதரவாளர்கள் உள்ளூரிலிருந்தும், பிள்ளையார்குப்பம், வம்பாபேட் முதலிய பகுதியிலிருந்தும் வந்து குழுமியதாகவும் எம்மிடம் கூறினர்.            சற்றுநேரத்தில் ராஜவேல் ஆதரவாளர்களின் வீடுகள் கடுமையாகத் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன.  எதிர்வினையாகக் கந்தசாமியின் தரப்பினரின் சில வீடுகளும் கடை ஒன்றும் தாக்கப்பட்டன.                        இவ்வீடுகள் அனைத்தையும் நாங்கள் நேரில் பார்த்தோம்.  ராஜவேல் தரப்பினரது 23 வீடுகள் கடுமையாகத் தாக்கி சூறையாடப்பட்டுள்ளன.  சுமார் 50க்கும் மேற்பட்டோர் கத்தி, கடப்பாரை, இரும்பு பைப் சகிதம் தாக்கியுள்ளனர்.  முத்துக்கிருஷ்ணன், சர்க்கரை கிராமணி, கோவிந்தன் நாயுடு, முருகையன், மோகன்ராசு, சங்கரதாசு, அய்யப்பதாசு, ஸ்ரீராம், சிவபாலன், நாராயணன் முதலிய உள்ளூரினரும், பெயர் தெரியாத பல வெளியூர் ஆட்களும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


            ஒவ்வொரு வீட்டிலும் கண்ணாடி ஜன்னல்கள், ஸ்விட்ச் போர்டுகள், ஓடுகள், டி.வி., ஃபிரிட்ஜ், வாசிங் மெசின், கிரைண்டர், பீரோ, மோட்டார் சைக்கிள் முதலியவை தாக்கி உடைக்கப்பட்டுள்ளன.  எல்லா வீடுகளிலும் இரு சக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டு, சில எரிக்கப்பட்டும் உள்ளன.  எடுத்துக்காட்டாக, சங்கர் என்பவரின் வீட்டில் டி.வி., ஃபிரிட்ஜ் தவிர டாடா ஏஸ் வாகனமும், ஆட்டோவும் உடைத்துக் கவிழ்க்கப்பட்டுள்ளன.  துரைசாமி நாயுடுவின் வீட்டில் ஒரு குவாலிஸ் கார், மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி முதலியன தாக்கி நொறுக்கப்பட்டுள்ளன.  எல்லா வீடுகளிலும் இப்படிக் கடும் தாக்குலும் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதும் நடந்துள்ளன.  ஜெயராம கிராமணியின் மகன் சங்கரின் தையற்கடையில் இருந்த நான்கு தையல் எந்திரங்கள் உடைத்து நொறுக்கியும், தூக்கியும் செல்லப்பட்டுள்ளன.  பிற வீடுகளிலும் இதே போல் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  பல வீடுகளில் பணமும், நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாகவும் எம்மிடம் கூறப்பட்டது.  எடுத்துக்காட்டாக ராமசாமி நாயுடுவின் மகன் ஜனார்த்தனத்தின் வீட்டிலிருந்த 27 லட்சம் ரூபாய் பணமும் 55 பவுனட நகைகளும் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.  தடுக்க முயன்ற போது அவர்கள் தாக்கவும் பட்டுள்ளார்.  உடலில் காயங்கள் உள்ளன.  அன்புராஜின் வீட்டில் அவரது மகளின் 5 பவுன் நகை பிடுங்கிச் செல்லப்பட்டதாகக் கூறினார்.  வேறு பலரும் இத்தகைய புகார்களைக் கூறினர்.  பணம், நகை எடுத்துச் செல்லப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.  சேதங்கள், தாக்குதல் ஆகியவற்றை நாங்கள் நேரில் பார்த்தோம்.  கடுமையான சேதமும், மிகப் பெரிய பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  கதவுகள், கண்ணாடிகள் உடைபட்டது தவிர, 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 9 இரு சக்கர வாகனங்கள், 17 டி.வி. மற்றும் சி.டி. பிளேயர்கள், 3 ஏ.சி. மி´ன்கள், 8 ஃபிரிட்ஜ்கள், 18 கிரைண்டர் மற்றும் மிக்சிகள், 6 வாசிங் மி´ன்கள், 11 இரும்பு மற்றும் மர அலமாரிகள், குறைந்தபட்சம் 5 மின் விசிறிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  பணம், நகை, ஆவணங்கள், வாட்ச் முதலிய சிறிய பொருட்கள் இதில் சேர்க்கப்படவில்லை.             எல்லாவற்றிற்கும் மேலாகக் கடும் அச்சமும், பீதியும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  கிருஷ்ணப்ப கிராமணியின் மகன் குணசேகர் என்பவர் வீட்டைக் காலி செய்து விட்டு புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார் என எங்களிடம் சொல்லப்பட்டது.            கந்தசாமி ஆதரவாளர்களின் 5 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.  இதில் செந்தில் என்பவரின் ஸ்வீட் கடையும், சர்க்கரை கிராமணி, ரங்கநாதன் செட்டியார், வழக்குரைஞர் தேவநாதன் ஆகியோர் வீடுகளும் அடக்கம்.  செந்திலின் கடை அதிகம் சேதமடைந்துள்ளது.  கண்ணாடி ஷோக்கேஸ்கள், ஃபிரிட்ஜ், கூலர், 2 எலக்ட்ரானிக் தராசுகள், வீட்டுக் கண்ணாடி ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.  பிற வீடுகளில் ஆண்கள் யாரும் தற்போது இல்லை.  பாஸ்கர், அன்பழகன், கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ராஜ்குமார், பத்மநாபன் முதலியோர் இந்தத் தாக்குதலைச் செய்ததாக செந்தில் குறிப்பிட்டார். எமது பார்வைகளும் பரிந்துரைகளும்:            1. இந்தத் தாக்குதல்களில் பல சாதியினைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முழுக்க முழுக்க இது இரு அரசியல் தரப்பினருக்கிடையேயான மோதலாகவே நடந்துள்ளது.            2. இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடந்த போதிலும் ராஜவேல் தரப்பினர் மீதான தாக்குலும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்புகளுமே அதிகம்.  அவர்கள் தரப்பில் 23 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.  பெரிய அளவில் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.  திட்டமிட்ட தாக்குதலாகவும் இது நடந்துள்ளது.            3. கலவரச்சூழல் உள்ள பகுதியாக இருந்தும் உரிய பாதுகாப்புகளை அளிக்கக் காவல்துறை தவறியுள்ளது.  13ந் தேதி இரவு சிறிய அளவில் கலவரம் இருந்தும் கூட பாதுகாப்புக்கிருந்த காவலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மூன்று நாள் தேர்தல் பணி செய்திருந்தாலும், வீராம்பட்டினத்தில் ஏதோ பிரச்சினை இருந்ததாலும் காவலர்கள் அனுப்பப்பட்டதாகக் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி எங்களிடம் கூறினார்.  வீராம்பட்டினம் கலவரம் பல நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றதாகவும் அன்று ஏதும் பிரச்சினை இல்லை எனவும் அறிகிறோம். காவல்துறையின் அலட்சியமே இக்கலவரத்துக்கும் பெரும் பொருட்சேதத்துக்கும் காரணம்.  தவிரவும் காவல்துறையினர் உரிய பொறுப்புடன் செயலாற்றவில்லை என்பதை முன்னாள் அமைச்சர் ராஜவேலு மட்டுமின்றி தற்போதைய அமைச்சர் கந்தசாமியும் எம்மிடம் கூறினர்.            4. கந்தசாமியின் தரப்பினருக்கு எதிராக 3 வழக்குகளும், ராஜவேலு தரப்பினருக்கு எதிராக 2 வழக்குகளும் போடப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் கூறினார்.  கந்தசாமி தரப்பில் 9 பேரும், ராஜவேல் தரப்பில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முக்கிய குற்றவாளிகள் பலரும் கைது செய்யப்படவில்லை.  தாக்குதல் நடத்தியவர்கள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுவதாக மக்கள் கூறினர்.  முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதால்தான் அவர்களைத் தங்களால் கைது செய்ய முடியவில்லை என தெய்வசிகாமணி கூறினார்.  தலைமறைவாகியிருந்தாலும் அவர்களைக் கைது செய்வதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.            5. கண்காணிப்பாளர் தெய்வசிகாமணியிடம் பேசிய போது ராஜவேல் தரப்பினரே தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினார்.  ராஜவேல் தரப்பினருக்கே அதிக இழப்புகள் இருந்தபோதிலும் அவர் அதை பெரிதுபடுத்தவில்லை.      தவிரவும் அவரது சகோதரர் ஆளும் கூட்டணியில் முக்கிய பிரமுகர் எனவும் அறிகிறோம்.  எனவே இவ்விசாரணை நேர்மையாக நடத்தப்பட வேண்டுமெனில் இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும்.  முக்கிய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.  நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த புகார் கொள்ளை வழக்கின் கீழ் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.            5. இத்தனைக்குப் பின்னும் சமாதானக் கூட்டங்கள் எதையும் அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கதக்கது.  உடனடியாக இருதரப்பினரையும் கூட்டி சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.  மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தையும் பீதியையும் அகற்ற வேண்டும்.            7. வாக்கு எண்ணும் நாளிலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னும் இதே போல கலவரம் நடக்கிற வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்.            8. இத்தகைய பெரும் கலவரத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.  இழப்பீடுகளை மதிப்பிட நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைத்து உடனடியாக இழப்பீடுகளை வழங்க வேண்டும்.            9. தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களும் கொலைகளும் இப்பகுதியில் நடைபெற்று வருவதால் தொடர்புடைய அரசியல் கட்சிகள் இது குறித்துக் கவனம் செலுத்தி சமாதானச் சூழல் உருவாவதற்கு முயற்சிக்க வேண்டும்.

தொடர்புக்கு: 

அ. மார்க்ஸ்,

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,

3 / 5, முதல் குறுக்குத் தெரு,

சாஸ்திரி நகர், அடையாறு,

சென்னை - 600 020,
 செல்: 094441 20582.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக